Showing posts with label பன்னீர்செல்வம். Show all posts
Showing posts with label பன்னீர்செல்வம். Show all posts

Friday, February 10, 2017

இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே! - இலக்குவனார் திருவள்ளுவன்





இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே!


 தமிழ்நாட்டரசின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்  தை 23, 2048 / பிப்பிரவரி 5, 2017  அன்று தன் முதல்வர் பதவியைவிட்டு விலகி மடல் அளித்துள்ளார். அன்றே  அ.தி.மு.க. சட்டமன்றக்கட்சியின் தலைவராக வி.கி.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய நாளில் தமிழ்நாட்டில்தான் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் இருந்துள்ளார். ஆனால், உடனே தில்லி பறந்துவிட்டார். மத்திய அதிகாரமையத்தால் மிரட்டப்பட்ட பன்னீர்செல்வம் கட்சியில் தான் மிரட்டப்பட்டதால் பதவி விலகியதாக அறிவித்தார். இதனால் தமிழ்நாடு குழப்பத்தைச் சந்தித்துள்ளது.
  பெரிய மாநிலமான தமிழ்நாட்டிற்கு முழுமையான ஆளுநரை அமர்த்தாத மத்திய அரசு, பொறுப்பு அலுவரையும் அவர் விருப்பில் செயல்படவில்லை என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அவர் உடனடியாகச் சென்னை வந்திருந்தால் பன்னீர்செல்வத்தின்  விலகலை ஏற்றதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு இணங்க வி.கி.சசிகலாவை முதல்வராகப் பொறுப்பேற்று அரசை அமைக்க அழைத்திருப்பார். அவ்வாறு அழைக்காத இடைவெளியில்தான், யாருடைய இயக்கத்திலோ ஆடும் பன்னீர்செல்வத்தின் நாடகம் அரங்கேறியுள்ளது.

  காலந்தாழ்ந்துவந்த ஆளுநர் இரு  தரப்பாரையும் சந்தித்துள்ளார்.  ஆனால், பதவி விலகலை ஆளுநர் ஏற்றபின்னர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதிலோ இசைவதிலோ விதிகளில்லை. அவர் மிரட்டப்பட்டதாகக் கூறியது கேட்டு அனைவரும் பொங்குகின்றனர். அவ்வாறு அவர் அவராக விலகல் மடல் அளித்திருக்காவிட்டால், ச.ம.உறுப்பினர்கள் தீர்மானம் இயற்றி அவரை நீக்கியிருப்பர். எனவே, மிரட்டல் என்பது கருதக்கூடிய செய்தியல்ல. மேலும்,  மிரட்டலுக்கு அடிபணிபவர் நாட்டின் உயர்ந்த பொறுப்பில் எவ்வாறு தற்சிந்தனையுடன் செயலாற்ற இயலும்?

  இருப்பினும் அவரை ஆட்சி யமைக்க அழைத்திருக்கலாம். அவ்வாறு அழைத்து  அவரால் பெரும்பான்மையை மெய்ப்பிக்க இயலாவிடில் அதே கட்சியைச் சேர்ந்த சசிகலாவை எவ்வாறு ஆட்சியமைக்க அழைக்க இயலும்? எனவே, அடுத்த பெரிய  கட்சியான - ஒரே வலிமையான எதிர்க்கட்சியான தி.மு.க.வைத்தான் ஆளுநர் அழைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். அதற்கான மனம் வருவதற்கான  காலம் கனியவில்லைபோலும்!
  அல்லது அவரை ஆட்சியமைக்க அழைக்கும் பொழுது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அ.தி.மு.க.அறிவித்தால்,  சட்டச்சிக்கல் ஏற்படும்.
  அல்லது அ.தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிற்கிணங்க வி.கி.சசிகலாவை அழைத்திருக்கலாம். அதுவே முறையுமாகும். அவர் ஆட்சியில் அமர்ந்தால், எதிர்ப்புகளைச் சமாளித்துவிடுவார் என்றும் தன் செயற்பாடுகளால் மக்களின் ஆதரவைப் பெற்று விடுவார் என்றும் பா.ச.க. அஞ்சியுள்ளது. எனவேதான் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தோன்றுகிறது.

 ஆளுநர் முடிவே இறுதியானது என்றும்  பா.ச.க. இதில் தலையிடவில்லை என்றும் பா.ச.க. அடிக்கடி அறிவித்தாலும்,  ஒருவரைத்தவிர, அனைத்துப் பா.ச.க.தலைவர்களும் சசிகலாவிற்கு எதிரான கருத்துகளையே கூறி வருகின்றனர். எனவே, சசிகலாவிற்கு ஆட்சிப்பொறுப்பு ஏற்கும் வாய்ப்பு தரக்கூடாது என்பதுதான் பா.ச.க.வின் உள்ளக்கிடக்கை.

 இந்தச் சூழலில் பொறுப்பு ஆளுநர், குடியரசுத்தலைவருக்கும்  தலைமையச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அறிக்கை அளித்துள்ளார் எனச் செய்தி வந்துள்ளது. இருவருக்கும் பெரும்பான்மை இல்லை, குழப்பமான சூழல் உள்ளது, எனவே, 6 மாதக்காலம்  சட்டமன்றத்தை இடைநிறுத்தம் செய்யலாம் என்று கருதினால்தான் அறிக்கை அனுப்ப வேண்டியிருக்கும்.  யாருக்கேனும் ஆட்சி யமைக்க இசைவு தருவதாயின் அறிக்கை தேவையில்லையே! இத்தகைய அறிக்கை தருவதற்குத்தான் உரிய அறிவுரைகளைப் பெறக்காலத்தாழ்ச்சி செய்தாரோ என்று அஞ்சவேண்டியுள்ளது.

  ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதை ஆளுங்கட்சியினர் உணர்ந்து ஒற்றுமை காக்க வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பான்மைச் சட்டமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்ப்பட்டவருக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்காமல்   பெரும்பான்மையை மெய்ப்பிக்கும் வாய்ப்பை யாருக்கும் வழங்காமல் மறைமுகமாகப் பா.ச.க. ஆட்சி நிலவ வழிவகுக்கும் எச்செயலிலும் பொறுப்பு ஆளுநர் செயல்படக்கூடாது. பா.ச.க.வும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.

 தாலின் முதலான தலைவர்கள் தெரிவித்துவருவதுபோல், தமிழ்நாட்டில் அமைதியான நிலையான ஆட்சி அமையவே ஆளுநரும்  மத்திய அரசும் முயலவேண்டும்.  தலைவர் ஒருவர் மறைந்தால் ஏற்படும் இயல்பான குழப்பத்தைப் பயன்படுத்திக் குளிர்காய  முயலக்கூடாது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள், 466)


-இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, December 20, 2016

பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று! – இலக்குவனார் திருவள்ளுவன்


பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று!

  மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆனால், முதலிரு முறையும் முதல்வர் என்ற பெயரில் இரண்டாமவராகத்தான் இருந்தார். இப்பொழுதுதான் உண்மையாகவே முதல்வராகவே பொறுப்பேற்றுள்ளார் எனலாம். எனவே, அவரது தனித்த செயல்பாடுகள் வெளிவருகின்றன.   ‘வருதா’ புயல் என்னும் பெரும் சூறைக்காற்றின் பொழுது எடுத்த நடவடிக்கையும், களத்திலிருந்து சிக்கல்களை எதிர்நோக்கி அலுவலர்களை ஒருங்குபடுத்தி ஆவன செய்தனவும் அனைத்துத் தரப்பாரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
  இப்பொழுது சிலர் சசிகலாவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். ஆனால், அவர் இதுவரை கட்சிப்பொறுப்பு குறித்தோ ஆட்சிப் பொறுப்பு குறித்தோ எதுவும் சொல்லவில்லை. அவரே இரண்டின் பொறுப்பையும்  ஏற்க வேண்டும் என்று கட்சியினர் விரும்புவதில் தவறில்லை. ஆனால், ஒரு வகையில் காலம்கடந்த செயலாகவும் மற்றொரு வகையில் காலத்திற்கு முந்தைய செயலாகவும் உள்ளது இம்முழக்கங்கள்.
  செயலலிதா இறந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை இடைக்கால முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கலாம் / அல்லது அமர்த்தியிருக்கலாம். (1969 இல்  அறிஞர் அண்ணா இறந்தபொழுதும் 1987இல் எம்ஞ்சியார் இறந்தபொழுதும் என) இரு முறை நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக இருந்தமையையும், குல்சாரிலால் நந்தா (1964இல் சவகர்லால் நேரு இறந்தபொழுதும் 1966இல்இலால் பகதூர் சாத்திரி இறந்தபொழுதும் என) இருமுறை இடைக்காலத் தலைமையமைச்சராக இருந்தமையையும்  முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அறிவர்.
  இம்முன் நிகழ்வுகள்போல், ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றிருப்பின் இப்பொழுது முதல்வர் பொறுப்பு குறித்துப் பேசுவதும் செயல்படுவதும் பொருத்தமாக இருக்கும். ஆனால், இடைக்கால முதல்வர் என்னும் நிலை வேண்டா என முடிவெடுத்து முதல்வராகப் பொறுப்பில் அமரச் செய்ததும் இப்பொழுது முதல்வர் பொறுப்பு குறித்துப் பேசுவது நிலையான ஆட்சிக்கும்  கட்சியின் ஒற்றுமைக்கும் உலை  வைக்கும்.
  செயலலிதா இருந்த பொழுதே சசிகலா சட்டமன்ற உறுப்பினராவதும் ஆட்சிப் பொறுப்பில்  பங்கேற்பதும் இயலாதன அல்ல. ஒரு வேளை பிறர் எழுதுவது போல், அப்பொழுது செயலலிதா  இவற்றுக்கு எதிரான நிலையில் இருந்திருந்தாலும் உடன்பிறவாத் தங்கை வற்புறுத்தியிருப்பின் மறுத்திருக்க மாட்டார். இத்தகைய பொறுப்புகள் உடன்பிறவாத் தமக்கையின் நலனைக் கவனிப்பதில் இருந்து விலகச் செய்துவிடும் என்பதாலேயே  விரும்பாமல் இருந்திருப்பார். எனவே, செயலலிதா மறைந்ததும் இடைக்கால முதல்வரைப் பொறுப்பேற்கச் செய்து பின்னர், இவரை முதல்வராகத் தேர்ந்து எடுத்திருக்கலாம். ஆனால், ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் பொறுப்பை வகிக்கும் சூழலில் இத்தகைய முழக்கங்கள் எழுவது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.
  அவரும் எப்பொழுது பதவி காலியாகும் என்ற எண்ணத்தில் முழு ஈடுபாடுகளிலிருந்து விலகலாம். பிறரும் இவர்தான் மாறப்போகிறாரே, வரப்போகிறவருக்குத் துதி பாடுவோம் என்று எண்ணி இவரை அலட்சியப்படுத்தலாம். அமைச்சர் பெருமக்கள் மட்டுமில்லாது அதிகாரிகள் மட்டத்திலும்  இந்நிலை தோன்றுவது  இயற்கையே. இதனால் அரசின் பணிகளில் சுணக்கமும் குழப்பமும் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. எனவே, அவர் முழுமையாகப் பணியில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும்.
  சசிகலா போட்டியிடுவதாக இருந்தால், பலர் பதவி விலக முன்வருவர் என்பதால், அவர் எப்பொழுதும்  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இயலும். எனவே,  இப்பொழுது  மேனாள் முதல்வர் செயலலிதா மறைவால் வெற்றிடமான இராதாகிருட்டிணன் நகர்த் தொகுதியில் போட்டியிடாமல் இருத்தல் நன்று. இதனால் இவர் முதல்வராவார் என ஊடகங்கள் கிளப்பும் புரளிகள் அடங்கும்.
  அதே நேரம் மத்தியில் ஆட்சியில் பங்கேற்கும் சூழல் வந்தால்,  ஓ.பன்னீர்செல்வத்திற்கு மூத்த அமைச்சர் பொறுப்பு கிடைக்கச்செய்து, அதனால் ஏற்படும் வெற்றிடத்தின்பொழுது சசிகலா முதல்வராகலாம்.  இத்தகைய பெருந்தன்மை சசிகலாவிற்குப் பெருமையையும் புகழையும் சேர்க்கும். எனவே, இப்போதைய புரளிகளுக்கு முற்றப்புள்ளி இடும் வகையில் அவர் பன்னீரே முதல்வராகத் தொடருவார் என அறிவிக்க வேண்டும்.
  ஒருவரிடம் ஒரு பொறுப்பை  ஆராய்ந்து ஒப்படைத்த பின்பு, அவரை அதற்குரியவராக முழுமையும் ஆக்குதல் வேண்டும். உரியவராக ஆக்குதல் என்றால் கட்டுப்பாட்டைத் திணிக்காமல் அவராகச் செயல்படும்வகையில் விட்டுவிட வேண்டும். இவ்வாறு தெய்வப்புலவர் திருவள்ளுவர் நமக்கு அறிவுரை  வழங்கியுள்ளார்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். (திருவள்ளுவர், திருக்குறள்:518)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 165,  மார்கழி 03, 2047 /  திசம்பர் 18, 2016

Followers

Blog Archive