Tuesday, March 18, 2025

வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! – சங்கப்புலவர்கள் பொன்னுரை – 4: இலக்குவனார்திருவள்ளுவன்

வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! – சங்கப்புலவர்கள் பொன்னுரை – 4: இலக்குவனார்திருவள்ளுவன்

ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன் 18 March 2025 அகரமுதல



 வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! 

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் 
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து 
பொலிமின்
(தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் 422) 

 கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம். 

 கடவுள் வணக்கம் என்பது தமிழர்க்குரியதுதான். ஆனால், அதில் மூடநம்பிக்கை கலக்கக் கூடாது. 

 தெய்வ முணாவே மாமரம் புட்பறை 
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ 
அவ்வகை பிறவுங் கருவென மொழிப. 

 (தொல்காப்பியம், பொருளதிகாரம் -18.) எனத் தொல்காப்பியர் கருப்பொருள்களில் முதலிடத்தைத் தெய்வத்திற்குத்தான் கொடுத்துள்ளார். ”யாவரும் இவ்வுலகில் உயிர் வாழ்வதற்கு உணவே இன்றியமையாதது என்பதனை அறியாதார் இலர். 

 உணவுக்குப் பிறகுதான் ஏனைய. ஆயினும் சங்ககாலத் தமிழ்மக்கள் உணவினும் முதன்மையாகக் கடவுளைக் கருதி வாழ்ந்தனர். ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்தில் பாடற்பொருள் முதல், கரு, உரி என வகுக்கப்பட்டுள்ளது. 

 கருப்பொருள் பற்றிய நூற்பாவில், உணவுக்கு முன்பு தெய்வத்தை வைத்துள்ள சீர்மையை ஓர்ந்து ‘உணவினும் தெய்வமே முதன்மையாகப் போற்ற வேண்டிய ஒன்று’ என்று அன்று கருதியிருந்தனர் என்பதனைத் தெளியலாம்.” என்கிறார் சங்கத் தமிழறிஞர் பேரா. முனைவர் சி. இலக்குவனார்

 எனவேதான் நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காக்கட்டும் என்கிறார் தொல்காப்பியர். 

 தொல்காப்பியம் மேலே குறித்துள்ள நூற்பாவில் எத்தெய்வத்தையும் குறிப்பாகக் கூறவில்லை. குறிப்பிட்ட கடவுள் பற்றர்கள் பக்கம் சாராமல் பொதுவாகக் கூறுகிறார். 

 இதன் மூலம் அனைவர்க்கும் பொதுவாகவும் கூறுகிறார் எனலாம். எனவே, அவர் வழிபடும் தெய்வம் என்று பொதுவில் கூறுகிறார். 

 அவரவர் வழிபடக் கூடிய தெய்வம் எதுவாகவும் இருக்கலாம். அத்தெய்வம் காக்கட்டும் என்பது அருமையான பொன்னுரையாகும். 

 “நீ வழிபடும் தெய்வம் உன்னைப் பாதுகாக்கட்டும்; குற்றமற்ற செல்வத்துடன் நின் தலைமுறை வழிவழியாகச் சிறந்து வாழ்க” என்பது எந்நாட்டவர்க்கும் பொருந்தக் கூடியதாகும். 

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் மறைந்த தங்கள் முன்னோரை வணங்குவர். எனவே வழிபடு தெய்வம் என்பது அவர்களுக்கும் பொருந்தும். 

அடுத்துச் செல்வத்தில் சிறந்து வாழ வாழ்த்துகிறார்.
 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் 
 செல்வரும் சேர்வது நாடு
 (திருக்குறள், ௭௱௩௰௧ – 731) என்கிறார் திருவள்ளுவர்.

 நாட்டில் செல்வர்கள் இருப்பது முதன்மையல்ல. தாழ்வில்லாச் செல்வம் உடையவர்களாக இருக்க வேண்டும். 

 செல்வத்தைக் கொண்டு பிறருக்குக் கேடு விளைவிப்பவர்களும் தீயன புரிபவர்களும் இருக்கின்றனர். எனவே, திருவள்ளுவர் தொல்காப்பியர் வழி நின்று தாழ்விலாச் செல்வர் இருப்பதே நாடு என்கிறார்.

 எனவே, தொல்காப்பியர் பழிதீர் செல்வமொடு வாழ வாழ்த்துவது உலகமே போற்ற வேண்டிய தமிழ் நெறி. 

 வாழ்த்திற்குரியவர் மட்டும் வாழ்ந்தால் போதுமா? தலைமுறை தலைமுறையாக வழி வழி சிறந்து வாழ வாழ்த்துகிறார். 

 பிறந்தநாள் முதலிய சிறந்த நாளன்று நாம் இப்பொன்னுரையைக் கூறி வாழ்த்துவோம். 

 – இலக்குவனார் திருவள்ளுவன் 

No comments:

Post a Comment

Followers

Blog Archive