Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, May 23, 2017

ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்




ஈழம் : துயரம் விலகவில்லை !

என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை!

   ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம் மீண்டும் உரிமையாட்சி செய்வதே தமிழர்களின் இன்னல்களைப் போக்கும்; நன்மைகளைப் பெருக்கும் என்ற  முடிவிற்கு வந்தனர். எனவே, தமிழர்கள் நெருக்கமாக வாழும் தமிழ்ப்பகுதிகளை இணைத்துத் தமிழீழம் கேட்டனர். அமைதிவழி அறப்போராட்டங்களும் அரச அடக்குமுறைகளின் துப்பாக்கிக்குண்டுகளால் எதிர்கொள்ளப்பட்டன. எனவே, அமைதிவழியினும் மற வழியே சிறந்தது எனத் தாங்களும் ஆயுதங்களைக் கைகளில் எடுத்தனர்.  இந்திய அரசு ஒதுங்கி யிருந்தால் என்றோ தமிழீழம் மலர்ந்திருக்கும்! உயிர்ப்பலிகள் தடுக்கப்பட்டிருக்கும்! பன்னாட்டு மன்றங்களில் தமிழீழக் கொடிகள் பறந்திருக்கும்! உலகெங்கும் தமிழீழத் தூதர்கள் தமிழ்ப்பணிகளும் மக்கள்நலப்பணிகளும் ஆற்றிக்  கொண்டிருந்திருப்பர்.
  ஆனால், அண்டை நாட்டின் வஞ்சகத்தாலும் பிற உலகநாடுகளின்  ஏமாற்று வேலைகளாலும் ஈழத்தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டனர். 2009 மேத்திங்கள் பெரும் அவலம் நேர்ந்தது.  கொத்துக்குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் இருநூறாயிரவர்கள் அழிந்தனர். ஈழ நிலப்பகுதி அழிக்கப்பட்டது. புறநானூற்றின் இலக்கணமாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால்  கொடுமைகளால் ஆயுதங்களை அமைதியாக்கினர். மேதகு பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நல்லரசு சிதைக்கப்பட்டது.
   ஈழத்தமிழர்களின் வாக்குச்சீட்டு என்னும் ஆயுதம் இலங்கை அரசை மாற்றியது. எனினும் துயரம் தீரவில்லை. இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை. நேற்றுவரை உடன் குற்றவாளியாக இருந்தவர்கள் எப்படித் திருந்துவர்? எனினும் சிங்கள வெறியர்களின் நெருக்குதல் இல்லையெனில், புதிய அரசு,. சில நன்மைகளைத் தமிழர்களுக்கு ஆற்றியிருக்கும். சிங்களவன் கைகளில் ஆட்சிக்கோல் இருக்கும்வரை தமிழர்களின் நிலையில் மாற்றமிராது என்பதே உண்மை என்பதையே தமிழர்கள் உணர்ந்து கூறி வருகின்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் உயிர்ப்பலிகள், உடைமை இழப்புகள் போன்ற துயரங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் சூழல் அவர்களை அமைதியாக இருக்கச் செய்துள்ளது. அமைதி காத்தாலும் அவர்களின் உள்ளங்களில்  உரிமைத் தீ கனன்று கொண்டுதான் உள்ளது.
  ஈழத்தமிழர்களுக்கான நீதி கேட்டு, தனியுரிமையுடன் ஆட்சியமைக்க உரிமைகேட்டுப் புலம் பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் கருத்தாடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
   பதவி ஆசையும் பிற ஆசைகளும் உடைய சிலரும்   தமி்ழ்ஈழத்தை ஆதரிப்பதுபோல் நடித்து ஈழப்போராளிகளுக்கு எதிரான கருத்தை விதைக்கும் கயமைத்தனம் உடைய சிலரும் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். அதே நேரம் கையறு நிலையில் உள்ள ஈழத்தமிழர்கள் விடிவை எதிர்நோக்கி அமைதி காத்து வருகின்றனர். இதனால், அவர்கள் சோர்ந்துவிட்டார்கள் என்றோ, கயமைக்குப்பலியாகிவிட்டனர் என்றோ பொருளல்ல!
  • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவரம் இன்னும் தெரியவில்லை.
  • தமிழர் பகுதிகிளில் சிங்களக் குடியிருப்புகளும் சிங்களப் படைக்குடியிருப்புகளும் பெருகி வருகின்றன.
  • தமிழர்களைத் தமிழ்ப்பகுதிகளிலேயே சிறுபான்மை ஆக்கும் முயற்சிகளில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது.
  • வீடிழந்தவர்கள் 100 பேர் இருக்கும் இடத்தில் ஒருவருக்கு வீடுகொடுத்து அனைவருக்கும் வீடு கொடுத்ததுபோல் விளம்பரம்செய்து உலகமக்களிடம் தமிழர்கள் நல்வாழ்வில் கருத்துசெலுத்துவதுபோல் ஏமாற்றுவதும் தொடர்கின்றது.
  • வெண்ணூர்தி(வெள்ளைவேன்) கடத்தல் தொடர்கி்ன்றது.
  • சித்திரவதை முகாம்களில் உள்ளவர்கள் விடுவிக்கப்படவி்ல்லை.
  • இனப்படுகொலையால் உயிர்ப்பலியான குடும்பத்தாரின் நினைவைக்கூடப் போற்றத் தடை
  இவ்வாறான பலவற்றை ஈழத்தமிழர்கள் துயரத்துடன் தாங்கிக் கொண்டுள்ளனர். இவற்றிற்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளனர்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்(திருவள்ளுவர், திருக்குறள் 487).
  பகைவர் தீங்கு இழைத்தவுடன் சினந்தெழாமல், அறிவுடையோர் உள்ளத்தில் சினத்தை வளர்த்துத்  தக்க காலம் பார்த்துக் காத்திருப்பர் என்னும் வள்ளுவர் நெறியின்படி ஈழத்தமிழர்கள்  உரிய காலம் வரும்வரை வெளிப்படையாகக் களத்தில் குதிக்கமாட்டார்கள். எனவே, ஈழத்தமிழர்கள் அமைதியைத் தவறாக எடைபோடக்கூடாது.
  முள்ளிவாய்க்கால் அவலத்துடன் தமிழ் ஈழத்திற்கு முற்றுப்புள்ளி இடவில்லை. அரைப்புள்ளிதான் இடப்பட்டுள்ளது. எனவே, “ஈழம் மலரும்! மலர்ந்தே தீரும்!” என்பதே தமிழர்களின் நம்பிக்கை!
  ஈழத்தமிழர்களின் துயரம் விலகவில்லை! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! என்பதே உண்மை.
  நம்பிக்கை பொய்க்காது,  ஈழம் மலரட்டும்! துயரம் விலகட்டும்! அமைதி நிலவட்டும்! மகிழ்ச்சி நிலைக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல 186,  சித்திரை 31, 2048 /  மே 14, 2017

Saturday, November 26, 2016

புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார், இதழுரை,இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_castro_munbe_maraindhuvittar_ilakkuvanarthiruvalluvan

புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார்!


  விடுதலைப் போராளி,  உலகை ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த மாவீரன், 638 தடவை  அமெரிக்க எமனிடமிருந்து மீண்டவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலோன், நாட்டில் கல்லாமையை ஒழித்த செயற்பாட்டாளன்,  பரப்பளவில் சிறியதான கியூபாக் குடியரசு அல்லது கூபாக்குடியரசு நாட்டைப் பெரிய நாடுகளுக்கு இணையாக மாற்றிய தலைவன், இவ்வாறான பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் புரட்சித்திலகம் பிடல் காசுட்டிரோ (Fidel Alejandro Castro Ruz  :  ஆடி 28,  தி.பி. 1957 / ஆகத்து 13, 1926 – கார்த்திகை 10, 2047 / நவம்பர் 25, 2016) மறைந்தார்.
  அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நாட்டினர், அன்பர்கள் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.  அதே நேரம், அவரது  பூத உடல் இப்பொழுதுதான் மறைந்தது; ஆனால்,  அவர்  கொள்கை உள்ளம் என்றோ மறைந்து விட்டது என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை.
  தன் தாய்நாட்டை நேசிக்கும் எந்த ஒருவனும்  தத்தம் தாய்நாட்டை நேசிக்கும் பிறரையும் நேசிக்க வேண்டும்.  தன்நாட்டிற்கு எதிரான ஒற்றை வல்லாண்மைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவனும்  பிற நாட்டிற்கு எதிரான ஒற்றை வல்லாண்மைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். தன் பகைநாடுகளின் வல்லாண்மையை எதிர்த்துக் கொண்டு தன் நட்பு நாடுகளின் வல்லாண்மையை ஆதரிப்பது அறிவின்மை மட்டுமல்ல! நாணயமின்மையுமன்றோ!
  பிடல் காசுட்டிரோவைப் புகழாதவர்கள் பழிக்கப்படவேண்டியவர்கள் என்பதுபோல் ஒவ்வொருவரும் அவரைப் புகழ்ந்து கொண்டிருக்கும் போது இப்படி எழுதலாமா எனச் சிலர் கேட்கலாம்.
  “பெரியோரை வியத்தலும் இலமே” (கணியன் பூங்குன்றனார், புறநானூறு 192.12) என்பதுதான் நம் நெறி.  புகழ்ச்சிக்குரிய செயல்களைப் பாராட்டும் நாம் இகழ்ச்சிக்குரிய செயல்களையும் கண்டிக்க வேண்டுமல்லவா? நற்செயல் புரிந்தவர் என்பதற்காக ஒருவரின் தீவினைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது அறமாகுமோ?
   நாட்டின் முழக்கமாகப் பிடல் காசுட்டிரோ அமைத்தது “தாய்நாடு  அல்லது மரணம்” என்பதுதான். ஆனால், இதே முழக்கத்தைச் செயலில் காட்டி விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் தாய் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பொழுது உதவிக்கரம் நீட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், பயங்கரவாதிகள் என்றும் பிரிவினை வாதிகள் என்றும்  குற்றம் சுமத்தி எதிராளிகளுடன் நட்பு கொள்ளலாமா? உலகின் ஒடுக்கப்பட்ட இனங்களுக்காகக்  குரல் கொடுப்பவர் என்னும் பெயர் வாங்கிக்  கொண்டு ஒடுக்கி அழிப்போருடன் இணைந்து செயல்படலாமா?  தன் நட்பு நாடுகளையும் இணைத்துக்  கொண்டு தமிழினப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
 இந்தியாவின் நட்பு நாடு கியூபா. எனவே, மத்திய ஆளும் பொறுப்பிலிருந்த எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் நண்பனாக இருந்தவர் காசுட்டிரோ. மத்தியில் யார் இருந்தாலும் இந்தியஅரசு தமிழினத்தை ஒடுக்குவதில் குறியாகவே உள்ளது. அதனால்தான் ஈழத்தமிழர்களையும் பகையாகக் கருதியது. எனவே, இந்தியாவின் எதிரி கியூபாவிற்கும் எதிரியானது. எனவே, தமிழினத்தை அழிக்கும் முயற்சியில் தன் கொள்கைகளுக்கு மாறாக உடந்தையாக இருந்தது கியூபா.
தமிழுக்கும் தமிழர்க்கும் பகையெனில் நமக்கும்  பகையே என்பார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். அப்படியாயின் தமிழர்க்கு – ஈழத்தமிழர்க்கு –  வெளிப்படையான பகையாக நடந்து கொண்ட பிடல் காசுட்டிரோவை நாம் பகையாகக் கருதுவதில் தவறில்லை.
  காசுட்டிரோவின் போராட்ட வரலாறு கண்டு போற்றுகிறோம்! புரட்சி முழக்கங்களை வரவேற்கிறோம்! அதே நேரம், கொள்கையில் தடுமாறி இன அழிப்பு நாடான சிங்களத்துடன் கை கோத்ததை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்?
   பிடல் காசுட்டிரோ 1959 இல் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கையை நட்பு நாடாக ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்பட்டது. ஆனால், நண்பன் தவறு செய்யும் பொழுது இடித்துரைத்து வழிகாட்டுபவன்தானே உண்மை நண்பனாக இருக்க முடியும்?  ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் என்னும் முகமூடியை அணிந்து கொண்டு ஒடுக்குபவர்களின் கரங்களுடன் தம் கரங்களை இணைத்துக்  கொண்ட பொழுது,  காறி உமிழ்ந்திருக்க வேண்டாவா?
   எப்பொழுது இனப்படுகொலையாளி சிங்களத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டாரோ அப்பொழுதே பிடல் காசுட்டிரோ மறைந்து விட்டார் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது?
  இந்தியா, அமெரிக்க வல்லாண்மைக்கு எதிராகச் சோவியத்து ஒன்றியத்தின் பக்கம் நின்ற நாடு; அணி சேரா நாடு எனத் தனி அணி கண்ட நாடு; விடுதலைக்குரல் எங்கெல்லாம் ஒலித்ததோ அங்கெல்லாம் தானும் குரல் கொடுத்து எதிரொலித்த நாடு; என்றபோதும் தமிழரைப் பகையாகக் கருதுவதால்தானே அதை எதிர்க்கிறோம். தமிழ் ஈழ மக்களைக் கொல்வதற்குத் துணை நின்றதால்தானே எதிர்க்கிறோம். இந்திய அமைப்பில் இருந்து கொண்டே அதன் அறமற்ற செயல்களுக்காக எதிர்க்கும் நாம் அயல்நாடான கியூபாவின் அறமற்ற செயல்களுக்காக அதை எதிர்க்கத்தானே வேண்டும்?
 முன்பு ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்திற்குத் துணை நின்றது பேராயக்கட்சி(காங்கிரசு). பின்பு அதுவே சிங்களத்துடன் இணைந்து கொண்டு அதன் சார்பில் இன அழிப்புப் போரை நடத்தியது. முந்தைய பணிக்காக அதைப் பாராட்டாமல் பிந்தைய கொடுமைக்காக அதனை வேரொடு கில்லி எறிய வேண்டும் என்று சொல்லவில்லையா?
 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுதததாகத் தி.மு.க.வையும் அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியையும் தவிர வேறு கட்சியையோ தலைவரையோ சொல்ல இயலுமா? அற்றை நிலைப்பாட்டிற்கு மாறாகக் குடும்ப நலன் கருதி நாட்டு நலன் துறந்து பேராயக்கட்சியுடன் இணைந்து தமிழினப் படுகொலையில உடந்தையாக இருந்த பிற்றை நிலைப்பாட்டிற்காகத்தானே கலைஞர் கருணாநிதியை எதிர்க்கின்றோம்?
 கருணா முதலான வஞ்சகர்கள் / இரண்டகர்கள் / துரோகிகள் ஒரு காலத்தில்  தங்கள் உயிரையும் துச்சசெமனக்கருதித் தாய் நாட்டு விடுதலைக்காகப் போரிட்டவர்கள்தாமே! ஆனால், வஞ்சகர்களாக மாறியதும் அவர்களை எதிர்க்கவில்லையா?
 அப்படியானால் பிடல் காசுட்டிரோவிற்கும் இது பொருந்தும் அல்லவா?  பொதுவுடைமைவாதிகளுக்குத் தலைவர்களே பிறநாட்டினர்தாம். அவர்கள் போற்றுவார்கள். ஆனால், தமிழ் உணர்வு மிக்கவர்கள்  எப்படிப்போற்ற இயலும்?
  தமிழர்கள் என்ன காசுட்டிரோவிற்கு அல்லது கியூபாவிற்கு எதிரானவர்களா? தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கருத்தைப் பரப்பியதில் திராவியட இயக்கங்களுக்கு முதன்மைப் பங்கு உண்டு. அதனால்தான் பொதுவுடைமைக் கடசிகள் தமிழ்நாட்டில் வளர முடியவில்லை. பிற நாட்டுத் தலைவர்களைவிடத் தமிழ் மக்கள் மிகுதியும் அறிந்தது பிடல் காசுட்டிரோவைத்தானே! அவரது படங்களை ஆடைகளில் அச்சிட்டும் பிள்ளைகளுக்குப் பெயரிட்டும் அவரது முழக்கங்களைப் பரப்பியும் தம் அன்பைக் காட்டுபவர்கள் ஆயிற்றே! ஈழத்தமிழர்கள் போற்றிய தலைவர்களுள் ஒருவரல்லவா, பிடரல் காசுட்டிரோ! தம் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தமிழர்களுக்கு எதிராகச்  செயல்பட எப்படி மனம் வந்தது என்றே தெரியவில்லையே! சிங்கள நாட்டை நட்பு நாடாகக் கருதுவதால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? இருவருக்கும் இணக்கம் ஏற்பட உதவியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறில்லாமல் தன் கொள்கைகளுக்கு எதிரானவர்களுடன்,  அமெரிக்க  வல்லாண்மைக்கு எதிரி என்ற பொய்யான புரட்டுரைக்காக, இணைந்து நின்று இனப்படுகொலைகளுக்கு உடந்தையாகவும் பன்னாட்டு மன்றத்தில் கொலையாளிகள் தப்பிக்கக் கேடயமாகவும் திகழ்ந்தது கொள்கை  வீரனுக்கு இழுக்கல்லவா?
 “ நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நெறிவந்த நாம் இந்தியா முதலான நாடுகளின் குற்றத்தை எதிர்த்துக் கொண்டு கியூபாவின் குற்றத்தை ஏற்கலாமா?
  ஒடுக்கப்படுவோர்களுக்கு வழிகாட்டியாக மட்டும் அவர் வரலாறு நமக்குப் பாடமாக அமையவில்லை. நாம் கண்மூடித்தனமாக ஆதரிப்பதை நிறுத்தினால்தான் தலைவர்கள் திருந்துவார்கள் என்பதற்குப் பிடல் காசுட்டிரோவின் வாழ்க்கையும் நமக்குப்பாடமாக அமையட்டும்!
  ஒருபுறம் பிடல் காசுட்டிரோவின் மறைவிற்கு விழிநீர் திரண்டு அஞ்சலி செலுத்தினாலும் அவரது அழிசெயல்களை எண்ணாமல் இருக்க முடியவில்லை!
  உலகம் உள்ளளவும் பிடல் காசுட்டிரோவின் புகழ் இருக்கும்!  தமிழின விடுதலைக்கு எதிரான அவரது களங்கமும் கறையாக இருக்கும்!
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 957)
கண்ணீருடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 162, கார்த்திகை 12, 2047 / நவம்பர் 27, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo                                                           முழக்கம் - தமிழர்க்குப் பகை, சி.இலக்குவனார் ; muzhakkam_thamizhpakai_s-ilakkuvanar

Saturday, November 21, 2015

வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா?

வைகோ : vaiko

வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா? தலைக்குனிவிற்கு ஆளாகலாமா?

  தமிழ்நாட்டில் மாறி,மாறி இரு கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் இரு கட்சிகளுடனும் மாறி மாறிக்  கூட்டணி வைத்து, வெறுப்படைந்ததாலும் வைகோ முதலானவர்கள் புதிய கூட்டணியை உருவாக்க எண்ணுவது தவறல்ல! ஆனால்,    கூட்டணியின் பொதுவான கொள்கைகளுக்காகத் தனக்கே உரிய கொள்கைகளை விட்டுக் கொடுப்பது முறையல்லவே! வைகோ பொதுவான கருத்தொற்றுமைக்காகத் தமிழ்ஈழம் பற்றியும் கூடங்குளம் பற்றியும்பேசப்போவதில்லை என்கிறார். நாளை இவர் ஆட்சி அமைத்தால், கருத்தொற்றுமைக்காக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுப்பார் என்றுதானே பொருள்.  தமிழ்ஈழத்திற்காகக் குரல் கொடுப்பதாலும் போராடுவதாலும்  உலகத்தமிழர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். அதனையே விட்டுக் கொடுக்கின்றாரே!
இவரை வந்தேறி எனச் சிலர் வைதாலும் இவரது போராட்டக் குணங்களால் இவரைத் தமிழராகவே கருதி ஆதரிப்போர் பலர் உள்ளனரே, அவர்கள் முகத்தில் கரிபூசலாமா? குறைந்தது கூட்டணி மேடைகளில் பேசாவிட்டாலும் கட்சி மேடைகளில் பேசுவோம் என அறிவிக்கலாமே!
மார்க்சியப் பொதுவுடைமைக்கட்சியினர்  இந்தியாவில்  செஞ்சட்டைப் போர்த்திய காவியாடையினர்தாம். அவர்களைக் கூட்டணியில் சேர்க்காவிட்டால்தான் என்ன? அல்லது கொள்கைக்கு ஒத்துவருமாறு அவர்களை  வலியுறுத்தி மாற்றியிருக்கலாம் அல்லவா? மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியில் எளிய தொண்டர்கள் பலரும் மக்கள் சார்பாளர்கள் சிலரும் இருப்பினும் அக்கட்சி யின்  செயல்பாடு தமிழ்நலனுக்கு எதிரானதே! அக்கட்சியைத் தமிழ்நலனுக்குத் திசை திருப்பாமல், அவர்களின் கிணற்றில் இவர்கள் விழலாமா?
திருமா கொலைகாரக்காங்.உடனே கூட்டணி வைத்தவர். அதனால், கொள்கையில் இறங்கி வந்திருக்கலாம். இவர் இறங்கி வரலாமா?  கொள்கை மாறிய திருமாவைத் தம் பக்கம் ஈர்ப்பதில் சிக்கல் இராது. ஆனால், காங்.உடன் கூட்டணி ஏற்படலாம் என எண்ணி அதற்காகக் கதவைத் திறக்கும் வகையில்  கொள்கையை விட்டுக் கொடுத்திருந்தால் மன்னிக்க இயலாத குற்றமாகும்.
மார்க்சியப் பொதுவுடைமைக்கட்சியையும் தமிழ் ஈழம் பக்கம் ஈர்க்காமல், படுகுழியில் வீழலாமா?
தொடர்ந்து வரும் தோல்விச்சூழலில் கட்சி நலன் கருதி, வைகோ கூட்டணி அமைப்பது தவறல்ல. ஆனால், எந்தக்  கொள்கைகள் அவரது மூச்சு எனச் சொல்லி வந்தாரோ, சொல்லியதுடன் செயல்பட்டு வந்தாரோ, அவற்றிலிருந்து பின்வாங்கலாமா?
அசைக்க முடியாத இடததில் அஇஅதிமுக உள்ளதாலும் அடிமட்ட நிலையில் தொண்டர்  வலிமையுடன் திமுக உள்ளதாலும் வாக்களிக்காதாவர் வாக்குகளை நம்பிக் களத்தில் இறங்கும் வைகோ, கொள்கைச் சரிவிற்கு இடம் தரக்கூடாது என்பதை உணர வேண்டும்.
ஊழலுக்கு அப்பாற்பட்டுக் கலைஞர் பல தவறுகள் இழைத்தாலும் தங்களுக்குள் வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டு அவர் பக்கம் நின்றவர்கள் பெரும்பான்மையர்.  கலைஞர் தம், வீட்டு மக்கள் நலனுக்காக நாட்டு மக்கள் நலனைப் புறந்தள்ளிய பொழுதுகூட அவர்கள் வேதனையுடன் பொறுத்துக்  கொண்டார்கள். ஆனால், தமிழ் ஈழ மக்களுக்கு எமனாக வந்தவர்களுக்கு உற்ற நண்பராக  இருந்ததும்  இனப்படுகொலை பற்றிக் கவலைப்படாததும்  அவர்களை மாற்றிக் கலைஞரைப் புறந்தள்ளச் செய்துவிட்டதே!  கலைஞருக்கே இந்தக் கதி என்றால்  வைகோ  நீங்கள் எம்மாத்திரம்!?
எனவே, மக்கள் நலக்கூட்டணியின் பொதுவான கொள்கைகளில் மாற்றம் வேண்டும். இல்லையேல், வைகோ பற்றிய எண்ணத்தை  மக்கள் மாற்றிக் கொள்வர். கொள்கையைப் புறக்கணித்த வைகோவை மக்கள் புறக்கணித்தால் எதிர்க்கட்சியாகக் கூட அமர முடியாது என்பதை  உணர வேண்டும்.
மக்கள்நலக்கூட்டணி :makkal-nala-kuutani
 கூட்டணி நலனுக்கான வேண்டுகோள்:  தொகுதி ஒதுக்கீட்டு எண்ணிக்கை எவ்வாறு அமைந்தாலும், வைகோவே கூட்டணிக்குத் தலைமை தாங்க வேண்டும்.
வைகோ தலைமை தாங்கினாலும் எளியோர் ஏந்தல் நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். தே.மு.தி.க. இணைந்தால், வைகோ இணை முதல்வர் எனவும் விசயகாந்து துணைமுதல்வர் எனவும் உடன்பாடு காணலாம்.
 கொள்கைப் பிறழ்வைத் திருத்திக் கொண்டு  வைகோ தலைமையில் அணிவகுத்துத் தேர்தலைச் சந்தித்து வாகை சூட மக்கள்நலக்கூட்டணிக்கு வாழ்த்துகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 

Followers

Blog Archive