Showing posts with label இந்தி. Show all posts
Showing posts with label இந்தி. Show all posts

Sunday, May 14, 2017

அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்




அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி  இந்தி ஒழியாது!

   இந்தித்திணிப்பு என்பது புதிய செயல்போல் தலைவர்கள் அவ்வப்பொழுது அறிக்கை விடுவதும் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்தியை  எதிர்த்து அறிக்கை விடுவதால் எப்பயனும் இல்லை.
  “இந்தியைத்திணித்தால் எரிமலையாவோம்”, “இந்தியைத்திணித்தால் புரட்சி வெடிக்கும்! தூங்கும்புலியை இடறாதீர்!”, “நாங்கள் இருக்கும் வரை இந்தியைத்திணிக்க விடமாட்டோம்” என்பனபோன்ற வெற்றுக்கூச்சல்களை அரசியல் தலைவர்கள் நிறுத்த வேண்டும்.
   நம்மைப்போல், “என்றும் இந்தி! இன்றும் இந்தி!” என்று சொல்லிக்கொண்டிராமல் எங்கும் எதிலும் இந்தியை மத்திய அரசு திணித்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், எப்பொழுதாவது ஏதும் செய்தி வெளியானால் அப்பொழுதுதான் இந்திதிணிக்கப்படுவதுபோல் நாம் வெறும்கூச்சல்போட்டு மறந்துவிடுகிறோம். இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு தன் கடமையைச் செவ்வனே செய்து வருகிறது.
  எங்குதான் இந்தி இல்லை! பதவிப்பெயர்கள் எல்லாம் இந்தி! திட்டங்களின் பெயர்கள்  எல்லாம் இந்தி! உணவுப் பெயர்கள் எல்லாம் இந்தி! இப்பொழுது (ஞ்)சன் ஆஃகார் (jan aahaar) என்பதுபோல் கடைப்பெயர்கள் எல்லாம்  இந்தி!   தொடரி, வானூர்திப் பயணச்சீட்டுகளில் இந்தி! பாதுகாப்பு அறிவிப்புகள் தாய்மொழியில் – நமக்குத் தமிழில் இருக்க வேண்டும். ஆனால், அவரசக் கதவு என்ற அறிவிப்பும், அதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்ற அறிவிப்பும், அபாயச்சங்கிலி அறிவிப்பும் இந்தியில்தான்! தொடரி(தொடர்வண்டி)களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து அறிவிப்பும் இந்தியில்தான்! மத்திய அரசின் பள்ளிகளில் இந்தி!  பிற பெரும்பாலான மாநிலப்பள்ளிகளிலும் இந்தி! இப்பொழுது மத்திய அரசு விண்ணப்பங்களிலும் இந்தி!  கையொப்பங்களில் இந்தி! பணித்தகுதிகளில் இந்தி! விளம்பரங்களில் இந்தி! வானொலிகளில் இந்தி! தொலைக்காட்சிகளில் இந்தி!
     இந்தி நம் வரவேற்பு அறையில்  அமர்ந்து கொண்டுள்ளது; படுக்கையறையில் வீற்றிருக்கிறது; சமையல் அறையில்கூட ஆட்சிசெய்கிறது; நாளும் செவிகளில் இந்திச்சொற்கள் விழுந்து கொண்டிருக்கும் வண்ணம் ஊடகங்கள் கொடுஞ்செயல் ஆற்றிக் கொண்டுள்ளன. கல்வியில் இந்தி தொடக்கம் முதல் நுழைக்கப்பட்டு அங்கிருந்து தமிழ் அகற்றப்பட்டுவிட்டது.
   உச்சநீதிமன்ற நீதிபதி முதலான  மத்திய அரசுப் பதவிகளில் பொறுப்பு ஏற்கும் யாராயினும்  இந்தியில் கையொப்பம் இட்டால்தான் வேலையில் சேரமுடியும். இந்தி தெரிந்தவர்களுக்குத்தான் மத்திய அரசிலும் அரசுநிறுவனங்களிலும் பணி வாய்ப்பு. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 15,  சமயம், இனம்குலம், பால், குடிவழி, பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறதே தவிர, மொழிப்பாகுபாடு குறித்துக் கூறவில்லை. எனவே, இந்தி அறிந்தவர்களுக்கு வாய்ப்பு என்னும் சமன்மைக்கு எதிரான நிலைமையே இந்திய அரசின் செயலாக்கமாக உள்ளது.
  பணத்தாளில் இந்தி எண் (தேவநாகரி) திணிக்கப்பட்டதும் அரசமைப்புச்சட்டத்தின்படிதான். இந்திய அரசமைப்புச்சட்டப்பிரிவு 351 இன்படிஇந்தியைப் பரப்புவது மத்திய அரசின் கடமை. அந்தக் கடமையை அது செய்கிறது.
  ஏதோ இதுவரை இந்தியே திணிக்கப்படாததுபோலும் இப்போதுதான் முதன் முறையாக   இந்தி திணிக்கப்படுவதுபோலும் கூக்குரலிடுவது குறித்து மத்திய அரசு கவலைப்படுவதில்லை.
  “இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை” என்று முன்னர்க் (02 ஏப்பிரல் 2017) குறிப்பிட்டிருந்தோம். அதுதான் உண்மை. அரசியலமைப்பின்படி இந்தியை மத்திய அரசின் மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடும் பொழுது எதிராக அறிக்கை விடுவது விழலுக்கு இறைக்கும் நீரே!
  அப்படியானால் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றால் அதுதான்  இல்லை.
இந்தி நம்மை இரண்டாந்தர மக்களாக ஆக்குவதுடன் நம் மொழியையும் இனத்தையும் அழிக்கிறது. எனவே எதிர்த்துத்தான் ஆக வேண்டும். அதற்குப் பின்வரும் உறுதிகளை நாம் ஏற்க வேண்டும்
  1. இந்தியை எதிர்க்கவில்லை. இந்தித்திணிப்பை எதிர்க்கிறோம் எனப் பிதற்றுவதை நிறுத்த வேண்டும். கல்விச்சந்ததை மூலம் பள்ளிகளில் இந்தியைத் திணிப்பவர்கள் இத்தகைய கருத்துகளை அள்ளவீசுகிறார்கள். அப்பாவித்தனமாகச் சிலர், “நம் நாட்டு மொழி்யை நாம் எதிர்க்கலாமா” என எண்ணுகின்றனர்.
  நம் மொழிக்கு நாம் செலவிடவேண்டிய தொகையைக் கொண்டு விருப்பப்பாடம் அல்லது வேறு ஏதேனும் பெயரில் இங்கே இந்தி கற்பிக்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்தியால்  என்ன தீமை வரும என்கிறார்களே, அவர்கள், இந்தி, இந்தியத்துணைக்கண்டத்திற்கு வந்த அயலவர் ஆட்சியால்  இறக்குமதியாகி உருவான அயல்மொழி என்பதையும் இன்றைக்குத் தேசிய மொழி, பொதுமொழி, அலுவலக மொழி என்றெல்லாம் சொல்லப்பட்டு இம் மண்ணிற்குரிய பிற மொழிகளை அது விழுங்கிவருவதையும் உணராதவர்களே! எனவே, தமிழ்நாட்டில் எல்லாக் கல்வி நிலைவயங்களில் இருந்தும் இந்தி அகற்றப்பட வேண்டும். இந்தியைத் தாய்மொழியாக உள்ளவர்கள் அதற்கான சான்றிதழ் அளித்துத் தமிழையும் படிப்பதாக இருந்தால் அவர்கள் இந்தி பயில்வதற்கு ஏற்பாடு செய்யலாம். எனவே, இந்தி வேண்டா! வேண்டவே வேண்டா! என்பதே நம்  முழக்கமாகவும் செயற்பாடாகவும் இருத்தல் வேண்டும்2.
2.இந்திய அரசியல் யாப்பில் உள்ள பதினேழாம் இயல் அடியோடு நீக்கப்பட்டுப் புதிய விதிகளுடன் அவ்வியல் சேர்க்கப்படவேண்டும்.
  எட்டாம் இணைப்புப்பட்டியல்களில் உள்ள மொழிகளை இயலின் பகுதியாகக் குறிப்பிட்டு அனைத்தையும் தேசிய மொழிகள் என்றே குறிக்க வேண்டும். வட்டார மொழிகள் எனக் குறிக்கக் கூடாது எனக் குறிப்பும் இருக்க வேண்டும்.
   இந்தி பெரும்பான்மையர் மொழி அல்ல என்றும்  தவறான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அம்மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசியல் யாப்பிலேயே குறிக்க வேண்டும்.
  அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநிலத் தேசிய  மொழியே எல்லா நிலைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மத்தியஅரசும் இதைச் செயற்படுத்தஉதவ வேண்டும் என்பதையும் குறிக்க வேண்டும்.
  சமற்கிருதம் என்பது தமிழ், பாலி, பிரகாருதம் முதலான மொழிகளில் இருந்து செய்யப்பட்ட மொழி என்பதையும் தமிழே இந்த மண்ணின் மொழி, மூத்த செம்மொழி  என்பதையும் அரசியல் யாப்பிலேயே குறிக்க வேண்டும். எனவே, தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்பதையும் அரசியல் யாப்பில் சேர்க்க வேண்டும்.
  3.தமிழை இந்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க  வேண்டும். இப்பொழுது நடைமுறையில் உள்ள இந்தி, ஆங்கிலம் இரண்டும் தொடர்ந்து அலுவல் மொழியாக நீடிக்கும் எனவும் அறிவிக்க வேண்டும்.
   அப்படியானால், எல்லா மொழிகளும் அலுவல் மொழிகளாக  அறிவிக்கப்பட வேண்டாவா? என்கிறீர்களா? அவ்வாறு கேட்பது நம் வேலையல்ல! யாரேனும் எங்கள் மொழிக்கும் அலுவலக மொழித்தகுதி வேண்டும் என்று போராடி நம்முடன் இணைய முன்வந்தால் இணைந்து போராடலாம். நாம்,  தமிழை இந்தியஅரசின் அலுவல்மொழியாக அறிவிக்கச்செய்தால், போட்டி போட்டுக்கொண்டு பிற மொழியினரும் தத்தம் மொழியையும் அலுவல் மொழியாகஅறிவிக்கப் போராடுவார்கள். அம்முயற்சி வெற்றி பெறும் பொழுது இந்தி தானாகவே அகலும்.
  4.இந்திய அரசியல் யாப்பில் இந்தி என முதன்மையாகக் குறிக்கப்படும் எல்லா நேர்வுகளிலும் தமிழ் என்பதும்  இடம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
  5. மத்திய அரசின் அதிகாரங்களாக, ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான சிக்கல், நாட்டுப்பாதுகாப்பு, நாணயம் முதலான சில தொடர்பானவை மட்டுமே இருந்தால், மாநிலங்கள் மத்தியஅரசுடன் தொடர்பு கொள்ளும் நேர்வு குறைவாகவே இருக்கும். இதனால், பொதுமொழி என்ற சிக்கல் எழாது.
6. மாநிலங்களவையின் உறுப்பினர் தெரிவு அமைப்பு மாற்றப்பட வேண்டும். மாநிலம்  பெரியதாக இருந்தாலும், சிறியதாக  இருந்தாலும் மாநிலங்களவையில் சம எண்ணிக்கையில்தான்  உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒரு மாநிலம் தொடர்பான சிக்கலில் அந்த மாநில உறுப்பினர்கள் வாக்கே முதன்மையாகக் கருதப்பட்டு அவர்களுக்கு மறுப்புறுரிமை (வீட்டோ) அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பானவற்றில் மட்டுமே மாநிலங்களவை தீர்மானிக்க வேண்டும். இதுபோல் மாநிலத்தன்னாட்சி நடைபெற்றால் மொழிச்சிக்கல் எழாது. தொடர்புமொழியான ஆங்கிலமே போதுமானது.
  இவ்வாறு அரசியல் யாப்பில்  திணிக்கப்பட்டுள்ள எல்லாம் இந்தி என்ற நிலைப்பாட்டை  எதிர்த்துப் போராடி வெற்றி காணாமல், தவணை முறையில் இந்தி எதிர்ப்புக் கூச்சல் போடுவதில் பயனில்லை என்பதை அரசியல் தலைவர்கள் உணர்ந்து மக்களுக்கும் உணர்த்த வேண்டும்.
அரசியல் யாப்பைத் திருத்துவோம்!
இந்தியை மத்திய அரசிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் அகற்றுவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 185,  சித்திரை 24, 2048 /  மே 07, 2017

Friday, June 24, 2016

அழிமொழி சமற்கிருதப் பற்றாளர்கள் தரும் தொடர் துன்பம் – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-சமற்கிருதத்திணிப்பு-திரு :thalaippu_samasukruham_tharum_thunbam_thiru

அழிமொழி சமற்கிருதப் பற்றாளர்கள் தரும்

தொடர் துன்பம்

 சமற்கிருதத்தால்  – சமற்கிருதப் பிழைப்புவாதிகளால் – நாம் காலந்தோறும் அடையும் தீங்குகள் பெரிதினும் பெரிது! அதன் தீமை குறித்தும் தமிழ்த்தேசியத்தைப் பேண வேண்டிய பாங்கு குறித்தும் நாம் விழிப்புணர்வு அடைந்துவரும் வேளையில், தமிழர்க்கெனத் தனியரசு இன்மையால் சமற்கிருதத்திணிப்புகளால் நாம் அடையும் இன்னல்கள் மிகுதியினும் மிகுதி!
சமற்கிருதத்திணிப்பால் நாம் மொழித்தூய்மையை இழந்தோம்!
தமிழ்பேசும் மக்கள் தொகையளவில் குறைந்தோம்!
தமிழ்பேசுவோர் நிலப்பரப்பைப் பெரிதும் இழந்தோம்!
தமிழ்த்தேசிய உணர்வை இழந்தோம்!
பிறப்பு முதல் இறப்பு வரை, தமிழ், தமிழ், தமிழ் என இருந்த வாழ்க்கைச் சூழலை இழந்தோம்!
நாளும் நற்றமிழால் படைத்தவரை வணங்கும் பெருமையை இழந்தோம்!
 இறைவனுக்குப் பிடித்த மொழி இறைவன் பேசியமொழி என்றெல்லாம் பெருமையாகக் கருதி வந்த தமிழை ஒதுக்கிவிட்டு  ஒண்டவந்தவர் மொழியைத் தேவமொழி என நம்பினோம்!
அயல்மொழி மோகங்களுக்கு ஆட்பட்டு அன்னைத்தமிழைப் புறக்கணித்தோம்!
ஊர்ப்பெயர்களில் தமிழ் அகற்றப்பட்டு சமற்கிருதமான அவலங்கள் அரங்கேறின!
இவற்றால் தமிழர்  வணிகம் குறைந்தது! வளம் தேய்ந்தது! நலம் அழிந்தது!
  1947 இல் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்றாலும் இன்னும் நாம்  மொழி விடுதலை பெறவில்லை.
  மத்தியில் பேராயக்கட்சி(காங்கிரசு) இருந்தாலும் பா.ச.க. இருந்தாலும் சமற்கிருத, இந்தித்திணிப்புகள்  நிறுத்தப்படாமல் தொடர்கின்றன.
  மத்திய  ஆட்சியில் தமிழகக் கட்சிகள் இடம் பெற்றாலும் தமிழ், தமிழ் என வானதிர முழங்கினாலும் மொழித்திணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  செயல்படவி்ல்லை.
  தமிழ்நாட்டில்  தமிழே கற்பிக்காமல் சமற்கிருதம், இந்தி கற்றுத்தரும் பள்ளிகளைக்கூடத்  தடுக்க முயலவில்லை.
  ஆட்சியில் இருந்தால் அயல்மொழிகளை அணைத்து மகிழ்வதும் ஆட்சியில் இல்லையெனில் ஓட ஓட விரட்டுவதாக வாயளவில் பேசுவதுமே மொழிப்பற்று எனக் கட்சித்தலைவர்கள் செயல்படுகின்றனர்.பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் நம்மை, நம் மொழியை, நம் இனத்தை அழித்து வருவதை உணர்ந்தும்  பல்கட்சிகளாகப் பிரிந்து நிற்கின்றோமே தவிர, தமிழ்நலம் காக்க ஒற்றுமையாகச் செயல்படுவதில்லை. எனவே, மத்திய ஆட்சியில் உள்ளவர்களுக்குச் சமற்கிருதத் திணிப்பு என்பது எளிமையாகின்றது.
  பா.ச.க.அரசின் சமற்கிருதத்திணிப்பின் அண்மை முயற்சி அனைவரும் அறிந்ததே!  மத்திய அரசின் கீழ்வரும் அனைத்துக்கல்விநிலையங்களிலும் சமற்கிருதம் கட்டாயப்பாடமாக ஆக்கப்படும் என மனித வள மேம்பாட்டு அமைச்சர் சுமிருதி இராணி பேசியுள்ளார். கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டு வந்தால்தான் இதுபோன்ற கொடுமைகள் நிற்கும்.
  மத்திய அரசின் பள்ளிகள் என்பன வானத்திலிருந்து குதித்துவரும் யாரோவிற்காக நடத்தப்படுவன அல்ல!  நாட்டில்வாழும் பல்வேறுதேசிய மொழிக்கு உரியவர்களின் பிள்ளகைள்தான் அங்கே படிக்கின்றார்கள். எனவே, மத்திய அரசுப்பள்ளிகளில்தானே சமற்கிருதம் கட்டாயம் என எண்ணாமல் அனைத்து மாநில அரசுகளும்  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
  இந்தியா முழுமையும் அனைத்துத் தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கிலம் உட்பட எந்த ஓர் அயல்மொழியும் பாடமொழியாகக் கற்பிக்கக்கூடாது. மத்திய நிறுவனப் பள்ளிகளும் இதனைப் பின்பற்ற வேண்டும்.
 அந்தந்த மாநிலங்களில் வாழும் பிறமொழியாளருக்காக அவரவர் தாய்மொழியைக் கற்றுத்தரத் தனியாகப்பள்ளிகள் இருக்க வேண்டும். தாய்மொழிச்சான்று அளித்தால்தான் அம் மொழிகளைப் பயிலலாம் என நடைமுறைப்படுத்த வேண்டும்.
  பா.ச.க.எதிர்ப்பாக இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒரே  பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினரான பொன்.இராதாகிருட்டிணனனுக்கு அமைச்சரவை உறுப்பினர் பதவிதராமல் அதிகாரமில்லாத் துணை அமைச்சர் பதவி தந்ததற்காகத் தமிழன்பர்கள் கண்டிக்கும் பொழுது அந்த உத்தமர், சமற்கிருதம் கற்றுக் கொள்ள முடியாமல் போனதற்காக வெட்கப்படுவதாகப் பேசுகிறார். நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருந்தும் கொலைக்குற்றவாளி முன்பு கீழே அமரவைக்கப்பட்டபொழுது  வராத வெட்கம் இப்பொழுது வந்துவிட்டதாம். இவர் சமற்கிருதம் கற்றாலும், பிராணமப்பூசாரியாக முடியாது பிராமணர்கள்போல் சடங்கு செய்யமுடியாது பிராமணச்சாமியார்கள் முன் சமமாக அமர முடியாது என்பனவெல்லாம் தெரிந்தும்  நாணமின்றிப் பிதற்றுகின்றார்.
  தமிழகப் பா.ச.க.விற்குத் தலைவராக வரப்போவது இராசாவா? தமிழிசையா என்ற பேச்சு வந்தபொழுது தமிழ்ப்பகையாளி இராசா வரக்கூடாது,  தமிழ்க்குமரி அனந்தனின் மகளான தமிழிசை வரவேண்டும் என்று மாற்றுக்கட்சியில் இருந்தாலும் பா.ச.க.விற்கு எதிர்ப்பாக இருந்தாலும் தமிழன்பர்கள் எண்ணினர். ஆனால், தமிழிசை சமற்கிருதத்திணிப்பை வரவேற்கிறார்.  வெட்கக்கேடு!
  தமிழகத் தலைவர்கள் சமற்கிருத எதிர்ப்பியக்கம் என்பதை வாயளவில் முழங்காமல் இந்தியா முழுமைக்குமாகக் கொண்டு செல்ல வேண்டும்!
இந்தியநிலப்பகுதி துண்டாடப்படாமல் இருக்க வேண்டும்,  பெரிய நாட்டின் ஆட்சிப்பொறுப்பாளர் என்ற சிறப்புடன் உலகை வலம் வரவேண்டும் என்றெல்லாம் நரேந்திரர்(மோடி) கருதினால், உடனடியாகச் சமற்கித, இந்தித்திணிப்புகளை நிறுத்த வேண்டும்!  தேசிய மொழிகளின் வளர்ச்சியில் கருத்து செலுத்த  வேண்டும்!
எங்கள் தேசம்! எங்கள் மக்கள்!
எங்கள் மொழி! எங்கள் கல்வி!
எங்கள் உரிமை! எங்கள் உயர்வு!
என ஒவ்வொருவரும் சமற்கிருத(,இந்தி)த் திணிப்புகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழவேண்டும்!
  தமிழக அரசும் தலையிட்டுத் தமிழ் மக்களின் கல்வி உரிமைையைக் காக்க வேண்டும்!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் : 435)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, June 15, 2016

வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-வீட்டிற்குள் நுழையும் இந்தி - திரு : thalaippu_veettirkul_nuzhaiyum_indhi_thiru

வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்!


   முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொண்ணூறாம் ஆண்டினைக் கடக்கும் காலக்கட்டத்தில் – இரண்டாவது இந்தி எதிர்ப்புப்போரின் 50 ஆம் ஆண்டுவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏமாளித் தமிழர்கள் மீது இந்தி, ஊடகங்கள்வழி திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
  விளம்பரங்களின் நோக்கம் என்ன? மக்களைச் சென்றுசேர வேண்டும்என்பதுதானே! விளம்பரத்திற்குரிய பொருளோ செய்தியோ மக்களிடம் சேருவதைவிட இந்தி சேர வேண்டும் எனப் பா.ச.க.  துடிக்கிறது!
  மத்திய அரசின் விளம்பரம், பா.ச.க.விளம்பரம், தனியார் விளம்பரம் என ஊடகங்களில் இந்தி விளம்பரம் பெருகி வருகின்றன. 1965 இல் இந்தியைத்திணித்த காங்கிரசு விரட்டியடிக்கப்பட்டபின்பு இன்னும் தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. தமிழ்நாட்டில் நுழையவே தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் பா.ச.க. முகவரி யில்லாமல்போக  இந்தியைத் திணிக்கிறது போலும்!

  உடனடியாகத் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்து இந்தி விளம்பரங்களைத் தமிழக ஊடகங்களில்இருந்து அகற்ற வேண்டும்!
  அனைத்துக்கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் ஒன்றுபட்டு இந்தி விளம்பரங்களைத்தடுக்க வேண்டும்!
  தமிழக மக்கள்  தமிழக ஊடகங்களில் இந்திவிளம்பரம் அளிக்கும் நிறுவனப்பொருள்களைப் பயன்பாட்டில் இருந்து  ஒதுக்கி வைக்க வேண்டும்!
  இவற்றையும் மீறி இந்தி விளம்பரங்களைத் தமிழக ஊடகங்கள் வெளியிட்டால் அவ்வாறு  இந்தி விளம்பரம் வெளியிடும் ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும்!
   மாணவப்பருவத்தின்பொழுது இந்தி எதிர்ப்புப்போரின் தலைமகன்போல் செயல்பட்ட கலைஞர் கருணாநிதி, தங்கள் குடும்பத்தவரை இந்திபடிக்கச்செய்ததும், இந்தி தெரிந்ததால் தன் பேரனுக்கு அமைச்சர்பதவி கொடுத்ததாகக் கூறியதும் இந்திக்கு வால்பிடிப்போர் பரப்புரைக்குத் தாங்குதளங்களாக அமைந்துவிட்டன. இறந்தவர் மரபினருக்கு வாய்ப்பு அளிப்பதுபோல்  மறைந்த முரசொலி மாறன் மகனுக்கு வாய்ப்பளித்ததாகத் தெரிவித்திருக்கலாம். தயாநிதி மாறனுக்கு இந்தி தெரிந்திருக்காவிட்டாலும் அமைச்சராக ஆகியிருப்பார்.  குருதியின் உறவு பிறவற்றைவிட வலிமையானதல்லவா? வேறு எதையும்  சொல்லத் தெரியாமல் கலைஞர் அன்று  உதிர்த்த தவறான தொடர்கள் தமிழகத்தின் தீங்கிற்குத் துணைபுரிய வேண்டா! அதுதான் உண்மை என்றால் இந்திமட்டுமல்ல, ஆங்கிலமும் அறியா அழகிரியை எப்படி அமைச்சராக்கினார்? எனவே, இவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு “இந்தி படிக்காததால் வேலை வாய்ப்பிழந்தோம்” என இந்தி தாங்கிகள் முழங்க வேண்டா!
  இந்தி தெரிந்த வடநாட்டவர் தமிழக நடைபாதைகளில் கடைபோட்டு இருப்பதைப் பார்த்தபின்னரும் இந்தி படித்திருந்தால் வேலை கிடைத்திருக்கும் என்று நம்புவது அறியாமையல்லவா? இந்தி மட்டுமல்ல, எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழிப்பகுதியில் ஒருவருக்கு  வேலை கிடைப்பின் அவர், அந்த மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால்,ஆயிரத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதற்காக மற்றுள்ள 999 பேரும் இந்தியைப்படிக்க வேண்டும் என்பதும், இந்தி படிப்பிற்காகத் தங்கள் உழைப்பையும் செல்வத்தையும் அளித்து, அறிவு மங்கவேண்டும் என்பதும் முறைதானா? இந்தி மொழியைத் தாய்மொழியாகக்  கொண்டிராவதர்கள் இந்தித் திணிப்பால்  மூன்றாந்தரக் குடிமக்களாக மாற வேண்டும் என விதிப்பது கொடுஞ்செயலல்லவா?
  அவ்வாறிருக்க  விளம்பரங்கள்  மூலம் இந்தியைத் திணிப்பது அடாத செயலல்லவா?
  எனவே,
  ஊடகவழியில் மட்டுமல்ல எவ்வழியில் இந்தித்திணிப்பு வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளிஎறிய வேண்டும்.
  இந்திப்பிரச்சார சபைக்குத் தமிழ்நாட்டில் இடமில்லாமல் செய்ய வேண்டும். எனவே, நாம்அதற்கு எதிராகவும் கிளர்ந்தெழ வேண்டும்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.  (திருவள்ளுவர், திருக்குறள் 879)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 138, வைகாசி 30, 2047 / சூன் 12, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo      இந்தி விளம்பரம் : indhi_vilambaram-t.v.

Followers

Blog Archive