Saturday, May 7, 2011

andre' sonnaargal 56-buildings 18 (ice-pot and hot-pot) : அன்றே சொன்னார்கள் 56 - கட்டடங்கள் 18

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : May 7, 2011


பழந்தமிழகத்தின் கட்டடக்கலை குறித்த பல்வகை இலக்கியக் குறிப்புகளையும் நெடுநல்வாடை என்னும் இலக்கியம் ஒன்றிலேயே மிகுதியான குறிப்புகள் உள்ளமையையும் கண்டோம். நெடுநல்வாடையிலேயே மேலும் பல குறிப்புகள் உள்ளன. மலைகளைப் போன்று அகலமும் உயரமும் உடைய கட்டடம் என்பதை
வரைகண்டன்ன தோன்றல் (நெடுநல்வாடை 108) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.
வானளாவிய கட்டடங்களில் வானுலகைத் தீண்டும் வண்ணம் மிக உயர்வாக அமைந்த மேல்நிலை மாடம் குறித்து
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் (நெடுநல்வாடை : 60) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.
மழைமானி முதலான பல அறிவியல் செய்திகளும் இவற்றில் இடையிடையே கலந்து காணப்படுவதையும் கண்டோம். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்றவகையில் கட்டடங்களை அமைத்த அறிவியல் செய்திகளும் உள்ளன. இளவேனில் காலத்தில் உறங்குவதற்கு ஏற்ற படுக்கையறையில் தென்றல் காற்று வீசுவதை
வேனில் பள்ளி தென் வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது (நெடுநல்வாடை 61-2) என்கிறார் ஆசிரியர் நக்கீரனார்.
கட்டளை என்பது பலகணி அல்லது காற்றுமாடத்தைக் குறிக்கிறது.
குளிர்ந்த நீரைச் சேமித்து வைத்துக் குடிப்பதற்கான குளிர்கலனும் (ice-pot) குளிர்காலத்தில் பருத்த வாயை உடைய வெண்ணீர்க்கலனும் (hot-pot)பயன்படுத்தப்பட்டமையை
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகு வாய் தடவில் செந் நெருப்பு ஆர – (நெடுநல்வாடை 64 – 66)
என்னும் வரிகளில் தெரிவிக்கிறார்.

கல்லென்கின்ற ஓசையினையுடைய சிறுதுவலையை வாடைக்காற்று எங்கும் பரப்பு கையினாலே இளையோரும் முதியோரும் குவிந்தவாயையுடைய செம்பாகிய குளிர்க்கன்னலில்  தண்ணீரைக் குடிக்காமல் பகுத்தாற்போன்ற வாயையுடைய தூபக்கரண்டியாகிய இந்தளத்தில் இடும் சிவந்த நெருப்பின் வெம்மையைப் போன்ற வெந்நீரைப் பருகினர்  என்பதை இவ் வரிகள் உணர்த்துகின்றன.

படுக்கை முதலான மனைப்பொருள்கள், கட்டில் முதலான இல்லணிகள் (furnitures) ஆகியன குறித்தும் குறிப்புகள் உள்ளன. அரண் அமைப்பு மதிலமைப்பு முதலானவை குறித்தும் பல்வகைக் குறிப்புகள் உள்ளன. இவை குறித்துப் பின்னர்க் காணலாம்.
இலக்கியங்களிலேயே நம்மால் எண்ணற்ற குறிப்புகளைக் காணமுடியும் பொழுது உரிய துறைநூல்களில் மிகுதியான அறிவியல் உண்மைகள் தெரிவிக்கப்பட்டிருக்கும் அல்லவா? இத்தகைய உண்மைகளை மேனாட்டு அறிஞர்கள் மேற்கொள்ளும் பல்வகைப்பட்ட ஆய்வு முடிவுகளும் நமக்கு உணர்த்துகின்றன. 1950களில் சோவியத்து நாட்டினர் குமரிக்கடலில் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொண்டு கடலுள் முழ்கிய தமிழர் நாகரிகம், பண்பாடு முதலியவற்றில் அடைந்திருந்த சிறப்புகளை வெளிப்படுத்த முன்வந்தனர். மத்திய அரசு மறுத்து விட்டது.  பண்டைத்தமிழர்களின் சிறப்புகளை வெளிப்படுத்திய ஆராய்ச்சி அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான,  எடின்பரோவைச் சேர்ந்த   கிரகாம் என்காக்கு (Graham Hancock) என்னும்  தொல்லியல் ஆராய்ச்சியாளர், தம் சொந்தச் செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்போதைய பூம்புகார் நகரின் அருகிலேயே கடலில் 18 கல் ஆழத்தில் பழைய பூம்புகார் நகரம் புதையுண்டு உள்ளமை அறிய வருவதாகவும் சிதையாத கட்டடங்கள் கடலின்அடியில் உள்ளன என்றும் கி.மு.17,000 ஆண்டிற்கு முற்பட்ட தொன்மைச் சிறப்பு உடையன என்றும் வெளியிட்டார். தமிழர்க்கு நலன் சேர்க்கும் எந்த வரலாற்று உண்மையையும் மறைக்க எண்ணும் மத்திய அரசு அவரது உதவியை உதறியதாலும்  மேற்கொண்டு ஆராய்ந்து உண்மைகளை உலகிற்கு உணர்த்த  விரும்பாமையாலும்  நாம் அடைந்திருந்த எண்ணற்ற அறிவியல் சிறப்புகள் மறைந்தே கிடக்கின்றன. தமிழ்நாட்டரசாவது தமிழர்நல அரசாக மாறி ஆழ்கடல் ஆராய்ச்சிகளையும் அகழ்வாராய்ச்சிகளையும் தொடர்ந்து உண்மைகளை வெளிக்கொணர முன்வரவேண்டும்.

Tuesday, May 3, 2011

andre' sonnaargal 55-buildings 17 (rain gauge) : அன்றே சொன்னார்கள் 55 - கட்டடங்கள் 17 (மழைமானி)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : May 3, 2011
.
கட்டடச் சிறப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கட்டடக்கலையுடன் பிற அறிவியல் துறைகளின் சிறப்பும் இணைந்து விளங்குவதையும் காண்கிறோம். அத்தகைய அறிவியல் செய்தியில் ஒன்று, உயர்ந்த கட்டடங்களில் மழை அளவை அறிவதற்காக மழைமானியைப் பொருத்தி இருந்துள்ளனர் என்பதாகும்.
கிரேக்கத்தில் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் மழைஅளவைப் பதிந்து வைத்ததாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.  அதற்குப் பின்னர் கி.பி.நூற்றாண்டுகளில், கொரியா அல்லது சீனாவில் மழையை அளப்பதற்கான அளவி ஒன்றை (rain gauge) உருவாக்கியதாகவும் கூறுவர். தொடர்ந்து 1662 இல் கிறிசுடோபர் ரென் (Christopher Wren) என்னும் அறிவியலறிஞர் முதலில் வாளியக மழைமானியைக் (tipping-bucket rain gauge) கண்டுபிடித்தார். மழை வளைமானி (udometer), என்பனபோல் பல்வகை மழைமானிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை எல்லாம் பேரளவினதாகவே இருந்தன. சைமன் (George James Symons) என்னும் அறிவியலறிஞர் 1863 இல் பிரிட்டன்  வானிலை ஆராய்ச்சிக் கழகத்திற்குத் (British meteorological society) தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 1890 வரை மைக்கேல் பாசுடர் வார்டு (Colonel Michael Foster Ward) என்பார் துணையுடன் தரப்படுத்தப்பட்ட எளிய மழைமானியை உருவாக்குவதற்காகப் பல்வகை ஆய்வுகளை மேற்கொண்டார். இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இப்பொழுது பயன்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட எளிய மழைமானி உருவாக்கப்பட்டது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே மழையை அளப்பதற்கான சிறிய கருவியை – மழைமானியைப் பழந்தமிழர் பயன்படுத்தி உள்ளனர்; அவற்றை உயரமான வீடுகளிலும் பொருத்தி இருந்துள்ளனர் என்பது சிறப்பான வானிலைஅறிவியல் செய்தி அல்லவா?
கட்டடங்கள் அமைக்கும் பொழுது நீண்ட முடியை உடைய கவரிமான் (நெடுமயிர் எகினம்), குறுங்கால்களை உடைய அன்னம் ஆகியவை தாவித்திரியும்  அகன்ற பரப்பு உடையதாக வாசலின் முகப்பில் முன்னிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஆசிரியர் நக்கீரனார்,
நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோடு உகளும் முன்கடை(நெடுநல்வாடை : 91-92)
என்கிறார்.
கட்டடத்தின் மண்தள முகப்பைக் கூறும் ஆசிரியர் அதன் உயர் பரப்பான மேல்நிலை முற்றத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக்
கிம்புரிப் பகுவாய் அம்பணம் (நெடுநல்வாடை : 95-96)

இவ்வரிகள் மூலம், நெடிய மாடியின் உயர்தளமாக, வெண்ணிலவின் ஒளியில் மகிழும் வண்ணம் அமைக்கப்பட்ட நிலா முற்றத்தில் (மொட்டைமாடியில்) மீனின் வாய்போன்று பகுக்கப்பட்டு-பிளக்கப்பட்டு- அமைக்கப்பட்ட அம்பணம் என்னும் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார். (இதில் நிறைந்து வழிந்து கீழே விழும் மழைநீர் ஓசை அருவி ஓசைபோல் இனிமையாய் இருப்பதைக் கூறுவதற்காக இதனை இந்த இடத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் நக்கீரனார்.)
ஆமைவடிவில் உள்ள முகத்தல் அளவைக் கருவிக்கு   அம்பணம் என்று பெயர். அந்த அளவில் சிறியதாக உள்ள மழைமானிக்கும் அம்பணம் என்று பெயரிட்டுள்ளனர். எனவே, பிற நாட்டார் தொட்டி, வாளி போன்ற அளவில் மழை நீர்  சேர்த்து மழை அளவை அறிந்திருந்த காலத்திற்கு முன்னரே நம் தமிழ் முன்னோர், சிறிய அளவிலான மழைமானியைப் பயன்படுத்தி உள்ளனர் என்பதும் அதனை  உயரமான வீடுகளில் பயன்படுத்தும் வண்ணம் பொதுமக்களும் அதன் பயன்பாட்டு முறையை அறிந்திருந்தனர் என்பதும் கட்டடக் கலையுடன் இணைந்த வானிலை ஆராய்ச்சி அறிவியல் கலையாகிறது. கணந்தோறும் மாறும் வானிலையையும் ஆராய்ந்தறிந்த வண்டமிழர்  வஞ்சகர் மனநிலையை அறியாமல் நம்பக்கூடாதவர்களை நம்பி அழிந்து கொண்டுள்ளனரே! என்னே அவலம்!

Saturday, April 30, 2011

Andre' sonnaargal 54- buildings 16: அன்றே சொன்னார்கள் 54 - கட்டடங்கள் 16

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 30, 2011

கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம்.
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90)
வெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ படக்கூடாது. எனவே யானை மீது அமர்ந்து வெற்றிக் கொடியைப் பிடித்தால் வரும் உயரத்திற்குக் கோபுர வாயில் அமைக்கப்பட்டது. மலையைக் குடைந்து திறந்தவெளி உருவாக்குவதுபோல் (குன்று குயின்று அன்ன) அமைக்கப்பட்ட அகலமும் உயரமும் உடையதாக வாயில் அமைந்தது. எல்லா வகைப் பொருளும் வந்து குவிக்கப்படும் வளமைக்கு எடுத்துக்காட்டான (திருநிலை பெற்ற) குற்றமற்ற சிறப்பினை உடைய  முன்றிலை அமைத்து அதில் மணலைக் கொண்டு வந்து பரப்பினர்.
வெற்றிக் கொடியை யானை மீது உயர்த்திப் பிடித்து உலா வரும் மரபைப் பிற புலவர்களும் கூறி உள்ளனர்.
கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
(புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் : பதிற்றுப்பத்து : 52.1)
மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி வரைமிசை
அருவியின் வயின் வயின் நுடங்க (ஆசிரியர் கபிலர் : பதிற்றுப்பத்து :69:1-2)
உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
(ஆசிரியர் பெருங்குன்றூர் கிழார் : பதிற்றுப்பத்து : 88:17)
கோல்களிற்று மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும்
(புலவர் நெட்டிமையார் : புறநானூறு : 9:7)
மலையைக் குடைந்து முனிவர் இருப்பிடம் அமைக்கப்பட்டதை ஆசிரியர் மாங்குடி மருதனார்
குன்றுகுயின்றன்ன அந்தணர் பள்ளியும் (மதுரைக்காஞ்சி:470) எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இங்கு அவ்வாறு குறிப்பிட்டது கற்பனை யல்ல என்பதையும் மலையைக் குடைந்து திறந்த வெளி அமைப்பது போன்ற அகலமும் உயரமும் உடைய வாசல்கள் முன்பு அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
உழைப்பாலும் இயற்கையாலும் வணிகத்தாலும் பெறும் செல்வங்களுடன் பகைவர் போர்க்களத்தில் விட்டுச் செல்லும் யானைகளும் பகை நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் குதிரைகள், பசுக்கள், செல்வங்கள்  முதலானவையும் தோழமை நாட்டினர் திறையாகச் செலுத்தும் செல்வங்களும் எனப் பல்வகைச் செல்வங்கள் வந்து குவியும் இடம் ஆதலின், செல்வமாகிய திருநிலை பெற்றது எனக் கூறியுள்ளார். ஆசிரியர் மாங்குடி மருதனாரும்
கங்கைஅம் பேரியாறு கடல்படர்ந் தாங்கு
அளந்து கடையறியா வளம்கெழு தாரம் (மதுரைக்காஞ்சி 696-697)
என்கிறார்.
எனவே, பல்வகை வளங்களும் குவிப்பதற்கு ஏற்ற வகையில் முகப்பு இடத்தையும் வாசலையும் அகலமாகவும் உயரமாகவும் அமைத்திருந்தனர் என்பது சரிதான்.
தனி வீடுகளில் விழா அல்லது சிறப்பு நாட்களில் வீட்டின் முன்புறம் மணல் பரப்பும் பழக்கமும் இப்பொழுதும் உள்ளது. அவ்வாறு மணலைக் கொண்டு வந்து (தருவித்து) முற்றத்தில் பரப்புவது என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பழக்கமாக  இருந்துள்ளது. பிற இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆசிரியர் மாங்குடி மருதனார்,
தருமணல் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப (மதுரைக்காஞ்சி 684)
(அரிஞிமிறு – வண்டுகளும் ஞிமிறுகளும்) என்கிறார்.
ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்,
விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் (மணிமேகலை : 1:50-51)
என்கிறார். எனவே, வீடுகளில் மட்டும் அல்லாமல் அகலமான வீதிகளிலும் மன்றங்களிலும் மணல் பரப்புவதும் அவ்வப்பொழுது பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.
எனவே, வீடுகளின் முன்பக்க முற்றங்களில் மணலைக் கொண்டு வந்து பரப்பும் அளவிற்கு ஒவ்வொரு வீடும் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டு இருந்துள்ளன.
உயரமான, அகலமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதை மேலே உள்ள வரிகள் மூலம் அறிந்த நாம், பிற சிறப்புகளை அடுத்துக் காணலாம்.

Thursday, April 28, 2011

andre' sonnaargal 53 - buildings 15: அன்றே சொன்னார்கள் - கட்டடங்கள் 53


கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 28, 2011




 
வானளாவியும் அகன்றும் உருவாக்கிய பழந்தமிழர்  கட்டடப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக நெடுநல்வாடை என்னும் இலக்கியச் சான்றை முன்னர்ப் பார்த்தோம். கட்டுமானப் பணி சார்ந்த தச்சுப்பணியைப் பற்றிய குறிப்பை இப்பொழுது காண்போம்.
கட்டடம் கட்டும்பொழுது முதலில் வாயில் நிலைகளை அமைத்தல் இப்போதைய வழக்கம். இப்பழக்கம் காலங்காலமாக நம்மிடம் இருந்து வந்துள்ளது. எனவே, முதலில் உயர்ந்த வாயிலுக்கான நெடுநிலை அமைப்பது குறித்து ஆசிரியர் நக்கீரனார் பின்வருமாறு கூறி உள்ளார்:-
பருஇரும்பு பிணித்துச், செவ்வரக்கு உரீஇத்
துணைமாண் கதவம் பொருத்திஇணைமாண்டு
நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி கால்அமைத்து
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பில்
கைவல் கம்மியன் முடுக்கலில் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல்வாடை 80-86)
உயரமும் அகலமும் உடைய வாயில்களுக்கு – ஒற்றைக் கதவுகளாக இல்லாமல் இருபுறமும் மூடும் வகையில் – இரட்டைக் கதவுகளே அமைக்கப்பட்டன. மிக அகலமான வாசல்களுக்கு  மடக்கி மூடும் கதவுகள் அமைக்கப்பட்டன (துணைமாண்கதவம்). அவ்வாறு அமைக்கும் பொழுது அவற்றைப் பிணிப்பதற்கு ஆணி முதலான இரும்புப் பொருள்கள் பயன்படுத்தப் பெற்றன. மரக் கதவுகளுக்கு நிறம் ஊட்டுவதற்குச் செவ்வரக்கு (சாதிலிங்கம்) பூசப்பட்டது,



அழகிய வேலைப்பாடு, உறுதி, தோற்றப் பொலிவு முதலியவற்றால் சிறப்பு பெற்றனவாய் அவை அமைந்தன. பல இணைப்புகளாகக் கதவுகள் உருவாக்கப்பட்டாலும் இணைக்கப்பட்டதற்கான அடையாளம் தெரியாதவகையில் மாட்சிமை மிக்கதாக (இணைமாண்டு) அக் கதவுகள் அமைந்தன. உத்தரம் என்பது ஒரு விண்மீனின் பெயர். கதவு நிலையில் மேல் இடப்படும் பாவுகல்லின் பெயர் உத்தரக்கற்கவி என்பதாகும். எனவே, உத்தரம் என்னும் விண்மீன் பெயர் உடைய உத்தரத்தில்(நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து) குவளைப் பூ வடிவிலான புதுமையான பிடியைப் பொருத்தினர் (போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்து); கதவின் பகுதியாகவே தாழ்ப்பாளைப் பொருத்தினர்; கைத்திறன் மிகுந்த கம்மியர்கள் நன்கு முடுக்கினர்; இடைவெளி தெரியாத அளவில் (புரை தீர்ந்து) ஒற்றைக் கதவுபோல் உருவாக்கினர்; வெண்சிறுகடுகினை (ஐயவி)யும் நெய்யையும் அதில் பூசினர். இவ்வாறு வாயிலுக்குரிய நெடிய நிலையினை அமைத்தனர்.
இவ்வாறு கதவுகளில் வெண்சிறுகடுகையும் நெய்யையும் கலந்து கதவுகளில் பூசும் வழக்கத்தை ஆசிரியர் மாங்குடி மருதனார்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மாடம் (மதுரைக்காஞ்சி : 253-255)
எனக் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் உறையூர் கதுவாய்ச் சாத்தனார்
நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்கு நகர் விளங்க (நற்றிணை : 370.3-4) என்கிறார்.
நெய் என்பதைப் பாலில் இருந்து பெறும் நெய்என்றே அனைவரும் பொருள் கொண்டுள்ளனர். அவ்வாறு பொருள் கொண்டதால் தெய்வ வணக்கத்திற்காக நெய் பூசியதாகத் தவறாகக் கருதி உள்ளனர். எள்ளில் இருந்து பெறப்படுவதை எள் நெய் என்பது போல் நெய் என்பது பொதுச்சொல். கதவுகளுக்கு மெருகேற்றப் பயன்படுத்திய நெய்யை – மெருகெண்ணெய்யை – நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.
கதவுகளை அமைக்கும் பொழுதே சீரும் சிறப்புமாகவும் உலுத்துப் போகாமலும் அரிக்கப்படாமலும் நிலைத்து நிற்கும் வகையில் சிறந்த மரத்தால் (விழுமரத்து) அமைத்ததுடன் மெருகுநெய்யும் பூசிப் பாதுகாத்து உள்ளனர் என்பதே சரியானதாகும்.
இவற்றின் தொடர்ச்சியான சிறப்பை அடுத்தும் காண்போம்.

Tuesday, April 26, 2011

andre' sonnaargal 52 - buildings 14 :அன்றே சொன்னார்கள் 52 - கட்டடங்கள் 14

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -14

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 26, 2011

பழந்தமிழ் நாட்டில் இன்றைய கட்டடங்களைப் போலவும் சில நேர்வுகளில் அவற்றை விடச் சிறப்பாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டமையைத் தொடர்ந்து பார்த்தோம். ஊர்களும் நகர்களும் நகரமைப்பு இலக்கணத்திற்கு இணங்க அமைக்கப்பட்டிருந்தமையும் கட்டட அமைப்பின் சிறப்புகளை உணர்த்துவதாகக் கருதலாம். இன்றைய மாதிரி நகர் அமைப்புபோல் அன்றைய ஊர்கள் அமைந்திருந்தன. பரிபாடல் இணைப்பு (8:1-6) நமக்கு ஊர் அமைப்பையும் அதன் மூலம் கட்டட அமைப்பையும் விளக்குகின்றது. புலவர் பின்வருமாறு அவற்றை விளக்குகிறார் : -
தாமரைப் பூவைப் போன்றது சீர் மிகுந்த ஊர்; தாமரைப் பூவின் இதழ்களைப் போல் தெருக்கள் அமைந்துள்ளன. பூவின் நடுவே உள்ள மொட்டைப் போன்றது அரண்மனை; அம் மொட்டில் உள்ள தாதுக்களைப் போன்றவர்கள் தமிழ்க்குடி மக்கள்; அத்தாதினை உண்ண வரும் பறவைகளைப் போன்றவர்கள்  பரிசுகள் பெற வருவோர்.
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீர்ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்;
தாதுண் பறவை அனையர் பரிசில் வினைஞர்
எனவே, நகரம் தாமரைப்பூவின் இதழ்களின் அமைப்பைப் போன்று  சீரிய நிலையில் சிறப்பாக இருந்துள்ளமை நன்கு புலனாகும்.
பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மரபுக் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும்  இன்றைக்குக் கட்டடப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதற்கான துறை நூல்களும் உள்ளன. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டடஅறிவியல், வானறிவியல் நூல்களைப் படித்தவர்கள்தாம் கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். அத்தகைய நூல்கள்  இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்தாலும் அவ்வாறான நூல்கள்  இருந்தமைக்கான குறிப்புகள் உள்ளன.
அரண்மனை அமைப்பு குறித்து ஆசிரியர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், நெடுநல்வாடையில் தெரிவித்துள்ளமை இன்றைக்கும் என்றைக்கும் சிறப்பான கட்டட  அமைப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.
அரண்மனையை எழுப்ப வேண்டும் எனில் அதற்கு அடிக்கல் நாட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடுத்தே அப்பணியைத் தொடங்குவர். நல்ல நாள் என்பது மூட நம்பிக்கையின்படி இல்லாமல், மழை போன்ற தொந்தரவு இல்லாக் காலத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகச் சித்திரைத் திங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கட்டட நூலில் நன்கு புலமை பெற்றவர்கள், சித்திரைத் திங்களில் 10 ஆம் நாளில் இருந்து 25 ஆம் நாள் வரை உள்ள ஏதேனும் ஒரு நாள் நண்பகல் பொழுதில் இருகோல்நட்டு அந்தக்கோலின் நிழல் வடக்கிலோ தெற்கிலோ சாயாமல் இருந்தால் அந்த நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துச் செய்வர் (அடிக்கல் நாட்டுவர்). இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்த காரணம், அப்பொழுதுதான் சூரியன் பூமியின் நடுவாக இயங்கும்.
புலவர் நக்கீரனார் பின்வருமாறு இதனைத் தெரிவிக்கிறார் : -
மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின் (நெடுநல்வாடை : 72-79)
மாதிரம் என்றால் திசை என்றும் வானம் என்றும் பொருளுண்டு. விரிகதிர் என்பது விரிந்து செல்லும் சூரியனின் கதிரைக் குறிக்கின்றது. வியல்வாய் மண்டிலம் என்பது அகன்ற பரப்பினை உடைய கதிரவனின் மண்டிலத்தைக் குறிக்கிறது. நிலத்தில் இரண்டு இடங்களில் கோலை நடுவதாலும் அவற்றால் நிழல்கள் விழுகின்றனவா என்பதன் அடிப்படையில் சூரியனின் இயக்கத்தைக் குறித்து அறிவதாலும் இருகோல் குறிநிலை என்கிறார். வழுக்காது என்பது கீழே சாயாத நிழலைக் குறிக்கின்றது. ஒரு திறம் சாரா என்பது வடக்கிலோ தெற்கிலோ நிழல் சாயாமல் இருப்பதைக் குறிக்கின்றது. அரைநாள் அமயம் என்பது பகலில் பாதியாகிய உச்சிப் பொழுதினைக் குறிக்கின்றது. புலவர் என்போர் இலக்கியப் புலவர் மட்டுமல்லர்; ஏதேனும் ஒரு துறையறிவில் புலமை உடையவர் யாவரும் புலவரே. அந்த வகையில் கட்டட அறிவியலில் புலமை பெற்றவர்களைக் குறிக்கின்றது. கட்டடம் கட்டுபவர்கள் கட்டுமானத்திலும் சிற்பத்திலும் வல்லவராக இருத்தல் வேண்டும். வானறிவியலும் அறிந்தால்தான்   கட்டுமானப்பணியைத் தொடங்குவதற்குரிய காலத்தைத் தேர்ந்தெடுக்க இயலும். இன்றைக்கும் கொத்தனார்கள் நூலிட்டுக் கட்டுமானப் பணியை ஆற்றுவதை நாம் காணலாம். அதுபோல் கணக்கிடுதலில் எவ்வகைத் தவறும் நேராமல் மனைக்கு நூலிட வேண்டி உள்ளதால், நுண்ணிதின் கயிறிட்டு எனக் குறித்துள்ளார். தேஎங்கொண்டு  தெய்வம் நோக்கி என்றால் எந்த எந்தத் திசைகளில் எவை எவை அமைய வேண்டும் எனக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை வணங்கி என்றும் அரண்மனையில் எந்தத் திசையில் தெய்வ உருவங்களை அமைக்கலாம் எனக் குறித்துக் கொண்டு என்றும் பொருள் கொள்வர். பெரும்பெயர் மன்னன் என்பது அரசர்க்கு அரசரான வேந்தரைக் குறிக்கிறது. (இந்த இடத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கின்றது.) வேந்தருக்கேற்றவாறான அரண்மனையை வாழ்விடமனை, அந்தப்புரம், மன்றம், நாள்ஓலக்க மண்டபம், படை வீடு, கருவூலம், ஓவியக்கூடம், பூங்கா, வாயில்கள், கோபுரங்கள், அகழி, மதில், கோட்டை என்பன போல் பலவாறாக வகுத்துத் திட்டமிட்டு உரியவாறான வரைபடங்களை இட்டு, அதற்கிணங்கப் பணிகளைத் தொடங்குதலாகும். ஒருங்குடன் வளை, ஓங்குநிலை வரைப்பில் என்பது இவை யெல்லாம் ஒருங்கே அமைந்த உயர்வான மதிலை உடைய வளாகத்தைக் குறிக்கிறது.
இவ்வாறு அரண்மனை அமைப்பதன் தொடக்கப்பணி நக்கீரரால் குறிக்கப்படுகின்றது. எனவே, மிகச்சிறந்த கட்டட வல்லுநர்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர் என்பதை நாம் உணரலாம். இதற்கடுத்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தொடர்ந்து  காணலாம்.

Monday, April 25, 2011

andre' sonnaargal 51 - buildings 13: அன்றே சொன்னார்கள் 5-கட்டடங்கள் 13

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13http://natpu.in/?p=5999

பதிவு செய்த நாள் : April 25, 2011


முன்னரே குறிப்பிட்டவாறு உயிரியறிவியலும் பயிரறிவியலும் தனியே பார்க்கப்பட வேண்டியவையே! இருப்பினும்  இங்கே நாம், கட்டட அறிவியல் குறித்துப் பார்த்தாலும் கட்டட அமைப்பிற்குத் துணைநிற்கும் தோட்ட வளர்ப்பு குறித்தும் கால்நடை வளர்ப்பு குறித்தும், சிறிது அறிவதும் பொருத்தமானதே என்பதால் நாம் மனைத்தோட்டம் குறித்துப் பார்த்தோம். இனி மனைவளர்ப்பு உயிரினங்கள் சில குறித்துக் காண்போம்.
தோட்ட அமைப்பைச் சார்ந்தே வீடுகள் அமைக்கப்பட்டமை போல் உயிரினங்களின் வளர்ப்பிற்கும் ஏற்ற அளவில் அவை சிறப்பாக அமைக்கப்பட்டன.
வீடுகளில் பறவைகள் வளர்க்கப்பட்டன.; அதற்கேற்பவே வீடுகளும் அமைக்கப்பட்டன. வீடுகளில் புறாக்கள் வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒருவர் மனையுறை புறவு (நற்றிணை:162.1) என்றும் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மனைஉறை புறவின் செங்காற்சேவல் (அகநானூறு : 254.5) என்றும் (செங்காற்சேவல் – கால்கள் சிவப்பு நிறமாக உள்ள ஆண்புறா) குறிப்பிடுகின்றனர்
கோழிகள் வளர்க்கப்பட்டமையைப் புலவர்  ஒக்கூர் மாசாத்தியார்,
      மனையுறை கோழிக் குறுங்கால் பேடை (குறுந்தொகை : 139.1) என்றும்,
புலவர் பரணர்,
      மனைச் செறிகோழி (அகநானூறு: 122.16) என்றும், புலவர் மாமூலனார்,                மனைஉறை கோழி (அகநானூறு: 187.14) என்றும், கருவூர் நன்மார்பனார்,    
    மனைஉறைக் கோழி (அகநானூறு : 277.15) என்றும், மதுரை நக்கீரர்,     
    மனைக்கோழி (புறநானூறு 395.9) என்றும் குறிப்பிடுகின்றனர்.
குருவிகள் மனைகளில் வளர்க்கப்படுவதைப் புலவர் மாமலாடனார் (குறுந்தொகை : 46.2)  பெருங்குன்றூர்க்கிழார் (புறநானூறு  : 318.4) ஆகியோர்   
    மனையுறை குரீஇ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
வீடுகளில் நாய் வளர்க்கப் பட்டதும் புலவர் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் என்பவரால்
    மனைவாய் ஞமலி (நற்றிணை : 285.5) எனக் குறிக்கப்பட்டுள்ளது.


கறவை மாடுகள் வளர்க்கப்படுவதைச் சோழன் நல்லுருத்திரன் கலித்தொகை (111.2)யில் குறிப்பிட்டுள்ளார்.
கன்றை ஈன்ற பசுக்களின் கூட்டம் வீடுகளில் நன்றாகப் பசியார புல் மேய்ந்து இருக்கும் நிலையை விளக்கி வீடுகள் பசுக்கூட்டத்தை வளர்க்கும் வகையில் பெரிதாக இருந்தன என்பதையும் பசுக்கள் வளர்க்கப்பட்டதையும் புலவர் கபிலர் (புறநானூறு  :117.4-5)
     மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
    ஆமா நெடுநிரை நன்புல் ஆர
என்னும் வரிகளில் தெரிவிக்கிறார்.
இவ்வாறு தோட்டப்பயிருக்கும் கால்நடைகள், பறவைகள் வளர்ப்பிற்கும் ஏற்ற முறையில் வீடுகள்  அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கையோடு இயைந்த சூழலில் வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர் நம் முன்னோர் – அன்று! 
இயற்கையாலும் செயற்கையாலும் இடருற்று அழிகின்றனர் நம்மவர்கள் – இன்று!

Friday, April 22, 2011

andre' sonnaargal 50 - buildings 12 :அன்றே சொன்னாரகள் 50 - கட்டடங்கள் 12

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 22, 2011





மிகச் சிறந்த கட்டட அமைப்பிற்குச் சான்றாக நெடுநல்வாடை இலக்கியம் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கும் முன்னர், வீடுகளோடு தொடர்புடைய செடி, கொடி, மரம், கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு குறித்துச் சிறிது பார்ப்போம்.
வீடுகள் கட்டட அறிவியலுக்கு எடுத்துக்காட்டானவை. எனினும் மரம், செடி, கொடிகளையும்    பறவையினங்களையும் விலங்கினங்களையும் வளர்க்கும் தோட்ட அறிவியல், பறவையியல், விலங்கியல் முதலான பிற அறிவியலுக்கும் ஏற்பவே வீடுகள் அமைக்கப்பட்டன. எனவே, அவை குறித்து  வீடுகளின் தொடர்ச்சியாகக் காண்பதும் பொருத்தமானதே.
நல்ல காற்றிற்காகவும் உணவுப் பொருள் தன்னிறைவிற்காகவும் வீடுகளில் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை முற்றங்களில் பூச்செடிகளாகவும் கொடிகளாகவும் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் தோட்டமாகவும் தோப்பாகவும் அமைந்திருந்தன. வீடுகளில் வளர்க்கப்படும் மரத்தை  மனைமரம் எனப் புலவர் மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் (அகநானூறு 58.13), புலவர் பாண்டரங் கண்ணனார் (புறநானூறு : 16.5) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.


வீட்டின் நடுவே உள்ள முற்றத்தில் முல்லை வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒருவர்
மனைநடு மௌவல் (நற்றிணை 115.6 ) என்கிறார்.
வீட்டில் நொச்சி வளர்க்கப்பட்டமையைப் புலவர் காவன் முல்லைப் பூதனார்
மனைஇள நொச்சி ( அகநானூறு : 21.1) என்றும் புலவர் காப்பியஞ்
சேந்தனார்
மனைமர நொச்சி (நற்றிணை : 246.3) என்றும் பரணர்
மனைவளர் நொச்சி (அகநானூறு : 367.4) என்றும் குறிப்பிடுகின்றனர்.
வயலை வளர்க்கப்பட்டமையைப் புலவர் மருதம்பாடிய இளங்கடுங்கோ
மனைநகு வயலை (அகநானூறு: 176.13) என்றும் புலவர்  ஓரம்போகியார்
மனை நடு வயலை (ஐங்குறுநூறு : 11.1) என்றும் குறிப்பிடுகின்றனர்.

புலவர் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் வீட்டிற்கு முன்பக்கம் முற்றம் அமைக்கப்பட்டு அதில் பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். அம் முன்முற்றம் குரவை ஆடும் வகையில் இடப்பரப்பு உடையதாகவும் இருந்துள்ளது. இவற்றை
மணி ஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியல்அறை வரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும் (அகநானூறு: 232.8-10)
என்னும் வரிகள் தெரிவிக்கின்றன.
(வீட்டு முற்றத்தில் பொன்போன்ற பூக்கள், மணியைப் போன்று அரும்புகளாக மலர்ந்து உள்ளன. அவை கீழே விழுந்து பரவி அகலமான பாறைகளை அழகுபடுத்துகின்றன. அதில் குறவர்கள், அவ்வீட்டில்  உள்ள ஆடலில் வல்ல மகளிரோடு குரவை ஆடுவர். அறை – பாறை.)
வீட்டுத் தோட்டத்தில் மிளகுக் கொடி வளர்த்துள்ளனர்; குடிலின் இறவாணம் குறுகியதாக உள்ளது. இக்கருத்தை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
குறுகல் நண்ணிய கறிஇவர் படப்பைக்
குறிஇறைக் குரம்பை நம் மனை (அகநானூறு: 272.10-11)
எனக் குறிப்பிடுகிறார்.
(கறிஇவர்-மிளகுக் கொடி படர்ந்த; குறிஇறைக் குரம்பை-குறுகிய இறையை (இறவாணத்தை) உடைய குடில்)
புன்னை மரங்கள் வளர்க்கப்பட்டதைப் புலவர் மோசிக்கரையனார்
பொழில்மனைப் புன்னை (அகநானூறு  260.8) என்கிறார்.
சுவையான பழம்தரும் இரவமரத்தின் தழைகளுடன் வேப்ப மரத்தின் இலைகளையும் வீட்டின் இறவானத்தில் செருகி வைப்பதைப் புலவர் அரிசில் கிழார்,
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ (புறநானூறு  : 281.1) எனக்
குறிப்பிட்டுள்ளார்.

பொதுமன்றத்தில் உள்ள விளாமரத்தின் பழம் வீட்டருகே வீழ்ந்ததைப் புலவர் கருந்தும்பியார்,
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் (புறநானூறு:181.1) எனக்
குறிப்பிட்டுள்ளார். (வெள்ளில் – விளாம்பழம்)
ஒவ்வொரு நாட்டிலும் காவல் மரம் என ஒன்றை வளர்த்து அதற்கு முதன்மை கொடுத்து வந்தனர். அரண்மனையில் வளர்க்கப்படும் காவல் மரம் என்பது அரசரின் வெற்றியின் அடையாளமாகக் கருதப்பட்டது. புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் (கடிமரம் தடிதல் ஓம்பு : புறநானூறு 57:10),  புலவர் கல்லாடனார் ( கடிமரந் துளங்கிய காவும் :  23: 9-10) ஆகியோர் பகைநாட்டின் காவல்மரம் குறித்துக் கூறியுள்ளனர். (வேந்தர் வளர்க்கும் காவல்மரம் போன்றே நம் முன்னோர்கள், ஒவ்வொரு கோயிலிலும் தல மரம் என ஒரு மரத்தை வளர்த்துச் சுற்றுப்புற அறிவியலில் கருத்து செலுத்தி உள்ளனர். இப்பழக்கம் இன்றுவரையும் கோயில்களின் உள்ளமையை நாம் காணலாம்.)
பயிரறிவியல் குறித்துத் தனியாக விரிவாக ஆராயும் அளவிற்குச் செய்திகள் உள்ளன. ஆனால், வீட்டில் மரங்கள் வளர்க்கும் அளவிற்கும் தோட்டங்கள் அமைக்கும் அளவிற்கும் கட்டடங்கள் அமைக்கப்பட்டன என்பதால் இங்கே அவை பார்க்கப்பட்டன. இப்பொழுதோ இட நெருக்கடி என்ற பெயரில் ஒவ்வொரு வீடும் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு மர வளர்ப்பிற்கு இடமில்லாமல் அமைக்கப்படுகின்றன!

Followers

Blog Archive