Showing posts with label technical terms. Show all posts
Showing posts with label technical terms. Show all posts

Sunday, October 11, 2015

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

thalaippu-thirukkuralilkalaichorkal

2

அரணறை – safety room
  ‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்றனர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை – safety room என்றே சொல்லலாம்.
 அதரி-valve
 ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும்-அசைவு இலா
ஊக்கம் உடையானுழை. (திருக்குறள் 594)
வால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர்.
 அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது.

ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1)
மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை : 218.5)
இதன் அடிப்படையில் பிற சொற்களைக் காட்டிலும் ஓரதர் என்பது வால்வு (valve) என்பதற்கு நெருங்கி வருகின்றது. எனினும் ஓரதர், ஈரதர் எனில், எண்ணிக்கையைக் குறிப்பதாக அமையும். எனவே அதரி என்றும் இருமுக அதரி என்றும் குறிப்பிடலாம்.
அதரி-valve
இருமுக அதரி-two port valve
இருமுனை அதரி-bicuspid valve
காப்பதரி-safety valve
குண்டதரி-ball valve
கோண அதரி-angle valve
போக்கதரி-exhaust valve
மாற்றதரி-by valve
மும்முக அதரி-three port valve
மும்முனை அதரி-tricuspid valve
வளிதொடுப்பதரி-air starting valve
வளியதரி-air valve
வளிவிடுஅதரி-air release valve
விழிப்பொலி அதரி-alarm valve
இவ்வாறு 400 வகையான அதரிகளையும் குறிப்பிடலாம்
 அஞர்-mental distress

கொடும் புருவம் கோடா மறைப்பின், நடுங்கு அஞர்
செய்யலமன், இவள் கண்(திருக்குறள் 1086)
வாராக்கால், துஞ்சா; வரின், துஞ்சா; ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண்(திருக்குறள் 1179)
சங்க இலக்கியங்களில் ‘அஞர்’ 33 இடங்களில் குறிக்கப்பெறுகிறது. மனத்துயரம் என்பதற்கான ஒற்றைக் கலைச்சொல்லாக இது விளங்குகின்றது.
இலக்குவனார் திருவள்ளுவன்



Friday, October 9, 2015

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

thalaippu-thirukkuralilkalaichorkal 

1

  இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள கலைச்சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
வாரி – source of income
  வருவாய் தொடர்பான சொற்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. இன்று நாம் வருவாய், வருமானம், ஈட்டம், எனப் பலச் சொற்களை revenue, income, proceeds   முதலான சொற்களுக்கு வரையறையின்றிப் பயன்படுத்தி வருகிறோம்.
  திருவள்ளுவர் வாரி (குறள் 14, 512), ஈட்டல் (குறள் 385), ஈட்டம்(குறள் 1003), ஆகாறு (குறள் 478), போகாறு (குறள் 478), ஆகிய சொற்களை வரவு செலவு தொடர்பாகப் பயன்படுத்தி உள்ளார்.
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை (குறள் 512)
  வாரி என்றால் ‘பொருள் வரும்வாயில்கள்’ என்கிறார் பரிமேலழகர். ‘பொருள் வருவதற்கு இடமானவை’ என்கிறார் மணக்குடவர். ‘பொருள் வருவாய்’ என்கிறார் தேவநேயப் பாவாணர். ‘பொருள்வரும் வழிகள்’ என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.
ஈட்டம் – collection of wealth / fund
இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு (குறள் 385)
  ஈட்டலும் – ‘அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும்’ என்கிறார் பரிமேலழகர்; ‘அவ்வருவாய்களின் வழி வந்த பொருள்களை ஓரிடத்துத் தொகுத்தலும்” என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்; ‘நாட்டில் கிடைக்கப் பெறாதனவற்றைக் கிடைக்குமிடங்களிலிருந்து சேர்த்தல்’ என்கிறார் சி.இலக்குவனார்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை (குறள் 1003)
  பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப்பாவாணர் முதலானோர் ஈட்டம் என்பதற்குப் பொருள் ஈட்டலையே குறிக்கின்றனர். பொருளை ஈட்டாமல் எங்ஙனம் பிறருக்கு வழங்க இயலும்? ஈட்டிய பொருளைத்தாமே குவித்து வைத்துக் கொண்டு பிறருக்கு ஈயாமல் இருப்பதைத்தானே தமிழ் நெறிகள் தவறென்கின்றன. ‘ஈட்டம் இவறி’ என்பதற்குப்பேராசிரியர் சி.இலக்குவனார், ‘சேர்த்து வைத்தல் ஒன்றையே கருதி’ எனக் குறிக்கிறார். எனவே, ஈட்டுதல் என்பது இயற்றலல்ல; திரட்டலே!
ஆகு ஆறு – way of income
போகுஆறு – way of expenditure
 ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை (குறள் 478)
  ஆகு ஆறு – ‘பொருள் வருகின்ற நெறியளவு’ என்கிறார் பரிமேலழகர்; ‘பொருள் வரும்வழி’ என்கிறார் மணக்குடவர்; ‘பொருள் வருவாயின் அளவு’ என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்; ‘பொருள்உண்டாகும்   வழி’ என்கிறார் சி. இலக்குவனார். போகுஆறு என்பதற்குப் பொருளினைச் செலவு செய்கின்ற விதம் அல்லது போகின்ற நெறிஅளவு என்றே அனைவரும் குறிக்கின்றனர்.
எழிலிnimbostratus
நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும், தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின். (திருக்குறள் 17)
  முகந்தபின் மேலெழுவது எழிலி என்கிறார் பாவாணர்.
  உயரங்களின் அடிப்படையில் பத்து அடுக்குகளாக முகில் கூட்டத்தை வகுத்துள்ளனர். அவற்றுள் தாழ்நிலையில் உள்ள முகில் வகை எழிலி. எழிலி என்னும் சொல்லை 33 இடங்களில் சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளனர். ஓரிடத்தில் (புறநானூறு 173.5-7) மழை என்னும் பொருளிலும், மற்றோர் இடத்தில் (அகநானூறு 43:1-8) கார்ப்பருவம் என்னும் பொருளிலும் இடம் பெற்றுள்ள இச்சொல், பிற இடங்களில் முகில் என்னும் பொருளில்தான் வந்துள்ளது
  ‘‘கீழ்க் கடலிலே சென்றிறங்கி நீரை முகந்தெழுந்து மேல்பாலேகி யாங்கும் இருளடையும்படி இருண்டு அணுத்திணிந்த இவ்வுலகம் அவ் விருளினின்று புலப்படுமாறு கருமகாரர் செம்பினாலே செய்த பானையைக் கடைந்தாற்போல மின்னி எங்கும் தனது பெய்யுந் தொழிலை மேற்கொண்ட இனிய இடி முழங்குதலாகிய குரலையுடைய மேகம் அங்ஙனம் பெய்யுந் தொழில் முடிந்தவுடன் எழுந்து தென்பாலேகி யொழிந்தாற்போல’’ என விளக்கம் தருகிறார் பின்னத்தூர் நாராயணசாமி (ஐயர்) அவர்கள். (நற்றிணை 153)
   ‘‘ஒலி முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலைக்குடித்து வலமாகவெழுந்து மலைகளை இருப்பிடமாகக்கொண்டு பெய்யுங் காலத்தே உலகத்தை வளைந்தெழுந்த கடிய செலவினை யுடைய மேகம்’’ என முல்லைப்பாட்டு உரையில் முன்னதாகவே நச்சினார்க்கினியரும் விளக்கியுள்ளார்.
  எனவே, கடல் மட்டத்தில் உருவாகக்கூடிய முகிலே எழிலி என்பதாகும். கடல் மட்டத்தில் உருவாகி எழுந்து மேலே செல்லும் முகிலிற்கு நிம்போசிராட்டசு-nimbostratus என 20ஆம் நூற்றாண்டில்தான் வகைப்படுத்திப் பெயரிட்டுள்ளனர் மேல்நாட்டார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் கண்டறிந்த எழில் என்பதற்கு nimbostratus என்ற வரைவிலக்கணமே சரியாகும்.
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்


Thursday, May 14, 2015

கலைச்சொல் தெளிவோம் 195 – 204(அறிவியல் துறைப் பெயர்கள்)


department_of_sciences04
  1. மரபு இயைபியல் genecology: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளர் இடர்த் தொடர்பாக ஆராயும் துறை:
  2. மரபு வழியியல் geneology: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிஆயும் துறை:
  3. புவி வேதியியல்geo chemistry: புவியின் வேதி இயைபை ஆராயும் துறை
  4. புவி வடிவ இயல்geodesy: புவி மேற்பரப்பை படமாக்குதல் , அளவிடுதல் ஆகியவை பற்றி ஆராயும் துறை
  5. புவியியல்geography: புவி மேற்பரப்பின் இயல்புகள், அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும் துறை
  6. புவி வளரியல் geology : புவி வரலாறு, வளர்ச்சி,   திணை உயிர்கள் ஆகியவற்றை ஆராயும் துறை
  7. புவி இயற்பியல் geo physics: புவியையும் அதன் காற்று வெளியையும் இயற்பியல் முறைகளில் ஆராயும் துறை
  8. மூப்பியல்gerontology: உயிரியல் தொகுதிகளில் மூப்பு முறைகளை ஆராயும் துறை
  9. மகளிர் நோயியல்gynaecology: பெண்கள் நோய்கள் பற்றி ஆராயும் துறை
  10. குருதியியல்haematology: குருதி அமைப்பு,   தோற்றம்,   வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயும் துறை
- இலக்குவனார் திருவள்ளுவன்


Followers

Blog Archive