Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Friday, April 26, 2019

இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில்

வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்!

உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
தொடர்ந்து  நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு  தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. எனினும் ஆற்றல் குறைந்த வெடி குண்டு என்பதால் உயிரிழப்பு எதுவும் இல்லை.
தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 359 பேர் பலியாகிவிட்டனர். எண்ணிக்கை உயரும் என்ற அச்சமும் உள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் பண்டுவம் பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, நெதர்லாந்து, ஆத்திரேலியா, இசுபெயின், சுவிட்சர்லாந்து, துருக்கி நாட்டவர்களும் இருபத்தேழுபேர் வெடிகுண்டுகளால் பலியாகியுள்ளனர். வங்கதேசம், சீனா, சப்பான், போர் த்துக்கல் நாட்டவர்கள் காயமுற்றிருக்கலாம். பலியானவர்களில் பத்தில் ஒன்பதுபேர் இலங்கை, ஈழத்தைச் சேர்ந்தவர்களே! இவ்வாறு பி.ஒ.நி.(பி.பி.சி.) தெரிவித்துள்ளது.
இத் தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்கள் எச்சமயத்தவராக / எவ்வினத்தவராக / எம்மொழியினராக / எந்நாட்டவராக இருந்தாலும் அவர்களின்குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்  ஆறுதல்களைத் தெரிவிக்கிறோம். மருத்துவமனைகளில் இருப்போரும் விரைவில் முழு நலம் பெற்று அவரவர் இல்லம் திரும்புவார்களாக!
இந்தியாவில் இருந்து எச்சரிக்கை அனுப்பியும் இலங்கை அரசு தொடர் வெடிகுண்டுத் துயரத்தைத் தடுக்க முயலவில்லை. தமிழ்நிலங்களில்தானே குண்டு வெடிப்பு நிகழும் என அமைதி காத்ததா எனத் தெரியவில்லை. எனினும் இதன் பின்னர்த் திறமையாகச் செயல்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பான்மையர் தமிழ்மக்கள்தாம். சிங்களவர்கள் இறந்திருந்தால் விடுதலைப்புலிகள் அல்லது தமிழ்ப் பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டதாகக் கூறி உலக ஆதரவைப் பெற்றிருக்கும். இப்பொழுது அவ்வாறு சொல்ல முடியாது. நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசிற்கு நூற்றக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்துப் பெருங்கவலை எதுவும் இருக்க வாய்ப்பில்லை. 
ஆனால் ஆட்சிக்கு அவப்பெயர் என்பதால் எச்சரிக்கையாகச் செயல்பட்டு இறந்தவர்கள் இனம் அல்லது நாடு குறித்த செய்தி வெளிவராமல் பார்த்துக் கொண்டது.
இசுலாமிய அரசு என்னும் அமைப்பு கொடுநிகழ்வுகளுக்குப் பொறுப்பு ஏற்றுள்ளது. தற்கொலைப்படைஞர் எழுவர் கொண்ட குழுப்படமும் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசும் காரணமானவர்களாகச் சிலரைக் கைது செய்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்துக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், அவர்களால் இசுலாமியர அனைவருக்குமே இடர்ப்பாடு நேரலாம். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது எங்கு எப்பொழுது நேர்ந்தாலும் கொடுமைதான்.ஆனால், தம் சமயம் சார் ஓர் இறை மீது நம்பிக்கை உள்ளவர்கள் பிற சமயத்தவர் தம் இறைவனை வணங்கும் இடத்தில் வணங்கும் பொழுது கொல்வது கொடுமையல்லவா?
ஆட்சி நிலைப்பிற்காகவும் நெருக்கடி நிலை கொண்டுவரவும் ஆள்வோரே இதற்குக் காரணமாக இருக்கலாம் அல்லது பக்சே காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் பலரிடம் எழுந்தது. ஆனால், படைத்துறை உயர் அதிகாரிகளும் காவல்துறை உயர் அதிகாரிகளும்தான் காரணம் என அரசு கூறியுள்ளது. எனவே, பாதுகாப்புத் துறைச் செயலர் முதலான முதன்மை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். பாதுகாப்புத் துறைச் செயலர்  எமசிரி ஃபெர்னாண்டோ மட்டும் இதுவரை பதவி விலகியுள்ளார்.

தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதி விசித்து மலால்கோடா தலைமையில் முன்னாள் காவல்துறைத் தலைவர் என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலர் பத்மசிறி  செயமன்னே ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழுவை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார். இக் குழு விரிவான விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் அரசிடம் அறிக்கை  அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இசுலாமியர்களுக்கும் பிற சமயத் தமிழர்களுக்கும்  மோதல் நடப்பதுபோலோ இசுலாமியர்களுக்கும் பெளத்தர்களுக்கும் மோதல் நடப்பதுபோலோ, இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே மோதல் நடைபெறுவது இல்லை. மேலும், நியூசிலாந்து பள்ளிவாசல் வெடிகுண்டு நிகழ்விற்குப் பழி தீர்ப்பதாக இருந்தால் ஏதேனும்  கிறித்துவ நாட்டில்தானே பழி வாங்கியிருக்க வேண்டும். பெளத்த நாட்டில் ஏன் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய வேண்டும்?  தமிழ்க்கிறித்துவர்கள் கூடும் இடமாக ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? வெவ்வேறு மாநிலங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்துகிறார்கள் என்றால் பெரும் சதி வலைப்பின்னலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை /  படைத்துறை/ காவல் துறை/ உளவுத் துறை முதலானவற்றில் பணியாற்றுவோர் தொடர்பு இல்லாமலும் ஆட்சியில் உள்ள சிலரின் ஒத்துழைப்பு இல்லாமலும் செய்திருக்க முடியாது என மக்கள் எண்ணுகிறார்கள்.  மேலும், சிங்கள மக்களிடையேயும் பாதுகாப்பின்மை, அச்சம், அமைதியின்மை முதலான கவலைகளையும் பதற்றத்தையும் இக்கொடும் துயர நிகழ்வு ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தீவின் முழு நலன்கருதி இக் குழு நடுவு நிலைமையுடன் செயல்பட்டு அஞ்சாமல் உண்மையை  வெளிக் கொணர    வேண்டும் என்று வேண்டுகிறோம்.
புலன் உசாவலில் ஈடுபடும், அல்லது சிங்கள அரசிற்கு ஒத்துழைக்கும் பிற நாடுகளும் உண்மையை வெளிக் கொணருவதில் கருத்து செலுத்தித் தமிழ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
பலியானவர்களின் துயர் துடைப்புப்பணிகளிலும் உடனடியாகக் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும்!
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு 
கொள்ளாத கொள்ளாது உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 470)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Tuesday, March 28, 2017

இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்!

  இலங்கையைத் தமிழில் குறிப்பிடும் நம்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அரசுமுறைப் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணிச் சிரீ இலங்கா என்றே குறிப்பிடுகின்றனர்.
  ஈழம், இலங்கை என்பன தொடர்புடைய பெயர்களே! ஈழத்துப் பூதன்தேவனா் என்னும் புலவர் சங்கக்காலத்தில் வாழ்ந்துள்ளார். ஈழத்து உணவு என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியத்தில் இலங்கை என்றும் சொல்லாட்சி உள்ளது. ‘தொன்மாவிலங்கை எனச் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது. ‘இலங்கை கிழவோன்’ எனப் புறநானூறு(379) குறிப்பிடுகிறது.
  ஈழம் என்றால் பொன் எனப் பொருள். பொன்வேய்ந்த மாடங்கள் இருந்தமையால் –  மிகுதியாகப்பொன் கிடைத்தமையால் – அந்நாட்டிற்கு ஈழம் என்னும் பெயர் வந்துள்ளது. பொன் என்றால் ஒளிவிடுவதுதானே! இலங்கு என்றால் ஒளிர்தல், திகழ்தல், ஒளிவிடுதல் என்பன பொருளாகும். பொற்கட்டடங்கள் ஒளியுடன் திகழ்ந்த – இலங்கிய- நாடு என்பதால்  இலங்கை என அழைத்தனர். எனவே, முதற்பெயர் ஈழம் என்பதுதான். எனினும் காலப்போக்கில் இரண்டு பெயருமே அழைக்கப்பெற்றுப் பின்னர் இலங்கை என்பது நிலைக்கத்தொடங்கியது.
  இலங்கை > இலங்கா எனச் சிங்களத்தில் மருவியது.
  திருநகர், திருநெல்வேலி, திருத்தணிகை என்றெல்லாம் நாம் அடை மொழி சேர்த்து அழைப்பதுபோல் இலங்கா என்பது சிரீ என்னும் அடைமொழியுடன் சேரத்து சிரீ இலங்கா ஆனது. இப்பழக்கம் 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்தான் அறிமுகமானது.
  1935 இல் உருவான இலங்கை மார்க்சியக் கட்சி  – மார்க்சிய இலங்கா சமா சமாசா கட்சி – சிரீ ஒட்டினைச் சேர்த்துப் பயன்படுத்தியது.  1952இல் சிரீ இலங்கா விடுதலைக் கட்சி தோன்றியது(Sri Lanka Freedom Party ).
  எனினும் இலங்கை அரசாங்கம் 1972 இல் குடியரசை நடைமுறைப்படுத்தி  தன் அரசியல் யாப்பின் மூலம்  இலங்கை(சிரீ இலங்கா) மக்கள்நாயக, சமவுடைமை குடியரசு(இலங்கைச் சனநாயக,சோசலிசக் குடியரசு-Democratic Socialist Republic of Sri Lanka ) எனப் பெயரைக் குறிப்பிட்டது.
    இவ்வாறு ஆட்சி முறை அடிப்படையில் நாட்டைக் குறிக்கும் பொழுது தமிழில் இலங்கை என்றும்  சிங்களத்தில் சிரீலங்கா என்றும் குறித்துள்ளது.
   மக்களும் ஊடகத்தினரும் குடியேற்ற அடிமையாட்சியில் பரவிய சிலோன் என்ற பெயரையே பயன்படுத்தி வந்தனர்.
  போர்த்துகீசியர்கள் இலங்கை என்பதைச் சிய்லோ / சிய்லா (Ceilao)  என அழைத்தனர். இதனை ஆங்கிலேயர்கள் வந்தபின்னர்  சிய்லான் / சிலான் / சிலோன் என்றனர். இதனையே நாட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக 2011 இல் சிங்களத்தில் சிரீ இலங்கா என்றும் தமிழில் இலங்கை என்றும்மட்டுமே அழைக்கவேண்டும் என  அரசு அறிவித்தது. எனினும் வணிகக்குறியீட்டுப் பெயர்களில் உள்ள சிலோன் தொடர இசைவளித்தது.
  இவ்வாறு பெயர்  மாற்றத்ததை வலியுறுத்தியபோதும் சிங்களத்தில் சிரீ லங்கா என அழைக்கவேண்டும் என்ற அரசு தமிழில் இலங்கை என்ற தமிழ்ப்பெயரையே அழைக்குமாறுதான் அறிவித்துள்ளது. சிங்களப் பெயரே ஆங்கிலத்திலும் அழைக்கப் படுகிறது.
 இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து அந்நாட்டு அரசு அந்நாட்டின் பெயரைத் தமிழில் இலங்கை என்றுதான் குறித்து வருகிறது. இப்பொழுதும் அரசலுவலகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடரி நிலையங்கள், திட்டங்களின் பெயர்கள், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் முதலான எல்லா இடங்களிலும் இலங்கை அரசாங்கம், இலங்கை என்ற தமிழ்ப்பெயரைத்தான் தமிழில் கையாண்டு வருகிறது. ‘(இ)லங்காசிரீ’ என்னும் எரிபொருள் நிறுவனம் ஒன்றுமட்டுமே அதன் பெயரே அவ்வாறு அமைந்துள்ளதால் அப்பெயர்ச்சொல்லையே தமிழில் குறிப்பிடுகிறது. வேறு எங்கும்  அரசின் பெயர் எந்த இடத்திலும் சிரீலங்கா எனக் குறிக்கப் பெறவில்லை.
  எனவே, இலங்கை நாட்டின் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணித் தமிழில் சிரீலங்காஎனக் குறிப்பதை முற்றிலும் நிறுத்துவோம்! அந்நாட்டின்அரசு முறைப்பெயரான இலங்கை என்பதையே எல்லா இடங்களிலும் குறிப்பிடுவோம்!
  இலங்கையில் தமிழர்க்குரிய நிலப்பகுதியை(த் தமிழ்) ஈழம் எனக் குறிப்பது குறித்து  இங்கே நாம் குறிக்கவில்லை.  இலங்கை எனக் குறிப்பிடும்பொழுது சிரீலங்கா என்று சொல்லாமல் இலங்கை என்றே சொல்லுங்கள் என்கிறோம்.
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர் (திருவள்ளுவர், திருக்குறள் 199)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, November 13, 2015

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  சி.வை.தாமோதரனார-chi.vai.thamotharanar-thamotharampillai

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2

  ‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும் மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ் மொழிக்கான பெயர் திராவிடம் என்றும் அதிலிருந்துதான் தமிழ் வந்ததென்றும் குப்பைகளைக் கொட்டுகிறார்கள் அல்லவா? அவர்களுக்கும் தெளிவாகப் பின்வருமாறு விடை பகர்கிறார் தாமோதரனார்.
  இகழ் இமிழ் உமிழ் கமழ் கவிழ் குமிழ் சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னுஞ் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினை அடியாற் பிறந்து, வினை முதற் பொருண்மை உணர்த்திய விகுதி குன்றித், தனக்கிணையில்லா மொழி என்னும் பொருள் பயப்பது.
  அங்ஙனமாயின், தமியேன் என்பது போல இழிவுபொருளன்றோ பயக்கு மெனின், அற்றன்று, ஒரே தாதுவிற் பிறந்தும் அடியேன் அடிகள் எனவும் அளியேன் அளியாய் எனவும் நிற்பனவற்றுள் ஒன்று இழிவு பொருளும் மற்றையது உயர்வு பொருளும் உணர்த்தினவென்க.
  செவிக்கினிமை பயத்தலான் மதுரம் என்னும் பொருட்பேறுடைத்தாகித் தமிழென வழங்கிய தென்பாருமுளர். அஃதெவ்வாறாயினும் ஆகுக. தமிழ் என்பது தென்மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரே யாமெனக் கொள்க.
  இதை ஒழித்துத் திராவிடமென்னும் வடமொழியே தமிழென்றாகியதெனச் சற்று ஆலோசனையின்றிக் கூறுவாருமுளர். அவர் மதஞ் சாலவும் நன்றாயிருந்தது! தமிழிலே தமிழ் என்னும் பதம் வருமுன்னர்ச் சமசுகிருதத்திற் றிராவிடம் என்னும் மொழி உளதாகில் இப் பெயர் எப்பொருளை உணர்த்திற்றோ?
  உலகத்தில் எஞ்ஞான்றும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தா அஃதில்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன்னர் நிகழும்? இஃதுணராது தமிழ் வழங்கிய இடத்திற் றமிழுக்கோர் பெயரிருந்ததில்லை யென்றுஞ் சமசுகிருதத்திலிருந்து அதற்குப் பெயர் வந்ததென்றுஞ் சொல்வது யார்க்கும் நகைவிளைக்குமே.
  இஃதொன்றோ! யாதொரு தமிழ்மொழியில் இரண்டோரெழுத்துச் சமசுகிருத மொழிக்கொப்ப நிகழுமாயின் அது சமசுகிருதத்தினின்று பிறந்ததெனச் சாதிக்கின்றனர். மேலைத்தேயவாசிகளின் இங்கிலீசு முதலிய அந்நிய மொழிகளில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரைக் குறிக்கும் பாதர் மதர் என்பனவாதியும் வடமொழி அடியாய்ப் பிறந்த தென்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணுமுன் அத்தேசத்தா ரெல்லாந் தாய் தந்தையரை அழைத்தற்கோர் வீட்டுச்சொல் இல்லாதிருந்தனரென் றன்றோ முடியும்? ஆண்டுள்ள பாதர் மதர் ஒப்ப ஈண்டும் பிதா, மாதா ஆயிற்றெனில் யாது குற்றம்?
 தருக்கத்திற்காக தாலீய நியாயத்தினுண்மை அறியாமலும் ஆரியமொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின் காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்பனைக்கு யாது செய்யலாம். இவர் வாய்க்கு விலங்கிட யாராலும் முடியும்!
   இன்னொரு சாரார் தமிழ் என்னுந் தென்மொழி பதமே வடமொழியிற் றிராவிடமென மரீஇயது என்பர். இவரும் உண்மை கண்டவரல்லர். இரு கூற்றாறுந் திராவிடமென்னுஞ் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் அதன் வழக்கியலும் அறியாராயினார். இருவருந்தம் மனத்தின்கண் நிகழும் ஒரோர் துணிவுபற்றி, வல்லார்பாற் புல்லும் ஆயுதமென்றாற் போலத், தமது துணிவை நாட்டுவான் புக்கு மிக்கிடர்ப்பட்டுப் போலி யாதாரங்கள் காட்டி வாய்வல்லான் சொல்லே மன்று கொளுமென்று வாளா நம்பித் தம் வன்மை காட்ட முயன்ற யுத்திமான்களன்றி ஆகமப் பிரமாணங் கொண்டு சாதித்தவரல்லர்.
 ஏமசந்திரநாநார்த்தத்தின்படி திராவிடம் என்னுஞ் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஓடி வளைந்தது என்னும் பொருளுடையது. இது மகாநதி முதற் குமரியீறாக ஓடிவளைந்த கோடி மண்டலத்தை உணர்த்துவது. . . . . . . . மேலுந் திராவிடம் மென்ப தென்னை? தமிழ் தெலுங்கு கன்னடம் மராட்டிரம் கூர்ச்சரம் என்னும் ஐந்து மொழியையுந் திராவிடமெனவே அஃது இவ்வைந்து மொழியும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். ஆகவே இச்சொற் வடமொழியிற் கோடி மண்டலத்தின் குறியீடாகவே நின்றதென்க.
  அன்றியும் ஈராயிர ஆட்டைமொழியையா பதினாறாயிர வருடப் மொழிக்கிட்ட பெயரென்பது? இவற்றாற் றமிழ் திராவிடமாயதூஉந் திராவிடந் தமிழாயதூஉம் இரண்டுந் தவறென் றுணர்க.

தற்காலத்தில் இங்கிலீசு பிராஞ்சியாதிக்க மொழிகள் சேர்ந்த தமிழ்ச் செய்யுட்குள்ள ஊனம் அக்காலத்தில் வடமொழிச் செறிவுக் குளதாயின் வடமொழி தமிழுக்குத் தாய்மொழி யென்றெவ்வாறு பெறப்படும்.
  குறள் ஒளவையாடல் திரிகடுகம் நான்மணிக்கடிகை பஞ்சமூலம் ஏலாதி பழமொழி முதலியவற்றில் வரும் ஆரிய மொழி எத்துணைச் சிறுபான்மைய?….இவையெல்லாஞ் சம்சுகிருதத்தினின்று பிறந்தனவாமே!!
  இவ்வாறு மயங்குவார் கல்வியறிவில்லாதார் மாத்திரமன்று. தமிழிலக்கணக் கடன் முழுதுண்டு, இலக்கணக்கொத்து ஏப்பமிட்டு வடிந்து, நிலம் நீர் எனப் பொதுவெழுத்தான் வரினுந் தமிழ் தமிழே என்று வற்புறுத்துவான் ‘பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானு மீரெழுத்தானு மிலங்குந் தமிழ்மொழி’ என்று சூத்திர மியற்றிய சுவாமிநாதசேதிகரே, தம்மரபின் முன்னோர் மதத்தையும் மறந்து, “நூலுரை போதகா சிரியர்மூவரு முக்குண வசத்தான் முறைபிறழ்ந் தறைவரே” என்னுந் தன்விதிக்குத் தன்னையே இலக்கியமாக ஒப்பித்தாற் போல, ‘அன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென் – றறையவு நாணுவ ரறிவுடையோரே” யென்று மாழ்கினர்.
  இது வடமொழிப் பயிற்சியே மிக்குடையராய் அதன்மேற் கொண்ட பேரபிமானத்தானும், அம்மொழியின்மேற் றென்மொழியன்றிப் பிறிதுமொழி தெரியாக் குறைவானும் நேர்ந்த வழுவன்றோ? உலகத்தில் எம்மொழிக்குஞ் சிறப்பெழுத்துச் சில்லெழுத்தேயாம். உரப்பியும் எடுத்துங் கனைத்தும் ஒவ்வொன்றையே வேறு மும்மூன்றாக விகற்பித்துச்சரிக்கும் ஐவர்க்கத்தையுங் கூட்டெழுத்தையும் ஒழித்தால் எட்டெழுத்தாலொரு மொழி யின்றேயென்று சம்சுகிருதத்தையும் புரட்டிவிடலாமே.
  இங்கிலீசு மொழியில் வடமொழிக்கில்லாத எழுத்துக்கள் F, Z இரண்டாதலால் இரண்டெழுத்தாலொரு மொழியின்றேயென அதனையும் மறுப்பார்போலும். இரண்டுக்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குன்றல் இவர் போலியர்க்குப் பெருங் குற்றமாம்.
  உண்மை உரைப்பின் உரோமாபுரிமொழியாகிய இலத்தீனுக்கும் இங்கிலீசுக்குமுள்ள சம்பந்தமே சம்சுகிருதத்திற்குந் தமிழுக்குமுள்ளதெனக் கொள்க. அளவில்லாத கிரந்தங்களை யுடையதாயினும் இலத்தீன்மொழி விரவாத கிரந்தமொன்றும் இங்கீலீசில் இல்லாதவாறு போலவே சம்சுகிருதமொழி சுற்றிலும் விரவாத கிரந்தந் தமிழுக்கில்லாத திருக்கலாமாகவே, “அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று – ளொன்றே யாயினுந் தனித்தமிழுண்டோ” என இலக்கணக் கொத்துடையார் முழங்கிய முழக்கம் வெற்றொலியாயினமை அறிக.
  அன்றியும் வடமொழியில் இல்லாத புணர்ச்சி யிலக்கணங்களுங் குறியீடுகளும் வினைத்தொகை குறிப்புவினை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணைக் கூறுபாடும் பால் விதிகளும் அகம் புறம் என்னும் பொருட் பேதங்களும் ஐந்திணை யியல்புகளும் அவற்றின் துறைகளும் வெண்பா கலிப்பா கலித்துறை முதலிய செய்யுளிலக்கணங்களும் இவைபோல்வன பிறவுங் காலத்திற்குக் காலம் பிற்றை நாளிற் றோன்றாது ஆதியிலக்கணமாகிய அகத்தியத்தில் முற்ற உரைக்கப்பட்டமையால் தமிழ் சம்சுகிருதத்தினின்று பிறவாத தன்மொழி(தற்பாசை) என்பது பசுமரத் தாணிபோல் நாட்டப்படும்.
  இவை யெல்லாம் ஒருவர் காலத்தில் அவ்வொருவராலேயே நூதனமாகப் படைக்கப்படற் பாலனவா? அகத்தியர் மகாரீசுவரர், அன்னோர் இவற்றைக் கற்பித்தல் எளிதன்றே யெனின், நன்று கடாயினாய், ஐந்திர பாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந்தும், அவற்றுள்ள அதிகார முறைமை ஒத்து முறைமை சூத்திர முறைமைகளின் சிறப்பினைச் சீரிதிற் கண்டும். யாதொருகிரமமும் முன்னெடுபின் சம்பந்த சார்புமின்றித் தமிழுள் இயல் இசை நாடக இலக்கண விதிகளும் இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணிவிதிகளும் நெறிமுறை பிறழக் கண்டபடி விரவத் தமது இலக்கணநூல் இயற்றியமையானே அஃது எத்துணை வல்லாராயினும் ஒருவருக்கரிய தென்று உணர்க. அன்றியும் இஃது எத்தேசத்து எந்தப் மொழியினது அநுபவத்திற்கும் யுத்திக்கும் முழு விரோதமென்க.”
இவை போலும் அறிஞர் சி.வை.தாமோதரனாரின் ஆழமான கருத்துகள் தமிழுக்கு என்றும் வலிவும் பொலிவும் நல்குவனவன்றோ!
  அறிஞர் தாமோதரனார், தன்னரிய தமிழுக்குப் பன்னலம் பெருகச் செய்து, பதிப்புத் துறையின் ‘முன்னோடி’ எனப் புகழ் பெற்றுத் தமது அறுபத்து ஒன்பதாம் அகவையில், 1901ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல் நாள், இவ்வுலக வாழ்வை நீத்தார்.
நற்புலவர் ஏடெல்லாம் நாடிநலங் காணாமல்
உற்றசெல் உள்நுழைந் துய்ந்திடும் – பெற்றியைக்
காணாமற் காத்திட்ட சி. வை. தா மோதரனைப்
பேணுதலே நம்பெற்றிப் பேறு. (புலவர். நா. சிவபாதசுந்தரனார்)
என நாம் அறிஞர் சி.வை.தாமோதரானரின் பார்புகழ் போற்றிப் பைந்தமிழ் காப்போம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்கியப்பூக்கள் 2
தொகுப்பாசிரியர் : முல்லை அமுதன்
பக்கங்கள்(432- 443:) 438-443
Jpeg
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015)

Saturday, August 15, 2015

இலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்!

ilangai_eezham_therthal_election

தமிழினப் பகைவர்களை வீழ்த்துங்கள்!


  இலங்கையில் ஆனி 11, 2046 / சூன் 26, 2015 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14 ஆவது நாடாளுமன்றத்தைப் பதவிக் காலத்திற்குப் பத்துத் திங்கள் முன்கூட்டியே கலைத்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆடி 32, 2016 / ஆகத்து 17, 2015 திங்கள் கிழமை நடைபெறுகிறது. அமைய உள்ள 15 ஆவது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தெரிவாகஉள்ளனர்.
 இத்தேர்தலில் ஈழ வாக்காளர்கள் சலனங்களுக்கு ஆட்படாமல் இனக் கொலையாளிகளையும் இனப்பகைவர்களையும் வீழ்த்த வேண்டும். இராசபக்சேவை வீழ்த்தியதுபோல் பிற கொலையாளிக் கும்பலகளையும் வீழ்த்த வேண்டும். தமிழ்ப்பகைவர்கள் மேதகு பிரபாகரன் படம், திலீபன் முதலான ஈகியர் படங்களைப் போட்டுக் கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதில் மயங்கக் கூடாது. அற்ப ஆசைகளுக்கும் இடம் தரக்கூடாது.
  அயல்நாட்டில் உள்ளவர்களால் தக்கவருக்கு வாக்களியுங்கள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, தக்கவர் யார் என அடையாளம் காடடுவது சிக்கலானது. மண்ணின் மைந்தர்களான தமிழ் ஈழ வாக்காளர்களுக்குத்தான் யார்? எவர்? எனத் தெரியும்.
 இலங்கை முழுவதும் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த நாடுதான். அது தீவாக மாறிய பின்னர் சிங்களவரும் இடம் பெற்று விட்டனர். இருப்பினும் பெரும்பான்மைத் தமிழர்களை ஓரங்கட்டிச் சிறுபான்மைச் சிங்களவர் ஆட்சியைக் கைப்பற்றி பெரும்பான்மையராக மாறிவிட்டனர். இலங்கை எமதே என்பது வரலாறாக மாறிவிட்டது. ஈழம் நமதே என்பது நாளைய வரலாறாக மாறும் வகையில் இன்றைக்கு நம்பிக்கை விதை ஆழமாக வேரூன்ற வேண்டும். 01.01.1600 இல் இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்ந்திருந்த பகுதிஇணைக்கப்பட்டுத் தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்கு இப்போது வாக்குச்சீட்டு என்னும் ஆயுதத்தைத் தமிழ் ஈழ மக்கள் பயன்படுத்த வேண்டும். இதனால், உடனடியாக ஈழம் மலரா விட்டாலும் பகைவர்கள் ஒடுக்கப்படுவார்கள்.
  உயிரைத் தந்த,   குருதிய சிந்திய, வாழ்வை இழந்த போராளிகளும் மக்களும் கண்ட கனவு உறுதியாய் ஒரு நாள் நனவாகும். அதற்கு இந்நாடாளுமன்றத் தேர்தலில் விழிப்புடன் செயல்பட்டு வாக்குரிமையை வீணாக்காமல்
இனக் கொலையாளிகள் தண்டனை பெற,
இனப் பகைவர்கள் வீழ்ச்சியுற
தமிழினம் எழுச்சி பெற
 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (திருவள்ளுவர், திருக்குறள் 517)
என்னும் தமிழ்நெறிக்கேற்ப வாக்களிக்க வேண்டும்.
 சிங்கள மக்களும் தங்கள் நிலம் தமிழர்க்குரியது என்பதையும் மண்ணிண்   மைந்தர்களைப் போற்ற வேண்டும் என்பதையும் தமிழினப்படுகொலைகளால் தங்களுக்கும் அழிவு ஏற்பட்டுள்ளதை என்பதையும் உணர்ந்து, மனித நேயத்துடன் சிந்தித்துச் சிங்களஇன வெறியர்களைத் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். சிங்கள மக்களின் அமைதிக்கு வழி வகுப்போரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈழம் மலர மனித நேயர்கள் துணை புரிய வேண்டும்!.

ஈழ மீட்பர்களைத் தேர்ந்தெடுங்கள்!
தமிழ் ஈழ நாடாளுமன்றம் அமைய வழி வகுங்கள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 :  இதழுரை feat-default


Followers

Blog Archive