சட்டச் சொற்கள் விளக்கம் 




(சட்டச் சொற்கள் விளக்கம் 946-950 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

951. At an early dateமுன்னதான நாளில்  

விரைவிலேயே; கூடியவிரைவில் என இப்போது குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குறிப்பது பொதுவான விரைவைக் குறிக்கும். அஃதாவது  எந்த நாளும் குறிப்பிடாத பொழுது விரைவில் முடித்துத் தர வேண்டுவது. ஆனால், At an early date என்றால் முன்னதான நாளில்.  

ஒரு நாள் குறிக்கப்பெற்ற பின்னர் அதற்கு முன்னர் வேண்டுவது. சான்றாக வழக்கு நாள் குறித்த பின்னர் அதற்கும் முன்னதான நாளை வேண்டும் பொழுது சற்று முன்னதான நாளில் வழக்கு நாளை வேண்டுவது. அல்லது குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டுவது.   

as soon as possible – இயன்ற விரைவில், கூடிய விரைவில் என்பது பொதுவான தொடரே ஆகும்.  

Early  என்றால் தொடக்க நேரத்துக்குரிய, தொடக்க காலத்துக்குரிய, தொடக்கத்தை அடுத்த, முற்பகுதி சார்ந்த, முந்திவந்த, முற்பட்ட, முந்துற எழுந்த, முன்கூட்டிச் சித்தமான, முற்காலத்திய, தொலை இறந்தகாலத்திய, அணிமை வருங்காலத்திய, (வினை) குறித்த காலத்துக்கு முன், முன்கூடடி, சரியான நேரத்தில், விரைவில், முந்தி, முற்பட, தொடக்கத்தில், தொடக்கத்தை அடுத்து, முற்பகுதியில், காலை நேரத்தில், விடியற்காலததில் எனப் பல பொருள்கள். எனினும் இங்கே முன்கூட்டி என்பதே சரிானது.  

Date என்றால் நாள் என்றுதான் பொதுவாகப் பொருள்.  இடத்திற்கேற்றாற் போல் நாளிடு, காலங்குறிப்பிடு, காலக்குறிப்பு முதலான பொருள்களும் உண்டு. எனினும் இந்த இடத்தில் வழக்கத்திற்கு முன்னதான நாள், எதிர்பார்த்ததற்கு முன்னதான நாள் என்ற பொருளில் வருகிறது.   எனவே, முதலில் குறிப்பிட்டாற்போல் முன்னதான நாள் என்பதே சரியாகும்.

தீர்ப்பு அல்லது வழக்கு நாள் வழக்காளியின் பயணம், மருத்துவமனை சேர்க்கை போன்ற காரணங்களால் குறிப்பிட்ட நாளுக்கு முன்னராகவே வேண்டுவது இதுவாகும்.  

செயற் திட்டத்தை அல்லது பயணத்திட்டத்தை முன்னதாக முடிக்குமாறு வேண்டுவது போன்று பிற இடங்களிலும் வரும்.  
952. At any rateஎவ்வாறிருப்பினும்  

எப்படியும்‌;
எஃது எப்படி ஆனாலும்‌;
வேறு எவை நிகழ்ந்தபோதிலும்; மற்றவை எப்படியானாலும். எப்படியிருந்த போதிலும்.  

ஒன்று குறித்து மேலும் துல்லியமான தகவல் தரும் நிலையில் பயன்படுத்தப்படுவது.

பிறர் ஒரு கருத்திற்கு வந்திருப்பார்கள் என உணர்ந்தாலும் அனைத்தையும் கருதிப்பார்த்துத் தன் கருத்தைச் சொல்லும் பொழுது எவ்வாறிருப்பினும் என்று சொல்லுவர். எ.கா. “அந்தச் சிறுமி போதிய பட்டறிவு இல்லாதவளாளக இருக்கிறாள். எவ்வாறிருப்பினும் நான் ஐயத்தின் நலனை அவளுக்கு வழங்கி அவளை உசாவலுக்கு உட்படுத்துகிறேன்.” 
953. At any timeஎந்தச்‌ சமயத்திலும்‌  

எந்த நேரத்திலும்  

நிகழ்வைப்பற்றிக் கூறுவதாயின் “எந்த நேரத்திலும்” நிகழலாம் என்பது “எப்போதும்” நிகழலாம் அல்லது “முன்னறிய முடியாத நேரத்தில் அல்லது கணிக்க முடியாத நேரத்தில்” நிகழலாம் என்பதுபோல் பொருள்படும்.  

இஃது எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் எச்சரிக்கை இல்லாமல் ஏதாவது நடக்கலாம் என்பதைக் குறிக்கிறது.  

சட்ட வழக்காற்றில் பொதுவாக “எந்த நேரத்திலும்” என்பது “எல்லா நேரங்களிலும்” என்று பொருள்படும்,   இஃது எந்த நாளிலும் எந்த நேரத்திலும் ஏதாவது நிகழலாம் அல்லது செய்யப்படலாம் என்பதைக் குறிக்கிறது. இதன் மூலம் ஒரு செயல் நடக்கக்கூடிய காலக் கட்டத்தில் நெகிழ்வுத் தன்மையை அல்லது எந்த வரம்பும் இல்லை என்பதை இது குறிக்கிறது.  

இது தேவைப்படும்போதோ விரும்பியபோதோ செயல்களைச் செய்ய இசைவளிக்கிறது(லா இன்சைடர்/Law Insider).  

இதன்படிக் குறிப்பிட்டக் கால அட்டவணை இல்லை: காலப்போக்கில் செயல்களைக் குறிக்கக்கூடிய “நேரத்திலிருந்து நேரத்திற்கு” போன்ற சொற்றொடர்களைப் போலல்லாமல், “எந்த நேரத்திலும்” என்பது ஒரு குறிப்பிட்ட அட்டவணை அல்லது இடைவெளிகளைக் குறிக்காது. எந்த நேரத்திலும் நடவடிக்கை சாத்தியமாகும் என்பதே இதன் பொருள்.
  ஓர் ஒப்பந்தத்தில் “நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் நிறுத்தலாம்” என இடம் பெற்றால், இதன் பொருள் பணிநீக்கம் குறிப்பிட்ட நாள்களில் அல்லது சில வணிக நேரங்களில் மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதாகும்.  

ஓர் அறிவிப்பில் “எந்த நேரத்திலும் உங்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பு வரும்.” என இடம் பெறின்  இதன் பொருள் அறிவிப்பை நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்திலோ வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளிலோ மட்டுமல்லாமல் எந்த நாளிலும்  எந்த நேரத்திலும் அனுப்பலாம் என்பதாகும்.  

ஒரு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் “எந்த நேரத்திலும் பணியாளரின் கடமைகளை மாற்றியமைக்க முதலாளிக்கு உரிமை உண்டு”  என இடம் பெற்றால், வரையறுக்கப்பட்டட மதிப்பாய்வுக் காலத்தில் மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் வேலைக் குறிப்புரையில் மாற்றங்களைச் செய்ய உடன்படுகிறது. எவ் வரம்பும் இல்லை  எனப் பொருளாகும். 

  நீதி மன்றத்தில் வழக்கு உசாவல் முடிந்த பின் எந்த நாளிலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதற்கும் இத்தொடரைப் பயன்படுத்துவர்.
  954. At his own riskஅவரின் சொந்த இடர்ப்பில்  

அவரின் தனிப்பட்ட பொறுப்பில்  

ஒருவரின் செயல்களால் அவருக்கோ  அவரது உடைமைகளுக்கோ தீங்கு நேரிடின், அஃது அவரின் சொந்தப் பொறுப்பு என்பதைக் குறிக்கப் பயன்படுகிறது.  

இடர்ப்பின் எடுகோள்:

சட்ட வழக்காற்றில் ” தனது சொந்த இடர்ப்பில் அல்லது அவரின் தனிப்பட்ட பொறுப்பில்” என்பது பொதுவாக ஒருவர் சாத்தியமான கண்டங்கள் / இன்னல்கள் ,  விளைவுகள் பற்றிய முழு விழிப்புணர்வுடன் ஒரு செயலை மேற்கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது.  எனவே எந்தவொரு எதிர்மறையான விளைவுகளுக்கும் அவரே பொறுப்பு.

சாத்தியமான தீங்கு அல்லது இழப்புக்கு ஒரு தரப்பினர் பொறுப்பேற் கிறார்கள் என்பதை நிறுவ இது பெரும்பாலும் பொறுப்பு துறப்பு, எச்சரிக்கைகள் அல்லது ஒப்பந்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.

  இந்தச் சட்டமுறைத் தற்காப்பு, வழக்காடி(plaintiff) ஒருவர் (இழப்பீடு கோருநர்)தெரிந்தே அல்லது தன்னார்வமாகப் பேரிடரான செயலில் ஈடுபட்டுக் காயமடைந்தால், அவர் இழப்பீடு பெற முடியாது என்று வலியுறுத்துகிறது. இது “தனது சொந்த இடர்ப்பில்” என்பதன் முதன்மைக் கூறு இதுதான்.    
955. At first blushவெட்கக்கேடான முதன்மை விதி  

வெட்கக்கேடான முதன்மையான விதி என்பது பொதுச் சட்டத்தின் (Common Law) ஒரு கொள்கையாகும். ஒரு தீர்ப்பு மிகையாகவோ நடுவர் மன்றத்தின் உணர்ச்சி அல்லது பாகுபாட்டால் ஏற்பட்டதாகவோ தோன்றினால் நீதிமன்றத்திற்கு அதைச் செல்லாததாக்க இசைவளிக்கிறது. இதன் பொருள் ஒரு தீர்ப்பு உண்மைகளை விட உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றினால், அதைத் தள்ளுபடி செய்யலாம்.  

அலகாபாத்து உயர் நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கில் அளித்த தீர்ப்புக்கும் உரிமை வழக்கைக் குற்ற வழக்காக மாற்றுவது தொடர்பான வழக்கிலும் அலகாபாத்து உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் அளித்துத் தள்ளுபடி செய்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

(தொடரும்)