வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்!
முதலாவது இந்தி
எதிர்ப்புப் போராட்டத்தின் தொண்ணூறாம் ஆண்டினைக் கடக்கும் காலக்கட்டத்தில் –
இரண்டாவது இந்தி எதிர்ப்புப்போரின் 50 ஆம் ஆண்டுவிழா நடைபெற்றுக்
கொண்டிருக்கும் நேரத்தில், ஏமாளித் தமிழர்கள் மீது இந்தி, ஊடகங்கள்வழி
திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
விளம்பரங்களின் நோக்கம் என்ன? மக்களைச் சென்றுசேர வேண்டும்என்பதுதானே! விளம்பரத்திற்குரிய பொருளோ செய்தியோ மக்களிடம் சேருவதைவிட இந்தி சேர வேண்டும் எனப் பா.ச.க. துடிக்கிறது!
மத்திய அரசின் விளம்பரம்,
பா.ச.க.விளம்பரம், தனியார் விளம்பரம் என ஊடகங்களில் இந்தி விளம்பரம் பெருகி
வருகின்றன. 1965 இல் இந்தியைத்திணித்த காங்கிரசு
விரட்டியடிக்கப்பட்டபின்பு இன்னும் தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. தமிழ்நாட்டில் நுழையவே தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் பா.ச.க. முகவரி யில்லாமல்போக இந்தியைத் திணிக்கிறது போலும்!
உடனடியாகத் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்து இந்தி விளம்பரங்களைத் தமிழக ஊடகங்களில்இருந்து அகற்ற வேண்டும்!
அனைத்துக்கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் ஒன்றுபட்டு இந்தி விளம்பரங்களைத்தடுக்க வேண்டும்!
தமிழக மக்கள் தமிழக ஊடகங்களில் இந்திவிளம்பரம் அளிக்கும் நிறுவனப்பொருள்களைப் பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்!
இவற்றையும்
மீறி இந்தி விளம்பரங்களைத் தமிழக ஊடகங்கள் வெளியிட்டால் அவ்வாறு இந்தி
விளம்பரம் வெளியிடும் ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும்!
மாணவப்பருவத்தின்பொழுது இந்தி எதிர்ப்புப்போரின் தலைமகன்போல் செயல்பட்ட கலைஞர்
கருணாநிதி, தங்கள் குடும்பத்தவரை இந்திபடிக்கச்செய்ததும், இந்தி
தெரிந்ததால் தன் பேரனுக்கு அமைச்சர்பதவி கொடுத்ததாகக் கூறியதும் இந்திக்கு
வால்பிடிப்போர் பரப்புரைக்குத் தாங்குதளங்களாக அமைந்துவிட்டன. இறந்தவர் மரபினருக்கு வாய்ப்பு அளிப்பதுபோல் மறைந்த முரசொலி மாறன் மகனுக்கு வாய்ப்பளித்ததாகத் தெரிவித்திருக்கலாம். தயாநிதி மாறனுக்கு இந்தி தெரிந்திருக்காவிட்டாலும் அமைச்சராக ஆகியிருப்பார்.
குருதியின் உறவு பிறவற்றைவிட வலிமையானதல்லவா? வேறு எதையும் சொல்லத்
தெரியாமல் கலைஞர் அன்று உதிர்த்த தவறான தொடர்கள் தமிழகத்தின் தீங்கிற்குத்
துணைபுரிய வேண்டா! அதுதான் உண்மை என்றால் இந்திமட்டுமல்ல, ஆங்கிலமும்
அறியா அழகிரியை எப்படி அமைச்சராக்கினார்? எனவே, இவற்றை மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொண்டு “இந்தி படிக்காததால் வேலை வாய்ப்பிழந்தோம்” என இந்தி
தாங்கிகள் முழங்க வேண்டா!
இந்தி தெரிந்த வடநாட்டவர் தமிழக
நடைபாதைகளில் கடைபோட்டு இருப்பதைப் பார்த்தபின்னரும் இந்தி படித்திருந்தால்
வேலை கிடைத்திருக்கும் என்று நம்புவது அறியாமையல்லவா? இந்தி மட்டுமல்ல, எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழிப்பகுதியில் ஒருவருக்கு வேலை கிடைப்பின் அவர், அந்த மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
ஆனால்,ஆயிரத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதற்காக
மற்றுள்ள 999 பேரும் இந்தியைப்படிக்க வேண்டும் என்பதும், இந்தி
படிப்பிற்காகத் தங்கள் உழைப்பையும் செல்வத்தையும் அளித்து, அறிவு
மங்கவேண்டும் என்பதும் முறைதானா? இந்தி மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டிராவதர்கள் இந்தித் திணிப்பால் மூன்றாந்தரக் குடிமக்களாக மாற
வேண்டும் என விதிப்பது கொடுஞ்செயலல்லவா?
அவ்வாறிருக்க விளம்பரங்கள் மூலம் இந்தியைத் திணிப்பது அடாத செயலல்லவா?
எனவே,
ஊடகவழியில் மட்டுமல்ல எவ்வழியில் இந்தித்திணிப்பு வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளிஎறிய வேண்டும்.
இந்திப்பிரச்சார சபைக்குத் தமிழ்நாட்டில் இடமில்லாமல் செய்ய வேண்டும். எனவே, நாம்அதற்கு எதிராகவும் கிளர்ந்தெழ வேண்டும்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 879)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 138, வைகாசி 30, 2047 / சூன் 12, 2016
No comments:
Post a Comment