Showing posts with label தமிழர். தமிழ். thamizhar. Show all posts
Showing posts with label தமிழர். தமிழ். thamizhar. Show all posts

Wednesday, December 29, 2010

remove foreign letters - ayal ezhuthu agatru


அயல் எழுத்து அகற்று!
- இலக்குவனார் திருவள்ளுவன்,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்க்காப்பு அமைப்புகள்
thiru2050@gmail.com
98844 81652
ஓர் இனம் என்றும் வாழ அதன் மொழி நிலைத்து நிற்க வேண்டும். அம் மொழி நிலைத்து நிற்க அதன் எழுத்து சிதைக்கப்படாமல் அயல் உரு கலக்கப்படாமல் தூய்மை போற்றப்பட வேண்டும். எனவே, எழுத்தைக் காத்து, மொழியைக் காத்து, இனத்தைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இனத்தைக் காக்கும் கடமைகளில் இன்றியமையாத முதன்மைக் கடமையாக நம் மொழிப் பயன்பாட்டில் அயல் எழுத்தை அகற்ற வேண்டும் என்பதை நாம் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒரு மொழி பேச்சிலும் எழுத்திலும் பயன்பாடின்றிப் போகும்போது அழிகின்றது. இன்றைய இந்தியாவையும் அதனைச் சுற்றியுள்ள நாடுகள் உள்ள பகுதிகளையும் நாம் தமிழ்த்துணைக்கண்டம் என்று சொல்லலாம். தமிழ்த்துணைக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் பேசப்பட்டு வந்த தமிழ் மொழி, எதனால் தான் வழங்கி வந்த நிலப்பரப்பில் குறைந்து போனது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் முன்னோர்களில் ஒரு பகுதியினர், சோம்பலினாலும் பிறவற்றாலும் சொற்களைச் சிதைத்துப் பேசி, அவ்வாறு பேசுவதற்கேற்ப வரி வடிவத்தை அமைத்து, பண்பட்ட செவ்வையான ஒலி வடிவும் வரிவடிவும் தமிழுக்கு இருப்பினும் அதைக் குறையுடையதாகக் கருதி, புதிய வரி வடிவங்களுக்கு இடம் கொடுத்ததாலும் அவற்றையே பயன்படுத்திப் புது மொழியாளராக மாறியமையாலும் தமிழ்ப்பரப்பு குறைந்தது. இன்றும் அதனைப் புரிந்து கொள்ளாமல் நாம் மேலும் தமிழைச் சிதைத்துக் கொண்டு உள்ளோம்.

தமிழ் மொழி தான் வழங்கப்படாத பகுதிகளுக்குச் சென்று அங்கே அது புதிய மொழியாக உருப் பெற்றால் நாம் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், தான் பயன்படும் பகுதியில் செல்வாக்கு இழந்து புது மொழியாக உருப் பெறுவதையும் அப்புது மொழியாளர்கள் புது இனத்தவராக மாறி நமக்கு எதிராகவே செயல்படுவதையும் நாம் இழுக்காகவே கருத வேண்டும். எனவே, இனியேனும் அத்தகைய நிலை வராமல் இருக்க நாம் எழுத்துச் சிதைவைத்தடுத்து மொழித்தூய்மையைப் பேண வேண்டும்.

எழுத்து மாற்றம் மொழி மாற்றமாக மாறியுள்ளமைக்குச் சில சான்று பார்ப்போம்.

ஒரியா மொழி:

நகர்  > நொகர்
இரத்தம் > ரொக்தொ
சக்கரம் > சொக்ரொ
உத்தமம் > உத்தொம்
மல்லன் > மொல்லொ
ஈசுவரன் > ஈஸ்பொர் (ஈதலைச் சுரப்பவன் ஈசுவரன் : தமிழ்ப் பெயரே)
அம்மா > மா
அப்பா > பா பா
குமாரி > குமாரீ
வாரம் > பார்
பனி > பாணி
ஒட்டகம் > ஒட்
குயில் > கோஇலி
நீலம் > நீள்

 குசராத்தி:

பழம் > பள்
தரப்பு > தரப்
பேரிகை > பேரீ
தழை > தள்
நடிகன் > நட்
சுண்ணாம்பு > சூநோ
பூசை > பூஜா
அரத்தினம் > ரத்ந
ஈசுவர் > ஈஷ்வர்
கண்டம் >  கண்ட
காது > காந்
அப்பா > பாப்
மாமா > மாமா
மாமி > மாமீ
பாலகி > பாலகீ
வாரம் > வார்
சித்திரம் > சித்ர
சித்திரக்காரர்> சித்ரகார்
தாழ்ப்பாள் >  தாளு
பாத்து (உணவு) > பாத்
முள்ளங்கி > மூளா
தூதன் > தூத்
காவியம் > காவ்ய

வங்காளம்:

சங்கு > ஸங்க்ஹ
ஞானம் >  ஜ்ஞாந்
மந்தம் > மந்த்ஹர்
கம்பளி > கம்பல்
கற்பனை > கல்பநா
மந்திரி > மந்த்ரீ
சங்கம் > ஸங்கஹ
அம்மா > மா
அப்பா > பாபா
மாமா > மாமா
மாமி > மாமீமா
கபாலம் > கபால்
முகம் > முக்ஹ்
இது > இஹா
தாடி > தாறி
நகம் > நக்ஹ்
இரத்தம் > ரக்த
சமதளம் > ஸமதல்
தாழ்ப்பாள் > தாலா
பாத்து > ப்ஹாத்
சலம்>ஜல்

 மராத்தி:

நாவாய் > நவ்
சித்திரம் > சித்ர
கிஞ்சித்து > கிஞ்சிட்
அத்தை > அத்ய
மாமி > மாமீ
செவ்வந்தி > செவந்தி
பூ > பூல்
சூரியன் > சூர்ய
பல்லி > பல்
பனி>பாநி

கன்னடம்:

பள்ளி > ஹள்ளி
பாடு>ஹாடு,
எதிர் > எதிரு
ஓலைக்காரன் >ஓலகார
செலவு > கெலவு
அப்பன்>அப்ப
அம்மை>அம்ம
ஐயன்>அய்ய
ஔவை>அவ்வெ
தந்தை>தந்தெ,
தாய்>தாயி
அண்ணன்>அண்ண
 அக்கா>அக்க
 தம்பி>தம்ம
 தங்கை>தங்கி
 மாமன்>மாவ
 அத்தை >அத்தெ

மலையாளம்:
 
தலை>தலை
முகம்> முகம்
கண்> கண்ணு
மூக்கு> மூக்கு
மீசை> மீச்ச
நெற்றி> நெத்தி
வாய்> வாயா
பல் >பல்லு
நாக்கு> நாக்கு
காது >காது
கழுத்து> கழத்து
கை >கை
விரல் >வெரல்லு
புத்தகம் >புஸ்தகம்
மனிதக் குரங்கு>    மனுஷகுரங்கு 

தெலுங்கு:

அண்ணன் >அன்ன
அக்கா> அக்க
தாத்தா >தாதா
மாமனார் >மாமகாரு
அத்தை >அத்தகாரு
குடும்பம் >குடும்பமு
வாரம்> வாரமு
இடம்> எடமு
பக்கம் >ப்ரக்க
விலை >வெல
புகை > பொக
உடல் >ஒடலு
முனை > மொன
உரை > ஒர
பொம்மை > பொம்ம
உவமை > உவம
குப்பை > குப்ப
கோழி > கோடி
மேழி > மேடி.

 சிங்களம்:

பொடி(சிறிய) >பொடி
பாலம்>பாலம்
அக்கா>அக்கா
குமாரன்>குமாரன்
சுதை(வெண்மை)   >சுதை
கணிகை>கணி
மலர்>மல
பாத்து(உணவு)-பாத்
தூம(ம்)(புகை) >தூம
கரம்>கர (தோள்)
மனிதன்>மனி
உயரம்-உசரம்>உச
நாதம்>நாதய
வீரன்>            வீரயா
பூமி>பூமிய
தூது>தூதயா
நரி>நரியா
பெட்டி>பெட்டிய
கோப்பை>கோப்ப
பொத்தகம்>பொதக்
இரவு>இரா

 
சான்றுக்கு இங்கே மிகச் சிலதான் அளிக்கப்பட்டுள்ளன. துளு,  குடகு, துதம், கோதம் ,  கோண்டு,  கூ அல்லது கோந்த், இராச்மகால் அல்லது மாலர், ஒரயான் முதலான அனைத்துத் தமிழ்க்குடும்ப மொழிகளிலும் இவைபோல்தான் தமிழ்ச் சொற்கள் உருமாறியுள்ளன. (இவை, ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக மாற்றி ஒலிக்கப்படல், கடைசி எழுத்து மறைதல், கடைசியில் உகரம் வருதல், தமிழ் எழுத்து கிரந்த ஒலிப்பில் ஒலிக்கப்பட்டு அந்த எழுத்தைப் பயன்படுத்தல் என மிக நீண்ட ஆய்வு விளக்கங்களை மொழிஞாயிறு பாவாணர், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான பல அறிஞர்களும் அறிஞர் கால்டுவெல் வழியில் நின்றும் அவரது ஆய்வுகளில் உள்ள குறை நிறைகளைச் சுட்டிக்காட்டியும் சிறப்பாக விளக்கியுள்ளார்கள். அவை பற்றிய ஆய்வுரைகளை அவர்களது படைப்புகளில் இருந்து நாம் அறியலாம்.) தமிழ்ச் சொற்கள் செம்மையாக ஒலிக்கப்படாமையாலும் எழுதுவது போல் பேச வேண்டிய முறைக்கு மாறாகப் பேசுவதுபோல் எழுதும் முறையைப் பின்பற்றியமையாலும், அவ்வாறு சொற்களைச் சிதைத்தபின்பு அவற்றை எழுதப் புதிய வரிவடிவங்களை உருவாக்கியமையாலும், அவற்றில் கிரந்தத்தைப் புகுத்தியமையாலும் புதிய மொழிகளாக மாறியுள்ள கொடுமையை நாம் உணரலாம். மேற்குறித்த சொற்கள் எல்லாம் பேச்சிலும் எழுத்திலும் செம்மையான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படுகிற நிலப்பரப்பு முழுமையும் தமிழ்நிலமாகத்தானே இருந்திருக்கும். அதனை உணராமல் மேலும் நாம் தமிழ்நிலப்பரப்பைக் குறைக்கும் வகையிலும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் அழிக்கும் வகையிலும் எழுத்துச் சிதைவிற்கு வழி வகுக்கலாமா?

நஞ்சைக் கொடுத்து அமிழ்து என்று சொல்லுவோர் இன்றைக்கு இருப்பது போல் அன்றைக்கும் இருந்துள்ளனர். தமிழ் மொழியின் ஒலி வடிவ, வரி வடிவச் சிறப்பைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் நெடுங்கணக்கு குறைபாடுடையதாக எண்ணி இயல்பிற்கு மாறான வரி வடிவங்களைப் புகுத்தியுள்ளனர். எண்ணையும் எழுத்தையும் கண்களாகப் போற்ற வேண்டும் என வலியுறுத்தியதுடன் அத்தகைய போக்கு தவறு என்பதால்தான் எண்ணெழுத்து இகழேல் என்று அன்றே நம் ஆன்றோர்கள் சொல்லியிருக்கின்றனர். நம்மில் சிலர், இன்றும் அதனைப் புரிந்து கொள்ளாமல் சீர்மையும் சிறப்பும் மிக்க நம் தமிழ் வரிவடிவத்தை இகழ்ந்து குறைபாடுடையதாகப் பொய்யைப் பரப்பி வரிவடிவச் சிதைவிற்காக அரும்பாடுபட்டு வருகின்றனர். [விளக்கமாக அறிய வரிவடிவச்சிதைவு வாழ்விற்கு அழிவு என்பது முதலான கட்டுரைகளை இவ்வலைப்பூவிலேயே (thiru-padaippugal.blogspot.com) காண வேண்டுகின்றேன்.]

எந்த ஒரு மொழியிலும் எல்லா மொழிகளிலும் உள்ள ஒலி வடிவங்களுக்கு ஏற்ற வரிவடிவங்கள் அமையாது. அந்தந்த மொழி உருவான சூழலுக்கேற்பவும் தேவைக்கேற்பவும்தான் வரி வடிவங்கள் அமையும். இதனைப் பிற மொழியாளர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அனைத்து மொழிகளிலும் சிறப்பாகவும் செம்மையாகவும் அமைந்துள்ள தமிழ் மொழிக்கு உரியவர்களான நாம் அதனைப் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டிருப்பினும் வேண்டுமென்றே தமிழ் எழுத்துகளை அழிக்க எண்ணுவோர் வலையில் வீழ்ந்தும் வரிவடிவங்களைக் காக்கத் தவறுகிறோம். எனினும் இத்தகைய அடாத போக்கிற்கு நாம் நம் காலத்திலாவது முற்றுப்புள்ளி இட வேண்டும். அயல் எழுத்து அகற்று என்பதே நம் முழக்கமாகவும் செயலாகவும் இருத்தல் வேண்டும். பிற மொழிச் சொற்களை நாம் பயன்படுத்த உதவும் கிரந்த எழுத்துகளை அடியோடு அகற்ற வேண்டும். அவ்வாறு நாம் செய்வது எந்த மொழிக்கும் அல்லது மொழியாளருக்கும் எதிரானதல்ல. ஏனெனில் கிரந்தம் என்பது மொழியல்ல. தமிழைச் சிதைக்கவும் சமசுகிருதத்தைப் படிக்கவும் உருவாக்கப்பட்ட எழுத்து வடிவங்களே. தமிழைத் தமிழாகவே அறிந்தவர்களும் சமசுகிருதத்தைச் சமசுகிருமாகவே அறிந்தவர்களும் உரிய மொழிக்குரிய வரிவடிவில் அவற்றைப் படிக்கும் வாய்ப்பே போதுமானது. தமிழுக்கு ஆக்கம் தருவதாகக் கூறிக் கிரந்த எழுத்துகளைப் புகுத்துவதும் அவற்றைத் தமிழ் எழுத்துகள் வரிசையில் பாடங்களில் சொல்லித் தருவதும் மிக மிகத்தவறாகும்.

கிரந்தத்தைப் புகுத்தும் மற்றொரு முயற்சிதான் கணிணியில் சீருரு அல்லது ஒருங்குகுறி என்ற போர்வையில் கிரந்தத்தைப் புகுத்துவதாகும். தமிழ் எழுத்துகளில் கிரந்தத்தைச் சேர்க்கவோ கிரந்த எழுத்து வரிசைகளில் தமிழ் எழுத்துகளைச் சேர்ப்பதோ கூடாது என்பது மட்டுமல்ல; மேலே கூறிய காரணங்களால் கிரந்தம் என்பது சீருருவில் அல்லது ஒருங்குகுறியில் இடம் பெறத் தேவையில்லை என்பதையும் நாம் ஒன்றுபட்டு உணர்த்த வேண்டும். கிரந்தத்திற்குத் தனியாகச் சீருரு அல்லது ஒருங்குகுறி இருக்கலாம் என எண்ணுவது நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். கிரந்த எழுத்துகள் பட்டியலில் தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்த எழுத்துகள் என்றும் கிரந்த எண்கள் என்றும் இப்பொழுதே காட்டியுள்ளனர். பின்னர், கிரந்தத்தில் இருந்து தமிழ் வரிவடிவம் உருவானது எனக் கூறிப் பல மொழி வரிவடிவங்களுக்கு உதவும் கிரந்தமே போதும் எனக்கூறி அதனை நிலைக்கச் செய்வர். இப்பொழுதே கிரந்த வரிசையில் சில தமிழ் எழுத்துகளும் இருக்கின்றன அல்லவா? சீருரு அல்லது ஒருங்குகுறியில் அவை இடம் பெற்ற பின்பு ஒரே வகை எழுத்து  வெவ்வேறுபட்டியலில் இருக்கும் பொழுது தொழில் நுட்பச்சிக்கல் வரும். அவ்வாறு வருவதை எப்பாடுபட்டேனும் நீக்கலாம் எனச் சிலர் முயன்றாலும் அது தேவையற்ற ஒன்று.

கல்வெட்டுகளைப் படிக்கக் கிரந்தம் தேவைப்படுகிறது என்பது சிலர் வாதம். இப்போது கிரந்தம் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு அவற்றை எல்லாம் விரும்பும் மொழியில் மாற்றம் செய்து ஆவணமாக்கி விட்டால் போதுமானது. இதற்காகக் கிரந்தம் தேவை யென்று அனைவரும் படிக்க வேண்டிய தேவையில்லை. நஞ்சைப் பாலில் கலந்தாலும் பாலை நஞ்சில் கலந்தாலும் தீமைதான். தீமை தரும் கிரந்த நஞ்சு தனியாகவும் இருக்க வேண்டிய தேவையில்லை. இருப்பின் அறியாமை மிகுந்த சிலர் அமிழ்தமென எண்ணிப் பயன்படுத்தித் தமிழுக்கு அழிவு சேர்ப்பர்.

கிரந்தத்திணிப்பைத் தனிமனிதச் செயலாக எண்ணக் கூடாது. மத்திய அரசின் மொழிக் கொள்கையில் ஒன்று, சிறுபான்மையர் மொழிகளைத் தேவநாகரியில் எழுதுதல் என்பது. எனவேதான், எழுத்துரு இல்லாத சௌராட்டிர மொழிக்குத் தமிழ் எழுத்துரு வடிவினை ஒட்டி எழுத்து வடிவங்களை உருவாக்கிய  பொழுது அதற்கு இடம் தராமல் தேவநாகரியைப் பின்பற்றி எழுத்துவடிவத்தை உருவாக்கச் செய்தனர். இந்த அடிப்படையில் பார்த்தால்தான் கிரந்தத் திணிப்பு என்பது இந்தியா முழுமையும் தேவநாகரியும் கிரந்தமுமே இருக்க வேண்டும் என்னும் சதிச் செயலின் பகுதி எனப் புரியும்.

கணிணியில் சீருரு அல்லது ஒருங்குகுறியில் கிரந்தத்திற்கு இடம் வேண்டுநர் கூறும் முதன்மைக் காரணங்களில் ஒன்று கிரந்தத்தைப் பயன்படுத்தினால் தென்னாட்டு மொழிகளையெல்லாம் எழுதிவிட முடியும் என்பதும் அதனால், தென்னகம் முழுவதும் கிரந்தப் பயன்பாடே போதும் என்பதும் ஆகும். எனவே, இதன் அடிப்படையில் பார்த்தாலும் இந்தியா முழுவதும் தேவநாகரியும் கிரந்தமும் பயன்படுத்தப்பட வேண்டும்; பிற வரி வடிவங்கள் வேண்டா என்பதே மைய நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

சிலர் ஐந்து தமிழ் எழுத்துகளைக் கிரந்தத்தில் சேர்ப்பதால் தமிழுக்குப் பெருமைதானே எனத் திரித்து வாதிடுகின்றனர். ஐந்து எழுத்துகளுடன் எகர, ஒகரக் குறியீடுகளும் சேர்க்கப்பட வேண்டும். கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகள் உள்ளன. ழ், ற்,ன் ஆகிய 3 எழுத்துகளைச் சேர்க்கும் பொழுது 16 உயிருடன் சேர்ந்து 48 உயிர்மெய்யாக மாறும். 35 மெய்யெழுத்துகள் உள்ளன. 2 தமிழ்க் குறியீடுகள் சேருவதால் 70  உயிர் மெய் ஏற்படும். ஆக 118 எழுத்துகள் கிரந்த நெடுங்கணக்கில் உருவாக இவை வழிவகுக்கின்றன. இப்பொழுதே சிலர் தமிழில் அறிவியல் முறையில் அமைந்த உகர, ஊகாரக் குறியீடுகளைச் சீரற்று அமைந்துள்ளதாகக் கூறி, கிரந்த உகர, ஊகாரக் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். எனவே, அவர்களுக்குத் தமிழ் உகர, ஊகாரக் குறியீடுகளையும் பின்னர் வேறு சில உயிர்க்குறியீடுகளையும் மாற்றுமாறு கோருவதற்கும் ஆளுவோரிடம் செல்வாக்கு பெற்று நடைமுறைப்படுத்தச் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே, நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இளைதாக முள்மரம் கொல்க என்பது நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நமக்கு இட்ட கட்டளை அன்றோ!

கிரந்தத்தில் உள்ள ஒரு சில எழுத்துகள் தமிழில் இருந்தால் என்ன என்று சிலர் வாதிடுகின்றனர். இப்பொழுதே சில எழுத்துகள் உள்ளனவே, மேலும் சில எழுத்துகள் இருந்தால் என்ன என்றும் சிலர் வினவுகின்றனர். சில மெய்யெழுத்துகள் சேருவதால் நெடுங்கணக்கில் அவற்றின் எண்ணிக்கை கூடுகின்றது. சான்றாக ஜ் எழுத்து சேரும் பொழுது அதன் வரிசையில் உள்ள ஜ, ஜா, ஜி, ஜீ, ஜு, ஜூ, ஜெ, ஜே, ஜை, ஜொ, ஜோ, ஜௌ என உயிர் வரிசை எழுத்துகள் சேருவதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இவற்றைப் போல்தான் பிற கிரந்த எழுத்துகள் திணிப்பும் உண்மையில் பேரளவாகின்றது. ஜங்க்ஷன், ஜாம், ஜிம், ஜீன்ஸ், ஜெயில், ஜேப், ஷர்பத், ஷாமியானா, ஷூ, ஷோ, ஸ்டேசன், ஸ்டூல், ஸ்டூடண்ட், ஸர்ப்பம், ஹால், ஹீட்டர், ஹேப்பி, ஹைவேய், ஸ்ரீ, பரீக்ஷை என்பன போன்று பிற மொழிச் சொற்களை நாம் பேசக் காரணமே அவற்றைக் கிரந்த எழுத்துகளைக் கொண்டு பயன்படுத்த முடிவதால்தான். இல்லாவிடில் உரிய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி யிருப்போம். அவ்வாறு சரியான தமிழ்ச் சொற்களை அறிய வாய்ப்பு இல்லாமல் போகும் பொழுதுகூட நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டே அதனை ஒலித்திருப்போம். அவ்வாறு ஒலிக்கும் பொழுது அச்சொல் அயற் சொல் என்ற உணர்வு மேலிட உரிய தமிழ்ச் சொல்லை அல்லது புதிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருப்போம். எனவே, அயற்சொற்களையும் அயல் வரிவடிவங்களையும் நாம் விலக்கி வைத்தால்தான் தமிழ் அழியாமல் நிலைக்கும்.

கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாவிடில் பல அயற் சொற்களை எவ்வாறு உச்சரிப்பது என நம் மக்களுக்குக் கவலை வருகிறது. ஆனால், இவர்கள் நம் தமிழ்ச் சொற்களைச் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பது குறித்துச் சிறிதும் கவலைப்படுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தும் சொற்களில் பெரும்பான்மையன  நல்ல தமிழ்ச் சொற்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெயர்ச் சொற்கள் உள்ளனவே அவற்றை எவ்வாறு எழுதுவது என்பது சிலரது கவலை. எந்த  மொழியின் பெயர்ச் சொற்களும் பிறமொழியினரால் மூல மொழியின் உச்சரிப்பிலேயே ஒலிக்கப்படுவதில்லை. ஆகவே, நாமும் அது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.  அவரவர் மொழி இயல்பிற்கேற்ப ஒலித்தால் போதும். எடுத்துக்காட்டாக இந்தியா என்பது இந்த், இந்தெ, இந்தியெ, இந்தியா, இந்தொ, இண்டியெ, இண்டியா, இண்ட் என்பன போல் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறாகத்தான் ஒலிக்கப்படுகின்றது. தமிழ் என்பது தமில், தமிரு, டமில், டமிரு, டேமில், திரமிள், திரமிளம் என்றெல்லாம் பலவகையில் அதற்குரிய சிறப்பு எழுத்தான ழ ஒலிக்கப்படாமலேயே சொல்லப்படுகின்றது. ழ என்னும் எழுத்தினை எந்த மொழியினரும் தங்கள் எழுத்து வரிசையில் சேர்த்துக் கொண்டு தமிழ் எனச் சரியாக ஒலிக்கவில்லை.

பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறும் பலரும், ஆங்கிலம் பிற மொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதால்தான் உலக மொழியானது என்னும் தவறான வாதத்தை முன் வைப்பர். ஆங்கிலம் தன் ஆட்சிப்பரப்பாலும் அதிகாரத்தாலும் உலக மொழியானதே தவிர வேறு காரணம் இல்லை. எனினும் அப்படிப்பட்ட ஆங்கிலம்கூடத் தான் உருவான பொழுது அமைந்த எழுத்துகளைத் தவிர வேறு எந்த எழுத்தையும் சேர்த்துக் கொள்ள ஆங்கிலேயர்கள் இடம் தரவில்லை. நாம்தான் பிற மொழிச் சொற்களையும் பிறமொழி எழுத்துகளையும் பிறமொழிச் சொற்களைச் சரியாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக அயல்வரிவடிவான கிரந்த வரிவடிவங்களையும் பயன்படுத்தி நம் மொழிக்கும் இனத்திற்கும் கேடு செய்து வருகிறோம். இதுவரை தமிழுக்கு நேர்ந்துள்ள கேடுகளை உணர்ந்து இனியாவது தமிழைக்காக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதை உணர்ந்து நாம் அயல் எழுத்துகளையோ அயல் குறியீடுகளையோ தமிழில் கலக்காமல் மொழித்தூய்மையைப் பேண வேண்டும்.

இந்திய அரசியல் யாப்பு விதி 29.1.இல் மொழிகளும் மொழிகளின் எழுத்துவடிவங்களும் காக்கப்பட வேண்டியதற்கு வழி செய்துள்ளது. எனவே, இதன் அடிப்படையில் வரிவடிவச்சிதைவு முயற்சிகளிலும் கிரந்தக் கலப்பிலும் வேறு அயல் எழுத்து அல்லது அயல்உரு கலப்பிலும் ஈடுபடுவோர்க்குக் கடுந்தண்டனை விதிக்கும் வகையில் சட்டவிதிச் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு சொல்வதை வேடிக்கையாகக் கருதக்கூடாது. எவ்வாறு  சீனாவில் ஆங்கிலச் சுருக்கக் குறியீடுகளைப் பயன்படுத்தக் கூடத்தடை விதிக்கப்பட்டுள்ளதோ அதுபோல் தமிழ் மொழி காக்கப்பட தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும். தமிழ் தொடர்பான துறைகளில் தமிழில் புலமைவாய்ந்த தமிழர்களையே நியமிக்க வேண்டும். தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும் அமையும் வகையில் பணியமர்த்தங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழர்க்குத் தேசியமொழி தமிழே என்பதையும் அதைக் காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதையும் பாடநூல்கள் வாயிலாக வளரும் தலைமுறையினருக்கு உணர்த்தித் தமிழ்க்காப்பு உணர்வை விதைத்துப் பரப்ப வேண்டும். மொழியின் உடல் போன்றது எழுத்து. எழுத்தாம் உடல் அழிந்த பின்னர் மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்? எனச் செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வினவி அறிவுறுத்தியதை உள்ளத்தில் கொண்டு தமிழ் மொழியையும் தமிழ் எழுத்தையும் காக்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும் எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் உணர்த்தியவாறு எங்கும் தமிழ் எதிலும்தமிழ் என்பதை வாய்உரையாகக் கொள்ளாமல் செயலாக்கமாக மாற்ற வேண்டும்.

களைக அயலொலி! காண்க தமிழ்ச்சொல்!
என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வழியில்
அயல் எழுத்தை அகற்றுவோம்! அன்னைத் தமிழைக் காப்போம்!



Tuesday, June 8, 2010

தமிழர்கள் தாழ்வும் வாழ்வும்

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற

6-ஆவது உலகத் தமிழர்கள் ஒற்றுமை மாநாடு - 2009

தி.பி.2040,புரட்டாசி 9,10,11 * கி.பி.2009 செப்டம்பர் 25,26,27

கோலாலம்பூர், மலேசியா

தமிழர்கள் தாழ்வும் வாழ்வும்

இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com> / thiru2050@yahoo.co.in
**தமிழர் தாழ்வும் வாழ்வும்**

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணர முடியாத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த மக்கள் இன்று தம் நிலை கெட்டுத் தறிகெட்டுத் தாழ்வுற்று வறுமை மிஞ்சி வீழ்ந்து கிடக்கும் நிலை ஏன்? ‘தாய்த்திருநாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பாமல்மானமொன்றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற்றிருப்பது ஏன்? ‘சொந்த நாட்டிற் பரர்க் கடிமை செய்தே வாழ்ந்திடோம்-இனி-அஞ்சிடோம் என்று உரைக்காமல், ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றிகூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றிசொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டும் சிந்தை இரங்காமல் வீழ்ந்து கிடப்பதேன்? ‘ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராதுபோல வந்த மாமணியைத் தோற்கச் செய்தது ஏன்? ‘ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனையடுத்த தீவுகள் பலவினும் பூமிப்பந்தின் கீழ்ப்-புறமுள்ள பற்பல தீவினும் பரவி இவ் வெளிய தமிழச் சாதி, தடியுதை யுண்டும் காலுதையுண்டும் கயிற்றடி யுண்டும், வருந்திடுஞ் செய்தியும் எரிகுண்டடி பட்டும் கொத்துக் குண்டு வீச்சிலும் மடிந்து எஞ்சியோர் மண்ணகழ் பொறிகளால் மண்ணிலே புதைக்கப்பட்டுப் போயும் அவற்றினும் மிஞ்சியோர் திறந்தவெளி வதைக் கொட்டடியில் உதைபட்டு அடிபட்டு வதைபட்டு உறுப்பிழந்தும் உணர்விழந்தும் பசியிலும் நோயிலும் நலிந்தும் அழிந்தும் போவது கேட்டும் நல்லுணர்வின்றி நமக்கென்ன வந்தது என்று பொன்னும் மண்ணும் பொருளும் பிறவும் சேர்த்தும் பதவிகளும் உதவிகளும் பெற்றும் தம்மை உயர்த்தியும் தமிழை உயர்த்த மறந்ததேன்? தமிழர்களைக் காக்க மறந்ததேன்? அவர்களின் குறைகளைப் போக்க மறந்ததேன்? ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர்ந்தும் வாழ்வும் தாழ்வும் தமது கைகளில் என்பதை அறிந்தும் உயர் வாழ்வினை மறந்து தாழ்ந்து வீழ்ந்து கிடப்பதேன்? இந்நிலை மாறி நன்னிலை வரும் நாள் எந்நாளோ? எவராலோ? உலக நாடுகள் அனைத்திலும் தமிழ் உயரிய நிலை எய்திடும் நாள் எந்நாளோ? எவராலோ? உலக முனையின் ஒரு சிறு முனையிலும் சீரிய தமிழருக்குச் சிறு கேடு நிகழும் எனில் சீறியே தமிழர் துடைத்திடும் பொன்னாள் எந்நாளோ? எவராலோ? கட்சித் தலைமைக்கும் நடிப்புக் கூட்டத்திற்கும் கொத்தடிமையாய் இராமல் தன்னுணர்வு கொண்டு தமிழுணர்வு பெற்று தரணியை வென்றிடும் நன்னாள் எந்நாளோ? எவராலோ? ‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறையும் நாள் எந்நாளோ? எவராலோ? ‘நாமடைந்த துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைக்க துறைதோறும் துறைதோறும் சீறிவந்தே செயல் செய்வார் உளரோ? இலரோ? உலகெங்கும் உள்ள உண்மைத் தமிழர்களின் உள்ளம் கேட்கும் இத்தகைய வினாக்களுக்கு விடை தருவார் யாரோ? எவரோ?

இமயத்தில் கொடியேற்றிய தமிழர், உலகெங்கும் வெற்றி உலா வந்த தமிழர், உலகெங்கும் உள்ள மொழிகள், பண்பாடுகள், கலைகள், நாகரிகங்கள் தோற்றத்திற்கும் மாற்றத்திற்கும் வளமைக்கும் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வித்தாய் விழுதாய், ஊனாய் உணர்வாய் விளங்கிய தமிழர், அறத்திலும் மறத்திலும் சிறந்தோங்கிய தமிழர் அடைந்திருந்த வளமார் வாழ்வையும் அடைந்துள்ள தகையிலாத் தாழ்வையும் அறிஞர் பலர் ஏற்கெனவே எடுத்துரைத்துள்ளனர். ஆகவே, நான் புதியதாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் தாழ்வுகளுக்குக் காரணமான தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவற்றைப் போக்குவதற்கு ஆற்ற வேண்டிய அரும்பணிகள் மொழிக்காப்பும் இனத் தொண்டுமே ஆகும். எனவே அவற்றுள் சிலவற்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

1. உலக நூல்களைப் படைத்திடுக!

சிந்துவெளி நாகரிகம், அரப்பா நாகரிகம், மொகஞ்சதாரோ நாகரிகம் ஆகியன தமிழர் நாகரிகமே! பிற உலக நாகரிகங்களும் தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடையனவே! ஆனால், இவை பற்றிய நூல்கள், கட்டுரைகள், பிற படைப்புகள் ஆகியவற்றில் தமிழர் நாகரிகம் பற்றிய சிறு குறிப்பு கூட இடம் பெறுவதில்லை. எனவே, உலக வரலாறு, உலகப் பண்பாடுகள், உலக நாகரிகங்கள், உலகக் கலைகள், உலக வணிகம், உலக மொழிகள், உலக இனங்கள், உலக மொழிகளில் அகராதிகள், பொருள் களஞ்சியங்கள், அறிவியல் களஞ்சியங்கள் என உலகளாவிய நூல்களைப் படைக்க வேண்டும். அவற்றைத் தமிழ் இனத் தோற்றம், தமிழ் நிலத் தோற்றம், தமிழ் மொழித் தோற்றம், தமிழ்ப் பண்பாட்டுத் தோற்றம், தமிழ் நாகரிகத் தோற்றம், தமிழ்க் கலைகள் தோற்றம், தமிழ் வணிகத் தோற்றம், என்பனவற்றைத் தொடக்கமாகக் கொண்டு படைக்க வேண்டும். இந்திய வரலாறும் உலக வரலாறும் குமரி முனையில் இருந்து தொடங்கப் பெற வேண்டும் எனப் பல்துறை அறிஞர்கள் பலர் கூறினும் இந்திய வரலாற்று நூல்களிலேயே ஒரு சில பக்கங்கள்தாம் தமிழுக்கு ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு இல்லாமல் அனைத்து நாட்டு வரலாற்று நூல்களும் தமிழ்நிலத் தோற்றத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும்.

உலகப் புகழ் பெற்ற அகராதிகளைப் புரட்டிப் பார்த்தால் மறைவாக நமக்குள்ளேயே பழங்கதைகள் பேசப்படும் தமிழ்நாடு என்பது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. மொழி என்ற அளவில் பார்த்தால்தான் சில அகராதிகளில் மட்டும் தமிழ் என்றால் என்ன என்று குறிக்கப் பெற்றிருக்குமே தவிர அவ்வகராதிகள் வழங்கும் மொழிப் பட்டியலில் தமிழ் இடம் பெறவில்லை. இவ்வாறு இல்லாமல் எல்லா மொழி அகராதிகளிலும் அந்தந்த மொழிச் சொற்களில் தமிழில் இருந்து நேரடியாக உருவானவை பற்றிய குறிப்பும் தமிழில் இருந்து பிற மொழிக்குச் சென்று அவ்வம் மொழியில் இடம் பெற்ற சொற்கள் பற்றிய குறிப்பும் அந்தந்த சொற்களுக்கு நேராகவே குறிக்கப்பட வேண்டும். இத்தகைய அகராதிகளை உலகெங்கும் உள்ள மொழிகளில் உருவாக்க வேண்டும். தமிழ் நிலத்திற்கு அண்மையில் உள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலான தமிழ்ச் சேய் மொழியினரே தமிழின் தாய்மையை அறியாமலும் அறிந்தாலும் ஏற்காமலும் உள்ள சூழலில் உலகளாவிய இத்தகைய மொழி அகராதிகளே தமிழின் தாய்மையையும் தொன்மையையும் உலகறியச் செய்யும்.

பிற நாட்டு அறிவியல் களஞ்சியங்களும் தமிழ் அறிவியலோடு தொடர்புபடுத்தி உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக் காட்டாகப் பயிரினங்களுக்கு உயிர் உள்ளமை பற்றிய குறிப்பு எனில் தொல்காப்பியர் கூறும் ஒன்றறிவதுவே உற்றறிவதுவே என்னும் நூற்பாவைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். இராடார் எனப்படும் பார்வல் பற்றிய குறிப்பு எனில் புறநானூறு கூறும் பார்வல் பாசறை பற்றிய குறிப்பு இடம் பெற வேண்டும். வானூர்தி பற்றிய தெனில், ‘வலவன் ஏவா வான ஊர்தி பற்றியும் சீவக சிந்தாமணி குறிப்பிடும் மயில் விமானம் பற்றியும் கம்பர் குறிப்பிடும் வானூர்தி பற்றியும் இவ்வாறான பிற குறிப்புகள் பற்றியும் இடம் பெற வேண்டும். வான்குடை பற்றிய செய்தி எனில் போகர் சித்தர் பறப்பித்த வான்குடை பற்றியும் இடம் பெற வேண்டும். வானியலாயின் தமிழ் வானியல் செய்திகளும் இடம் பெற வேண்டும். இவ்வாறு தமிழ் அறிவியல் செய்திகளுடன் இணைத்துப் பிற நாட்டு அறிவியல் களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டால்தான் தமிழின் அறிவியல் சிறப்பைப் பிறர் அறிவர்.

கலை, பண்பாட்டு, நாகரிக, இறையியல் நூல்களிலும் தமிழோடு உள்ள தொடர்பை முன்னிலைப்படுத்தி எழுத வேண்டும். குரவைக் கூத்து, தெருக்கூத்து, நாட்டியம் முதலான தமிழ்க் கலைகளுடனான தொடர்பு குறித்துக் குறிக்கப் பெற வேண்டும். பிறநாட்டு அறுவடை விழாக்களைப் பற்றிக் குறிக்கும் பொழுது பொங்கல் விழாவுடன் உள்ள தொடர்பு குறித்துக் குறிக்கப் பெற வேண்டும். தமிழ் நாட்டு நாகரிகச் சிறப்பால் அந்தந்த நாட்டு நாகரிகங்கள் பற்றிய வளர்ச்சி குறிக்கப் பெற வேண்டும். இறை வழிபாட்டிலும் தமிழ்நாட்டோடு உள்ள தொடர்பு குறிக்கப் பெற வேண்டும். எடுத்துக்காட்டாக சப்பானிய அகராதியில், சேவற்கொடியும் மயிலும் உடைய முருகன் படம் இருக்கின்றது; ஆனால் சப்பானிய நாட்டுச் சிறு தெய்வமாகத்தான் குறிப்பு உள்ளது. அவ்வாறில்லாமல், தமிழ்க்கடவுள் முருகன் என்ற குறிப்புடன் பொருள் விளக்கம் அமைய வேண்டும். இவ்வாறே தமிழோடு தொடர்புடைய சொற்கள் தக்க விளக்கத்துடன் பிற மொழிகளில் குறிக்கப்பட வேண்டும்.

கடல் வணிகமாயின் வரலாற்றிற்கு முந்தைய காலத்திலேயே தமிழர் மேற் கொண்ட கடல் பயணங்கள் பற்றியும் கடல் வணிகம் பற்றியும் தமிழ் நாட்டோடு கொண்டிருந்த வணிகத் தொடர்பு பற்றியும் குறிப்பு இடம் பெற வேண்டும். பல நாடுகளின் வரலாறு, நாகரிகம், மொழி வரலாறு பற்றிய செய்திகளில் அவை தோன்றும் முன்பே தோன்றிச் சிறந்திருந்த தமிழக வரலாறு, நாகரிகம், மொழிச் சிறப்பு பற்றிக் குறிப்பிட வேண்டும். உலகின் பல பகுதிகளில் புல் பூண்டு கூட முளைக்காத காலக் கட்டத்தில் சிறந்தோங்கி வளர்ந்திருந்த தமிழகச் சிறப்பினைப் பிறர் அறியச் செய்ய வேண்டும்.

உலகெங்கும் பரந்துள்ள அறிவும் ஆற்றலும் தீரமும் துணிவும் கொண்ட ஈழத் தமிழர்கள் , தாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டின் பல்துறை நூல்களிலும் தமிழ் பற்றிய குறிப்பு இடம் பெறும் வகையில் புதிய நூல்கள் பல இயற்றிட வேண்டும். பிற நாடுகளில் குடிபுகுந்து அந்நாட்டு வளத்தை மேம்படுத்த உழைத்து வரும் தமிழ் மக்களும் அந்தந்த நாட்டு இலக்கியங்கள், தொழில், அறிவியல் முதலான துறைகளில் தமிழின் முதன்மையை அறியும் வகையில் நூல்கள் படைக்க வேண்டும். செய்க பொருளை என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கட்டளையை ஏற்றுப் பொருள் ஈட்டினால்தான் செல்வாக்கு கிடைக்கும்; செல்வாக்கு கிடைத்தால்தான் சொல்வாக்கு வெற்றி பெறும் என்பதை உணர்ந்து வள வாழ்விலும் உயர வேண்டும். இத்தகைய நேர்வில் உலகளாவிய நூல்களைப் படைக்கவும் இயலும்; அவ்வாறு படைக்கப்படும் நூல்களுக்கு மதிப்பும் கூடும். எனவே, உலகப் படைப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டாக முன்முறையாக நாம் தமிழ்நோக்கிலான உலக நூல்களைப் படைக்க வேண்டும்.

2. உலகத் தமிழ்ப் பரப்பு மையம் நிறுவிடுக!

பிழையற்ற தமிழில் பேசவும் எழுதவும் அனைவரும் பயிற்சி பெறும் வகையில் உலகத் தமிழ்ப் பரப்புக் கழகம் நிறுவ வேண்டும். அந்தந்த நாட்டு மொழிகளின் வாயிலாகத் தமிழ்க் கற்றுத் தரப்பட வேண்டும். வெவ்வேறு நிலைகளுக்கான தேர்வுத் திட்டங்களை வகுத்து, கால வேறுபாடின்றியும் அகவை வேறுபாடின்றியும் ஒருவர் ஒரு நிலையிலான தேர்வில் வெற்றி பெற்றார் என்றால் அடுத்த நிலையிலான தேர்விற்குத் தகுதியானவர் என்ற வகையில் பாடமுறை அமைய வேண்டும்.

கொச்சைத் தமிழ்ப் படைப்புகள் தடுக்கப்பட்டு அதை மீறி வெளியிடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொருவரும் தத் தம் மொழிக்குத் தாயான தமிழ் மொழியை அறிவதில் பெருமை கொள்ளும் வகையிலும் தமிழ் அறியாததை இழிவாகக் கருதும் வகையிலும் தமிழ் உணர்வை உருவாக்க வேண்டும். தமிழ் இலக்கியச் செழுமை, தமிழ்ப் பண்பாட்டுப் பெருமை, தமிழ் நாகரிக வளமை, தமிழ் வரலாற்றுச் சீர்மை முதலானவற்றை அனைத்து நாட்டினரும் தத்தம் மொழியில் பயிலும் வண்ணம் உலகக் கல்வியகங்களின் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.

நோபிள் பரிசினும் உயர்வான பரிசுத் தொகையைத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கும் வண்ணம் உலகளாவிய பரிசுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கும் என இரு வகையிலும் தமிழ்ப் படைப்புகளுக்கு, பிற மொழிகளில் தமிழ் பற்றி வரும் படைப்புகளுக்கு என இரண்டிரண்டு பிரிவுகளிலும் பரிசுகள் அமைய வேண்டும். எல்லா நாடுகளிலும் அந்தந்த நாடுகளில் தமிழ்ப்படைப்புகளுக்கான உயர் பரிசுகள் வழங்க ஆவன செய்ய வேண்டும்.

தமிழ் தொடர்பான எந்த உலக அமைப்பாயினும் தமிழ் நாட்டவர் தலைமைப் பொறுப்பில் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ் நாட்டில் எத்தனைக் கட்சிகள் இருக்கின்றனவோ அத்தனைப் பிரிவுகள் இத்தகைய அமைப்பில் உருவாகி விடும். பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் தோன்றித் தமிழ் அமைப்புகளைக் குலைக்காமல் இருக்க வேண்டுமென்றால் இம் முடிவை எடுத்துத்தான் ஆக வேண்டும்.

3. உலகத்தமிழ்க்கலை ஆணையம் அமைத்திடுக!

கலைதான் வளர்ச்சிக்கு ஊடகம். ஆனால், கலை வெளிப்பாடு தமிழாக இல்லை. சமசுகிருதம், தெலுங்கு முதலான பாடல்களுக்கு ஆடுபவர்கள்தாம் மிகுதி. தமிழ்க்கலை பண்பாட்டை எதிரொலிப்பன அரசு சார்பான அல்லது தமிழ் அமைப்புகள் சார்பான நிகழ்ச்சிகளில் சில அமையலாமே தவிரப் பொதுவாகப் பெரும்பாலும் இல்லை. தமிழ்க்கலைகளே தாய்க் கலையாக இருப்பினும் பிற கலைகளுக்கே தமிழ்நாட்டில் முதன்மை கொடுக்கும் அவலம் இன்னும் நீங்கவில்லை. இசைக்கல்வியில் முன்பை விடத் தமிழ்ப் பாடல்கள் சற்றுக் கூடுதலாகக் கற்றுத் தரப்பட்டாலும் அயல்மொழிப் பாடல்கள் கற்பிக்கப்படும் அளவிற்குத் தமிழ்ப்பாடல்கள் கற்றுத் தரப்படவில்லை. இசை, நாட்டியம் முதலான துறைகளிலும் தமிழ்க் கலைச் சொற்கள் நல்ல முறையில் கற்றுத் தரப்படுவதில்லை. தமிழகக் கலைத்துறை மூலம் பயன் பெற்றவர்கள் பிற மாநிலத்தவரே மிகுதி. ஆனால் அவர்கள் தமிழும் அறியார்; தமிழுணர்வும் இல்லார்.

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;

எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூ றாக

ஒன்றேனும் தமிழர் நடை யுடைபா வனைகள்

உள்ளதாய் அமைக்க வில்லை; உயிர்உள்ள தில்லை!

ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவ தாயில்லை!

ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!

ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!

ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அந்த நிலை இன்னும் மாறவில்லை. தமிழ் முத்திரை பதிக்கும் வண்ணம் திரைத்துரையோ பிற கலைத்துறையோ சீராகவில்லை. அதே நேரம், தமிழ் நாட்டால் வாழ்வு பெறும் அயற் கலைஞர்கள்தாம் மிகுதி. ஆனால் அவர்கள் தமிழுக்கு நன்றியுடையவர்கள் ஆகும் வண்ணம் விளங்கச் செய்யவில்லை நாம். கலைஞர்களுக்குச் சூட்டும் பெயர்களும் தமிழில் இல்லை; அவர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரப் பெயர்களும் தமிழாய் இல்லை. திரைப்படங்களில் நல்ல தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டவன் ஊழல் புரிபவனாக, மக்கள் நல எதிராளியாக, நாட்டுப் பகைவனாகக் காட்டப்படுவதே மிகுதி. தமிழில் பெயர் மாற்றம் செய்து தமிழ் உணர்வை வளர்த்தத் தலைவர்களும் இது குறித்துக் கவலைப்படாத பொழுது வேறு யார் கவலைப்படுவார்கள். கைந்நூல் - கதர் - ஆடை அணிந்தவர்களை நேர்மையான அரசியல்வாதியாகக் காட்டட்டும்; வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், மோசமான அரசியல்வாதிப் பாத்திரத்திற்கும் ஒழுக்கக் கேடானவர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் மக்கள் பகைவர்களுக்கும் நல்ல தமிழ்ப் பெயர் சூட்டுவது எந்த வகையில் அறமாகும்? இதைத் தட்டிக் கேட்க யாருமில்லையே! திராவிட இயக்கம் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் இச்சிறுமை கண்டு நாண வேண்டாவா? இக் களங்கத்தைத் துடைக்கக் கிளர்ந்தெழ வேண்டாவா? அவ்வாறான பாத்திரப் படைப்புகளை உருவாக்கிய கதையாசிரியர்கள், இயக்குநர்கள், பட உருவாக்குநர்கள், பங்கேற்ற கலைஞர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாவா? தத்தம் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களாக மாற்றித் தமிழுணர்வை விதைத்தவர்கள் ஆட்சியிலேயே தமிழ்ப் பெயர்களுக்கு இழுக்கு ஏற்பட விடலாமா? ‘திராவிட இயக்கத்தினர் எனக் கூறிக் கொள்பவர்களின் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிப் படங்களிலும் படைப்புகளிலும் வெட்கங் கெட்ட இதுதான் நிலைமை எனில், தமிழ் அழிப்பையே தலையாயப் பணியாகக் கொண்டவர்கள் பற்றி என்ன கூறுவது? எனவே, தணிக்கைக் குழுவில் தமிழ்க்கலை பண்பாட்டு உணர்வாளர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். தீய மாந்தர்களுக்கு நற்பண்பு சார்ந்த தமிழ்ப் பெயர் இடப்படும் படைப்புகளுக்குத்தடை விதிக்க வேண்டும்.

இயல் இசை நாடகங்களில்தான் தமிழ்ப் புறக்கணிக்கப்படுகின்றது என்றால் ஓவியம், கல்தச்சு (சிற்பம்) முதலான கலைகளிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ்க்கடவுள் படிமங்களைக் கூட ஆரிய உருவில் படைப்பதுதான் கல்தச்சர்களின் தலையாய பணியாக இருக்கின்றது. தமிழ் வரலாற்று நாகரிகப் பண்பாட்டு இலக்கியச் சிறப்புகளைப் பாரெங்கும் பரப்பும் வகையில் ஓவியங்களும் கல்தச்சுகளும் இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டின் உயரிய பல விருதுகள் பிற மாநிலத்தவருக்கே கிடைக்கின்றன. சான்றாகக் கல்பனா சாவ்லா விருதைக் குறிப்பிடலாம். மறைந்த இந்த அம்மையார் போற்றுதலுக்கு உரியவர்தான். ஆனால், இந்தியக் குடியுரிமையைத் துறந்து அயலகக் குடியுரிமையைப் பெற்றுச் சிறந்த இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடத் தேவையில்லை. தமிழக அரசின் சார்பில் இவர் பெயரில் விருது வழங்குவதே தவறு. அப்படி வழங்கப்பட்ட முதல் விருதும் தமிழ்ப் பெண்மணி ஒருவருக்குத் தரப்படவில்லை. மலையாளப் பெண்தான் பெற்றார். அதுபோல், கலை விருதுகளும் தமிழ்க் கலைவாணர்களை அணி செய்யும் வகையில் வழங்கப்படவில்லை. எடுத்துக்காட்டிற்கு ஒன்று காண்போம். ஊதொலி (சாக்சபோன்) இசை தமிழகக் கலையன்று. அவ்விசையில் சிறந்த கலைஞராய் இருப்பினும், தமிழ்க் கலை வளர்ச்சிக்குத் துரும்பளவேனும் செயல்பட்டிராத ஒருவருக்கு எதற்குத் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட வேண்டும். இவருக்கு மட்டுமல்ல; பெரும்பாலான கலைமாமணி விருதுகள் உடல் கவர்ச்சி மூலம் பணம் ஈட்டுவதில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றனவே தவிர, தமிழ்க்கலை பண்பாட்டு அடிப்படையில் வழங்கப்படுவது இல்லை. தமிழகச் செல்வம் அயலவரால் சுரண்டப்படுவது போதாது என்று தமிழக அரசும் அரசின் துறைகளும் எந்தத் திட்டமாக இருந்தாலும் இவ்வாறு அயலவருக்குப் பரிசுகளை வாரி வழங்குவது முறைதானா? தமிழ் மொழி, இலக்கிய, கலை ஈடுபாடு மிக்க அயலவருக்குத் தனியாகப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தி அத்திட்டத்தின் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தலாமே!

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை

1. இமாலயக் கலை பண்பாட்டு மரபைப் பேணவும் பரப்பவும், 2. புத்த ஃ திபேத்திய கலை பண்பாட்டினைப் பேணவும் பரப்பவும் என ஆண்டு தோறும் இந்தியா முழுமையும் தன்னார்வத் தொண்டு அமைப்பினருக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இதே போல் ஆண்டுதோறும்

1. தமிழ்க் கலை பண்பாட்டைப் பேணவும் பரப்பவும்

2. தமிழக நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி அளிக்கவும்

3. தமிழக மரபுக் கலைகளில் பயிற்சி அளிக்கவும்

4. தமிழ்க் கலைகளை ஆவணமாக்கவும்

5. தமிழ்க் கலைப் பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கவும்

6. தமிழ் நூலகங்கள், படிப்பகங்கள் அமைக்கவும்

எனத் தனித்தனியே தன்னார்வத் தொண்டு அமைப்பினருக்கு நிதி உதவிகள் வழங்க வேண்டும்.**

கலை வளர்ச்சியைத்தமிழ்நாட்டுடன் நிறுத்திக் கொள்õளமல், தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் மரபுக் கலைகளையும் நாட்டுப்புறக் கலைகளையும் பயிற்சி, வளர்ச்சி, மேம்பாடு என்ற நிலைகளில் செயல்படுத்த உலகத்தமிழ்க்கலை ஆணையம் தோற்றுவிக்கப்படவேண்டும். பயிற்சி நூல்கள், பயிற்சி ஒலிப் பேழைகள், பயிற்சி ஒளிப்பேழைகள், பயிற்சிக் குறுவட்டுகள் முதலான அனைத்து வகையிலும் வெளியீடுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கலைகளைப் பற்றியும் முழுமையான தொகுப்பு நூல் வெளியிடப்பட வேண்டும். உலக நாடுகள் எங்கும் பயிற்சி அளிக்கவும், உலக மக்கள் இங்கு வந்து பயிற்சி பெறவும் வழிவகை செய்ய வேண்டும். தமிழ்க்கலைப் பொருள்கள், கலைஆடைகள் அடங்கிய அருங்காட்சியகங்களைப் பன்னாடுகளிலும் அமைக்க வேண்டும். அனைத்து நாட்டுக் கலைகளுக்கும் அடிப்படையாய் உள்ளன தமிழ்க்கலைகளே என்பதை உலகோர் உணரச் செய்ய வேண்டும். கலைகளின் வாயிலாகவும் தமிழ்ச் சிறப்புகளைப் பரப்ப வேண்டும். இத்தகைய ஆணையம் ஒப்பியல் கலை ஆய்வுக்கும் உலக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என்பதிலும் ஐயமில்லை.

4. தலைமை வழிபாட்டுணர்வைப் போக்குக!

தமிழக மக்களிடம் உள்ள தலைமை வழிபாட்டுணர்வே பல அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அதனால்தான் திரைப்படப் பாத்திரங்களை ஏற்று நடிப்போரை வாழும் ஆன்றோர்களாகக் கருதிக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் போக்கும் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. இந்த எண்ணப் போக்குக் கட்சித் தலைமையிடமும் ஏற்படுவதால். பொது மக்கள் நலனுக்காகக் கட்சி என்பதை மறந்து விட்டுத் தம் சொந்த மக்கள் நலனுக்காகக் கட்சி என்று தலைவர்கள் திகழ்ந்தாலும் அவர்களைக் கண்டிக்கும் போக்கு இன்றி எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளும் போக்கு மேலோங்குகிறது. எனவேதான், ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைகள் கண்டு உள்ளம் வெதும்பித் துடித்துப் பதைபதைத்தாலும் கட்சித்தலைமைகளின் மாறான போக்குகளைக் கண்டிக்காமல் ஊமை மக்களாய் உணர்வு மரத்தவர்களாய் விளங்குகின்றனர். ஆதலின் தமிழ் மக்கள் நலனுக்காகத்தான் தமிழகக் கட்சிகள் என்பதை உணர்த்தி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் தலைமை வழிபாட்டாளர்களைக் கொள்கைப் பிடிப்பாளர்களாக மாற்ற வேண்டும். இதற்குக் கட்சி சார்பற்ற அமைப்புகளும் மனவளத் தொண்டர்களும் கட்சிக் கொத்தடிமைப் போக்கிற்கு எதிரான பரப்புரையை மேற் கொள்ள வேண்டும். தமிழ், தமிழர் நலன்களுக்கு எதிராகக் கட்சித் தலைமை செயல்படும் பொழுது அதனைத் தூக்கி எறியும் உள்ள உறுதியும் துணிவும் வரவேண்டும். இவ்வாறான தமிழ்க்காப்பு போக்குக் காணப்பட்டாலே எந்தக் கட்சித்தலைமைக்கும் தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படும் எண்ணம் முளைவிடாது. எனவே, ஈழப் பேரழிவில் இருந்தாவது பாடங் கற்றுக் கொண்டு தமிழ் ஈழ மக்கள் இனியேனும் தங்கள் தாயகத்தை நிறுவ, தமிழர் தரணி எங்கும் தலைநிமிர்ந்து வாழத், தலைமை வழிபாட்டுணர்வை அறவே அகற்ற வேண்டும்.

5. ஊடகங்கள் தமிழ் நலம் பேணுவதைக் கடமையாய்க் கொள்க!

தமிழர் யார் என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும். தமிழில் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகி விட முடியாது. ஆரியப் பரப்புரை மேற்கொள்பவர்கள் தமிழில் பேசுவதாலேயே தமிழர்கள் ஆகி விட முடியாது. ஆனால் என்ன கொடுமை என்றால் எந்தச் சிறப்பு நாள் என்றாலும், குறிப்பாகத் தமிழர் திருநாள் என்றாலும் தமிழ்நலத் தலைவர்களை விட்டு விட்டு இத்தகையோர் வாழ்த்தை வெளிப்படுத்துவதே ஊடகங்களின் வேலையாய்ப் போய்விட்டது. தமிழர் நலத்தை வெளிப்படுத்தும் ஊடகங்கள் கூட இத்தகைய போக்கைப் பின்பற்றுவதுதான் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. தமிழர் திருநாள்களில் முதல் வாழ்த்தைக் கூறி ஆரியநச்சை விதைப்பதற்கு இவர்களுக்கும் உரிமை யில்லை. தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தாலும் தமிழ் அழிவு வேலையில் ஈடுபடும் இரண்டகர்களுக்கும் உரிமையில்லை.

ஊடகங்களில் வேண்டுமென்றே பிராமணப் பேச்சு வழக்கையே கையாளுகின்றனர். வருங்காலத்தவர் அவர்கள் மட்டுமே வாழ்ந்ததாக அல்லது தலைமை நிலையில் இருந்ததாக எண்ணும் வகையில் இப்போக்கு தவறானதாக மாறும். அல்லது சென்னைக் கொச்சை வழக்கிற்கு முதன்மை அளிக்கின்றனர். இதுதான் இக்காலத்தமிழ் எனப் பிற்காகலத்தவர் தவறாகக் கருத மாட்õர்களா? சில ஆண்டுகளுக்கு முன்பு நாளிதழ் ஒன்றின் கிழமை மலரில் வந்த மலையாள எழுத்தாளர் செவ்வி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அளவிற்கு மீறிக் கொச்சை வடிவிலும் பிராமண வழக்கிலும் பேசுவதுபோல் அமைந்திருந்தது. தமிழ் கற்று வருபவர்; எனவே, கொச்சையாகப் பேசுகிறாரா? அப்படியே அவர் பேசினாலும் எடுத்தெழுதுபவர் நல்ல நடையில் எழுதியிருக்கலாமே! அல்லது வேண்டுமென்றே எடுத்தெழுதுபவர் பிழையான நடையைக் கையாளுகிறாரா என்ற ஐயங்கள் ஏற்பட்டன. உசாவி அறிந்ததில் அந்த மலையாள எழுத்தாளருக்குத் தமிழ் தெரியாது என்றும் ஆங்கிலத்தில் தம் கருத்தைத் தெரிவித்திருந்தார் என்றும் எடுத்தெழுதியவர் உரியவர் அதைப் படிக்கப் போவதில்லையே என்பதால் தன் விருப்பம் போல் எழுதி அவருக்கு அவப் பெயர் ஏற்படுத்தி விட்டார் என்றும் அறிந்தேன். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம்தான் இந்த எடுத்துக் காட்டு. இப்படித்தான் ஊடக எழுத்தாளர்கள் தத்தம் விருப்பம் போல் மொழிக் கொலை புரிந்து நடப்பியல் என்கின்றனர்.

மொழித் தூய்மையை இழந்ததாலேயே தமிழ் மண்ணின் பெரும்பகுதியை இழந்தோம் என்பதை உணர்ந்து மொழித் தூய்மையை அனைவரும் பேண வகை செய்ய வேண்டும். மொழிக் கொலை புரியும் ஊடகங்கள் தடைசெய்யப்பட வேண்டும். இறைநெறியும் அடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்களின் பண்பாட்டு நெறிதான். ஆனால், அதே நேரம், இறைநெறி என்ற போர்வையில் மூட நம்பிக்கைகளும் ஆரியப் புரட்டுகளும் அரங்கேற இடந் தரக் கூடாது. இவற்றின் விளைவாக மக்கள் நல்வாழ்விற்கு எனக் கூறிப் பிறமொழி வழிபாட்டு முழக்கங்களை அல்லது பாடல்களை -சுலோகங்களை - ஓதினால் நன்மை விளையும் என்ற புரட்டுச் செய்தியுடன் அவற்றைப் பரப்புகின்றனர். இறைவனால் உருவாக்கப் பட்டதாகவும் ஓதப்பட்டதாகவும் கற்கப் பட்டதாகவும் கற்பிக்கப்பட்டதாகவும் சிறப்பிக்கப்படும் தமிழ் மொழிக்கு இல்லாத சிறப்பு வந்தேறி மொழிகளுக்கு வந்ததாக மக்கள் நம்பும் அறியாமையைப் போக்க வேண்டும்.

தொண்டர்நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை

உண்ட பாலனை அழைத்ததும் எலும்புபெண் உருவாக்

கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததும் கன்னித்

தண்டமிழ்ச் சொல்லோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்!

என்று அன்றே பரஞ்சோதியார் உணர்த்தியதை இன்றும் கூட உணராமல் மக்கள் நாவில் நடமிடா மொழியால் இறைவனை வாழ்த்தும் நிலை இருப்பது ஏன்? இந்நிலை மறைந்து இன்னிலை எய்த ஊடகங்கள் இறைநெறி தொடர்பான புரட்டுக் கதைகளை வெளியிடாதிருக்கவும் தமிழிறைப் பாடல்களை மட்டுமே வெளியிடவும் ஆவன செய்ய வேண்டும்.

1974 இலிலிருந்து அனைத்து இந்திய வானொலிகளில் சமசுகிருதத்தில் குறுஞ்செய்தி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதுபோல், அனைத்து வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ்ச் செய்தி ஒலி பரப்பவும் ஒளிபரப்பவும் செய்யப்பட வேண்டும். வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சமசுகிருத வகுப்பு, கூட்டுப்பாடல் பயிற்சி சமசுகிருத நாடகம் அளிக்கப்படுவது போல், தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கப்படவேண்டும். சமசுகிருதத்தில் திரைப்படம் உருவாக்கவும் நாடகம் உருவாக்கவும் முழு நிதியுதவி அளிக்கப் படுவது போல், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க்கலை நாகரிகச் சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் விளக்கும் நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் குறும் படங்களுக்கும் ஆவணப் படங்களுக்கும் உலக அளவில் நிதியுதவி அளிக்கப்படவேண்டும்.++

நட்சத்திரப் பலன்கள் என்றும் எண் கணியம் என்றும் கூறிக் கொண்டு அயல்மொழிப் பெயர்களைப் புகுத்தும் போக்கு ஊடகங்களிடம் மிகுதியாக உள்ளது. தமிழ்ப் பெயர்களை அரசே வரையறை செய்து அப்பட்டியலில் உள்ள பெயர்களை மட்டுமே சூட்ட வேண்டும் என்னும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பட்டியலில் இடம் பெறாதப் பெயராயின் அரசின் இசைவைப் பெற வேண்டும். அது தமிழ்ப் பெயராகத் - தமிழ்ப் பண்பாட்டை எதிரொலிக்கும் பெயராக - இருந்தால் மட்டுமே அதனை ஏற்றுப்பட்டியலில் சேர்க்க வேண்டும்.

உலகெங்கும் தமிழ்ப் படைப்புகள் ஏற்கப்படும் நிலை நிலவ, பேச்சு நடையையும் கொச்சை நடையையும் எழுத்து நடையாக்கும் போக்கை நிறுத்த வேண்டும். பேச்சுநடையே உயிர்ப்புள்ளது எனக் கூறிக் கொச்சை நடையை வேண்டுமென்றே பரப்புவதையும் வரிவடிவச் சிதைவையும் நிறுத்த வேண்டும்.##

இவ்வாறு வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் அறிவுத் துறைகளிலும் பிறவற்றிலும் ஊடகங்கள் தமிழையே பயன்பாட்டு மொழியாகக் கையாள வேண்டும்.

இந்தியத் தமிழர்கள் - தமிழகத் தமிழர்கள் - அடிமை மனப்பான்மையினர். போராட்ட உணர்வுள்ளவர்களும் ஆரவாரத்துடன் அடங்கி விடுவர். உணர்வுமிக்கச் சிறுபான்மையர் உணர்வுகள் காட்டில் நிலவாய் கடலில் மழையாய் உரிய பயன் இன்றி வீணே போகின்றது. தமிழர்களின் அடிமைத்தனம் தொலைந்தால் ஒழிய தமிழர்களுக்கு விடிவு இல்லை. கல்வியில் கலைகளில் ஆட்சியில் நீதிமன்றங்களில் வணிகத்தில் கோயில்களில் தொழிலில் ஊடகங்களில் எங்கும் தமிழ்க் கொலைதான் நடைபெறுகிறது. இக் கொலை நிகழ்வுகளை எடுத்துக்காட்டிற்காகக் குறிப்பிடக் கூடக் கை கூசுகின்றது; அதை எண்ணிப் பார்க்கக்கூட மனம் நோகின்றது. எனவே, அனைவரும் அறிந்த நாளும் ஊடகங்களில் நடைபெறும் தமிழ்ப்படுகொலைகளை எடுத்து இயம்ப இயலவில்லை. இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தினால்தான் தமிழ் உணர்வு தழைத்தோங்கும். தமிழ் உணர்வு கிளர்ந்தெழுந்தால்தான் அடிமை மனப்பான்மை தொலையும். ஆதலின் எல்லா இடங்களிலும் தமிழின் தூய்மையைப் பேண வேண்டும். தமிழின் தூய்மையே நம் வாழ்வின் தூய்மை என்பதை நம் உள்ளத்தில் பதிய வைத்துக் காலங்காலமாய் தடம் புரளாமல் தமிழ் நடை போட அடித்தளத்தை இப்போதே அமைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழ்நலம் பேணுவதை மக்களிடையே வற்புறுத்துவதையும் பரப்புவதையும் செயலாக்குவதையும் ஊடகங்கள் தங்களின் தலையாயக் கடமையாகக் கொண்டு ஒழுக வேண்டும். கடமை தவறும் ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

6. தமிழ்நாட்டிலுள்ள தற்போதைய மொழிச் சூழலை மாற்றுக:

தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள மொழிச் சூழலை உணர வேண்டும். இங்கு, ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’, ‘இன்றும் தமிழ்! என்றும் தமிழ்!’, ‘அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்! என்பன போன்ற முழக்கங்கள் வெற்று ஆரவாரமாக உள்ளன என்பதுதான் உண்மை. கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் சட்ட மொழியாகவும் இறைமொழியாகவும் ஊடக மொழியாகவும் பணிவாய்ப்பு மொழியாகவும் பேச்சு மொழியாகவும் தமிழின் நிலை தேய்பிறையாகத்தான் உள்ளது. ஒரு சாராரின் உரைகள் இவற்றை வளர்பிறையாக மாற்ற இயலாது. மேலும், தமிழ் என்னும் பொழுது ஒரு சில தமிழ்ச் சொற்கள் கலந்த பிறமொழி நடையை நாம் தமிழ் என்று ஏற்றுக் கொள்ள இயலாது. இங்குத் தமிழைத் தேய்ந்த நிலையில் விட்டு விட்டு, உலகெங்கும் செம்மொழித் தன்மையைப் பரப்புவோம் என்பது பெற்றோர் பசித்திருக்க மற்றோருக்கு உணவு அளிப்பதுபோல்தான். எனவே, நம் நாட்டில் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் தாய்த்தமிழ் ஏற்றமுடன் இருக்கச் செய்வதையும் செம்மொழி மேம்பாட்டிற்கான அடிப்படைத் திட்டமாகக் கருத வேண்டும்.

மொழிக்கல்வி என்ற முறையில் தமிழ்நாட்டில் பயிலுவோர் அனைவரும் தமிழை அறியச் செய்வதுபோல், கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் முதலான அனைத்துத் துறைகளிலும் மழலைநிலை முதல் உயராய்வுநிலை வரை தமிழ் இருக்கவும் இவ்வாறு தமிழைத் தெரிவுசெய்வோருக்கு உதவிகள் புரியவும் கல்விநிலையும் படிப்புதவி நிலையும் இருக்க வேண்டும். ++

தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும் ஆங்கிலம், இந்தி, அரபி, உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, சமசுகிருதம், பிரெஞ்ச்சு, செருமன் ஆகிய பிற மொழிகளில் அவரவர் வகுப்பு நிலைக்கேற்றவாறு தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பாடு, தமிழ் நாகரிகம் முதலிய சிறப்புகளை உணரும் வகையில் பாடநூல்களில் கட்டுரைகளும் பாடல்களும் கதைகளும் நாடகங்களும் இடம் பெறவேண்டும். இவ்வாறு, அயல்மொழிக் கல்வியைப் படித்தாலும் அதில் செம்பாதி தமிழ் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால்தான் தமிழ்நாட்டில் பயின்று உயர்நிலை அடைந்த பலரும் தமிழை அறியாதவராகவும் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டில் பயின்று இந்தியாவின் உயர்நிலைப் பதவிகளை அடைந்தவர்களால்தாம், தமிழ்நாட்டின் பல பகுதி பிற மாநிலப் பகுதிகளில் சேர்ந்ததையும் இத்தகையோர் திருவள்ளுவரின் சிறப்பை அறியாமல் பிற மொழிவாணர்களைப் புகழ்வதையும் சங்கப் புலவர்களையும் தொல்காப்பியரையும் எண்ணிக்கூடப் பார்க்காமையையும் உணர்ந்தால் இத்தகைய நிலை அன்று முதல் இன்றுவரை இருப்பதை அறியலாம். எனவே, தமிழ்நாட்டில் கல்வி முழு நேரமாக இருந்தாலும் பகுதி நேரமாக இருந்தாலும் பிற இந்திய மொழிகளாக இருந்தாலும் பிற உலக மொழிகளாக இருந்தாலும் அம்மொழிப் பாடங்களில் உயர்தனிச்செந்தமிழ்ச் சிறப்பை உணர்த்தும் பாடப்பகுதிகள் வரும் கல்வியாண்டு முதலே இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ++

தமிழ் நாட்டுக் கல்வி நிலையங்களில் படித்துப் பயனடைந்த, புகழடைந்த அயலவர் மிகுதி. எனினும் தமிழகச் சூழலில் தமிழுக்கு மதிப்பில்லை யென்பதால் தமிழ் அறியாமலேயே தமிழகத்தில் வாழ்ந்து விடுகின்றனர். எனவே, தமிழில் சான்றிதழ்த் தேர்ச்சியாவது பெற்றிருந்தால்தான் கல்வியகம் நடத்த இயலும்; தொழில் தொடங்க இயலும்; பணியாற்ற இயலும்; கலைத்துறைகளில் ஈடபட இயலும் என்னும் தமிழ்ச் சூழலைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்திய நாட்டின் முதல் குடிமகனாக அறிவார்ந்த தமிழ் மகன் திகழ்ந்த போதும் அண்டை மாநிலங்களின் தமிழ் எதிர்ப்பை மாற்ற முடியவில்லை. உலகப் புலவர் திருவள்ளுவர் சிலையைக் கூட கருநாடக மாநிலத்தில் 18 ஆண்டுகளாகத் திறக்க இயலவில்லை. (இக்கட்டுரை முடிக்கப்பட்ட பொழுது இச்சிலை திறக்கப்பட்டது. எனினும் மூவாறு ஆண்டுகள் உலகப் பாவலரின் திருவுருவம் மூடிக்கிடந்த அவலக் கறை கறைதானே!) தமிழக உரிமைகள் அண்டை மாநிலங்களால் பறிக்கப்பட்டும் மீட்பார் இல்லை. தமிழ்ச் சேய்மொழியினரே தமிழுக்குப் பகையாக இருப்பதன் காரணம் உண்மை வரலாற்றை உள்ளபடி நாம் பிறர்க்கு உணர்த்தத் தவறியதே ஆகும். தமிழ்நாட்டில் தமிழ் சார்நத சூழல் இருப்பின் இங்குள்ள பிற இனத்தவரால் தமிழின் அருமை உணரப்பட்டு அவரவர் தாய்நிலங்களிலும் தமிழருமை பரவும். எனவே, தமிழ் நாட்டில் உள்ள பிற மொழியினரும் தமிழில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் தமிழின் சிறப்புகளையும் அறியும் வகையில் நமது தமிழ்ப்பணி அமைய வேண்டும். அவர்கள் வாயிலாகவே பிற மொழி பேசும் பகுதிகளிலும் தமிழ்நலச் சூழலை உருவாக்க வேண்டும். இதன் வாயிலாக நல்லுறவையும் ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தலாம்.

தமிழ் ஆட்சி மொழி என்றால் ஏதோ 2% அரசு ஊழியர்கள் ஒப்புக்கு நிறைவேற்றும் திட்டம் என்று பலர் கருதுகிறார்கள். அவ்வாறில்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநில, மைய, தனியார் துறைகள், அவைசார்ந்த அமைப்புகள், கல்வியகங்கள், வங்கிகள், அயலக நிறுவனங்கள் என அனைத்து அலுவலகங்களிலும் தமிழே அலுவல் மொழியாக ஆட்சி செய்ய வேண்டும். இதற்காகப் புதிய ஆட்சிமொழிச் சட்டம் ஒன்றைத் தமிழக அரசு பிறப்பித்து, அனைத்து நிலைகளிலும் அன்னைத் தமிழ் உடனே வீற்றிருக்க வகை செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்ற வரையறை இல்லாவிட்டாலும் இந்தியைத் தேசிய மொழியாக விளம்பரப்படுத்தப்படுவதை நிறுத்தச் செய்ய வேண்டும். மக்கள் மொழிகள் அனைத்துமே தேசிய மொழிகள்தாம். பட்டியலிலுள்ள 31 மொழிகள் மட்டுமல்ல; பத்தாயிரத்திற்கும் குறைவில்லாத அளவில் பேசப்படும் பிற 100 மொழிகளும் தேசிய மொழிகள்தாம். பத்தாயிரத்திற்கும் குறைவாகப் பேசப்படும் மொழிகளையும் எண்ணிக்கை அடிப்படையில் அல்லாமல் இனத் தகுதி அடிப்படையில் தேசிய மொழிகள் என்று சொல்வதில் தவறில்லை. எனவே, தேசிய மொழி என இந்தி விளம்பரப்படுத்தப்பட்டு மிகுதியாகச் செலவினம் மேற்கொள்ளப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இந்திமொழியில் உருவாக்கப்படும் அகராதிகளின் முதன்மை நோக்கம் இந்திய மொழிகள் முழுமையும் சீரான ஒத்த கலைச்சொற்கள் நிலவ வேண்டும் என்ற போர்வையில் சமசுகிருத, இந்திச் சொற்களைத் திணிப்பதுதான். இந்தி மொழியில் கலைச்சொல்லகராதிகள், ஆட்சித்துறைச்சொற்கள் அகராதிகள் என்ற வகையில் அகராதிகள் வெளியிடுவதில் தவறில்லை. ஆனால், இந்திய மொழிகளுக்கான இந்தி அகராதி என்ற முறையில் வருவது பிறமொழிகளின் வளர்ச்சிக்கும் இந்தி முதன்மைக்கும் ஆழமாய் வழிவகுக்கும் என்பது விளக்காமலேயே புரியும். எனவே, குறைந்தது இந்நிலையிலாவது இதன் தீங்கைப் புரிந்து கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆந்திரா, பீகார், தில்லி( 2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும் மொழியான சமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும். தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும். ++

விரும்பும் மொழியைப் பயில உரிமை உண்டு என்றும் இந்திய நாடு என்னும் போர்வையிலும் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பின், அவர்களை மக்கள் இல்லாப் பகுதிக்கு அனுப்பி அவர்கள் விருப்பம் போல் படித்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.

ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால்

சாக இந்தியா என்று சாற்றிடுவோம்

என்னும் பாவேந்தரின் முழக்கத்திற்குத் தேவையில்லாத சூழலை உருவாக்கி வலிவான பொலிவான இந்தியத் துணைக்கண்டத்தை உருவாக்க வேண்டும் எனில், தமிழே தமிழ்நாட்டின் கல்வி மொழி என்பதை நடுவணரசிற்கும் நாம் உணர்த்த வேண்டும்.ளூளூ

எல்லாக் கோயில்களிலும் தமிழிலும் அருச்சனை செய்யலாம் என இருந்து, இப்பொழுது தமிழில் அருச்சனை செய்யப்படும் என அறிவிப்பு உள்ளதும் சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடலாம் என்பது நடைமுறைக்கு வந்தபின்பும் தமிழ் வழிபாட்டைப்பற்றிப் பெருமை கொள்ளாமல் இருக்கலாமா எனச் சிலர் எண்ணலாம். சிதம்பரம் கோயிலில் ஆரியவழிபாடு முடிந்தபின்பு வெளி மேடையில் சிறிது நேரம் தேவாரம் பாடத்தான் இசைவே அன்றி, தெய்வப் படிமம் உள்ள கருவறையில் தேவாரம் பாட இயலாது. மேலும், தமிழ்நாட்டில் தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க் கோயில்களில் தமிழ்க் கடவுள்களுக்குத் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு அறிவிப்பு தேவைதானா? அறிவிப்பு எதுவும் இல்லாமலேயே தமிழில் மட்டும்தான் வழிபாடு நடத்தப்படவேண்டும். ஒரு சில கோயில்களில் மட்டுமே எழுத்து மூலமான வேண்டுகோளின் அடிப்படையிலேயே பிற மொழி வழிபாட்டிற்கு இசைவு வழங்கப்பட வேண்டும். ளூளூ

நாம் எண்ணுவது போலக் காலங்காலமாகச் சமசுகிருதம் கோயில் மொழியாக இல்லை. பிற்காலச் சோழர் காலத்தில்தான் ரிக் ஓதும் மறையவர்க்கு ஒரு கோயில் எனத் தனியாக சமசுகிருத வழிபாட்டிற்கு என ஒரு கோயில் ஒதுக்கப்பட்டது. பின்னர் எல்லாக் கோயில்களிலும் புகுந்து கொண்டு இப்பொழுது காலங்காலமாகத் தமிழ் வழிபாடு நடைபெற்று வரும் சிறு தெய்வ வழிபாட்டு இடங்களிலும் அம்மன் கோயில்களிலும் புகுந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் கோயில் எழுப்பப்படும் பொழுது ஆரிய வழிபாடு சென்று அமர்ந்து கொள்கிறது. (உலகத் தமிழர்களே நீங்கள் உண்மையான இறைப்பற்றாளர் எனில், தமிழ் வழிபாட்டிற்கு மட்டுமே இடம் தாருங்கள்.)

சமய உரிமை அல்லது ஆகம வழிபாட்டு முறை என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிப்பது தமிழர்களின் இறைவழிபாட்டு உரிமைக்கு எதிரானது எனச் சட்டம் கொண்டு வந்து அத்தகையோரின் அடாவடிப் போக்குகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்கள் வழிபாட்டிற்கு வந்தேறிகள் தடைபோடுவது அறமல்ல என்பதை உணர வேண்டும்.

இறைவழிபாடு தமிழில் அமையப் போராடிக் கொண்டிருக்கும் இச் சூழலில், சிறு பூசாரிகளுக்குப் பயிற்சி என்ற பெயரில் சமசுகிருத வழிபாட்டு முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அநீதி உடனே நிறுத்தப்பட வேண்டும். தமிழர்களுக்காகத் தமிழர்களால் தமிழர்களின் உழைப்பால் தமிழர்களின் பொருளால் கட்டப்பட்ட தமிழ்க்கோயில்களில் தமிழ் ஒன்றுதான் ஆட்சி செய்ய வேண்டும். இதை விரும்பாதவர்கள் தமிழகத்திற்கு வெளியே சென்று விரும்பியவாறு வழிபட்டுக் கொள்ளத் தடையில்லை.

இராமலீலா என்ற பெயரில் ஆண்டுதோறும் இராவணன் உருவத்தை எரிப்பது தமிழர்க்கு எதிரான கொடும்போக்கு என்பதை உணர்த்தி அதைத்தடை செய்ய வேண்டும். இவ்விழாவானது தமிழர்க்கு - இலங்கைத் தமிழர்க்கு - ஈழத் தமிழர்க்கு - எதிரான உணர்வையே வடவருக்கு உண்டாக்கும் என்பதை உணர்ந்து நிறுத்த வேண்டும். பிற இன நல உணர்விற்கு எதிரான போக்கைச் சமய உணர்வு என்று கருதி ஏற்கக் கூடாது.

திரைப்படங்களோ, தொலைக்காட்சிகளோ, இதழ்களோ எவையாயினும் பெரும்பாலும் தமிழ்க்கொலையில் முதலிடம் பெறுகின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் திரு என வரவேண்டிய இடங்களில் சிரீ என மாற்றிய தணிக்கையை ஏற்றுக் கொண்ட நாம், இப்பொழுது தமிழ்க்காப்பிற்கெனத் தணிக்கையை அறிமுகப்படுத்தினால்தான் நாம் பிறநிலைகளில் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் வெற்றி காணும் என்பதை உணர வேண்டும். பிறமொழிக் கலப்பின்றித் தமிழைத் தமிழாகப் பயன்படுத்தினால் மட்டுமே, அரசு விளம்பரங்களும் நல்கைகளும் கடன் உதவிகளும் விருதுகளும் வழங்கப்பெற வேண்டும். தமிழோசையும் மக்கள் தொலைக் காட்சியும் இம்முயற்சிகளில் வெற்றி கண்டு வரும் பொழுது, தினமணியின் ஒரு பகுதி நல்ல தமிழில் செய்திகளைத் தந்து வெற்றி ஈட்டிக் கொண்டிருக்கும் பொழுது சிற்றிதழ்கள் பலவும் இலக்கிய இதழ்கள் பலவும் நல்ல தமிழில் வந்து கொண்டிருக்கும் பொழுது பிறவற்றால் ஏன் இயலாது? தமிழ், தமிழ் என முழங்கும் எல்லாக் கட்சிகளும் தத்தம் கட்சி இதழ்களைக் கலப்பு நடையின்றித் தமிழில் நடத்தியும் தமிழில் உள்ள தமிழ் இதழ்களை மட்டுமே வாங்குமாறு தொண்டர்களுக்கு வற்புறுத்தியும் தமிழின உணர்வை வெளிப்படுத்த வேண்டும் அதாவது, பிற மொழி இதழ்களைப் படிக்கத் தடையில்லை. ஆனால் தமிழில் வரக் கூடிய இதழ்கள் எனில் உண்மையிலேயே பிழையற்ற நல்ல தமிழில் வந்தால் மட்டுமே படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என அடையாளம் காட்டி அறிவுறுத்தினால் போதுமே! பண்பாட்டுச் சீர் குலைவான படைப்புகளைத் தணிக்கையின் மூலம் தடுத்தால், நாடகங்கள், படங்கள், தொகுப்பு நிகழ்ச்சிகள் மூலம் நடைபெறும் மொழிக் கொலைகளைத் தடுக்க இயலுமே!ளூளூ

வணிக நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கும் பொழுதே, நல்ல தமிழில் பெயர் இருந்தால் மட்டும் ஏற்பு அளிப்பின், இயல்பாகவே விளம்பரப் பலகைகளில் தமிழைக் காண இயலுமே பொதியப் பட்ட எப்பொருளாயினும் அதன் உறைகளில் தமிழைக் காணலாமே அவ்வாறாயின் இயல்பாவே மக்கள் நாவில் நற்றமிழ் நடமாடுமே!

இவ்வாறு கூறுவதெல்லாம் புதிய திட்டங்கள் அல்ல. பல நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்படுவனதாம். நம் நாட்டிலும் காலங்காலமாக வலியுறுத்தி வரப்படுவனவே. ளூளூ

தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையை ஆங்கிலத்திலும் (Madras எனக் குறிப்பிடாமல்) சென்னை என்றே குறிப்பிட வேண்டும் எனத் தமிழ் உணர்வாளர்கள் வேண்டுதலை ஆணையாக்கியது அரசு. ஆனால், உயர்நீதிமன்றம், பல்கலைக்கழகம் முதலான பல அரசுசார் அமைப்புகள், கல்வியகங்கள் இதனைப் பின்பற்றத் தேவையில்லையாம். சென்னை மருத்துவக் கல்லூரி என ஆங்கிலத்தில் பெயர் மாற்றப்பட்ட கல்லூரியின் பெயரை ஓர் ஆரிய மருத்துவர் கூறினார் என்பதற்காக மீண்டும் மதராசு மருத்துவக் கல்லூரி என்றே அழைக்கும்படித் தமிழாய்ந்த தலைவரே ஆணையிட்ட கொடுமை எங்கேனும் நடந்ததுண்டா? தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு எதிராகத் தமிழைப்பற்றி முடிவெடுக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? பம்பாய் மும்பை எனவும் கல்கத்தா கொல்கத்தா எனவும் இவைபோல் பிற நகரங்கள் பெயர் மாற்றத்திற்கு ஆளாகும் பொழுது அந்தந்த மாநில மக்களின் உணர்விற்கு எதிராகச் செயல்படாமல் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், முதன்மைப் பொறுப்புகளில் அயலவர் ஆளுமை உள்ளமையால் அவர்களின் விருப்பம்தான் கோலோச்சுகின்றது. நாமும் வெட்கப்படாமல் ஏற்றுக் கொள்கின்றோம். ஆரியர்க்குப் பாய்விரித்து ஆங்கிலர்க்குக்கற்பிழந்து பூரியர் செய் இந்திக்கு வால்பிடிப்போர் நிறைந்துள்ள நாட்டில் வேறு என்ன எதிர்பார்க்க இயலும்?

தமிழ்ப்பெயர் சூட்டப்படும்போது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் பீடி பல்கலைக்கழகம் எனச் சுருக்கப்படுவது போல் பெயர்கள் சுருக்கப்படக் கூடாது என்னும் நிலை வரவேண்டும். பேரறிஞர் அண்ணா தலைமைச் செயலகம் எனக் குறிப்பிட்டது செக்கரட்டேரியட்டை மட்டும்தான் என்று கூறி இன்றுவரை செயிண்ட் சார்சு கோட்டை எனக் குறிப்பவர்களே மிகுதியாக உள்ளனர். செயலக முகவரிகள், அமைச்சர்களின் மடலேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றிலும் இவ்வாறு குறிக்கப்படுவதை நாம் காணலாம். தலைமைச் செயலகம் தவிர, நடுவணரசின் அலுவலகங்கள், பல துறை அலுவலகங்கள் உள்ளன என்பது உண்மைதான். ஏன், இதனைத் தலைமைச் செயலக வளாகம் எனக் குறிக்கக் கூடாதா? இத்தகைய போக்கைப் போக்க, தமிழருக்கே உரிய ஐந்திணைப் பாகுபாட்டை உணர்த்த ஐந்திணைக் கோட்டை என்று பெயர் சூட்டக் கூடாதா? அல்லது தமிழ்க் கோட்டை என்று அழைக்கக் கூடாதா? பெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவின் பெயர் கிரீன்வேய்சு சாலை என்று ஆங்கிலத்தில் இருக்க வேண்ணடுமா? பைந்தமிழ்ச் சாலை என்று மாற்றக் கூடாதா? வெள்ளையர் (whites) தெரு, கறுப்பர் (Blacks) தெரு, என்ற இனப்பாகுபாடு தேவைதானா? வெள்ளி வீதியார் தெரு அல்லது வெள்ளை நாகனார் தெரு, கார்நாற்பது தெரு எனப் புலவர்கள் நூல்களைச் சூட்டலாமே! இன்னும் பொருத்தம் இல்லாத பெயர்கள் பல உள்ளன. காவல் ஆணையர் அலுவலகத் தெருவில் அவ்வலுவலகமே இப்போது இல்லை. சங்கப் புலவர் காவற்பெண்டு பெயரைச் சூட்டலாமே! மேலும் இவ்வாறான பெயர்கள் பல தமிழில் அமையாததால் அவற்றின் அடிப்படையிலான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், அஞ்சலகங்கள் முதலியனவும் அயல்மொழிப்பெயரில் அமைந்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக முனிசிபல் காலனி மதுரையில் உள்ளது. அதனால் அந்தப் பெயரில் அஞ்சலகம் அமைந்துள்ளது. (மதுரை, மாநகராட்சியான பின்னும் அப்பெயர் நீடிப்பதே தவறு.) திருச்சிராப்பள்ளியில் மெயின் கார்டு கேட் உள்ளது. (கீழவாயில், மேலவாயில் போல) தலைவாயில் அல்லது தலைவாசல் எனலாமே! இருக்கின்ற தெருப் பெயர்களை மொழிபெயர்த்துக் கொண்டிராமல், ஒத்துவரக்கூடிய அல்லது முற்றிலும் புதிய பெயர்களைச் சூட்ட வேண்டும். உணர்வே இல்லாத மக்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் வெறும் அரசாணைகளால் என்ன பயன்?

தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்னும் நிலை மேலும் மோசமடைந்து வீட்டிலும் தமிழ் இல்லை என்னும் இழிநிலை வந்து விட்டதைப் போக்குவதற்கு இவ்வாறு கல்வி, தொழில், வணிகம், அலுவலகம், இறைவழிபாடு,என எல்லா நிலைகளிலம் தமிழே இருக்க வகை செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்ச் சூழல் மட்டுமே தமிழ்நாட்டில் துலங்கச் செய்ய வீட்டிலும் ஏட்டிலும் ஊரிலும் பாரிலும் தமிழே ஆட்சி செய்யுமாறு தமிழுக்குத் துறைதோறும் உணர்ச்சி கொண்டே ஊழியம் செய்ய வேண்டும்.

7. இந்தியா என்றால்இந்தியாவா?

இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவர்க்கே இந்தியாவில் வாழ இயலும் என மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக் கூடிய வாய்ப்பைப் பிற மொழியினர் பெற இயலாது.படைத்துறையில் சேர்ந்தபின்பும் இந்தி இந்தி இந்திதான். நமக்குத் தேவை இந்தி-யா? இந்திய ஒருமைப்பாடா?

நடுவணரசின் நோக்கம் இந்தியா என்றால் இந்தி என்பதுதான். காற்றில் வீசும் வாள்வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பு கண்டு நடுவணரசு மிரளாது. எந்த அளவிற்கு விரைவாக நாம் பொங்கி எழுகிறோமோ அந்த அளவிற்கு நாம் அடங்கிவிடுவோம். சான்றாகச் சடுகுடு இடத்தைக் கபடி பிடிக்க முயன்ற பொழுது எழுந்த எதிர்ப்புசடுகுடு தொலைக்கப்பட்டதுபோல் தொலைந்து போயிற்று அல்லவா? எனவேதான் நடுவணரசின் திட்டங்கள் - ஊரக வளர்ச்சியாகட்டும், சிறு சேமிப்பாகட்டும், காப்பீடாகட்டும், வங்கியாகட்டும் - எங்காயினும் எதுவாயினும் இந்தியே வீற்றிருக்கிறது. எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணாக்கர் பயிலும் தொழிற்பயிற்சி நிலையங்களின் வினாத்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ளது போல்,‘இந்தியா முழுமைக்கான எதுவாயினும் இந்திதான் இடம் பெறுகிறது. ஆங்கிலம் அயல்மொழி எனக் கூறி இடம் பெயர்க்கப்பட்டு அந்த இடத்தில் அயல்மொழியான இந்திமொழி கால்பதித்து வருகிறது. தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் ஓட்டுநர், நடத்துநர் பதவி உயர்விற்கான தேர்வை ஆங்கிலத்தில்தான் நடத்துகிறது. இக்கொடுமையிலும் கொடுமையாக ஒரே நாடு;ஒரே முறையான பயிற்சி என்று நாளை இங்கு இந்திதான் வரப்போகிறது. தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனையினருக்கான நோய்கள் பெயர்ப்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு, சிறுதொழில் குறுந்தொழில் பெருந்தொழில்களுக்கான தொழில்வகைப் பெயர்ப்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு போன்ற அனைத்து இந்திய அளவிலான அனைத்துத் தொகுப்புகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் உள்ளன. நடுவணரசு, நடுவணரசு சார்அமைப்புகளின் பணிகளுக்கு இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களையும் முனைவர் பட்டம் பெற்றவர்களையும் அமர்த்தம் செய்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டிலோ தமிழ் வளர்ச்சித் துறையிலேயே தமிழ் படித்தவர்கள் துரத்தப்படுகிறார்கள். னுனு

அன்றாடம் மக்கள் வணக்கம் என்பதை மறந்து குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங், குட் நைட் என்று ஆங்கிலத்தில் வாழ்த்தினைப் பரிமாறிக் கொள்ளும் அவலம் ஒரு புறம் இருக்க, மத்திய அரசு அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டால் இனிய தமிழ் மறந்து நமசுகாரம் அல்லவா ஒலிக்கிறது? தொலைபேசிப் பொது எண்களுடன் தொடர்பு கொள்ளுகையில் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்காக உள்ள இத்துறை தமிழ் நாட்டு மக்களிடம் தமிழில் வணக்கம் சொல்லக்கூடாதா? என்ன பண்பாட்டுக் கொலை இது? கேள்வி கேட்பார் யாருமில்லையே?

அதுபோல் மத்திய அரசு அலுவலகங்கள் என்றால் தமிழ்த் திரு மறைந்து சிரீ தான் ஆட்சி செய்கிறது, இதுதான் மத்திய அரசின் இந்திக் கொள்கை என்னும் பொழுது தமிழால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களாவது எதிர்த்து இம்முறையை ஒழிக்க வேண்டாவா?

தொலைக்காட்சி வானொலிகளில் விளையாட்டு குறித்த நேரடி வருணையாகட்டும் பிற குறித்த நேர்முக விளக்க உரையாகட்டும் தமிழ் நாட்டிலே நடைபெறும்நிகழ்ச்சி யாகட்டும், தமிழுக்கு இடமில்லையே! ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி வழங்கி இந்த நாடு இந்தி பேசுவோருக்கு மட்டுமே உரியது என மத்திய அரசு ஆணித்தரமாக அறைகிறதே! மாநிலத் தன்னாட்சியாளர்கள் உறங்குவது ஏன்?

தொலைவரிக்குச் சுருக்கப் பெயர்களைப் பதிந்து கொள்ளும் வாய்ப்பை அத்துறை தருகிறது. ஆனால், இப்பெயர் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். இது என்ன கொடுமை? தமிழ்நாட்டு நிறுவனம் அல்லது அமைப்பு நிறுவனப் பெயரைச் சுருக்கமாகத் தமிழில் வைக்கக் கூட உரிமை யில்லையா?

மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களும் சரி மத்திய உதவியுடன் தமிழ் நாட்டில் அமைக்கப்படும் ஊர்கள், நகர்ககளின் பெயர்களும் சரி தமிழில் இல்லை. எந்த இந்திக்காரன் பணத்தில் இதனை அமைக்கின்றனர்? தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே? பிறகு ஏன் இந்த அவலம்? நமது பணத்தால் பெறும் உதவிகளுக்கு இந்தி பேசும் பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயரையா சூட்டுகின்றனர்? வெட்கமின்றித் தமிழக அரசும் ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. சூடு சொரணையின்றி நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.இவ்வாறு பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்திய நாட்டில் தமிழர் அயலவராக நடத்தப்படும் பொழுது தமிழ் எங்கே வாழும்? வளரும்? மலரும்? தமிழ் நாட்டிலேயே தமிழ் தளரும் பொழுது பிற நாடுகளில் வாடத்தானே செய்யும்?

இந்தி விதைப்பு

வங்காளியர் எனில் வங்காள மொழி பேசுநர்; ‘மலையாளியர் எனில், மலையாள மொழி பேசுநர்; ‘பஞ்சாபியர் எனில் பஞ்சாபி மொழி பேசுநர்; ‘மராத்தியர் எனில் மராத்தி மொழி பேசுநர்; ‘குசராத்தியர் எனில் குசராத்தி மொழி பேசுநர்; இவைபோல் இந்தியர் எனில் இந்திமொழி பேசுநர்; பேச வேண்டியவர்கள் என்ற தவறான எண்ணம் நம்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் விதைக்கப்பட்டுள்ளது. எனவேதான் தலைமையமைச்சரும் இந்தியில் பேச முடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறார்; இந்தியில் உரையாற்ற இயலாமை இழுக்கு எனக் கருதி இந்தியில் உரையாற்றுகிறார். இந்தியா என்றால் இந்திநாடு;‘இந்துநாடு என்ற எண்ணம் மாற முதலில் நம் நாட்டின் பெயரே மாற்றப்பட்டாக வேண்டும்.

தமிழ் இந்தியா

உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தோன்றிய வளர்ந்த வாழும் பகுதியான ஆசியாக்கண்டத்தை நாம் தமிழ்க்கண்டம் என்றே அழைக்க வேண்டும். இந்தியா என்பது தமிழ்க்கண்டக் கூட்டரசு நாடுகள் என அழைக்கப்பெற வேண்டும்; அல்லது குறைந்தது தமிழ் இந்தியா என்றாவது அழைக்கப்பட வேண்டும். னுனு

இலங்கைத்தீவு முழுமையுமே தமிழ் நிலமே! ஆனால் வந்தேறிகளான சிங்களர்கள், பெரும்பகுதியை வஞ்சகத்தால் கைப்பற்றிக் கொண்டனர். எஞ்சிய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களில் நூறாயிரக்கணக்கானவரை எரிகுண்டுகளாலும் கொத்துக் குண்டுகளாலும் அழித்தும் அகழ்பொறிகளால் மண்ணில் புதைத்தும் ஒழித்து விட்டனர். அப்படியும் எஞ்சியோரை வதைமுகாம்களில் அடைத்து வைத்து குடிநீர்த் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை, மருந்தின்மை ஆகிய கொடுமைகளை உருவாக்கிப் போதிய நல்வாழ்வு வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் அழித்து வருகின்றனர். ஆகவே, தமிழர் வாழ்ந்த பகுதிகளை முழுமையும் சிங்கள நிலமாக ஆக்கவும் பரம்பரையாகச் சிங்கள நிலமாக இருந்ததுபோல் காட்டவும் இந்தியத் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனச் சிங்கள ஊடகங்களே தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் தம் இன மக்களை அழித்தொழிக்கும் நாச வேலைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது போல் உலக மக்களும் தத்தம் இனத்தின் தாய் இனமாகிய தமிழ் இனத்தைக் காக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதை உணர்ந்து தாய்இன அழிவைத் தடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் குரல் கொடுத்து வந்திருந்ததுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கடுமையான போராட்டங்கள் மூலம் தங்கள் உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர். உலக நாடுகளின் துணையின்றித் தமிழ் ஈழ மக்கள் தனிஅரசை அமைத்த பின்பு அதை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என வேண்டி வந்தனர். அண்மைப் பேரழிவின் தொடக்கத்தில் இருந்தே அதனைத் தடுத்து நிறுத்த அனைத்துத் தரப்பாரும் பல்வேறு வகைகளில் போராடி வந்தனர். முத்துக்குமாரர்கள் அனலுக்கு உணவாகி உயிர் ஈகம் புரிந்தும் தமிழ் இன உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இவையனைத்தும் பயனற்றுப்போகும் வண்ணம் இந்திய காங்.அரசு கேளாச் செவியாய் நடந்து கொண்டதன் காரணம் என்ன? இந்திய நாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு விளங்கினாலும், இந்தியாவிற்கு அயலவரால் இன்னல் வரும் பொழுதெல்லாம் முதலில் தோள் கொடுப்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் இந்தியா தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. பாராமுகமும் புறக்கணிப்பும் இருந்தாலும்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், சமசுகிருத மேலாண்மைக்காகக் கழுத்தறுப்பு வேலையல்லவா செய்து வருகிறது?

மத்திய ஆட்சிக்குத் தமிழகக் கட்சிகளின் பங்களிப்பு தேவை என்ற கட்டாயச் சூழலிலும் தமிழ்நாட்டிற்கு எதிராகச் செல்லும் துணிவு எவ்வாறு அதற்கு வந்தது? தமிழால் ஒன்றுபடாத் தமிழ் நாட்டு மக்களே அதற்குக் காரணமாகும். தமிழகப் பேராயக் கட்சியோ தில்லிக்குக் காவடி தூக்குவதில் அணி அணியாகப் பிரிந்து போட்டி போட்டுக் கொள்ளும். பிற கட்சிகளோ தங்களுக்குள் யார் அடிபணிந்து போவது என்று போட்டி போட்டுக் கொள்வதில் காட்டும் கருத்தைத் தமிழர் நலனைக் கட்டிக் காப்பதில் காட்டுவதில்லை. தமிழ்நாட்டுக் கட்சிகள் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்வதைப் பார்த்து செல்வாக்குடன் இருப்பதாக எண்ணினால் அது தவறாகும். ஓர் எடுத்துக் காட்டைக் கூற விரும்புகிறேன். கரும வீரர் காமராசர் சுட்டிக் காட்டுபவரைத் தலைமைஅமைச்சராக ஏற்றுக் கொள்ள முன்வந்த பேராயக்(காங்கிரசு) கட்சியினர் அவரைத் தலைமை அமைச்சராக ஏற்க முன்வரவில்லையே! இதுதான் உண்மைநிலை. வடவர் நம்மைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை; ஆனால், நம் இனமோ மொழியோ பயனுறும் வண்ணம் செயல்பட முன்வருவதில்லை. திராவிடம், ‘திராவிட இயக்கம் என்றே தமிழக மக்கள் பேசிவந்தாலும் பிற தென்மாநிலத்தவரும் தமிழ் மக்களுக்கு எதிராகவே நடந்து கொள்கின்றன. மத்திய அரசுகளும் அவற்றிற்கே துணைபுரிகின்றன. நாமோ பாடங்கற்காமல் விழித்தெழாமல் இருக்கின்றோம்.

தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு!

தமிழர் வாழ்வே தமிழின் வாழ்வு!

என்பதே பேராசிரியர் சி.இலக்குவனார் வற்புறுத்தி- வந்த கோட்பாடு ஆகும். எனவே, தமிழர் வாழ, தமிழ் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தமிழின் செம்மொழித் தகுதி ஏற்கப்பட்டால் தமிழ்நலன் சார்ந்த விந்தை பல நிகழும் எனப் பலராலும் சொல்லப்பட்டது. ஆனால், முழு ஏமாற்றமே! தெலுங்கு, கன்னடம், முதலான மொழிகள் பலவற்றையும் சேர்த்துக் கொண்டு பத்தோடு பதினொன்றாக மொழிகளுக்கெல்லாம் தாயான செந்தமிழ்மொழி இருக்கப் போகிறது. எனவே, நாம் அனைத்து மொழிகளுக்கும் காவடி தூக்குவதை விட்டு விட்டு விட வேண்டும். தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாகவும் இந்தியாவின் தேசிய மொழியாகவும் அறிவிக்கச் செய்ய வேண்டும். தேசிய மொழி என்று இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால்,இந்தி அறிவிக்கப்படாமலேயே தேசிய மொழியாகப் பரப்புரை செய்யப்படுகிறது. வாழும் செம்மொழியும் மூத்தமொழியும் ஆகிய தமிழைத் தேசிய மொழியாக அறிவிப்பதால் இந்தியாவிற்கே பெருமை எனப் பிறரை உணரச் செய்ய வேண்டும்.

8. தமிழர் சிக்கல்களுக்கு முடிவுரை எழுதுவோம்!

அன்றும் இன்றும் உலகளாவிய தமிழர்களின் வாழ்வும் தாழ்வும் என்னும் தலைப்பே இங்கு சுருக்கமாகக் குறிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் என்னும் பொழுதே உலகத் தமிழர்களைக் குறிக்கின்றது. அன்றிருந்த பழந்தமிழர் பொற்கால வாழ்வு நீங்கி இன்று தாழ்வு ஏற்பட்டுள்ளதை ஆராயவில்லை. இவை நீங்கி வாழ்வு பெறத் தேவையான செயற்பாடுகள் மட்டும் சுட்டப்பட்டுள்ளன. எனவே, தலைப்பு தமிழர் தாழ்வும் வாழ்வும் எனச் சுருக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு, உலகளாவிய சிக்கல்கள் ஆராயப்படவில்லை. ஏனெனில் நாட்டிற்கு நாடு இவை வேறுபட்டிருந்தாலும் அடிப்படைச் சிக்கல் என்பது உரிமை மறுக்கப்படுவதுதான். உலகளாவிய உரிமை மறுப்பின் காரணம் தமிழ்நாட்டில் தமிழரும் தமிழும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் உள்ளதுதான். தமிழ் உரிமை பெற்றாலேயே உலகச் சிக்கல்கள் தீர அந்த உரிமை நிலையே கலங்கரை விளக்கமாக அமையும். எனவே, அனைத்துச் சிக்கல்களுக்கும் மையச் சிக்கலான மொழி உரிமையின்மையும் இனக்காப்பின்மையும் இயம்பப்பட்டு இவற்றைப் பெறுவதற்கான சில வழிமுறைகள் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வழிமுறைகள் வெற்றி பெற வாழும் இடங்களில் எல்லாம் தமிழர்கள் அதிகார ஆளுமை பெற வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு அதிகாரப் பீடங்களில் தமிழர் சிறுபான்மையாக இருக்கும் பொழுது தமிழர்க்கு வாழ்வேது? வளமேது? தமிழ்நாட்டிலேயே தாழ்ச்சி என்றால் பிற பகுதிகளில் வீழ்ச்சியைத்தானே சந்திக்க இயலும்? தமிழரல்லாதவரும் தமிழ்ப் பகைவரும் தமிழ் உரிமைக்கு எங்ஙனம் குரல் கொடுப்பர்? தமிழ் நாட்டில் தலைமைப் பதவிகளிலும் அதற்கு அடுத்த நிலைகளிலும் தமிழர் மட்டுமே வீற்றிருக்க வகை செய்ய வேண்டும்.

உலகத் தமிழர்கள் எதிர்நோக்கும் எல்லாச் சிக்கல்களும் நம் செயல்பாடுகளை அல்லது செயல்பாடின்மையைச் சார்ந்தனவே! இவையோ நம் இன உணர்வைச் சார்ந்தனவே!-எனப் புரிந்து கொண்டு செயல்பட்டால் எல்லாம் வல்லவராக நாம் திகழலாம். தமிழ் வல்லவரை எதிர்நோக்கும் இமயமலைபோன்ற சிக்கலும் தவிடு பொடியாகும். ஆதலின் பின்வருவனவற்றை நினைவில் நிறுத்துவோம்! இனநலம் எல்லாப் புகழும் தரும் என்றும் இனநலம் ஏமாப்பு உடைத்து என்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் (குறள் 457 - 458) இனநலம் குறித்து வலியுறுத்தி இருந்தாலும் நாம் அதை நினைக்க மறந்தோம்! சிதைந்தோம்! இனநலம் ஒன்றையே எண்ணித் தாயகத் தமிழர்கள் செயல்பட்டார்கள் எனில் நமக்கு எதிராக எவனும் நெருங்க மாட்டான்! எமனும் நெருங்க மாட்டான்! எங்கும் இன்னல்! என்றும் அல்லல்!என வாழும் உலகத் தமிழர்கள் என்றென்றும் இன்பமே அடைய

இன ஒற்றுøமையைப் பேணுவோம்!

இன நலனைக் காப்போம்!

இடையூறுகளைக் களைவோம்!

இனிதே வாழ்வோம்!

--இலக்குவனார் திருவள்ளுவன்

7/1, மாவு ஆலை முதல் தெரு,

மயிலாப்பூர், சென்னை - 600 004.

பேசி: 9884481652 / 91 44 24985870

மின்வரி : thiru2050@gmail.com> / thiru2050@yahoo.co.in

---------------------------------------------------------------------------------------

மேற்கோள் கருத்துகள் கட்டுரையாளரின் பின் வரும் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை:

** செம்மொழி இதுவரையும் இனிமேலும்: புதிய பார்வை: அக்.1-15,2004: பக்கம் 13

## செம்மொழி அரசேற்பால் தமிழ் பெறும் பயன்கள் : உங்கள் குரல் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்: பக்கம் 83

++ செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குச் செய்ய வேண்டியன: ஆசியவியல் நிறுவனமும் நடுவண் அரசின் செம்மொழித் தமிழ் மேம்பாட்டு மையமும் இணைந்து நடத்திய செம்மொழித் தமிழ்-பன்னாட்டுக் கருத்தரங்கம்

ளூளூ தமிழ் இன்றும் என்றும் : திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் ஆறாவது கருத்தரங்கம்

னுனு தமிழ் : ஆட்சிமொழிச் செயலாக்கம் - ஓர் இனிய கனவு; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் - தமிழ் ஆட்சிமொழி : சிக்கல்களும் தீர்வுகளும் - கருத்தரங்கு ; 1996 நவம்பர் 3-5

Followers

Blog Archive