Wednesday, July 25, 2018

அடிமைத்தனத்தின் தொடக்கமல்ல! தொடர்ச்சியே எடப்பாடி அரசு! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

அடிமைத்தனத்தின் தொடக்கமல்ல!  

தொடர்ச்சியே எடப்பாடி அரசு!

  அனைத்துத் தரப்பாரும் ஒருமித்துத் தெரிவிக்கும் கருத்து எடப்பாடி க.பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும் பாசகவின் அடிமையாக இருக்கிறார்கள்; ஆட்சியைக் காப்பாற்ற அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; அடிமைத்தனத்தில் ஊறி மாநில உரிமைகளைக் காவு கொடுக்கிறார்கள் என்பனவே. ஆனால் எடப்பாடியார் மட்டுமல்ல, இதுவரையிலான தமிழக அரசுகள் மத்திய அடிமையாகத்தான் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இவரும் இவரது அமைச்சர்களும் பாசக அடிமையாக இருக்கிறார்கள என்பதுதான் உண்மை.
  இந்தியா, குடியரசான பின் தமிழ்நாட்டில் அமைந்தது காங்கிரசு ஆட்சி. மத்தியிலும் காங்கிரசு ஆட்சி.  பிற மாநிலங்களில் ஆட்சி செய்த காங்கிரசு  கட்சிகள் தத்தம் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசுடன் போராடி வெற்றி கண்டன. தமிழ் நாட்டுக் காங்கிரசு அரசோ அடிமைத்தனத்தில் ஊறி இருந்தது. எனவே தமிழ்நாட்டின் நில உரிமை, மொழி உரிமை, வாழ்வுரிமை எனப் பலவும் பறி போயின. இன்றைய காவிரியாற்றுச் சிக்கல், முல்லை-பெரியாற்றுச்சிக்கல் முதலான பலவற்றிற்குக் காரணமே அன்றைய காங்கிரசின் அடிமைத்தனத்தால் நாம் உரிமைகளை இழந்தமைதான்.
  1967 இல் காங்கிரசை விரட்டியடித்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க. தொடக்கத்தில் ஆட்சி புரிந்த பேரறிஞர் அண்ணா, மத்திய ஆட்சியுடன் இணக்கமும் பிணக்கமும் கொண்டு மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுக்கத் தவறவில்லை. அடுத்து முதன் முறையாக ஆட்சிப்பீடம் ஏறிய கலைஞர் கருணாநிதியும் இந்தப் பாதையில்தான் நடை போட்டார். எனவேதான் தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி கேட்டுப்போராடினார். 27.08.1970 இல் தில்லியில்  செய்தியாளர்கள் முன்னிலையில், தமிழக அரசின் கொடி எப்படி இருக்கும் என்றும்  அறிமுகப்படுத்தினார்.
 ஆனால்,  இவரது ஆட்சிக்காலத்தில்தான் அப்போதைய மத்திய அரசு, மாநில அதிகாரப் பட்டியலில் (State List) இருந்த கல்வித் துறையை நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் உரிமையுடைய பொது அதிகாரப் பட்டியலுக்கு (Concurrent List)   03.01.1976இல் மாற்றிவிட்டது. கல்விச்சாலைகளில் இந்தித்திணிப்பு, நீட்டு தேர்வு எனப்படும் பொதுத்தேர்வுக் கொடுமை போன்றவற்றிற்கு மூல வித்தே இதுதான்.
  இவ்வாறு மெல்ல மெல்ல மாநில உரிமைகள் பறிபோகும் பொழுது அதிக அளவில் கலைஞர் கருணாநிதி கிளர்ந்தெழவில்லை; “மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என முழங்கி வந்தாலும் மத்திய அரசை  இணங்கச்செய்ய நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அடிமைத்தனத்தையும் கைவிடவில்லை. ஆட்சிக்காலங்களில் இவரின் அடிமைத்தனங்களுக்குச் சான்றுகளே காவிரியாறு தொடர்பான வழக்கைத் திரும்பப் பெற்றமை, கச்சத்தீவைப் பறி கொடுத்தமை ஆகியன.
 பொதுவாக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது தமிழனாகவும் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது இந்தியனாகவும் காட்டிக்கொள்ளும் இவரின் போக்கே இவற்றிற்குக் காரணம்.  அதுவும் நெருக்கடி நிலைக்குப் பின்னர் ஆட்சி கலைக்கப்பட்டதால் தன் குரலுக்கு வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டார் என்றே சொல்லலாம். புரட்சித்தலைவர் எம்ஞ்சியாருக்குப் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பொழுது பேச்சால் தன்மானமிக்கவராகவும் செயலில் மத்திய அடிமையாகவும் நடந்துகொண்டார்.
  புரட்சித்தலைவர் எம்ஞ்சியார், புரட்சித்தலைவி செயலலிதா ஆகியோரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து சிலவற்றைச் சாதித்துக் கொண்டாலும் அடிமையாகத்தான் இருந்தனர். மேதகு பிரபாகரனுக்குப் பணஉதவி  அளிப்பதாகக் கூறி இராசீவு தராமல் போனபொழுது புரட்சித்தலைவர் எம்ஞ்சியார் அத்தொகையான 4 கோடி உரூபாயைத் தன் சொந்தப் பணத்திலிருந்து வழங்கினார். ஆனால், பிரபாகரன் மீது இராசீவு நடவடிக்கை எடுத்தபொழுதும் எடுக்கச் செய்தபொழுதும் அடிபணிந்துதான் போனார்.
  இலங்கைத் தமிழறிஞர்கள் தமிழகத்தில் நடைபெறும் மாநாடுகளுக்குத் தமிழக ஆட்சியாளர்கள் தடை விதித்ததன் காரணமும் மத்தியஆட்சியின் அடிமைத்தனமே!  இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களைக் கடுஞ்சிறையில் வைப்பதுபோல் மாறிமாறி வரும் தமிழக அரசுள் நடத்துவதும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடே!
 மேதகு பிரபாகரனின் தாயாரை மருத்துவத்திற்காக வரவிடாமல் செய்தது, ஈழத்தமிழர்கள் பெறவிரும்பிய கல்வி, மருத்துவ உதவிகளைத் தடுத்தது முதலான பலவும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடன்றி வேறென்ன? ஈழத்தில் பேரளவில் இனப்படுகொலைகள் நடந்தபொழுது  போலி உண்ணாநோன்பு இருந்து அதையும் நிறுத்தியது அடிமை உணர்வு மேலோங்கியதால்தானே!
  தமிழ்மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறைவேற்றும் பெரும் செயல்களில் மட்டுமல்ல, பெயர் சூட்டலில்கூட அடிமைத்தனத்தில் அமைதிகாக்கின்றனர் என்பதைப் பார்த்தால் வேறு நாம் பார்க்க வேண்டியதில்லை.
  1953 இல்,  தால்மியாவின் தொழிற்சாலை அமைந்த பகுதிக்குத் தால்மியாபுரம் என வடநாட்டான் பெயரைச் சூட்டுவதற்கு  எதிர்ப்பாகத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தவர் எனப் பெருமைப்படுத்தப்படுபர் கலைஞர் கருணாநிதி. (இதை அருகிலுள்ள ஊரான கல்லக்குடி பெயரில் அழைக்க வேண்டும் எனப் போராடி இறுதியில் 1969 இல் கல்லக்குடி பழங்காநத்தம் எனப் பெயர் சூட்டப்பட்டது.) ஓர் ஊரின் பெயரே வட நாட்டான்பெயரில் இருக்கக்கூடாது என்ற கலைஞரின் ஆட்சியில்தான் எண்ணற்ற குடியிருப்புகள்  இந்திராகாந்தி பெயரிலும் இந்திப்பெயரிலும் அமைக்கப்பட்டன. தாய்சேய் நல மையங்கள்கூட அங்கன்வாடி என்ற பெயரில் தொடங்கப்பெற்றவை இன்றும் அப்பெயரில்தான அழைக்கப்படுகின்றன.
இவரைத் தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்சிஆர் ஆட்சியில்
இந்திரா அவாசு யோசனா(1985),
செயலலிதா ஆட்சியில்
பிரதம மந்திரி ரோசகர் யோசனா(1993),
கசுதூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (2004 ),
பாரத்து நிர்மாண்(2005),
சனனி சுரட்சா யோசனா (2005),
இராசீவு காந்தி கிராமீன் வித்யூதிகரன் யோசனா (2005),
எனப் பல திட்டங்கள் தமிழைத் தொலைத்துவிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. “எங்கும் தமிழ்” என்பது  வெற்றுப்பேச்சாக  மாறியதன் விளைவு அடிமைத்தனத்தின் மற்றுமோர் அடையாளம் அல்லவா?
 மத்திய அரசின் திட்டங்களின் பெயர்கள், துறை முழக்கங்கள் யாவும் இந்தி அல்லது இந்திமயமாக்கப்பட்ட சமற்கிருதப்பெயர்கள்தாமே!  இதை எதிர்க்கும் துணிவற்ற அடிமைகள்தாமே நம் ஆட்சியாளர்கள். அவ்வாறிருக்க  இப்போது மட்டும் அடிமைத்தனத்தைக் குறைகூறி என்ன பயன்?
  பன்னீர் செல்வம் அடிமை ஒப்பந்தத்தால்தான் முதலமைச்சரானார். எடப்பாடி க.பழனிச்சாமி அடிமையாக இராவிட்டால் போகப்போவது அவரது ஆட்சி மட்டுமல்ல  அதிமுக ஆட்சியும்தான். பா.ச.க. விரும்புவதுபோல் சசிகலா குடும்பத்தினர் அகற்றப்பட்டால் மாவீரனாகக் காட்டிக்கொள்ளலாம். அம்முயற்சியில் தோல்வியுற்றால், கட்சியைக் காப்பாற்ற  வேறுவழியின்றி இவ்வாறு நடந்துகொண்டதாகப் பூசி மெழுகலாம். எவ்வாறிருப்பினும் இன்றைய அதிமுகவின் சூழலில் அடிமையால் மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும். எனவே, வழி வழி அடிமைத்தனத்தில் நடை போடுபவர்களைப் புதியதாக அடிமைப்பாதையில் செல்வதுபோல் கூறுவது சரியல்ல.
  மக்கள் அடிமைத்தனத்தில் ஊறி இருப்பதால் ஆட்சியாளர்களும் மத்திய ஆட்சியின் அடிமையர்களாக உள்ளனர். நாம் உரிமை உணர்வு பெற்றால் மட்டுமே ஆட்சியாளர்களும் உரிமை உணர்வுடன் விளங்குவர் என்பதை நாம்புரிந்து கொண்டு தன்மானத்துடன் வாழ்ந்தால்தான்  நாட்டிற்கு விடிவு கிடைக்கும். அதுவரை அடிமையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை அடிமைகள் என்று சொல்லிப் பயனில்லை

– இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, July 22, 2018

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி!

  நாடாளுமன்றத்தில் நரேந்திர(மோடியின்) பாசக அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மாநிலத் தன்னாட்சி எழுச்சிஅடிப்படையில் வெற்றியே கிட்டியிருக்கிறது.
  “நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலான விளையாட்டு அல்ல; மத்திய அரசின் தோல்விகளை மக்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும்” என்று  முன்னமே பேராயக்கட்சி(காங்கிரசின்) மூத்தத் தலைவர் ஆனந்து (சருமா)தெரிவித்திருக்கிறார். அப்படியானால் தீர்மானம் அடிப்படையில் உரையாற்றிய எதிர்க்கட்சிகள் மத்திய ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த அளவில் இது வெற்றிதானே!
  பாசகவின் தேதிய மக்கள்நாயகக் கூட்டணியில் இணைந்திருந்த தெலுங்கு தேசக்கட்சி தன் மாநிலமான ஆந்திராவிற்குச் சிறப்புத் தகுதி தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றே கூட்டணியில் இருந்து விலகியது; நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவந்தது. அவ்வாறு கொண்டு வந்த தெலுங்கு தேசக் கட்சி இந்திய அளவிலான சிக்கல்களையும்  போதிய அளவில் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் மாநில நலன்பற்றியே பேசியுள்ளமையால் மாநில நலன்கள் இந்திய அளவில் முதன்மை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத் தன்னாட்சியின் எழுச்சிக்கான வெற்றியாக இதைக் கருதலாம்.
  மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர் இடங்கள் உள்ளன. இவற்றுள் 11 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சிய 534 பேர் கொண்ட அவையில் அவைத்தலைவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டார். எனவே 533  உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், பாசகவிற்கு ஆதரவான சிவசேனா, பிசு சனதா தள உறுப்பினர்களே வாக்கெடுப்பைப் புறக்கணித்ததால் 451 உறுப்பினர்கள்தாம் இருந்தனர். இதுவே பாசகவின் சரிவு நிலையை உலகிற்கு உணர்த்தி விட்டது. அதிகாரத்தில் உள்ளதால் வெற்றியைக் காத்துக் கொண்டதே தவிர உண்மையில் பாசக செல்வாக்கு கரைந்து கொண்டுள்ளது என்னும் உண்மையை வெளிப்படுததியதில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுவிட்டது.
  தெ.தே. நா.உ. செயதேவு(கல்லா) கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரப்பகுப்பே நடுநிலை தவறியதாக உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்த தெலுங்குதேசம் கட்சிக்கு 13 நிமையங்கள் ஒதுக்கப்பட்டன. தீர்மானத்திற்கு ஆதரவான  காங்கிரசிற்கு 38 நிமையங்களும் திரிணாமூல் காங்கிரசுக்கு 15 நிமையங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் பாசக ஆதரவுக் கட்சியான அதிமுகவுக்கு 29 நிமையங்கள் ஒதுக்கப்பட்டன.  ஆளும் கட்சியான பாசகவுக்கு 3 மணி நேரம் 33 நிமையங்கள்  ஒதுக்கப்பட்டன. பெரும்பான்மை எண்ணிக்கையில் அதிகாரத்தில் இருந்தபொழுதும் பாசகவிற்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கிலியை ஏற்படுத்தியுள்ளது புரிகிறது. அந்த அளவில் தீர்மானம் வெற்றிதான். ஆட்சி நிலைப்பிற்காக அடிமையாக இருக்கவேண்டிய கட்டாயச் சூழல் அதிமுகவிற்கு. இருப்பினும் அதிமுக உறுப்பினர்கள் பாசக அரசிற்கு எதிராகவே உரையாற்றினர். எனவே வாக்கெடுப்பில் பாசகவிற்கு ஆதரவாக வாக்களித்தாலும் வாக்குரையில் எதிராக இருந்தமை தீர்மானத்திற்கு வெற்றிதானே!
  அதிமுக மக்களவைக் குழு தலைவர் வேணுகோபால்  “மத்திய அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் இந்த அரசைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்” என எச்சரித்ததும் அதிமுக நா.உ.செயவர்தன் மாநிலக் கோரிக்கைளை முன் வைத்ததும் பாசகவின் செயல்பாடின்மையை வெளிப்படுத்திய அளவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வெற்றிதான்.
  “சொந்தக் கட்சியினரே இந்த ஆட்சியை விரும்பவில்லை”  என்னும் உண்மையை உலகறிய சமாசுவாதிததலைவர் முலாயம்(சிங்கு யாதவு) பதிந்துள்ளதும் தீர்மானத்திற்கு வெற்றிதான்.
  காசுமீர் முன்னாள் முதல்வர் பரூக்கு அப்துல்லா. திரிணாமுல் காங்கிரசு நா.உ.சுகதாராய்., நா.உ. தினேசு திரிவேதிஆம்ஆத்மி நா.உ. பகவந்துமான்எனப் பிறரின் பாசக குறித்த உரைகள் நாட்டுமக்கள் உணர்வை மக்களுக்கு வெளிப்படுத்திய அளவில் வெற்றிதான்.
  இராகுல்(காந்தி) தன் உரையை முடித்ததும் நரேந்திரரைச் சென்று தழுவியதைக் குறையாகக் கூறுகின்றனர் ஆளுங்கட்சியினர். அடுத்தவர் உரையாற்றும் பொழுது அவர் செல்லவில்லை. தன் உரையை முடிக்கும் தறுவாயில்தான் அவர் இருக்கைக்குச் சென்றுள்ளார். திடீர்த் திட்டமிட்டு பாக்கித்தான் சென்று அந்நாட்டுத் தலைமையமைச்சரைக் கட்டித்தழுவிய நரேந்திர(மோடியின்) செயலைப் பாராட்டியவர்கள் இதைக் குறை சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அவரது உரையும் பேசும் பாங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது; பாசகவிற்கு எதிரான தலைமையானது இராகுல் அல்லது காங்கிரசு அல்லாத் தலைமை என்ற முயற்சிக்கு எதிராகத் திருப்பி விடும் வகையில் இருந்தது.
  அதிவீரராம பாண்டிய மன்னன் வெற்றிவேற்கை என்னும் இலக்கியத்தில்,
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே; மெய்போலும்மே
 எனப் பொய்யர்கள்பற்றிக் கூறியிருக்கிறார். அதற்குச் சான்றாகத் தலைமையமைச்சர் நரேந்திர(மோடியின்) மறுமொழி உரை அமைந்தது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதலைவர் அல்லர். அவ்வாறிருக்க 125 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை அகற்ற யாருக்கும் உரிமை இல்லை என்று பேசி, அனைத்து மக்கள் தலைவராகப் பொய்வேடமிடுவது தவறு. அவர் பேச்சு முறை சிறப்பாக இருந்தது. ஆனால், பேச்சில் உண்மையின்மையால் சிறப்பான உரையாக அமையவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குச் சரியாக மறுமொழி அளிக்க இயலாமல் சமாளிப்பில்  நேரம் கடத்தியதும் நம்பிக்கை யில்லாத் தீர்மானத்திற்கு வெற்றிதான்.
  நான்காண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு 19 நாள் மட்டும் வருகை தந்து சில மணிநேரம் மட்டுமே தலை காட்டியவர் உலகம் சுற்றும் நரேந்திர(மோடி). அவரை நாள் முழுவதும் அவையில் இருக்கச் செய்ததே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றிதானே!
  தன் செல்வாக்கு தேய்வதைப் பாசக உணர்ந்து தன் மக்கள்நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டால் அதற்கும் வெற்றியாக அமையும்.
  ஆனால், இந்திய அளவிலான எக்கட்சியாயினும் அக்கட்சி தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் எதிராகத்தான் நடந்து கொள்கின்றன. இதை எதிர்த்துத் தமிழகக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதில்லை. ஆந்திர மாநில நலன்களுக்காகத் தெலுங்கு தேசம் குரல் கொடுத்த இந்நிகழ்வைப்பார்த்த பின்னராவது தமிழகக் கட்சிகள் மனம் மாறினால் நமக்கு இது வெற்றிதான்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (திருவள்ளுவர், திருக்குறள் 505)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Tuesday, July 17, 2018

செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் !

   சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள்  அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல்  போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில  நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்.
  புரட்சித்தலைவர் எம்ஞ்சியார்,  திமுகவிலிருந்து தான் விலக்கப்படக் காரணமானவர்களை எல்லாம் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு கலைஞர் கருணாநிதியின் துணைக் கூட்டத்தைப் பிரிக்கச் செய்தார். அவர் ஒருவரை மட்டும் எதிரியாகக் கொண்டு அவர் கூட்டத்தைப் பிரிப்பதிலும் தன் கூட்டத்தில் சேர்ப்பதிலும்  வெற்றி கண்டார்.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு (திருவள்ளுவர், திருக்குறள் 633)
என்பதற்கு இலக்கணமாகப் புரட்சித்தலைவர் திகழ்ந்ததுபோல் எடப்பாடி க.பழனிச்சாமியும் செயல்படுகிறார். தான் முதல்வராகக் காரணமான சசிகலாவிடமிருந்து அவர்பக்கமே நின்றிருந்த தலைவர்களையும் அமைப்புப் பொறுப்பாளர்களையும் தன் பக்கம் ஈர்ப்பதில் வெற்றி கண்டு வருகிறார்.
  புரட்சித்தலைவி செயலலிதாவும் இவ்வாறு நடந்துகொண்டாரே எனில், அவற்றுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் சசிகலா குடும்பத்தினரே!
  புரட்சித்தலைவி செயலலிதா பெரும்பாலும் சசிகலா குடும்பத்தார் சொற்படியும் சிறுபான்மை தன் வகுப்பு சார்ந்த குழுவினர் சொற்படியும்தான் நடந்துள்ளார் என நிகழ்வுகள் உணர்த்துகின்றன. தன் தாயாயும் தோழியாயும் உற்ற உடன்பிறப்பாயும் நல்லதொரு வாழ்க்கைத் துணையாகவும் இருந்த சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றியதில் இருந்தே அவர் தற்சிந்தனை அற்றவர் என்பது புரிகின்றது. வேறு சான்று எதுவும் தேவையில்லை.
 அமைதியை விரும்பும் நாட்டில்,   நாட்டை ஆளும் தலைவர்கள் மறைந்தால் மாற்று ஏற்பாடு செய்த பின்னரே அம் மறைவைத்  தெரிவிப்பர். செயலலிதா எதிர் நோக்கும் வழக்கில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என மறு கோணத்தையும் ஆராய்ந்த சசிகலா குடும்பத்தினர் மாற்று ஏற்பாடு குறித்துச் சிந்தித்துள்ளனர். இவ்வழக்கில் தனக்குத் தண்டனையே கிடைக்காது என எப்படிச் செயலலிதா நம்பினார் எனத்  தெரியவில்லை.
  தண்டனையே கிடைக்காது என்று நம்புபவரிடம் எப்படி மாற்று ஏற்பாடு குறித்துத் தெரிவிப்பது என எண்ணினார்களோ என்று தெரியவில்லை. ஆனால், அவ்வாறு  தெரிவிக்காததுதான் சசிகலா குடும்பத்தினர் செய்த  பெருந்தவறு. எனவே, மாற்று ஏற்பாட்டுச் சிந்தனையைச் செயலலிதாவைச் சிறையில் தள்ளவும் ஆட்சியைப் பறிக்கவும் போட்ட சதியாகத் திரித்துக் கூற முடிந்தது. தற்சிந்தனை அற்ற செயலலிதாவும் அதற்கேற்பவே நடவடிக்கை எடுத்துள்ளார்.
  செயலலிதாவின் அரச வன்முறைச் செயல்களைத் துணிவு எனப் புகழ்பாடிகள் புகழ்ந்ததை நம்பியதும்கூட அவரின் தற்சிந்தனையற்ற போக்கிற்கு எடுத்துக்காட்டாகும்.
 முதல்வர் அருகில் உள்ள அமைச்சர்கள் உதிர்க்கும் முத்துகளைப் பார்த்தால் அவர்கள் வழிகாட்டும் திறனற்றவா்களாகவே தெரிகின்றனர். வழிகாட்டும் வல்லமை உள்ள செங்கோட்டையன் போன்றோர் தன்  இடத்தை நிரப்பக் காத்திருப்பவர்களாக எண்ணுவதால் அவர்களிடமும் கேட்பதாகத் தெரியவில்லை.  ஆனால், எடப்பாடியார் அதிகாரிகள், நண்பர்கள் கருத்தறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக உள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பொதுமக்கள் என்ற வேறுபாடின்றிக் காட்சிக்கு எளியராக அனைவரும் சந்திப்பதற்கு இடம் தரும் எளிமையை எடப்பாடியார் பின்பற்றுகிறார். அவர் தலைவியிடம் இல்லாத அரும் பண்பு இது.
  பாசகவிற்கு எதிராகக் குரல் கொடுக்க முடிவெடுப்பது அரசியல் தந்திரமாக இருந்தாலும் உரிமை உணர்வாக இருந்தாலும் பாராட்டத்தக்கதே!
  பாசகவின் ஆதரவால்தான் பழனிச்சாமி தாக்கு பிடிக்கிறார் என்றால் அதே ஆதரவு கொண்டிருந்த பன்னீர்செல்வத்தால் தாக்கு பிடிக்க முடியவில்லையே! ஆட்சி இன்றுகவிழும், நாளை கவிழும் என்று ஆருடம் சொல்பவர்கள் முகத்தில் கரி பூசும்வண்ணம் தொடர்ந்து ஆட்சித்தேரை இழுத்துச் செல்கிறாரே!
  ஆட்சித்திறனில் சிறந்து விளங்கும் முதல்வர் இன்றைய சூழலை உணர்ந்து கொண்டு வழக்குகளின் முடிவுகளில் ஆட்சி இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கு முடிவுகள் எதிராக இருந்தால் மேல் முறையீடு செய்து காலத்தை ஓட்டி ஆட்சியை நடத்தலாம் என எண்ணக்கூடாது. ஒரு வேளை மாறான தீர்ப்பிற்கு இடையூறு இல்லாத வகையில் மேல் முறையீட்டிற்கு இசைவளித்தால் துன்பம்தான். பா.ச.க. தேர்தல் நேரத்தில் தன் பிடியில் ஆட்சி இருப்பதையே விரும்பும். எனவே ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத்தலைவர் ஆட்சி என்ற பெயரில் பொம்மை ஆட்சியைத் திணிக்க விரும்பும். இதனால் எதிர்க்கட்சிகளை விட இவருக்கும் இவர்  ஆதரவாளர்களுக்குமே துன்பம் மிகுதியாகும். மக்கள் ஆதரவு இவரை விடத் தினகரனுக்குத்தான் மிகுதி என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தேர்தல் வந்தால் மக்களிடம் நற்பெயர் பெற நல்லன சில ஆற்ற வேண்டும்.
எனவே, வினைத்திறம் மிக்க முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி பின்வருமாறு செயல்பட்டுப் புகழ் பெறவேண்டும்.
  1. மூன்றாண்டு முனைப்புத்திட்டம் ஒன்றை அறிவித்து ஆங்கில வழிப்பள்ளிகளை மூட வேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ்மொழி,  கல்வி மொழியாக இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  1. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் வழிபாடு கட்டாயம் என்பதை நிலை நாட்ட வேண்டும்.
  1. இராசீவு காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு அளவுகடந்த தண்டனையில் இருப்பவர்களை விடுதலை செய்வதாகவே சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளதால், உடனடியாக அனைவரையும் பரோல் எனப்படும் காப்பு விடுப்பில் விடுவிக்க வேண்டும். குறுகிய காலத்திற்குள் முடியக் கூடிய மறு  நீதிமன்ற உசாவலுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  1. தண்டனைவாசிகளைச் சாதி, சமயக்கண்ணோட்டத்தில் அணுகுவது தவறு. எனவே, நீண்டகாலமாகச் சிறையிலிருக்கும் இசுலாமியச் சிறைவாசிகளையும் விடுதலை செய்யவும் அதற்கான முடிவு எடுக்கும் வரை காப்பு விடுப்பில் விடுவிக்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
  1. இலங்கைத்தமிழர் முகாம்களில் இருப்பவர்களை அனைத்து உரிமைகளும் உள்ள குடிமக்களாக நடத்த வேண்டும்.
  2. மாற்றுக்கருத்துகளுக்கெல்லாம் வழக்கு தொடுக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் தொடக்கமாக இப்போதைய இத்தகைய வழக்குகளைக் கைவிடவேண்டும்.
  மதி நுட்பம் கொண்ட முதல்வர் இவ்வாறு செயல்பட்டால்  இவரின் அரசியல் எதிரிகள் காணாமல் போவர் என்பது உறுதி. செய்வாரா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இதழுரை

Saturday, July 7, 2018

ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல:  ஆனி 17-23, 2049 / சூலை 01-07, 2018

ஆளுநர் கிரண்(பேடிசெயல்பாடுகள் செம்மையானவைஅல்ல!

  மத்தியில் ஆளும் பாசக, பாசக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைத்து வருகிறது. மக்களாட்சிக்கு எதிரான இப்போக்கால் மாநில நன்மைகள் பாதிப்படைகின்றன.  தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப் பெருமையாகக் கருதுவதால் இரு தரப்பிலும் சிக்கல் இல்லை. ஆனால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் தவறான  நடைமுறைகள் அரங்கேற்றப்படுவதால் எதிர்க்கட்சிகளும் மக்களாட்சி ஆர்வலர்களும் எதிர்த்துக் கொண்டு வருகின்றனர்.
 தில்லி  ஒன்றியப் பகுதியில் முதல்வர் அரவிந்து கெசுரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மூலம் தீர்வு பெற்றுள்ளது. இருப்பினும் அங்குள்ள துணைநிலை ஆளுநரின் போக்கால் விடியவில்லை.
  மாநில அமைச்சரவை அதிகாரத்தை முறியடிக்க எந்தத் தற்சார்பான அதிகாரமும் துணைநிலை ஆளுநருக்கு இல்லை என்று தலைமை நீதிபதி தீபக்கு மிசுரா, நீதிபதிகள் கன்வில்கர், சிக்கரி, சந்திரசூடு, அசோக்கு  பூசன் (Dipak Misra,  Ajay Manikrao Khanwilkar, Arjan Kumar Sikri,  Dhananjaya Y. Chandrachud, Ashok Bhushan) ஆகியோர் அமைந்த உச்சநீதி மன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்படியானால் அப்பதவியிலும் குறைநிலை அதிகாரம் கெணாண்ட புதுவை துணைநிலை ஆளுநருக்கும் இது பொருந்தும் என்பதுதான் இயற்கை.
  புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் இதுவரை இருந்து வந்த மோதலுக்கு இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி இடும் என முதல்வர் நாராயணசாமியும் ஆள்வோரும் மக்களும் கருதினர். ஆனால்,  துணை நிலை ஆளுநர் கிரண்   பெசவாரியா என்னும் கிரண்பேடி  அதிகார ஆசையில் மூழ்கிப் பிடிவாதம் பிடித்து வருகிறார்.
  இந்திய அரசியல் யாப்பு, பிரிவு 239 அ- புதுச்சேரிக்கு உரியது என்றும் பிரிவு 239  அஅ  தில்லிக்குரியது எனவும்  இருவேறு பிரிவுகளில் இவை வருவதால்  தில்லிக்குரியது புதுவைக்குப் பொருந்தாது என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்(பேடி)   மறுதலிக்கிறார்.
 பரப்பளவில் பார்த்தால் சென்னைப் பெருநகரைத்தவிர  தமிழ்நாட்டிலுள்ள எந்த மாவட்டத்தையும் விடப் பெரியது அல்ல. பெரும்பாலான தனியொரு மாவட்டப்பரப்பில் பத்தில் ஒரு  பங்குகூட இல்லை.  சிறிய பரப்பளவு நிலத்தின்துணை ஆளுநராக இருந்து கொண்டு பேரதிகாரத்தைச் செயல்படுத்தும்ஆசைத்தீயில் தன்னைத் தள்ளிக் கொண்டார்இதன் விளைவேதேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும் நியமனம் பெற்ற இவருக்குமான மோதல்போக்கு.
  இந்திய ஒன்றியப் பகுதிகள் மொத்தம் 7. இவற்றுள் தில்லி, புதுச்சேரி ஆகிய ஒன்றியப்பகுதிகளில் மட்டும் தேரந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் உள்ளது. எனவே, இங்கே அதிகார மையம் மக்கள் மன்றத்தைச் சார்ந்தே அமையும். இவற்றுள்  தில்லியானது தேசியத் தலைநகர ஆட்சிப் பரப்பு (National Capital Territory) என அழைக்கப்படுகின்றது.  எனவே,  இதன் துணை நிலை ஆளுநருக்குப் புதுவையின் துணைநிலை ஆளுநரை விடக் கூடுதலாக அதிகாரம் உ்ள்ளது. இதனைத் தனக்குச் சார்பாக எதிர்மறையாக விளக்கி இத் தீர்ப்பு பொருந்தாது என்கிறார்.
  மதிப்பிற்குரிய கிரண் பெசவாரியா என்னும் கிரண்(பேடி) அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எனவே இயல்பாகவே அரசியல் ஈடுபாடு இவருக்கு இருப்பதில் வியப்பில்லை. பொதுப்பணி என்பது  தொண்டு; தொண்டு என்பதுபயன்கொடுக்கவே! பயன் கொள்ள அல்ல!  (Public service is service and service is to serve, not take.) என்னும் நல்ல முழக்கத்தையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். காவல் துறையில் பல்வேறு உயர்நிலைகளில் பணியாற்றி நற்பெயரும் எடுத்துள்ளார். இருப்பினும் விருப்ப ஓய்வு பெற்றுப் பாசகவில் சேர்ந்த  பொழுது  இவரைப்பற்றிய மறு எண்ணமும் பலருக்கு ஏற்பட்டது. தில்லி முதல்வராகக் கனவு கண்டு மக்கள் அக்கனவைச் சிதைத்த பின்னர் புதுவையின் துணை நிலை ஆளுநராக ஆனார். “ஆட்டிற்கு வாலை அளந்து வைத்தவன் அறிவாளி” என்பர். அதுபோல் இவருக்கு மிகச் சிறிய ஒன்றியப் பகுதியின் துணை நிலை ஆளுநர் பதவிதான் வழங்கப்பெற்றது. இவர் அமைச்சரவையுடன் இணைந்து வழிகாட்டிமக்களுக்குத் தொண்டாற்றினால் நற்பெயர் விளைந்திருக்கும். மாறாக அதிகாரப்பசி கொண்டவர்போல் இவரது செயல்பாடுகள் அமைவதால் இதுவரை ஈட்டிய நற்பெயருக்கும் களங்கமே வருகின்றது. இவரது இயல்பான பணிகளும் ஊடக வெளிச்சத்தில் பெரும் பிம்பமாகக் காட்டப்பட்டதோ என்னும் ஐயம் வருகிறது.
  அடக்கி ஆளும் எண்ணம் கொண்டவர் எப்படி மக்களை அரவைணத்துச் செல்வார் என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். போனது போகட்டும். துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் கருத்திற்கிணங்கவே  செயல்பட வேண்டும் என 535 பக்கத் தீர்ப்பை  உச்சநீதிமன்ற ஐவர் ஆயம் வழங்கிய பின்னும் அதிகார மோகத்தைக் கைவிட மனம் வரவில்லையே!  அல்லது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் சொல்லிப் பார்க்கிறாரா?
 சட்ட மன்றம் இல்லாத ஆட்சிப் பொறுப்பாளர்(Administrator) பதவி மட்டும் உள்ள ஏதேனும் பிற ஒன்றியப் பகுதிக்கு இவர் மாற்றல் கேட்டுச் சென்றால் அங்கே மக்கள்மன்றத் தலையீடு இன்றித் தான் விருமபியவாறு அதிகாரம் செலுத்தலாம். தான் விரும்பும் முன்முறை(மாதிரி)ப் பகுதியாகக்கூட மாற்றலாம். அவ்வாறில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் அமைச்சரவையும் உள்ள பகுதியில்  துணை நிலை ஆளுநராக இருந்து கொண்டு மோதல் போக்கைத் தொடருவது அவருக்கு அழகல்ல!
 இவரது ஆய்வுப்பணிகளும் அதிகாரிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சிகளும் அமைச்சரவை அல்லது முதலவரின் கருத்துகளுக்கு எதிரான செயல்பாடுகளும் கோப்புகளைப் புறக்கணித்தல் அல்லது புதிய கோப்பை உருவாக்கல் போன்ற அலுவலக நடைமுறைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்பொழுது  தேர்ந்தெடுக்கப்படாத அரசு ஒன்றை நடத்துவதும்வல்லமையாளர் போன்ற தோற்றத்தையோ இடைக்கால மன மகிழ்வையோ தரலாம். ஆனால், காலப்போக்கில் வரலாற்றில் அழியாப்பழியையே தரும்என்பதை அவர் உணர வேண்டும்.
  மத்திய ஆட்சியின் துணை இருப்பதால் மரபுமீறி. தன்நிலைக்குத் தாழ்வான பணிகளை ஆற்றுவது இவரது பணிகளுக்குச் செம்மை சேர்க்காது. மக்கள் நலப் பகைவர் என்னும் பெயர் வாங்கிப் பயன் என்ன? மக்கள் உள்ளங் கவர்ந்த மங்கையர்க்கரசி என்னும் பெயரல்லவா வாங்க வேண்டும்! எனவே,  மாண்பமை துணைநிலை ஆளுநர் கிரண்(பேடி) இனியேனும் தன் போக்கை மாற்றிக் கொண்டு ஆட்சியாளருடன்  இணை்ந்து மக்கள்பணி யாற்றுவாராக!
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (திருவள்ளுவர்திருக்குறள் 965)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை: அகரமுதல:  ஆனி 17-23, 2049 / சூலை 01-07, 2018

Wednesday, July 4, 2018

மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே! – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்

மொழித் தாளைக் குறைப்பது

ந்திசமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே!

  மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள் 1, தாள் 2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி  மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும்.  மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால்,  மொழி அறிவு என்பது அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவியல் முதலான பிற மொழிப்பாடங்களைப் படிப்பதற்கும் மொழி அறிவு துணை நிற்கின்றது. அறிவில் சிறக்கத் துணையாய் இருக்கும் தாய்மொழி அறிவு குறைக்கப்படுவது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.
 பிற எல்லா நாடுகளிலும் தாய்மொழிக்கு முதன்மை அளிக்கின்றனர்; தாய்மொழி அறிஞர்களைப் போற்றுகின்றனர். நம் நாட்டிலோ தாய்த்தமிழ் ஆசிரியர்களைத் திரைப்படங்களில்கூட நகைச்சுவைக் காட்சிகளுக்காகத்தான் பயன்படுத்துகின்றனர். “தமிழ் வாழ்க” என்று நாம் முழக்கமிட்டாலும் தமிழை வாழ வைக்கும் வழிகளில் ஈடுபடுவதில்லை. எனவேதான் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
  இதில் மற்றொரு சதியும் உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்பதுதான் பா.ச.க.வின் முழக்கம். மத்திய அரசு கல்வி வாரியத்தில் மொழித்தாள் ஒன்றுதான் உள்ளது. எனவே, அதைப்போல் இங்கும் மாற்ற முயல்கின்றனர். மும்மொழித்திட்டம் என்ற பெயரில் இந்தியையும் சமற்கிருதத்தையும் திணித்து வரும் பாசகவினர், தேர்வுத்தாள் சுமை குறைந்துவிட்டது; அதனால் இந்தியும் சமற்கிருதமும் சுமையல்ல என்றும் கூறுவார்கள்.
 மொழித்தேர்வு இரண்டுதாளாக இருந்தாலும் பிற பாடங்களுக்கு உள்ளதுபோல் 100 + 100  என 200 மதிப்பெண்கள்தான் வழங்கப்படுகின்றன. எனவே, மொழிப்பாடங்களில் ஓர வஞ்சனை காட்டக் கூடாது. இதனடிப்படையில் பிற பாடங்களுக்கான மதிப்பெண்களையும் 100 எனக் குறைத்தால்  அறிவு வளர்ச்சி குறையும்.
  மத்திய அரசின் கல்வித்திட்டம் மேம்பட்டது எனத் தவறான பரப்புரைமேற்கொள்ளப்படுகிறது. தமிழகக் கல்வி முறையில் வினா இருந்தால் மத்தியக்கல்வி பயின்றவர்கள் போதிய தேர்ச்சி  பெற மாட்டார்கள். எனவே மத்தியக் கல்விவாரியததின் மொத்த மதிப்பெண்கள் 500 என்னும் தேர்ச்சி முறையைத் தமிழகஅரசு பின்பற்றத் தேவையில்லை.
  தேர்வுத்தாள் ஒன்றை நீக்குவதன் மூலம் வினாத்தாள் தயாரிப்புச் செலவு, விடைத்தாள் திருத்தும் செலவு முதலானவை குறைவதாக இதன் ஆதரவாளர்கள் பட்டியல் போடுகின்றனர். செலவுக் கண்ணோட்டத்தில் கல்வி இருப்பின் கல்வி வளர்ச்சி என்பது கனவாகப் போய்விடும். கல்வித்துறையில் அடிப்படைச் செலவுகளுக்குக் கணக்கு பார்க்கக் கூடாது.
   இன்னும் சிலர் மாணவர்களுக்கு மன உளைச்சல்  போவதாகக் கூறுகின்றனர். மன உளைச்சல் என்றால் எந்தத் தேர்வும் நடத்த வேண்டாவே!
 தமிழாக இருந்தாலும் பிற மொழியாக இருந்தாலும் மொழிக்கல்வி என்பது ஆழமானதாக இருக்க வேண்டும். எனவேதான் இரண்டு தேர்வுத்தாள் தேவைப்படுகின்றன.
மொழிப்பாடம் என்பது வளர்ந்து வரும் துறையாகும். இதில் மிகுதியாகப் படித்துவிட்டுக் குறைவான விடைகளை அளிக்கும் சூழல் ஏற்படுத்துவதுதான் உண்மையில் மாணவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தும். மிகுதியான தெரிவுகள் இருக்கும் பொழுது   ஏற்படும் மன அமைதி இல்லாமல் போய்விடும். முழுமையாகப் படிக்காமல் பலவற்றை விட்டுவிடத் தோன்றும். இது. தேர்வில் தோல்விக்கு அழைத்துச் செல்லும். எனவே தமிழக அரசின் புதிய முறை மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கையைக் குறைக்கவே செய்யும்.
இங்கிலாந்தில் 10 ஆம் வகுப்பில்  பிரிவு 1 முதல் 3 வரை பயில்பவர்கள்  ஆங்கில மொழி – தாள் 1, தாள் 2 எழுதுகின்றனர்.  11 ஆம் வகுப்பில் ஆங்கில் இலக்கியம் தாள் 1, தாள் 2 எழுதுகின்றனர்.
10 ஆம் வகுப்பில் பிரிவு 3 முதல் 7 வரை படிப்பவர்கள் ஆங்கில இலக்கியம் தாள் 1, தாள் 2 படிக்கின்றனர். இவர்கள் 11 ஆம் ஆண்டில் ஆங்கில  மொழி – தாள் 1  தாள், 2 படிக்கின்றனர். எப்படியாயினும இரண்டு தாள்களில் தேர்வு எழுத வேண்டும். என்றாலும் தேர்வு முறை அவர்கள் மனப்பாடம் செய்து ஒப்பிதது எழுதும் முறையில் அமைக்கவில்லை நன்கு  உணர்ந்து படித்துத்  தெரிவிக்கும் முறையில் அமைத்துள்ளனர்.
 நாம் தேர்வுத்தாள் எண்ணிக்கையைக் குறைக்காமல் தேர்வு முறையை மாற்றலாம்.
தாள் 1 என்பதை இப்பொழுது உள்ளதுபோல், பார்க்காமல் எழுதும் வகையில் அமைக்க வேண்டும். தாள் 2 என்பது புத்ததகங்களைப் பார்த்து எழுதும் வகையில் இருக்க  வேண்டும். பார்த்து எழுதுவதா? அப்படியானால் அப்படியே புத்தகங்களைப் பார்த்து எழுதி மறந்துவிடுவார்களே என எண்ண வேண்டா. அதுபோல் துண்டுத்தாளை அல்லது புத்தகத்தைத் திருட்டுத்தனமாகப் பார்த்துப் படி எடுப்பதுபோல் எழுதுவதற்கும் புத்தகங்களைப் பார்த்துச் சிந்தித்து எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. கருத்தைச் சுருக்கி எழுதுதல், விரித்து எழுதுதல், புத்தகங்களில் உள்ள தொடர்களை வேறுவகைகளில் பயன்படுத்தி எழுதுதல், புத்தகச் செய்தி ஒன்றை நாடகமாக நடித்துக் காட்டுதல், கவிதையாக எழுதுதல் என்பன போன்று மாணவர்களின் படைப்புத்திறன்கள் வளரும் வகையில் வினாத்தாள் அமைய வேண்டும். அப்படியாயின் மாணவர்கள் முன்கூட்டியே புத்தகங்களைப் படிப்பர்  சிந்தனைக்கு இடம் கொடுக்கும் வகையில் பாடங்களில் கருத்து செலுத்துவர்.
 இம் முறையில் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாது. அறிவு வளர்ச்சிதான் ஏற்படும்! சிந்தனைத்திறன்தான் வளரும்!
  மொழிப்பாடம் என்பது மண்ணின் மணத்தை வெளிப்படுத்துவது; பண்பாட்டை உணர்த்துவது; நாகரிகத்தை ஏற்படுத்துவது; கலையை வளர்ப்பது; விரிந்து பரந்த பயன்கள் கொண்டது. அதனைச் சுருக்குவது என்பது  நல்ல தன்று. புதுமை செய்வதாக எண்ணிக் கொண்டு சில அதிகாரிகள் செய்கைக்கு அரசும் துணை போகக் கூடாது. மத்திய அரசின் கல்வி முறையுடன் ஒப்பிட்டும் நம் கல்வி முறையைச் சிதைக்க கூடாது.
  • இலக்குவனார் திருவள்ளுவன்
  • நக்கீரன்  இதழ் 30.22. / சூன் 27-29, 2018:   பக்,22-23

 

Followers

Blog Archive