குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்
குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு!
பதிப்பகங்கள், பணப்பெருக்கத்தை
நோக்கமாகக் கொண்டும் செயல்படலாம். எனினும் தொடக்கக்காலப் பதிப்பகங்கள்
இலக்கியப்பணிகளுக்கே முதன்மை யளித்தன. பழைய இலக்கியங்களையும் புதிய
இலக்கியங்களையும் புலவர்களையும் இலக்கியவாணர்களையும் கவிஞர்களையும்
கட்டுரையாளர்களையும் நூலாசிரியர்களையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவன
பதிப்பகங்களே! இலக்கியங்களின் தொடர்ச்சிக்குப் பாலமாகச் செயல்படுவன
பதிப்பகங்களே! அத்தகைய பதிப்பகங்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது
மணிவாசகர் பதிப்பகம். சீர்மிகு மணிவாசகர் பதிப்பகத்தில் ஒருவர் 40
ஆண்டுகளாகப் பணியாற்றுகின்றார் எனில், மிகச்சிறந்த இலக்கியத் தொண்டினைத்
தொய்வின்றி ஆற்றுவதாகத்தானே பொருள்! அததகைய அருந்திறலாளர் குணக்குன்றர் இராம.குருமூர்த்தி ஆவார்.
வை.இராமலிங்கம்,
இராம.திலகவிதி இணையரின் மூன்றாவது மகனாக வைகாசி 16, 1987 / மே 29, 1956
அன்று பிறந்தவர். தமையன்மார் இராம.சுந்தரவேலு, இராம.குமாரவேலு, தங்கையர்
வை.விசயராணி, ந.சாந்தா, இரா.சோதி ஆகியவர்களிடமும் அவர்கள்
குடும்பத்தினரிடமும் அன்பு கெழுமிய உறவை இன்றுவரை பேணி வருகிறார்.
இல்லறத்லைவி பண்பார் உமாஇராணி, மகள் வி.நருமதா, மருமகன் சி.விக்கிரம்,
பேரன் முகில், இளைய மகள் இரேணுகா என விரியும் தன் குடும்பத்தின்
அச்சாணியாகவும் திகழ்ந்து இல்லறக்கடமைகளில் சிறந்து விளங்குகிறார்.
இவருக்கு மற்றொரு குடும்பமும் உள்ளது. அதுதான் பதிப்புச்செம்மல்
மெய்யப்பனாரின் குடும்பம். மீனாட்சி மெய்யப்பனார், மக்கள், ச.மெ.மீனாட்சி
சோமசுந்தரம், திருவாட்டி மீனா ஆகியோருடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக
அன்புப்பிணைப்புடன் வாழ்ந்து வருகிறார்.
சிதம்பரம் ஆறுமுக நாவலர்
உயர்நிலைப்பள்ளியில், பள்ளிப்படிப்பிற்குப் பள்ளி இறுதிவகுப்புத்
தேர்ச்சியுடன் முற்றுப்புள்ளி இடவேண்டிய சூழல். எனினும் வாழ்க்கைக்
கல்வியைப் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனாரின் பதிப்பகத்தில் பெற்றார்;
பதிப்புக் கல்வியில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக அங்கே ஒளிவிட்டார்.
ஆவணி 09, 2006 / ஆக.25, 1975 அன்று
மணிவாசகர் பதிப்பகம் சென்னையில் கால் பதித்தது. அதன் முதன் மேலாளராகப்
பொறறுப்பேற்றார் இராம.குருமூர்த்தி. ஆனால் இன்று வரை தம் முதன்மைப்
பணிகளால் பதிப்பகப்பணிகளுடன் இணைத்துக்கொண்டு தடம் மாறாமல் வாழ்கிறார்.
பதிப்பகத்தின் உரிமையாளர் பதிப்புச்செம்மல் மெய்யப்பனாருக்கும் இவருக்கும்
இடையே உள்ள உறவு, முதலாளி-தொழிலாளி என்ற நிலையில் இல்லை. தந்தை மகன் உறவாக
நிலைத்தது. அவரே இவரைத் தம் வளர்ப்பு மகன் எனப் பலரறிய பாராட்டியுள்ளார்.
பணியாளர் என்றில்லாமல், பண்புடனும் பாங்குடனும் பணியாற்றியதால்தானே இந்தப்
பாராட்டிற்குரியவராகி யுள்ளார்.
பதிப்பியல்மணி குருமூர்த்தி. 2005இல் தமிழ், சங்க இலக்கியக் கட்டுரைகள் 2, சங்க இலக்கியச் சிந்தனைகள் (தொகுதி 2) முதலான 6 நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால், மணிவாசகர் பதிப்பகத்தின் பல நூல்களின் பதிப்புப்பணிகளில் இவரது பங்களிப்பும் உண்டு. நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள மணிவாசகர் பதிப்பகத்தின் ஒரு தலைமுறை கடந்த மேலாளராக இருப்பதால் பல தலைமுறை படைப்பாளிகளின் அறிமுகம் இவருக்கு உண்டு. அறிஞர்களும் கவிஞர்களும் இவரின் எளிமையால் கவரப்பட்டு இவருடனான நெருங்கிய தொடர்பை எப்பொழுதும் பேணி வருகின்றனர்.
பதிப்புப்பணிகளில்
மூழ்கியிருந்தாலும் மாலைப்பொழுதுகளில் இலக்கியத் தென்றல் வீசும்
கூட்டங்களில் பங்கேற்றுவிடுவார். எனவே, படைப்பாளர்கள் மட்டுமல்லாமல்,
படிப்பாளர்களும் இவரது நட்பு வட்டத்தில் பெருகி வருகின்றனர். இலக்கியக்
கூட்டங்களில் பெரிய நிறுவனத்தின் மேலாளர் என்றுஇல்லாமல் படப்பொறியுடன் வலம்
வந்து ஒளிப்படங்கள் எடுத்து உரியவர்களுக்குத தன்சொந்தச் செலவில் அவரவர்
உள்ள படங்களையும் அனுப்பி வைத்துவிடுவார்.
பழகுவதிலும் தோற்றத்திலும் உள்ள எளிமை
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (திருக்குறள் 124)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் நெறிக்கு எடுத்துக்காட்டாக இவரைத் திகழச்செய்கிறது.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (திருக்குறள் 783)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறும்
நெறிக்கேற்ப நூல்களோடு வாழும் இவருடன் ஒவ்வொருவரும் கொண்டுள்ள நட்பு,
பழகுதொறும் மகிழ்வு தரும் பண்புடைமையே இவரது தனிச்சிறப்பு.
எளிமை, அடக்கம், உற்றுழி உதவுதல், தோழமை பேணல், தன்னலம்பேணா உழைப்பு, நன்னெறியாள்கை, பண்பில் சிறத்தல் எனக் குணக்குன்றாக வாழும் குருமூர்த்தி மேலும் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி : இராம.குருமூர்த்தி – உமாராணி மணிவிழா மலர்
No comments:
Post a Comment