நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-தொடர்ச்சி)
பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!
இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.
-நாலடியார், செல்வம் நிலையாமை , 6
பொருள்: வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட கால அளவைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை ‘தழீம் தழீம்’ என்னும் ஓசையுடன் எழும். எனவே, பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! அதைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!
சொல் விளக்கம்: இழைத்த=வாழ்நாள் அளவிடப்பட்ட; நாள்= நாள்கள்; எல்லை=தம் கால அளவை; இகவா=கடந்து செல்லா; கூற்றம்=இயமனிடமிருந்து; பிழைத்து=தப்பி; ஒரீஇ=நீங்கி; தித்து=அவன் குறிப்பைக் கடந்து; உய்ந்தார்=பிழைத்தவர்கள்; ஈங்கு=இவ்வுலகத்து; இல்லை=இல்லை; நாளை=நாளையே; தழீஇம் தழீஇம்=தழீம் தழீம் என்னும் ஓசையுடனே; தண்ணம்=பிணப்பறை; படும்=ஒலிக்கப்படும்; (ஆகையால்), ஆற்ற= மிகவும்; பெரும்=பெரிய; பொருள்= பொருளை; வைத்தீர்=தேடி வைத்துள்ளவர்களே; வழங்குமின்=அவற்றைப் பிறருக்கு வழங்குங்கள்.
நாளை சாவு வரும் என நேரடியாகச் சொல்லாமல் சாவின்பொழுது தகவல் தெரிவிப்பதற்காக அடிக்கப்படும் ஒருகண்பறையான தண்ணம்பறையின் ஓசை எழும் என்கிறார் புலவர். சாவு வரும் என்று சொல்லாதவர் பறை அடிக்கப்படும் என்றுகூடச் சொல்லவில்லை. மாறாக “தழீஇம் தழீஇம்” எனப் பறை ஓசை எழும் என நயம்படக் கூறியுள்ளார். பறை ஒலி தொலைவிலும் கேட்கும். எனவே, எங்கோ யாரோ இறந்துவிட்டார் எனப் பறை ஒலி கேட்டவர்கள் புரிந்து கொள்வர்.
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பது என்ன உண்மை – இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை?
என ‘மனமுள்ள மறுதாரம்’ திரைப்படத்தில் கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் ‘இன்பம் எங்கே’ என்று தொடங்கும் பாடலில் இடம் பெறும். நாலடியாரில் வரும் மேற்குறித்த பாடலின் சாரத்தைக் கவிஞர் வினாவாகக் கேட்டு நமக்கு உணர்த்தி யுள்ளார் எனலாம்.
ஒவ்வொருவருக்கும் வாணாள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் இவ்வுலகில் இருக்க எமன் விடமாட்டான். அந்த முடிவு நாள் நாளையே கூட நிகழலாம். எனவே, செல்வத்தை வீணாகச் சேர்த்து வைத்திராமல் அறப்பணி ஆற்ற வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகிறது.
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment