தமிழினப் பகைவர்களை வீழ்த்துங்கள்!
இலங்கையில் ஆனி 11, 2046 / சூன் 26, 2015 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14 ஆவது
நாடாளுமன்றத்தைப் பதவிக் காலத்திற்குப் பத்துத் திங்கள் முன்கூட்டியே
கலைத்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆடி 32, 2016 / ஆகத்து 17, 2015 திங்கள் கிழமை நடைபெறுகிறது. அமைய உள்ள 15 ஆவது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தெரிவாகஉள்ளனர்.
இத்தேர்தலில் ஈழ
வாக்காளர்கள் சலனங்களுக்கு ஆட்படாமல் இனக் கொலையாளிகளையும்
இனப்பகைவர்களையும் வீழ்த்த வேண்டும். இராசபக்சேவை வீழ்த்தியதுபோல் பிற
கொலையாளிக் கும்பலகளையும் வீழ்த்த வேண்டும். தமிழ்ப்பகைவர்கள் மேதகு
பிரபாகரன் படம், திலீபன் முதலான ஈகியர் படங்களைப்
போட்டுக் கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதில் மயங்கக் கூடாது. அற்ப
ஆசைகளுக்கும் இடம் தரக்கூடாது.
அயல்நாட்டில் உள்ளவர்களால் தக்கவருக்கு வாக்களியுங்கள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, தக்கவர் யார் என அடையாளம் காடடுவது சிக்கலானது. மண்ணின் மைந்தர்களான தமிழ் ஈழ வாக்காளர்களுக்குத்தான் யார்? எவர்? எனத் தெரியும்.
இலங்கை முழுவதும்
தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த நாடுதான். அது தீவாக மாறிய பின்னர் சிங்களவரும்
இடம் பெற்று விட்டனர். இருப்பினும் பெரும்பான்மைத் தமிழர்களை ஓரங்கட்டிச்
சிறுபான்மைச் சிங்களவர் ஆட்சியைக் கைப்பற்றி பெரும்பான்மையராக
மாறிவிட்டனர். இலங்கை எமதே என்பது வரலாறாக மாறிவிட்டது. ஈழம் நமதே என்பது நாளைய வரலாறாக மாறும் வகையில் இன்றைக்கு நம்பிக்கை விதை ஆழமாக வேரூன்ற வேண்டும். 01.01.1600 இல் இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்ந்திருந்த பகுதிஇணைக்கப்பட்டுத் தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்கு இப்போது வாக்குச்சீட்டு என்னும் ஆயுதத்தைத் தமிழ் ஈழ மக்கள் பயன்படுத்த வேண்டும். இதனால், உடனடியாக ஈழம் மலரா விட்டாலும் பகைவர்கள் ஒடுக்கப்படுவார்கள்.
உயிரைத் தந்த, குருதிய சிந்திய, வாழ்வை
இழந்த போராளிகளும் மக்களும் கண்ட கனவு உறுதியாய் ஒரு நாள் நனவாகும்.
அதற்கு இந்நாடாளுமன்றத் தேர்தலில் விழிப்புடன் செயல்பட்டு வாக்குரிமையை
வீணாக்காமல்
இனக் கொலையாளிகள் தண்டனை பெற,
இனப் பகைவர்கள் வீழ்ச்சியுற
தமிழினம் எழுச்சி பெற
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (திருவள்ளுவர், திருக்குறள் 517)
என்னும் தமிழ்நெறிக்கேற்ப வாக்களிக்க வேண்டும்.
சிங்கள மக்களும் தங்கள்
நிலம் தமிழர்க்குரியது என்பதையும் மண்ணிண் மைந்தர்களைப் போற்ற வேண்டும்
என்பதையும் தமிழினப்படுகொலைகளால் தங்களுக்கும் அழிவு ஏற்பட்டுள்ளதை
என்பதையும் உணர்ந்து, மனித நேயத்துடன் சிந்தித்துச்
சிங்களஇன வெறியர்களைத் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். சிங்கள மக்களின்
அமைதிக்கு வழி வகுப்போரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈழம் மலர மனித நேயர்கள்
துணை புரிய வேண்டும்!.
ஈழ மீட்பர்களைத் தேர்ந்தெடுங்கள்!
தமிழ் ஈழ நாடாளுமன்றம் அமைய வழி வகுங்கள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
No comments:
Post a Comment