Monday, January 9, 2017

கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 168,  மார்கழி 24,2047 / சனவரி 08, 201

கிரண்(பேடி)  – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா?
  துணைக்கண்டமாகத் திகழும்  இந்தியா என்பது அரசியல் யாப்பின்படி  இந்திய ஒன்றியம் என்றுதான்   அழைக்கப்பெற வேண்டும். பல்வேறு அரசுகளையும் தேசிய இனங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்ட அரசியல் நிலப்பகுதி என்பதால் இந்திய ஒன்றியம் எனப் பொருத்தமாக அமைத்து அழைத்துள்ளனர்.
  மத்திய ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரப் பசியாலும் தேசிய இனங்களைப் புறக்கணித்து ஒற்றை இனமாகக் காட்ட முயலும் போக்காலும், இந்தியா நடைமுறையில் ஒன்றிய அரசாகச் செயல்படவில்லை. இது குறித்துத் தேசிய இனங்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
  இந்தியா மக்களாட்சியை நடைமுறைப்படுத்தும் பல்வேறு மாநிலங்களை உருவாக்கினாலும் பண்பாட்டு மரபுகளைப் பேணவேண்டி சிறிய நிலப்பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டது. அவையே  இந்திய ஒன்றியப் பகுதிகளாகும்.   அவைதாம்,  அந்தமான் நிக்கோபார் தீவுகள்(Andaman and Nicobar Islands),இலட்சத்தீவுகள்(Lakshadweep),  சண்டிகார்(Chandigarh), தமன்-தையூ(Daman and Diu), தத்திரா – நகர்  அவேலி(Dadra and Nagar Haveli), புதுச்சேரி(Puducherry), தில்லி(Delhi)  ஆகியனவாகும்.
   இவற்றுள் புதுச்சேரியிலும் புதுதில்லியிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் சார்பாளர்களின் ஆட்சி நடைபெறுகிறது. எனவே, செயற்பாட்டாளர்(Administrator) மூலம் ஆட்சி  நடைபெறும் பிற ஒன்றியப்பகுதி்களையும் துணைநிலை ஆளுநர் மூலம் செயற்படுத்தப்படும் இவ்விரு மாநிலங்களின் ஆட்சிகளையும் வெவ்வேறு பார்வையில்தான் காண வேண்டும்.
  மாநிலத்திற்கு இணையான புதுச்சேரி, தில்லிப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சார்பாளர்களுக்கு முதல்வருக்கும் அமைச்சரவைக்கும் – முதன்மை அளித்து  இவற்றின்  துணைநிலை ஆளுநர்கள் செயல்பட வேண்டும். தேசியத்தலைநகர் பகுதி(National Capital Territory of Delhi)  என அழைக்கப்பெறும் தில்லியின் துணைநிலை ஆளுநர் மாநில அரசிற்கு எதிராக அடித்த கூத்துகளைக் கண்டித்து அதன் முதல்வர் அரவிந்து கெசுரிவால் (Arvind Kejriwal)பெரும் போராட்டம் நடத்தினார். மத்திய அரசின் எடுபிடியாகத் தொடர்ந்து இருக்க விரும்பாத அதன் ஆளுநர் நசீபு(சங்கு) (Najeeb Jung) மனச்சான்றிற்கு இடம் கொடுத்து விலகிவிட்டார்.
  ஆனால், புதுச்சேரியில் கிரண்(பேடி) துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல், மக்களாட்சி நெறிமுறைகளைக்  குழிதோண்டிப் புதைத்து வருகிறார்.
  மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் பாலமாக இருக்க வேண்டியவர் உருவாக்குவதோ அலங்கோலம்!
  இவர் இ.கா.ப. அலுவலராக இருந்தமையால் அதிகார ஆசை விடாமல் இருக்கி்ன்றார் போலும்!
  தத்திரா ஆட்சிச் செயற்பாட்டாளரும் இ.ஆ.ப.தான் ( மதுப்பு வியாசு / Madhup Vyas, I.A.S.)
    இலட்சத்தீவு ஆட்சிச்செயற்பாட்டாளரும் ஓய்வுபெற்ற இ.கா.ப. அலுவலர்தான்.(பரூக்கு கான் / Farooq Khan, I.P.S.) அவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளவில்லை.
  தில்லியில் இப்பொழுதும் இதுவரையும் இருந்த 25 துணைநிலை ஆளுநர்களில் நால்வர் இ.கு.ப. (I.C.S.), இருபதின்மர் இ.ஆ.ப. (I.A.S.) அலுவலர்களாக இருந்தவர்கள்தாம். மீதி ஒருவரும் படைத்துறைஅதிகாரி. பொதுவாக மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது சிக்கல் வராமல் இருந்திருக்கலாம் இ.ப்பொழுது புதுச்சேரியில் (தில்லியிலும்தான்) வெவ்வேறு கட்சி ஆட்சி இருப்பதால் இந்நிலை  என்றால்  ஆளுநர்கள் மத்தியஅரசின் ஏவலர்களாகச் செயல்படுகின்றனர் என்றுதானே பொருள்.
  மாநிலப்பேராயக் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததும் தில்லி சென்று வந்த கிரண்(பேடி) முன்னிலும்  தீரமாகத் தனது அதிகாரத்தைச் செயற்படுத்த முனைகிறார் என்றால், பா.ச.க.வின் ஏவுகணையாகச் செயல்படுகிறார் என்றுதானே பொருள்.
  அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அரசு ஊழியர்களிடம் நேரடித் தொடர்பு, மக்களிடம் நேரிடையான தொடர்பு கொண்டு, தானே எல்லாம், தனக்கே எல்லா அதிகாரமும் என்று செயல்பட்டால், தன்னுடைய அதிகாரப் பசிக்கு நாட்டை வேட்டையாடுகிறார் என நாட்டு நலனில் கருத்து கொண்டோர் கூறத்தானே செய்வர்!
  திறமையாலும் ஊடக வெளிச்சத்தினாலும் புகழுருபெற்ற கிரண்(பேடி), அதற்குக் களங்கம் நேரும் வகையில் நடந்து கொள்வதை உணரவில்லையா?
   ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்தியவர் கட்சி சார்பின்றி நடந்து கொண்ருந்தால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றிருப்பார். மதவெறிபிடித்த கட்சியில் சேர்ந்த பொழுதே இவரது பிம்பம் உடைந்தது.  இப்பொழுது தனக்கும் மக்களாட்சி  நெறிக்கும் கேடு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது முறைதானா?
  சிறை அதிகாரியாக இருந்து சிறைவாசிகளை நடத்தியதுபோல் மக்கள் சார்பாளர்களை நடத்தலாமா?
சிறைவாசிகளிடம் சீர்திருத்தச் செயற்பாடுகளை மேற்கொண்டதாகப் பேர் பெற்றவர் அமைச்சரவையை அடிமைபோல் நடத்தலாமா?
  நாட்டுநலன்  தொடர்பான உயரிய எண்ணம் எழுந்தது எனில், சிறந்த திட்டம் இருந்ததெனில், அவற்றை  முதல்வர் மூலம் அமைச்சரவையைத் தொடர்புகொண்டு செயற்படுத்துவதுதானே முறை!
  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  இருமுறை மத்திய அமைச்சராக இருந்தும் மும்முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தும் பட்டறிவு பெற்றவர். கிரண்பேடியோ அதிகாரியாக இருந்து ஆள்வோர் கட்டளைக்கிணங்கச் செயற்பட்டவர். கட்சிச்சார்பிலான பதவியில்  அமர்ந்துவிட்டாலே அவரைவிட வல்லவர் என்று பொருளல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதிகாரப் போட்டியை மறந்துவிட்டு இணைந்து செயல்பட்டால்தான் அவருக்கும் புதுச்சேரிக்கும் நல்லது என்பதை உணர வேண்டும்.
 கிரண்(பேடி)  கூறுவதுபோல் மாநில அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம்தான் மையம் கொண்டுள்ளது.  அவரது விருப்புரிமைப்படி நடந்துகொள்வதுற்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், விருப்புரிமை என்பது எப்பொழுது வரும்?  அதுவா? இதுவா? என மாறுபட்ட கருத்து வரும்பொழுது  எது என முடிவெடுக்கும் உரிமைதானே! தானாகவே “தடிஎடுத்தவன்தண்டல்காரன்” என்பதுபோல் தான் எண்ணுவதே  அதிகாரம் என்று பொருள்கொண்டு செயல்பட்டால் இந்திய அரசியல் யாப்பையே இழிவுபடுத்துவதாகத்தானே பொருள்!
 உண்மையிலேயே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்(பேடி)க்கு மக்களாட்சி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்ததெனில்,
  உண்மையிலேயே நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் எனில்
உண்மையிலேயே தன் பொறுப்பிலுள்ள புதுச்சேரி மாநிலத்தை முதலிடத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது எனில்,
  உண்மையிலேயே புதுச்சேரி மக்களை  உயர்ந்த இடத்தில் அமர வைக்க வேண்டும் எனற துடிப்பு இருந்தது  எனில்,
இவற்றுக்கான காலம் இனியும் இருக்கின்றது.  “மத்திய ஆட்சியின் ஏவலராகச் செயல்படாமல், புதுச்சேரி மாநிலக் காவரலாகச் செயல்படுவேன்” என்ற உறுதி கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியில் அமர்ந்துள்ள அமைச்சரவையுடன் ஒத்துழைத்து வழிகாட்டியும் வழி நடத்தியும் சிறப்பாகச் செயல்படட்டும்!
 புதுச்சேரி மக்கள் உணர்வுகளுடன் மோதி, அங்கிருந்து விரட்டப்படாமல்  நிலைத்து நிற்க  அதிகாரிகளுடனும் மக்களுடனுமான தொடர்புகளைத் துண்டித்துக்  கொள்ளட்டும்!
  புதுச்சேரியும் தில்லியும் தம் மாநில நலனுக்காகப் போராடிப் பிற மாநிலங்களும் இணைந்தால், மத்திய ஆட்சியும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதைப் பா.ச.க.வும் உணர வேண்டும்.
  அரசின் பணிகளால் சிறப்புற்ற கிரண்(பேடி) அம்மையாரே!
  ஆளுநர் பதவியிலும் சிறப்புற்று விளங்க உம்மை மாற்றிக்  கொள்வீர்களாக!
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (திருவள்ளுவர், திருக்குறள்  346)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 168,  மார்கழி 24, 2047 / சனவரி 08, 2017

Sunday, January 8, 2017

சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – இலக்குவனார் திருவள்ளுவன்



சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3)

அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும்

 மொழி பெயர்ப்பில் நாட்டம் உடையோர் குறைவாகவும் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டுநர்கள் அவர்களில் குறைவாகவும் உள்ளனர். அயலெழுத்தும் அயற்சொல்லும் இன்றி எழுத வேண்டும் என்னும் உணர்வும் தமிழ்வேட்பும் அற்ற தமிழ் முனைவர்களைத்தான் இக்காலக்கல்வி முறை உருவாக்கி உள்ளது. பிழையின்றி எழுதுநரையும் காண இயலவில்லை. எனவே, ஆய்வுத் துணைவரை நாடுவதில் பெரும் சிக்கல் எழுந்தது; சிலரைக்கருதிப்பார்த்து, எண்ணஓட்டமும் கருத்தோட்டமும் ஆய்வுநோக்கிற்கு ஒத்து வராமையால் கூடியவரை உடனிருந்து ஒத்துழைப்பவரையே நாடும் நிலைவந்தது. கணியச்சிலும் சிக்கல். முதலில் அச்சிட்டவர் சிந்து எழுத்துருவிலும் அடுத்து வந்தவர்கள் சிரீலிபியிலும் கணியச்சிட்டனர். நான் சன்டாமி என்னும் எழுத்துருவில் கணியச்சிட்டேன். செம்மொழிநிறுவனத்தில் இருந்து ஏரியல்யூனிகோடு என்னும் சீருருவில் கேட்ட மடல் ஆய்வு முடியும் தறுவாயில் வந்தது. எழுத்துரு மாற்றியின் மூலம் இச்சீருருவிற்குக் கொணர முற்பட்ட பொழுது பெருஞ்சிக்கல் எழுந்தது. நெடில்எழுத்துகளும் எகர ஒகரங்களும் ஒற்றெழுத்துகளும் சிதைந்து வந்தன. தொடக்கத்திலயே தெரிவித்திருப்பின் அதற்கேற்றவாறு தொடக்கத்திலிருந்தே கணியச்சிட்டு இருக்க முடியும்.  கணிணியிலும் குலைவு(virus) ஊறு நேர்ந்து மேலும் சிக்கல். புதிய கணிணி வாங்கி சிதைந்து வந்த இடங்களை மீளக் கணியச்சு இட வேண்டி வந்தது.  இவ்வாறான புறச்சிக்கல்கள் ஆய்வின் ஓட்டத்தைத் தடைசெய்வனவாக அமைந்தன.  அகச்சிக்கல்கள் மறுபுறம் ஆய்வின் சீரோட்டத்திற்கு அறைகூவலாக மாறின. கலைச்சொல்லாக்கம் என்பது இலக்கியச் சொல் விளக்கமாக அமைவதில்லை. அறிவியல் சொற்களை அறிந்தால்தான் அப்பொருளை உணர்த்தும் சங்கச்சொற்களை அடையாளம் காண இயலும். சில சொற்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகப்பொருள் விளக்கம் அளித்துள்ளனர். எது சரி என்பது புரியாத வகையில் அவை  அமைந்தன. பல்வேறு பொருள் அமைந்துள்ள சொற்களில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றிற்கு முதன்மை அளித்து விளக்கம் அளித்துள்ளனர். இணையத் தேடல் மூலம் தொடர்புடைய அனைத்தையும் அறிந்து உணர்ந்து கொள்ளக் காலம் மிகுதியாகியது. பல சொற்கள் அகராதிகளில் காணப்படுவதில்லை. அதே நேரம் வகைமைச்சொற்கள் என வகுத்து அளித்துள்ள கலைச் சொற்களில் கூடியவரை அவ்வகைப்பாட்டில் உள்ள அனைத்துச் சொற்களையும் தருவதே சிறப்பு என்பதே நோக்கமாகக் கொள்ளப்பட்டது. தேடித் தேடித் தேடிப் பார்த்துக் கலைச் சொற்கள் தரப்பட்டுள்ளன. இங்குள்ள வகைமைச் சொற்களை எந்த ஓர் அகராதியிலும் தொகுப்பாகக்காண  இயலாது. சிலவோ பலவோ அகராதிகளில் காண இயலும். ஆனால், ஒட்டு மொத்தமாகக் காண இயலாது. எனவே, பிறரால் சரி பார்க்கவும் கடினமான செயலாகும். ஆதலால்,  சரிபார்த்து வெளியிடுவதே சிறப்பு என்பது உணரப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரம் எழுதியதைச் சரி பார்க்க ஒரு கிழமைக்கு மேல் தேவைப்பட்டது. எனினும் தவறான பொருள் விளக்கம் அமைந்து விடக்கூடாது என்பதற்காகக் கூடுதல் கருத்து செலுத்தப்பட்டது. ஒரே சொல்லுக்கு அமையக்கூடிய வெவ்வேறு பொருளின்அடிப்படையில் மாறுபட்டக்கருத்தைக் கூறலாமே தவிரப் பொதுவாக அனைவரும் ஏற்கத்தக்கச் செவ்வையான பொருள்களே தரப்பட்டுள்ளன.
 அடிப்படைக் கொள்கைகள்
 எனவே இவ்வாய்வின் அடிப்படைக் கொள்கைகளாகப் பின்வருவன அமைகின்றன.
௧.) எளிமை
௨.) செம்மை
௩.) தூய்மை
எனவே, அயலெழுத்தோ அயற்சொல்லோ இடம் பெறாதவகையில் சங்கச் சொற்களைப் பயன்படுத்தி இயன்ற அளவு சொல்வளத்தை வெளிப்படுத்தி உள்ளது. அயலெழுத்துகளை நீக்கித் தமிழிலேயே குறிப்பிடும் பொழுது கேட்பதற்கு இனிமையாக இல்லை என்பர். ஆம்! அயற்  சொற்கள் நமக்கு இனிமை தராதுதான். அதை உணர அதனை  நம்  வரிவடிவில் எழுதவேண்டும். அப்பொழுதுதான் உரிய  ஒலி பெயர்ப்பு வடித்திற்கு மாற்றாகத் தமிழ்ச்  சொல்லைப் படைக்க வேண்டும் என்ற உணர்வு நமக்கு வரும். இனிமையின்மைக்குக் காரணம் அமிழ்தினிமினிய அன்னைத் தமிழன்று. அயலொலியே என்பதை உணர்ந்து அருந்தமிழிலேயே அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு நமக்கு வேண்டும்.  அதற்கு இவ்வாய்வும் துணைபுரியும்.
ஆய்வின் பயன்
 இலக்கியங்களிலும் பழமொழிகளிலும் உள்ள  சொற்கள் அடிப்படையில் கலைச்சொல் காண்பது  கலைச்சொல் பெருக்கத்திற்கு வழி கோலும். ஆனால், இவ்வாய்வு, சங்கஇலக்கியச்  சொற்களை  மட்டும் அடிப்படையாகக் கொண்டதே. சங்கச் சொற்களின் தொடர்ச்சியாகப் பல்வேறு சொல்லாக்க வளர்ச்சிகள்  காலந்தோறும் உருவாகிப் பிற  இலக்கியங்களில் உள்ளன. அவற்றையும் நாம் தொகுத்தால்தான் சொல்லாக்கத் தொகுப்பு முழுமையடையும். பல ஆய்வாளர்களைக் கொண்டு காலந்தோறும் உள்ள இலக்கியங்களின் அடிப்படையில் கலைச்சொல் தொகுப்பை ஒருங்கிணைத்துக் கண்டறிந்தால்தான் நம்மால் உண்மையான சொல்லாக்கத் தொகுப்பை உருவாக்க இயலும். அத்தகைய ஆய்விற்கு  இவ்வாய்வேடு தக்க துணையாக  இருக்கும்.
தன்னம்பிக்கை தரும்
   ஒரே சொல்லையே பல பொருள்களில் பயன்படுத்தும் வறட்சிப் போக்கினை மாற்ற  இவ்வாய்வு துணை நிற்கும். நம்மிடையே ஒவ்வொரு சூழலுக்கும்  ஏற்ற தனித்தனிக் கலைச் சொல் இருக்கும் பொழுது நாம் ஏன் ஒரே சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை  இவ்வாய்வு ஏற்படுத்தும். இதன் காரணமாகக் கலைச்சொல் வளம் விரிவடையும். சொல்பயன்பாட்டுக் குழப்பமும் நீங்கும். ஒரே சொல்லையே வெவ்வேறு  இடங்களில் கையாளுவதா என எண்ணி அயற் சொற்களைப்பயன்படுத்துவோர் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி இடும். நம்மிடம் இருக்கும் சொற்களையே பயன்படுத்தலாம் அல்லது அவற்றின் அடிப்படையில் புதுச்சொல் புனையலாம் என்னும் தன்னம்பிக்கையை  இவ்வாய்வு ஏற்படுத்தும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, January 2, 2017

தலைவர் கருணாநிதியும் இளைய தலைவர் தாலினும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர் கருணாநிதியும் இளைய தலைவர் தாலினும்

  பொருளாளர் என்ற பொறுப்பில் இருந்து தலைவர்போல் செயல்பட்டு வருகிறார் தாலின்.  இருப்பினும் அவர் தலைவராகவே ஆக வேண்டும் என்று அவரது அன்பர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அழகிரி போன்ற குடும்ப உறுப்பினர்களும் மூத்த தலைவர்களும் கலைஞர் கருணாநிதி இருக்கும் வரையில் தலைவர் அவர்தான் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
  இதற்கான காரணம், இளைஞர் அணி என்பதை, மகளிர் அணி, வழக்குரைஞர் அணி முதலான பிற 17 அணிகள்போல் கருதாமல் தனிக்கட்சிபோல் நடத்தியமைதான். அரசர்வீட்டுக் கன்றுக்குட்டியாகத் தாலின் இருந்தமையால் இளைஞர் அணி என்பது கட்சிக்குள் உட்கட்சியாகச் செயல்பட்டுப் பெரும் வளர்ச்சி பெற்றுவிட்டது. எனவேதான் அவரும், கிழவர் அணி எனப் பிறர் கேலி செய்தாலும்,  இதன் பொறுப்பை வேறு  யாருக்கும் கொடுக்க மனமில்லாமல் தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளார். அவரது தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக்கொண்டமையால் மூத்த தலைவர்களையும் புறந்தள்ள முடிகிறது. மூத்த தலைவர்களின் இளைய  தலைமுறையினர் இளைஞர் அணியில் இருப்பதால் அவர்களும் அமைதி காக்க வேண்டிய சூழல்.
  தாலின் படிப்படியாகத் திணிக்கப்பட்டவர்; அவரைப்போல் பாடுபட்ட பிற இளைஞர்கள் நிலை என்ன?; நெருக்கடி நிலையில் தாலின் துன்புற்றார் எனில்  நெருக்கடிநிலைச் சிறைக்கொடுமையால் உயிரிழந்த சிட்டிபாபு குடும்ப இளைஞர்களுக்கு ஏன் முதன்மை தரவில்லை; பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த பொழுது தன் மக்களைத் தலைமைச் செயலகம் வராது தடுத்து விட்டார்; ஆனால், இங்கே நேர்மாறாகத் தலைவரின் பிள்ளை  முடி சூட்டப்படுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த நிலைமை தவறு என்றால் தவறுதான். ஆனால், நடைமுறையில் குற்றமாகச்  சொல்லப்பட முடியாது.
  உலகெங்குமே தலைவர்களின் மனைவியர்கள், உடன்பிறந்தார், பிள்ளைகள் என உறவின் முறையினர் ஆட்சியில் அமர்த்தப்படுகின்றனர். இந்தியாவில் அடிமைத்தனத்தினால் இது மிகுதி்யாக உள்ளது. சவகர்லால் நேரு இதனைத் தொடக்கி வைத்தார். தான் கலந்து கொள்ளும் கட்சிக்கூட்டங்களிலும் அரசுக் கூட்டங்களிலும் அயல்நாட்டுத்தலைவர்கள் சந்திப்புகளிலும்தன் மகள் இந்திராவையும் பங்கேற்க வைத்தார். மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்பொழுது 1960இல் அ.இ.கா.கட்சியின் தலைவராக்கினார். அவரது பரம்பரை இன்றும் ஆட்சியில் அல்லது அரசியலில் கோலோச்சுகின்றனர். வட மாநிலங்களில் தகுதியை வளர்த்துக்கொள்ளாச் சூழலிலும் பரம்பரை அடிப்படையில் அரசியல் மரபுரிமையராகப் பலர் மாறியுள்ளனர். அவ்வாறிருக்க, தி.முக.வில் மட்டும் இவ்வாறு நடைபெறுவதைக் குற்றமாகக் கூறுவதில் பொருளில்லை. தி.மு.க.தலைவரின் ஒவ்வொரு பிள்ளையும் சம அளவில் உரிமையைக் கோருவதுதான் சிக்கலே தவிர, ஒப்பீட்டுஅடிப்படையில் இதனைக் குற்றமாகக் கூற இயலவில்லை.
  தி.மு.க.வின் அடுத்த தலைவர்களாக வளர்ந்தவர்களை விரட்டியடித்துவிட்டுத் தாலின் படிப்படியாகத் திணிக்கப்பட்டவராக இருக்கலாம். ஆனால் படிப்படியாகத் தன் பணியறிவையும் பட்டறிவையும் வளர்த்துக்  கொள்ளும் வாய்ப்பு பெற்றார்அதனைத் திறம்படப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லலாமே!
  படிப்படியாகத் தன் திறமையை வளர்த்துக் கொண்ட தாலின் தலைமைப்பதவிக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தலைவர் கலைஞர் இருக்கும்பொழுதே அவர் வரவேண்டுமான என அழகிரி முதலானவர்கள் கேட்பதும் முறையானதுதான்.
  ஒரு குடும்பத்தில் நலிந்த நிலையில் அதன் தலைவர் இருந்தாலும் குடும்பத்தினர் அவருக்குக் கட்டுப்படுவர். அவர் செயல்படா நிலையில் இருந்தாலும் எல்லார்க்கும் மேம்பட்ட குடும்பத்தலைவர் இருக்கிறார் என அமைதி காப்பர். ஆனால்,  அவர் இயற்கை எய்திவிட்டார் என்றால், குடுமிப்பிடிச்சண்டை வந்து விடுகிறது. குடும்பத்திற்கே அப்படிஎன்றால் கட்சிக்கும் அப்படித்தானே!
 சிலர் தாலின் துணைப்பொதுச்செயலர் அல்லது துணைத்தலைவராக அமர்த்தப்பட்டுப் பின்னர்த் தலைவராகலாம்  என்கின்றனர்.  தாலின் முன்னரே துணைப்பொதுச்செயலராக இருந்தவர்தான். பொருளாளர் என்னும் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருந்து விட்டு அவர் துணைப்பொறுப்பிற்கு மாற்றப்படுவது உயர்வாகாது.
  செயல்தலைவர் என்ற குரலும் வலிமையாகக் கேட்கப்படுகிறது. அப்படியானால், தலைவர் செயல்படாத் தலைவரா என்ற வினா எழுப்பப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 செயற்குழுத் தலைவர் என்பதுதான் அமைப்புகளில் உள்ள பொறுப்பு. இப்பொழுதே தலைவர்போல் செயல்படும்பொழுது செயல்தலைவர் எதற்கு?
 தலைவர் கருணாநிதி நினைவிழப்பிலும் செயல்பட இயலா நிலையிலும் இருப்பின், நெறியாளர் என்று புதிய பொறுப்பை ஏற்படுத்தி அதனை அவருக்கு வழங்கலாம். பேராசிரியர் க.அன்பழகன் தலைவராகப் பொறுப்பேற்கலாம். இச்சூழலில் தாலின்  பொதுச்செயலராக அமர்த்தப்படுவது சரியாக இருக்கும். பொருளாளர் பதவி மூத்த தலைவர் ஒருவருக்கு வழங்கப்படவேண்டும்.
  வந்தவழி எதுவாக இருப்பினும் இன்றைக்குத் தி.மு.க.வில் தொடக்க நிலையிலிருந்து மேல்நிலைவரையும் பாங்காய்ச் செயல்பட்டவர்; ஆட்சியிலும் அமைச்சராகவும் துணை அமைச்சராகவும் பல்வேறு துறைஆளுமைகளும் பெற்றவர்;  என்னும் நிலைப்பாட்டில் தாலின் ஒருவர்தான் உள்ளார்.
  மற்றொரு முதன்மையான காரணம் தாலின் கொலைகாரப் பேராய(க் காங்கிரசு)க்கட்சிக்கு எதிராக உள்ளார். சிலர், அழகிரி, கனிமொழி ஆகியோர் காங்.பக்கம் இருப்பதால் இவர் எதிராக உள்ளார் என்கின்றனர்.  காரணம் யாதாயினும் கொலைகாரக் காங்.கின் எதிர்ப்பாளர் என்ற முறையில் தாலினே தலைமைப் பொறுப்பிற்குத் தக்கவராகிறார்.
 பொம்மையாக இருந்து பொறுப்பிற்கு ஆசைப்படாமல் களப்பணிகளிலும் ஈடுபட்டுத் தகுதியையும் வளர்த்துவருவதால், தாலினை உயர்நிலைக்கு முன்நிறுத்துவதில் தவறில்லை.
  ஊடகங்கள் சிலவற்றில் தாலினைத் தலைவராக முன்னி்லைப்படுத்துவதன் நோக்கம் கலைஞரைத் தி.மு.க.வில் இருந்து விலக்க வேண்டும் என்ற நப்பாசையே!  நாம் நடுநிலையுடன் ஆராய்ந்து தாலினின் தகைமையை ஏற்கிறோம். ஆனால், பொறுமை காட்ட வேண்டிய செயல்களில் காலம் தாழ்த்துவதோ, காலம்தாழ்த்த வேண்டிய நேர்வுகளில் விரைவுகாட்டுவதோ தீங்கு தரும்.
 ஆக்கப் பொறுத்தவர் ஆறப்பொறுக்கலாமே!
தூங்குக தூங்கிச்செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.   (திருவள்ளுவர், திருக்குறள் 672)

– இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive