Tuesday, September 3, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

711. Actus Reus Non Facit Reum Nisi Mens Sit Rea குற்றம் புரியும் நோக்கில் செய்யாத செயல் குற்றமாகாது.

  குற்ற மனமில்லாத வரை செயல் ஒருவரைக் குற்றவாளியாக்காது,  என்பதே இதன் விளக்கமாகும்.  

பொது விதியாக, மனப் பிழை இல்லாமல் மேற்கொள்ளும் செயலுக்குக் குற்றவியல் சட்டம் பொறுப்பாக்காது. எனவே, மனமும் செயலும் சட்டமுரணாக இருந்தால்தான் ஒருவரைக் குற்றவாளி என்று சொல்ல இயலும்.

  இலத்தீன் தொடர்
712. Acuteகடும்  தீவிர

நாட்பட்ட  

மருத்துவத் துறையில் நெடுநாட்களாக உள்ள புண் அல்லது நலிவைக் குறிப்பது.  

நீதிமன்றத்தில் கடும் நிலை என்பது, பொதுவாகத் திடீரென்று தோன்றும், விரைவாக முன்னேறும்,

ஒப்பீட்டளவில் குறுங்கால நிலைகள்.
 713. Ad Coelumவான் வரை,  

Cuius est solum eius est usque ad coelum et ad infernos  என்னும் தொடரின் சுருக்கம் இது.  

நில உரிமையாளர் வானத்திற்குக் கீழே நிலத்திற்குக் கீழேயும் மேலேயும் புவியின் உள்ளகம் வரையும் உரிமையுடையவர்.

நிலத்தில் உள்ள அனைத்துக் கனிமவளங்களுக்கும் இது பொருந்தும்.  
இலத்தீன் தொடர்;

ad = ; coelum = வானம்
714. Ad Colligenda Bonaபொருட்களைத் திரட்டு  

வழக்காடுவதற்குக் கொடுத்தல் அல்லது ஒன்றுக்கு ஒன்று (quid pro quo) தொடர்புடைய வழக்குகளில் வழக்குரைஞருக்கு அவர் பெறத் தகுதியுடைய சில பொருள்கள கோரமுடியாதனவாக இருந்தால் அரசே திரட்டித் தருதல்.  

இறுதி முறி (will)எழுதி வைக்காமல் ஒருவர் இறந்தால் அல்லது இறந்தவர் எழுதி வைத்த இறுதி முறி, செல்லத்தகாததாக இருந்தால், அந்நேர்வில் அரசே உரிய ஆவணத்தைத் திரட்டித் தருவதை இது குறிக்கும்.

இலத்தீன் தொடர்.
715. Ad Hocஅமைவு  

தனிப்பட்ட,

குறிப்பிட்ட,

தற்காலிக,

ஒன்றற்குரிய,

அதற்கென அமைந்த,

குறித்த நோக்கத்திற்கான

  இவற்றுள் தற்காலிக என்பது வழக்கில் நிலைத்துவிட்டத் தவறான சொல்லாட்சி.    

ஒரு குறிப்பிட்ட சிக்கல் அல்லது பணிக்காக அமைக்கப்படும் விதி அல்லது குழு.

நிலையான விதியோ குழுவோ உருவாக்கப்படும் முன்னர் உடனடித் தேவை கருதி இடைக்காலமாக உருவாக்கப்படுவது.  

இலத்தீன் தொடர்
716. Ad Hoc Committee  அமைவுக் குழு  

இடைக்காலக் குழு

  தற்காலிகக் குழு என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. தற்காலிக என்பது வழக்கில் நிலைத்துவிட்டத் தவறான சொல்லாட்சி.  

Ad hoc  – இலத்தீன் தொடர்

committere, என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து committee உருவானது.
717. Ad Hoc Ruleஅமைவு விதி  

இடைக்கால விதி  

தற்காலிக விதி என்பது வழக்கில் நிலைத்துவிட்டத் தவறான சொல்லாட்சி.  

நிலையான விதி உருவாக்கப்படும் முன்னர் அதற்கென அமைக்கப்படும் விதி.
718. Ad Hominemஆளுக்கு  

ஆளைநோக்கிய வாதம்

(argumentum ad hominem)  என்பதன் சுருங்கிய வடிவம்.

மறுதரப்பாரின் வாதத்திற்குத் தக்க எதிருரை அளிக்க இயலாமல் அவரின் பண்பு, நோக்கம், வேறு சில இயல்புகளுக்கு எதிராகத் தொடுக்கும் தனியர் தாக்கு.  

அரசியலில் தனியர் தாக்கு பரவி வருகிறது.

நீதிமன்றங்களில் வாதுரைக்கு மாற்றாகத் தாக்குரை இடம் பெறுவது சிறப்பானதல்ல.  

இலத்தீன் தொடர்
719. Ad Idem  கருத்தொருமித்து  

ஒரே பொருள் குறித்து   உடன்படிக்கையில் குறிக்கப்பெறுவது  

இலத்தீன் தொடர்.
720. Ad Infinitumமுடிவின்றி

முடிவிலி

எல்லையற்ற

வரம்பற்றது

என்றென்றும்  

என்றென்றும் தொடரக்கூடிய முடிவற்றதைக் குறிப்பது.  

இலத்தீன் தொடர்.

இலக்குவனார் நினைவு நாள் கட்டுரை: ஆங்கிலத் திணிப்பால் ஆட்சியை இழக்க விரும்புகிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 

இலக்குவனார் நினைவு நாள் கட்டுரை: ஆங்கிலத் திணிப்பால் ஆட்சியை இழக்க விரும்புகிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்



    தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் நினைவு நாள் ஆவணி 18 / செட்டம்பர் 3. இலக்குவனார், தம் வாணாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழ்க்காப்பிற்காகவும் பல போராட்டக் களங்களைச் சந்தித்தவர். தமிழ்க்காப்பு என்பது பிற மொழிகளின் ஆதிக்ககத்திலிருந்தும் திணிப்புகளிலிருந்தும் தமிழைக் காக்கப் போராடியதுமாகும்.

    “தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்று மொழிச் சொற்களின் கலப்பால் ஆகிய கலவை மொழிதான் இடம்பெறும். அவ்வாறாயின் தமிழ் மெல்ல இனிச் சாகும் என்றுதான் கொள்ள வேண்டும். தமிழர் இருக்கத் தமிழ் மறைந்தது என்றால் அதனினும் நாணத்தக்க இழிவு வேறொன்றும் இன்று. ” என்று வருந்தி நொந்தவர் இலக்குவனார்.

    அவரது முயற்சிகளால் ஆங்கிலத் திணிப்பு மெல்ல மெல்ல அகன்று   வந்தது. இந்தி எதிர்ப்புப் போரைத் தலைமை தாங்கி நடத்தியதால் இந்தித் திணிப்பு நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணமான பேராயக்கட்சியின் (காங்கிரசுக் கட்சியின்) ஆட்சி அகன்றது. அதன் பின் இன்று வரை அதனால் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் ஏற இயலவில்லை. அதைப்போல்  ஆங்கிலத்திணிப்பால் ஆட்சியை இழக்க ஆள்வோர் எண்ணுகிறார்களா என்று தெரியவில்லை. இந்தி எதிர்ப்புப் படைத்தலைவர் இலக்குவனார் நினைவு நாளில் இது குறித்து எண்ணிப் பார்ப்போம்.

    திருக்குறள் முற்றோதல், தமிழ்க் கூடல், தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு, தீராக்காதல் திருக்குறள் திட்டம், தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கம், அதன் வாயிலாக அயல்நாடு-வெளி மாநிலத் தமிழர்களுக்குத் தமிழ் கற்பித்தல், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், சனவரித் திங்கள் 12ஆம் நாள் அயலகத் தமிழர் நாள் விழாவாகக் கொண்டாடுதல், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை உருவாக்கம், அத்துறைக்கெனத் தனி அமைச்சரை அமர்த்தியமை என இன்றைய ஆட்சியாளர்களின் தமிழ்நலப்பணிகளை நாம் மிகுதியாகச் சொல்லலாம்.

    ஆனால், ஓர் அண்டா பாலில் ஒரு செம்பு நஞ்சாக ஆங்கிலத்தை ஆட்சியளர்கள் வலிந்து ஊற்றுகிறார்களே! கொடுமையிலும் கொடுமையல்லவா இது!

    1915 இல் ஆத்திரேலியப் பெண் மோலி பிங்கைக் காதலித்து மணந்து கொண்ட. புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், இருமுறை மண விலக்கு பெற்ற அமெரிக்காவைச் சார்ந்த வாலிசு சிம்புசன் என்ற பெண் மீதான காதல் வயப்பட்ட  எட்டாம் சியார்சு, மேகன் என்ற பெண் மீது காதல் கொண்ட பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த சார்லசின் மகன் இளவரசர் ஆரி, இங்கிலாந்து அரசி மீது காதல் கொண்ட கிரேக்க மற்றும் தென்மார்க்கு அரச பட்டங்களை உடைய பிலிப்பு, (இ)யோசிகி குரோடா என்ற எளிய மனிதரின் மீதான காதல் கொண்ட சப்பானின் 125-ஆவது பேரரசர் அகிஃகிட்டோவின் மகள் சயாகோ, தன் கல்லூரியில் உடன் பயின்ற எளிய குடும்பத்தைச் சேர்ந்த  கீ கோமுரோ மீது காதல் கொண்ட பேரரசர் அகிஃகிட்டோவின் பேத்தியான மகோ ஆகியோர் காதலால் அரசபட்டத்தையும் பதவியையும் இழந்தார்கள். இவர்கள் வரிசையில் வரலாற்றில் இடம் பெறுவதற்காக ஆங்கிலம் மீது காதல் கொண்டு ஆட்சியாளர்கள் செயற்படுகிறார்களா? புரியவில்லையே!

    அரசுப்பணியாளர்களின் சீருடைகளில் துறை முத்திரை ஆங்கிலத்தில், துறைப்பெயர்கள் ஆங்கிலத்தில், பணியாளர்கள் பெயர்கள் ஆங்கிலத்தில், பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்தில், அரசாணைகள் ஆங்கிலத்தில், பணியமர்த்த ஆணைகள் ஆங்கிலத்தில் பதவி உயர்வு ஆணைகள் ஆங்கிலத்தில், இட மாற்ற ஆணைகள் ஆங்கிலத்தில், குற்றச்சாட்டுகள் ஆங்கிலத்தில், ஒப்பந்தங்கள் ஆங்கிலத்தில் என எதிலும் எங்கும் ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம்தான்! நாம் கூட ஆங்கிலத்தின் மீது காதல் உள்ளது என எண்ணினோம்.  ஆனால் ஆட்சியாளர்க்கு  ஆங்கில வெறியே உள்ளது. அரசு என்று சொல்லாமல் ஆட்சியாளர் எனச் சொல்வதன் காரணம், ஆட்சியாளர் கடிவாளம் போட்டால் அரசு செவ்விய பாதையில் செல்லும்.

    தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலிருந்து தமிழில் முன்மொழிவு அனுப்பப்பட்டிருக்கும் பொழுது அதை ஆங்கிலத்தில் மாற்ற வேண்டிய காரணம் என்ன? ஏதும் ஐயம் ஏற்பட்டிருப்பின் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலேயே கேட்டிருக்கலாம். அல்லது த.வ.து. கட்டுப்பாட்டில் உள்ள மொழிபெயர்ப்புத் துறையில் கேட்டிருக்கலாம். அப்படி எதுவும் ஐயம் எழாதபோது அதற்கான தேவையும் இல்லை யல்லவா? தமிழ் வளர்ச்சித்துறையின் ஆணையைத் தமிழில் பிறப்பிக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாத அளவிற்கு ஆங்கில வெறி கண்களை மறைத்து விட்டது.  ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மீது காதல் இருப்பின் இதற்குக் காரணமானவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இங்கே தமிழ் வளர்ச்சித்துறையில் தொடர்ந்து நேரும் கொடுமையையும் சுட்டிக் காட்ட வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பது இத் தொடர் கொடுமைதான். அஃது என்னவென்றால் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்குத் தமிழில் புலமை தேவையில்லை எனக் கருதுவதுதான்.

    இந்த விதியின் படி  தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பணியிடத்தில் நேரடியாகப் பணியமர்த்தப்படுபவர்கள், இளங்கலையிலும் முதுகலையிலும் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏன் இளங்கலையிலும் என்று கூறுகிறார்கள் என்றால், வேறு துறையில் இளங்கலை அல்லது இளம்அறிவியல் பட்டம் பெற்றுத் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றால் அவர்கள் இப்பதவிக்குத் தேவையில்லை என்பதுதான். சிறப்பு விதியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதைப் பாராட்டலாம். ஆனால் அமைச்சுப் பணியாளர்கள் ஏதேனும் ஓர் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. ஆனால், அப்பட்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் – அஃதாவது, முதல் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவு என்பனவற்றுள் ஏதேனும் ஒரு பிரிவில் – தமிழ் ஒரு பாடமாக இருந்தால் போதுமானது. ஏனெனில் அமைச்சுப் பணியாளர்கள் தமிழ் வளர்ச்சித் துறையில் எழுத்துப் பணியாற்றினாலே தமிழ் மேதைகளாகி விடுவார்கள்! எனவே, தமிழில் முதுகலைப்பட்டம் தேவையில்லை என முடிவு செய்து விட்டார்கள். இத்தகைய தவறான போக்கால்தான் அலுவலகக் கண்காணிப்பாளர்கள் தாங்கள் ஒரு பிரிவில் தமிழில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறும் வரை பதவிகள் நிரப்பப்படாமல் பார்த்துக் கொண்டார்கள். இது ஒரு தொடர்  நிகழ்வே.

    1990 இல் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி  முதல்வராக இருக்கும் பொழுது தமிழில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களே தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகளாக இருக்க வேண்டும் என விரும்பினார். எனவே கலைஞர் முனைவர் பட்டம் பெற்றவர்களைத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்களாக அமர்த்த முடிவு செய்தார். ஆனால் அமைச்சுப் பணியாளர்கள் தவறான தகவல்களைத் தந்து இதற்குக் கடும் எதிர்ப்பு தந்தனர். எனினும் கலைஞர் தமிழாய்வு அலுவலர் என உதவி இயக்குநர் பணி நிலைக்கு ஒரு படி கீழாகப் பதவிகளை உருவாக்கி முனைவர் பட்டம் பெற்றவர்களை (அல்லது இள முனைவர் பட்டம் பெற்றவர்களை) அமர்த்தினார். அடுத்து அதிமுக ஆட்சி வந்ததும் அமைச்சுப் பணியாளர்கள் இவர்கள் யாவரும் திமுகவினர் என்று சொல்லிப் பல தவறான தகவல்களை முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். இவர்களே மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தங்களைத் தி.மு.க.வினராகக் காட்டிக் கொண்டு, கலலைஞர் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் தகுதியற்றவர் என்பன போல் கூறினர். இவர்கள் புகழ் மாலையில் மயங்கிய  அப்போதைய அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் நேரடி நியமனம், துறைக் கண்காணிப்பாளர்களில் இருந்து நியமனம் என இரு பிரிவிற்கும் தனித்தனி 50%  அளிப்பதாக உறுதி செய்தார்.

    கலைஞர் பின்னர், தமிழில் முனைவர் பட்டத் தேர்ச்சி பெற்றிருந்த தமிழாய்வு அலுவலர்களை உதவி இயக்கநர்களாகவே உயர்த்தி ஆணை வழங்கினார்.

    கலைஞர் ஆட்சியில் இதுபோன்ற பதவி ஆணை குறித்த நினைவும் வருகிறது. 1990 இல் இவ்வாறு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்களுக்கான பதவி அமர்த்த ஆணை பிறப்பித்தனர். அஃது ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அத்துறைச் செயலர் முனைவர் ஒளவை நடராசன் கைகளுக்கு வந்தது. அவர் அதனை நிறுத்தித் தமிழில்தான் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார். செயலக ஊழியர்கள் அவ்வாறு தமிழில் பிறப்பிக்கத் தடுமாறினர். நான் வேறு அலுவலாக ஒளைவ நடராசன் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். “தமிழ் வளர்ச்சி அலுவலர்கள் ஆ்ணைகளைக்கூட ஆங்கிலத்தில் பிறப்பிக்கிறார்கள். இவர்களை என்ன செய்வது?” என்றவர், “தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலிருந்து கண்காணிப்பாளர் ஒருவர் வந்து அதனைத் தமிழ்ப்படுத்திக் கொண்டுள்ளார். இயந்திர மொழிபெயர்ப்பு போல் உள்ளது. இயல்பான நடையில் இல்லை. தமிழில் தர இயலுமா” என்றார். எனக்கான பதவி அமர்த்தமும் அதில் உள்ளதால், எனக்கான ஆணையை நானே எழுதும் நல்வாய்ப்பு கிட்டும் பொழுது மறுப்பேனா என்று சொல்லி அவ்வாணையைத் தமிழில் வடித்துத் தந்தேன். தமிழாய்ந்த தமிழறிஞர் செயலராக இருந்தமையால் இது நடந்தது. கலைஞர் ஆட்சியில் அந்த உணர்வும் இருந்துள்ளது. அவ்ரது மகனார் ஆட்சியிலும் செயலக அதிகாரிகளுக்கு இவ்வுணர்வு வர வேண்டும்.

    காலந்தோறும் இவ்வாறு நிகழும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க த.வ.துறைக் கண்காணிப்பாளர்களும்  நேரடி நியமனம் போன்றே இளங்கலை, முதுகலையில் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில் விதியை மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வளர்ச்சி இயக்ககம் சிறப்பாகச் செயற்படும்.

    இந்த ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் ஆட்சியாளர்களுக்கு அத்தகைய விழைவு இல்லையேல் ஆங்கில வெறியைத் தொடரட்டும்! ஆட்சி நிலைக்க விரும்பினால், உண்மையான தமிழ் ஆட்சியை நடத்தட்டும்!

    ஆங்கிலத் திணிப்பு அகலட்டும்!      அரசு நிலைக்கட்டும்!

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பா ரிலானுங் கெடும்

     (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௮ – 448)

    Sunday, September 1, 2024

    சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்

     




    (சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

    701. Actuary  பத்திரச் சான்றர்  

    பத்திரச் சான்றாளர்    

    காப்பீட்டு ஆலோசகர்

    காப்பீட்டு அறிவுரைஞர்  

    காப்பீட்டு மதிப்பீட்டாளர்  

    வாணாள் காப்பீட்டு நலன்கள், காப்பீட்டுப் பத்திரங்கள் முதலியவற்றை மதிப்பிடும் வல்லுநர்.   (ஆ.கா.க.சட்டம்(L.I.C.Act), பிரிவு 2(1)
    702. Actuate  தூண்டு

    செயல்படுத்து  

    ஒரு செயல் நிகழ உந்துதலாக இருப்பது

    மேற்குறித்தவாறு பொதுவான பொருளில் வரும் இச்சொல், சட்டத்துறையில் ஒரு குற்றச் செயல் நிகழ உந்துதலாகவோ தூண்டுதலாகவோ இயக்குவதாகவோ அமைவதைக் குறிக்கும் குற்றச் செயலாகிறது.
    703. Actus Curiae Neminem Gravabit   நீதிமன்றச் செயல்பாடு ஒருசார்பற்றது.  

    நீதிமன்றச் செயல்பாடுகள் ஒருதலைச்சார்பின்றி இருக்க வேண்டும் என்பதை இப்பொன்மொழி உணர்த்துகிறது.  

    “ஒருதலை யுரிமை வேண்டியும்” என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், 225). எனவே, ஒரு தலை என்பதற்கு உறுதி என்றும் பொருளுண்டு.

    திருவள்ளுவரும் ஒருதலை (திருக்குறள் 357) என்பதை உறுதி என்னும் பொருளில் குறித்துள்ளார்.

    இங்கே ஒரு தலை என்பது முற்சாய்வு, ஒரு பாற்கோடல்(பாரபட்சம்), சார்பெண்ணம், முற்சார்பு, முற்கோள் என ஒரு பக்கமாக முடிவெடுத்தலை – நீதி வழங்கலைக் – குறிக்கிறது. அவ்வாறு நீதிமன்றச் செயல்பாடு இல்லை என்பதை இத் தொடர் குறிக்கிறது. ஆதலின் நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு யாரும் ஒருதலைச்சார்பைக் கற்பிக்கக் கூடாது.  

    ஒருதலைச்சார்பு என்பதே ஒருதலை என இங்கே குறிக்கப்பட்டது.  

    நீதிமன்றத்தின் தவறு அல்லது நடைமுறைக் காலத்தாழ்ச்சியால் எவரும் பாதிக்கப்படக்கூடாது. – புசிங்கு சுமிட்சு தனி வரையறுக்கப்பட்டது (Busching Schmitz Private Limited ) எதிர் பி.டி.மெங்கானி & பிறர்9 P.T. Menghani & Ors.,)( MANU/SC/0344/1977: AIR 1977 SC 1569: 1977 (2) SCC 835.)  

    நீதிமன்றத்தின் எச்செயலும் வழக்காளிக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது. ஒருவேளை, நீதிமன்றத்தின் பிழையால் ஒருவருக்குத் தீங்கு நேர்ந்தது எனில்,  அதைக் களைந்து உரிய நிலைக்கு மீளக் கொணரவேண்டியது நீதிமன்றத்தின் கட்டாயக் கடப்பாடாகும். – சங்குசிங்கு எதிர் பிரிசிலால் மற்றும் பிறர், 20.02.1963 (Jang Singh vs Brijlal And Ors on 20 February, 1963,  AIR 1966 SC 1631: 1964 (2) SCR 145.)  

    இலத்தீன் தொடர்
    704. Actus degis nemini Est Dam Nosisசட்டச் செயல் எவருக்கும் தவறான எண்ணத்தை உண்டாக்காது.  

    சட்டத்திலுள்ள ஒரு செயல் யாருக்கும் பாகுபாடு காட்டாது.  

    சட்டச் செயற்பாடுகள்/நீதிமன்றச் செயற்பாடுகள் ஐயத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு இவற்றின் மீது நம்பிக்கை வரும்.
    705. Actus Dei Nemini Injuriam சட்டம் கடவுளின் செயலுக்கு எந்த மனிதனையும் பொறுப்பாக்காது.  

    மாலி இராம் மஃகதபீர் பிரசாத்து எதிர் சாந்தி டெபி & பிறர் வழக்கில் வேலைநிறுத்தத்தைக் கடவுளின் செயலாக நீதிமன்றம் கருதியது. (MANU/BH/0010/1992: AIR 1992 PAT 66.)  

    வேலைநிறுத்தம் போன்ற இயல்பற்ற சூழலில் எந்தவொரு வழக்குரைஞரும் தன் சொந்தத் திறமை அல்லது திறனைப் பயன்படுத்தி எதிர்க்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.  

     சட்டப்படியான கருத்தில் இத்தகைய நிகழ்வுகள்,”கடவுளின் செயல்கள்” என்ற வரையறையில் அடங்கும். எனினும் சிலர் கடவுளின் செயல்கள் என்பதை ஏற்பதில்லை.
    706. Actus Legis Nemini Facit Injuriamசட்டச் செயல் எவரையும் ஊறுபடுத்தாது.  

    மனிதர் செயற்பாடின்றி இயற்கையால் ஏற்படும் துன்பங்களையும் அவலங்களையும் குறிக்கையில் இவை எந்த மனிதரின் செயலுமல்ல, கடவுளின் செயல் என்பர்.

    கடவுளின் செயல் யாரையும் குற்றவாளியாக்காது என்றும் இதற்கு விளக்குவர்.

    இதனடிப்படையிலேயே சட்டத்தின் செயல் யாருக்கும் ஊறு நேர்விக்காது என்பர்.

    சட்டத்தின்படியான தண்டனையை ஊறு ஏற்படுத்துவதாகக் கருதக் கூடாது எனப் பொருள்.
    707. Actus me invito factus non est mens actus   குற்றமனமிலாச் செயல் குற்றமாகாது  

    தன் விருப்பத்திற்கு மாறாகச் செய்யப்படும் செயல் (குற்றச்) செயல் ஆகாது.

      “என்  விருப்பத்திற்கு மாறாக நான் செய்த செயல் என் செயல் அல்ல” என்பதே இதன் நேர் பொருள்.

    தீங்கு விளைவிக்கும் ஒரு செயலைச் செய்தவர் அதனை எந்த வகைக் குற்ற நோக்கமுமின்றிச் செய்திருந்தார் எனில் , அச்செயல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.  

    இ.த.ச.பிரிவு 94,  அச்சுறுத்தல்களால் வற்புறுத்திச் செய்யப்படும் செயல், கொலையாகவோ, மரணத் தண்டனைக்குரிய அரசிற்கு எதிரான குற்றமாகவோ இருந்தாலன்றிக் குற்றமாகாது என்பதைத் தெரிவிக்கிறது. 
    இம் முதுமொழியை உள்வாங்கியே இச்சட்டப்பிரிவு உள்ளது.

      இலத்தீன் தொடர்
    708. Actus non facit reum nisi mens sit rea     குற்றமனமில்லாச் செயல் குற்றமாகாது.  

    குற்ற உணர்வில்லாச் செயல் குற்றவாளி யாக்காது.   எனவே, சட்டத்திற்கு எதிரான அல்லது தீயன விளைவிக்கக் காரணமான மனப்போக்கும் உடற்செய்கையும் இணைந்ததே குற்றமாகிறது.  

    ஒருவரைக் குற்றவாளியாக்கச், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட ஒரு செயல், அவரது செயலால் நிகழ்ந்தது என்பதையும் இந் நடத்தையானது, சட்டத்தால் கண்டிக்கத்தக்க மனப்போக்குடன் இருந்தது என்பதையும் மெய்ப்பிக்க வேண்டும்.

    குற்றத்தை உருவாக்கும் எண்ணம், செயல் இரண்டும் ஒத்திருத்தல் வேண்டும். குற்ற உணர்வு இல்லாமல் எந்தக் குற்றமும் நடக்காது என்பதை இது குறிக்கிறது.  

    இவ்வாறு எந்த ஒரு குற்றத்திலும் இரண்டு கூறுகள் உள்ளன; ஒன்று, உடற்பகுதி, மற்றொன்று மனப்பகுதி. இதுவே, ஒருவரின் செயலில் குற்ற உணர்வு இருந்தாலன்றி அச்செயல் அவரைக் குற்றவாளியாக்காது எனச் சொல்லப்படுகிறது. – ஆர்.பாலக்கிருட்டிணபிள்ளை எதிர் கேரள அரசு, MANU/SC/0212/2003: 2003 (9) SCC 700: 2003 (2) SCR 436.  

    இது, தன்செய்கையை உணரா மனநோயர் குற்றம் செய்ததாகக் கூற முடியாது(furiosi nulla voluntus est) என வலியுறுத்துகிறது.  அஃதாவது,  மன நோயால் அல்லது மனக்கோளாறால் பாதிக்கப்படும் ஒருவர், தான்  என்ன செய்கிறோம் என்பதை அறியாதவராக உள்ளதால், குற்றம்புரிந்ததாகக் கூற முடியாது.  

    ஒருவரின் செயலில் குற்ற உணர்வு இருந்தாலன்றி அச்செயல் அவரைக் குற்றவாளியாக்காது.   குற்றம் புரிவதற்கு எண்ணமும் செயலும் குற்றத்தின் பகுதிகளாகக் கருதப்படும்.  

    எண்ணம் என்பது தீய நோக்கம். செயல் என்பது அந்த எண்ணத்தை நிறைவேற்றும் தீய நடவடிக்கை.   ஒவ்வோர் இயல்பான நல்ல மனநிலையுடைய ஒவ்வொருவரும்  மாறாக மெய்ப்பிக்கப்பட்டாலன்றி, அவன் அல்லது அவள் செய்கைக்குப் பொறுப்பாவார். ஆனால், மன வளமற்ற ஒருவர் அல்லது மனப்பிறழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர் மனித நடத்தையின் இவ்வடிப்படை நெறியைக் கொண்டிருப்பார் எனக் கூற முடியாது. – இராசசுதான் அரசு எதிர் சேராராம், MANU/SC/1428/2011: AIR 2012 SC 1: 2012 (1) SCC 602.  

    மன வளம் அல்லது மன நலமற்றவரை நாம் பித்து பிடித்தவர், பித்தா் என்று சொல்கிறோம்.  

    ஒருவரைக் குற்றச் செயலுக்குப் பொறுப்பாக்கும் போது,  சட்டத்தால் விலக்கப்பட்ட ஒரு செயல், அவரின் நடவடிக்கையாலும் மனப்பாங்கினாலும் நிகழ்ந்தது என மெய்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு செயலும் உடற்சார்பு, மனச் சார்பு ஆகிய இரண்டாலும் மேற்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். இதனையே குற்ற உணர்வில்லாச் செயல் குற்றவாளி யாக்காது என்கின்றனர். – சி.கே.சாபர் செரீபு எதிர் கு.பு.து.(CBI) மூலம் அரசு MANU/SC/0960/2012: AIR 2013 SC 48: 2013 (1) SCC 205  

    இங்கிலாந்தின் ஆல்சுபரி சட்டம்(Halsbury Laws of England), குற்றத்தை உருவாக்கும் கூறுகளை மேற்கொள்ள அல்லது பொறுப்பற்ற முறையில் செயலாக்குகிற நிலைப்பாட்டில் இருந்தாலன்றி ஒருவர் குற்றப் பொறுப்பிற்கு ஆளாக மாட்டார் என்கிறது. இதன் மூலம், ஒருவரின் செயலில் குற்ற உணர்வு இருந்தாலன்றி அச்செயல் அவரைக் குற்றவாளியாக்காது எனப்படுகிறது.

    ஓர் உரிமையைச் செயல்படுத்துவதும் அதற்கு வழிவகை காண்பதும் தனிவகையான இயல்புகளாகும். – சுப்பிரமணிய சுவாமி எதிர் இந்திய ஒன்றியம் & பிறர். (MANU/SC/0621/2016: AIR 2016 SC 2728: 2016 (7) SCC 221.)  

    இலத்தீன் தொடர்
    709. Active Capitalநடப்பு மூலதனம்  

    செயற்பாட்டு மூலதனம்(Working Capital) என்பதும் இதுவே.

    பணம் அல்லது உடனடியாகப் பணமாக மாற்றப்படக்கூடிய சொத்து.  

    அன்றாடச் செலவுகளை அல்லது எதிர்பாராச் செலவுகளைமேற்கொள்வதற்குரிய பணப்புழக்க நிலையைக் குறிக்கிறது.
    710. Actus Reusகுற்றச் செயல்  

    Actus reus  என்பது இலத்தீன் சட்டச் சொல் ஆகும்;  āctus = செய்கை + reus =குற்ற உணர்வு. குற்றத்துக்குரிய நடத்தை எனப் பொருள்படும்.  

    குற்றத்தின் வெளியீட்டு உறுப்பாக  இது கருதப்படுகிறது.

    ஒரு குற்றவாளியின் செயல் ஐயத்திற்கு இடமில்லாத வகையில் மெய்ப்பிக்கப்படும் பொழுது குற்றச்செயல் எனப்படுகிறது.

    குற்றச்செயல் புாிந்த ஒருவர் குற்றவியல் பொறுப்புக்கு உள்ளாகிறாா்.  

    தன்னியல்பிலான  நடவடிக்கை/ செயற்பாடு/கடமைப் புறக்கணிப்பு. உள்நோக்கத்துடன் செய்யப்படும்போது சட்ட எதிர்க் குற்றமொன்றுக்குக் காரணமாகிறது

    Followers

    Blog Archive