(நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-தொடர்ச்சி)
இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!
சென்றே யெறிப வொருகால் சிறுவரை
நின்றே யெறிப பறையினை – நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுண் மூடித்தீக் கொண்டெழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து. (நாலடியார் பாடல் 24)
பொருள்: (பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சற்று நேரம் சென்றதும் மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிக்கும் பொழுது இனி இறக்கப் போகிறவர்கள், பாடையில் இறந்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்புச் சட்டியைச் சுமந்து கொண்டு சுடுகாட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்வர். (எனவே யாக்கை நிலையாமையை நன்கு சிந்தித்துப் பார்!)
சொல் விளக்கம்: சென்று=(இறந்த வீட்டிற்குப்) போய்; பறையினை=பிணப் பறையினை; ஒருகால்=ஒருமுறை; எறிப=அடிப்பார்கள்; சிறுவரை= சற்றுநேரம்; நின்று=நிறுத்தி; (அப்பறையினை), எறிப= இரண்டாமுறை அடிப்பார்கள்; முக்காலை= மூன்றாமுறை; கொட்டின்= அடித்தமாத்திரத்தில்; உள்= பாடையினிடத்து; மூடி=பிணத்தைச் சீலையால் மூடி; தீ=நெருப்பை; கொண்டு=சட்டியிற்கொண்டு; செத்தாரை=இறந்தவரை; சாவார்=இனி யிறப்பவர்கள், சுமந்து=தோள்களிற் சுமந்து; எழுவர்=எழுந்து மயானத்திற்குச் செல்வர் நன்றே காண்= (இவ்வுலகின் நிலையாமைத் தன்மையை) நன்றாகப் பார்.
இறந்தவர் வீட்டில் நடைபெறும் துன்பச்சடங்கு கூறப்படுகிறது. இதைப் பார்த்த பின்னரும் நமக்கும் இதுபோல் ஒரு நாள் வரும் என உணராமல் வாழ்க்கையை நிலையானது என எண்ணலாமா என்ற சிந்தனையை இப்பாடல் ஏற்படுத்துகிறது. தான் சொல்ல வந்த கருத்தை நேரடியாகக் கூறாமல் அதை உணர்த்தும் வகையில் இறப்பு நிகழ்வைப் புலவர் கூறியுள்ளார்.
‘இரவும் பகலும்’ என்னும் திரைப்படத்தில் வரும் ஆலங்குடி சோமு எழுதியுள்ள
“பறந்து பறந்து பணம் தேடி
பாவக் குளத்தில் நீராடி
இறந்தவனைச் சுமந்தவனும் இறந்து(வி)ட்டான் – அதை
இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்து(வி)ட்டான்“
என்னும் பாடல் இதைத்தான் கூறுகின்றது.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment