(சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 : இலக்குவனார் திருவள்ளுவன்)

956. At largeகட்டுப்பாடின்றி

கட்டுப்பாடற்று  

பொதுவாக  

பேரளவில்  

பொதுவாக நாம் large என்றால் பேரளவு அல்லது  பெரிதான என்னும் பொருள்களில்தான் எண்ணுகிறோம்.   தடையற்ற நிலை, தற்சார்பு(சுதந்திர) நிலை, அகல்விரிவு, அகல்விரிவான, முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு, பரவல் நிலை, தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை, குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை, முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம், பரந்தகன்ற, ஏராளமான, வளமான, பலவற்றை, உள்கொள்ளவல்ல, எல்லாம் தழுவுகிற, தாராளமான, ஈகைக் குணமுடைய, அன்பாதரமிக்க, பரந்த நோக்கமுடைய, குறுகிய நோக்கமற்ற, ஒருசார்பற்ற, தப்பெண்ணங்களுக்கிடங் கொடாத, பெரும்போக்கான, பெருமிதமான, பெருமதிப்புடைய, பெருமை சான்ற, முதன்மைத்துவம் வாய்ந்த, தற்பெருமையுடன் நடக்கிற, தங்குதடையற்ற, கட்டற்ற, கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த, (வினையடை) பகட்டாக, (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக எனப் பல பொருள்கள் உள்ளன.    

 the people at large – மக்கள் அனைவரும்
A large open space – ஏகப்பெருவெளி
the robbers at large – கைப்பற்றப்படாத கொள்ளையர்கள் என்னும் பொருளாகும்.  

சகடை என்னும் பெரு முரசையும் குறிக்கும்.  

பொதுவாகப் பேரளவு என்பதை உட்பொருளாகக் கொண்டு விரி பொருளில் (பேரளவிலான) பொதுமக்கள், (பேரளவிலான-பரந்த அளவிலான) சார்பாண்மை உடையவர்கள்,(பேரளவிலான) குற்றவாளிகள் என வரும்.   சட்டச் சூழலில்,  பொதுவாக விடுநிலையான(சுதந்திரமான), கட்டுப்பாடற்ற அல்லது ஒரு குறிப்பிட்ட இடம், ஆள் அல்லது செய்தி அல்லது பொருண்மைக்கு மட்டுப்படுத்தப்படாததைக் குறிக்கிறது. இது , காவலில் இல்லாத ஒரு குற்றவாளியைப் போல, கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றையும் குறிக்கலாம்.  

பெருமளவில் மக்கள் அல்லது குற்றவாளிகள் திரண்டிருக்கும பொழுது கட்டுப்பாடற்ற நிலை வந்து விடுகிறது. எனவே, அப்பொருளைக் குறிக்கிறது.  

criminals, unlawfully at large என்னும் பொழுது (சட்டத்திற்குப் புறம்பாகத்) தடுப்புக் காவலுக்கு மீளாதிருக்கும் குற்றவாளிகள் எனப் பொருளாகும்.  

அரசாங்கச் சூழலில், ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது மாவட்டத்தை மட்டுமல்லாமல், முழு அதிகார வரம்பையும் சார்பாண்மைப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளைக் குறிக்கும்.
957. At leastமீச்சிறு  

அறச்சிறிது  
அறச்சிறிய  
மிகமிகக் கொஞ்சமான  
மிகமிகக் கொஞ்சமாக  
மிகமிக அற்பமான  
மிகமிகக் குறைவாக  


குறைந்தது, குறைந்த
என அகராதிகளில் இடம் பெற்றுள்ளது. less என்றால் குறைந்தது எனலாம். இச்சொல் மிகச்சிறியதைக் குறிக்கிறது. எனவே, மீச்சிறு என்னும் சொல்லையே பொதுவாகப் பயன்படுத்துவதே சிறப்பாகும்.  

வழக்கு மன்றத்தில் இச்சொல் இடம் பெறுவதற்கு எடுத்துக்காட்டு:   வழக்கு ஒத்திவைப்பு நாளுக்கு மீச்சிறு இடைவெளியே உள்ளது. ஆதலின் மேலும் போதிய கால வாய்ப்பு வேண்டும்.  
958. At logger headsமுற்றிலும் கருத்து வேறுபாட்டில்  

வலுவான கருத்து வேறுபாட்டில்  

ஒவ்வாத நிலையில்    
சச்சரவிடும்‌ நிலையில்‌ [சச்சரவு தமிழ்ச்சொல்லே(செ.சொ.பி.அகரமுதலி)]    

சட்டத் துறையில் இத்தொடர்  துறைக்குள் உள்ள தனியர்கள் அல்லது குழுக்கள் கடுமையான கருத்து வேறுபாடு அல்லது மோதலில் உள்ளனர் என்பதைக் குறிக்கிறது.  ஒருவேளை இக்கருத்து மோதல், ஒரு சட்ட வழக்கு, கொள்கை அல்லது உத்தி தொடர்பாக இருக்கலாம்.

இது ஒரு சூடான தகராறு அல்லது கடுமையான எதிர்ப்பின் நிலையைக் குறிக்கிறது. இவர்களைச் சண்டை யிடுபவர்கள் அல்லது கலகக்காரர்கள் என்பதை விடக் கடும் கருத்து மோதலில் உள்ளவர்கள் எனக் குறிக்கலாம்.
959. At parஇணையாக  

சம விலையில்  

கட்டணமின்றி

கட்டணமில்லா   

சமமாக  

சமநிலை  

நேரிதாக          

முகமதிப்பின்படி  

சட்டத் துறையில், “சமமாக” என்பது பொதுவாக ஒரு சட்ட ஆவணம் அல்லது ஆவணத்தின் முக மதிப்பு (அல்லது பெயரளவு மதிப்பு) அதன் உண்மையான சந்தை மதிப்பு அல்லது விற்பனை விலைக்கு சமமாக இருக்கும் சூழ்நிலையைக் குறிக்கிறது.  

இது பரிமாற்றப் பட்டியல்கள் அல்லது இருப்புகளின் பங்குகள் போன்ற ஆவணங்களின் அடிப்படையில்  சட்டச் சூழல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
960. At randomநிரலின்றி/ நிரலற்ற  

இதற்கு  
ஒழுங்குமுறையின்றி
வரிசை முறையின்றி
அங்கொன்றும் இங்கொன்றுமாக குறிப்பின்றி
நோக்கம்-போல
தற்போக்காக
விதிக்கட்டின்றி
முறையின்றி
நேர்ந்தவாக்கில்  
எனப் பலவாறாகக் கூறப்படுவன யாவும் சரியானவையே. எனினும் சீராகவும் சுருக்கமாகவும் நிரலின்றி என்றே பயன்படுத்தலாம்.  

சட்டத் துறையில், “நிரலின்றி / நிரலற்ற ” என்பது சட்டப் பணிகளுக்கான நிரலற்ற தேர்வு, சட்டக் குழுக்களின் நிரலற்ற ஒதுக்கீடு அல்லது நீதிபதிகளுக்கு நிரலற்ற வழக்குகளை ஒதுக்குதல் முதலான பல சூழ்நிலைகளைக் குறிக்கிறது.  

இது நீதிமன்றத் தீர்ப்புகளின் கணிக்க முடியாத தன்மை அல்லது சில சட்ட செயல்முறைகளின் நிரலற்ற தன்மையையும் குறிக்கலாம்.  

சில நடுவர் தீர்ப்பு நடவடிக்கைகளில், நிரலற்ற முறையில் வழக்குகள் வெவ்வேறு நடுவர்கள் அல்லது நடுவர் தீர்ப்பாயங்களுக்கு ஒதுக்கப்படலாம்.  

சில அதிகார வரம்புகளில், செம்மை அல்லது நடுவுநிலையற்ற தன்மையை உறுதி செய்வதற்காக, நீதிமன்ற வழக்குகள் நிரலற்ற முறையில் வெவ்வேறு நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படலாம்.  

(தொடரும்)