Tuesday, December 30, 2014

கலைச்சொல் தெளிவோம் 18: சூட்டடுப்பு–oven


oven
kalaicho,_thelivoam01

18:   சூட்டடுப்புoven

அடுப்புஎன்னும் சொல்லைப் புலவர்கள்   பின்வரும் இடங்களில் கையாண்டுள்ளனர்.
முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி (பெரு 99)
ஆண்தலை அணங்கு அடுப்பின் (மது 29)
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே! (பதி 18.6)
அடைஅடுப்பு அறியா அருவி ஆம்பல் (பதி 63.19)
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில் (அக 119.8)
தீஇல் அடுப்பின் அரங்கம் போல (அக 137.11)
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ (அக 141.15)
உமண்உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் (அக 159.4)
களிபடு குழிசிக்கல் அடுப்பு ஏற்றி (அக 393.14)
முடித்தலை அடுப்பு ஆக (புற 8)
ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின் (புற 164.1)
பொருந்தாத் தெவ்வர் அரிந்தலை அடுப்பின் (புற 372.5)

அவென் (oven) என்றால் ஆட்சியியலில் சூட்டடுப்பு, உலையடுப்பு என்றும் பொறி நுட்பவியலில் அடுப்பு, உலை என்றும் வேளாணியல், கால்நடை மருத்துவ இயல் ஆகியவற்றில் அடுப்பு என்றும் மனைஅறிவியலில் உலை, சூளை, சிற்றுலை என்றும் குறிக்கப் பெற்றுள்ளன. ஃச்டவ் (stove) என்பதற்குப் பொறி நுட்பவியலிலும் மனையறிவியலிலும் அடுப்பு என்று குறிக்கப் பெற்றுள்ள. சூளை என்பது காளவாய் (kiln) என்னும் பொருளில் வருவது.
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை (புறநானூறு 228:3)

எனவே, அவென் (oven) என்பதற்கு அப்பொருளிலான சொல்லைக் கையாளுவது நன்றன்று.
ஆதலின்,
அடுப்பு – stove
சூட்டடுப்பு–oven
சூளை- kiln
எனக்குறிக்கலாம்.
 - இலக்குவனார் திருவள்ளுவன்


Monday, December 29, 2014

கலைச்சொல் தெளிவோம் -17 : சுரியலும் செதுவும்–Curl and Shrink


Leaf_Curl01
kalaicho,_thelivoam01

curl02

17 சுரியலும் செதுவும்–Curl and Shrink

சுரியல்(௫):
சுரியலம் சென்னிப் பூஞ்செய் கண்ணி (பதிற்றுப்பத்து ௨௭.௪)
 அரியல் வான்குழல் சுரியல் தங்க (புறநானூறு ௩௦௭.௬)
இவற்றுள் சுரியல் என முடிச் சுருள் குறிக்கப் பெறுகின்றது. இலைச்சுருளைக் குறிக்க leaf curl – இலைச் சுருக்கு (வேளா.) என்கின்றனர். சுருக்கு என்று சொல்வதைவிடச் சுரியல் என்பது மிகப் பொருத்தமாக அமைகிறது.
இலைச்சுரியல் – leaf curl
shrink என்பதும் சுருக்கு (வேளா., பொறி., மனை., கால்.) என்றே சொல்லப்படுகின்றது.
கூர்மை, ஒளி முதலியன மழுங்குவதும்   (get blunt, lose brightness, dim)   ஒடுங்குவதும், சுருங்குவதும் செது(4) எனச் சொல்லப்பட்டுள்ளது.
 புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர (புறநானூறு ௨௬௧.9)
என ஒளி மழுங்கிய கண் குறிக்கப்பட்டுள்ளது.  எனவே,
செது – shrink எனலாம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்


கலைச்சொல் தெளிவோம் 16: விந்துச்சுரப்பி – Prostate


prostate01
 kalaicho,_thelivoam01

16: விந்துச்சுரப்பி – Prostate

[பிராசுடேட்(prostate) என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் என்ன என்று திரு நாகராசன் திருமலை(ப்பிள்ளை) கேட்ட வினாவிற்கான விடையிது.]
  பிராசுடேட் சுரப்பி சிறுநீர்ப்பைக்குக் கீழே ஆண்குறியின் மேற்புறம் சிறுநீர்க்குழாய் (urethra) தொடங்கும் இடத்தருகே இச்சுரப்பி உள்ளது. நெல்லிக்காய் அளவு உள்ள இதன் எடை 7 முதல் 16கல்(கிராம்) ஆகும். இதன் வேலை ஆண் உயிரணுக்களைக் கொண்ட விந்துவின் அளவை அதிகரிக்கும் திரவங்களைச் சுரப்பதாகும். ஒருசார் ஆண்களுக்கு 50 அகவை கடந்த நிலையில் விந்துச்சுரப்பி விரிவடைகின்றது. இதனால் சிறுநீர் வரும் பாதையில் தடை ஏற்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், முக்கி முக்கிச் சிறுநீர் கழித்தல், விட்டுவிட்டுப்போதல், சிறுநீர் கழித்த பின்பும் சொடடு சொட்டாக வெளியேறல் முதலான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றது. மிகுதியாக விரிவடைந்தால் சிறுநீர் முற்றிலும் வராமல் அடைத்துப் போகலாம். இதைக் கவனிக்காது அப்படியே விட்டுவிட்டால் அழற்சி ஏற்படவும் பாற்சுரப்பிப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது; மிகுதியாக விரிவடைந்தால்சிறுநீர் முற்றிலும் வராமல் அடைத்துப் போகலாம்; சிறுநீரகச் செயலிழப்பு கூட நேரிடலாம்.
 prostate02
பிராசுடேட் என்னும் சொல் முன் நிற்பவர் என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.
எனவே, கிரேக்கப் பொருளின் நேர் ஆக்கமாக விக்கிபீடியா ‘முன்னிற்கும் சுரப்பி என்கிறது; மணவை முசுதபாவின் மருத்துவக்களஞ்சியப் பேரகராதி(2006) Prostate(gland) ‘சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பி என்கிறது.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் உடற்கூறு நூலில் பேரா.மரு.கிருட்டிணமூர்த்தி ‘முன்னிலைச் சுரப்பி என்கின்றார்.
தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் மருத்துவக் களஞ்சியம் ‘Prostate gland - ஆண்மைச் சுரப்பி என்கிறது.
  விந்து ஆண்மையின் அடையாளம் என்ற கருத்தில் இவ்வாறு கூறப்படுகிறது. ஆனால், ஆண்மை என்பதை ஆணின் தன்மை என்ற பொருளில் கையாளக்கூடாது. சான்றாண்மை, பேராண்மை, ஊராண்மை என்றெல்லாம் சொல்லும் பொழுது பொதுவான ஆளுமைத் தன்மையைக் குறிக்கிறது. ஆண்மை என்றால் வீரம், வெற்றி, செருக்கு, வலிமை, வாய்மையுடைமை எனப் பல பொருள்கள் உள்ளன. இப்பண்புகள் இருபாலருக்கும் உரியன. எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்.
 Prostate gland – சுக்கிலச் சுரப்பி என்கிறது மரு.ச.சம்பத்குமாரின் மருத்துவ அறிவியல் அகராதி (பக்.415). சுக்கிலம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. தமிழில் விந்துச் சுரப்பி என்றே கூறலாம்.
சுக்கிலம் என்றால் வெண்மை என்றும் பொருள். எனவே வளர்பிறைப்பருவக் காலத்தைச் சுக்கிலப்பக்கம் அல்லது சுக்கிலப்பட்சம் என்கின்றனர்.   விந்துவின் நிறம் வெண்மை என்ற முறையில் சுக்கிலம் என அழைக்கப்பட்டிருந்தாலும் சுக்கிலப்பக்கத்தையும் சுக்கிலச் சுரப்பியையும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடாது.
மூத்திரக்காய் என்று தமிழ்ச்சிறுநீரக (tamilkidney.com) இணையத்தளம் கூறுகிறது. இதனால், சிறுநீரகம் எனத் தவறாகப் பொருள் கொள்ளவாய்ப்புள்ளது.
சுக்கியன் / சுக்கிரியன் சுரப்பி என ஐரோப்பிய அகராதி, தமிழ் கியூபு அகராதி ஆகியன குறிக்கின்றன. வெண்மை நிறமுடைய சுக்கிரனில் இருந்து இப்பெயர் உருவானதா? அல்லது மேற்கோள் அகராதியில் நேர்ந்த தட்டச்சுப்பிழையா எனத் தெரியவில்லை.
பராகச் சுரப்பி என மருத்துவத்துறை அகராதி குறிப்பிடுகின்றது. (பராகம் என்றால் நறுமணப்பொடி, பூந்தாது எனப் பொருள்கள் உள்ளன.)
 “பிராசுடேட் சுரப்பி என்பது ஆண்பால் சுரப்பி : பால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பி” என விளக்குகிறது, மணவை முசுதபாவின் ம.அ.தொ.கலைச்சொல் களஞ்சிய அகராதி (1995) (பக்கம் 504). செயற்பாட்டு அடிப்படையில் அமையும் இச்சொல் பொருத்தமாக உள்ளது.
எனினும் விந்துச்சுரப்பி என்பது சுருக்கமாக உள்ளது. எனவே, விந்துச்சுரப்பி என்றே சொல்லலாம். விந்துப்பை   என்றும் சுருக்கமாகச் சிலர் குறிக்கின்றனர். ஐரோப்பிய அகராதி விந்து கூழ்ச் சுரப்பி எனக்கூறுகிறது. பால் என்பதை இந்த இடத்தில் பசும்பால், ஆட்டுப்பால் என்பதுபோல் தவறாக யாரும் கருதமாட்டார்கள். ஆண்பால் சுரப்பி என்பதைச் சுருக்கமாகப் பாற்சுரப்பி என்றும் கூறலாம்.
 விந்துச்சுரப்பி – Prostate
- இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, December 28, 2014

கலைச்சொல் தெளிவோம் 15 – நெறியுரை: சில குறிப்புகள்

kalaicho,_thelivoam01 

கலைச்சொல் ஆர்வலர் மிகுதியாக இருப்பினும் கலைச்சொற்கள் கண்டறியுநரும் புதியன புனையுநரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் உள்ளனர். நான் மாணவப்பருவத்திலிருந்தே கலைச்சொற்களில் ஆர்வம் காட்டி வருகின்றேன். நான் ஆட்சித்துறையில் இருந்தமையால்   தமிழ்க்கலைச்சொற்களையும் புதிய கலைச்சொற்களையும் பயன்பாட்டிற்குக் கொணரும் வாய்ப்பு கிடைத்தது.
அறிவியல் கலைச்சொற்களைப் பொருத்தவரை கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான் நிலைப்புத்தன்மை கிட்டும். வெறும் அ்கராதியாக இல்லாமல் சொல் விளக்கமாக இருந்தால்தான் புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும் என்பதால்தான் கலைச்சொல் விளக்கங்கள் அளித்து வருகின்றேன்.ஒரு சொல்லுக்கான பொருளையோ விளக்கத்தையோ தருவதுடன் நில்லாமல் அச்சொல் பயன்பாட்டில் உள்ள பிற இடங்களுக்கும் பொருள் கூறும்பொழுதூன் சொல்லாக்கம் செழுமையுறும்.அந்த வகையில் கலைச்சொல் விளக்கங்களை அளிக்கின்றேன்.
இணையக் குழுக்களிலும் முகநூல், நட்புவளையம், வலைப்பூ முதலான தளங்களிலும் சொல்லாக்கத் தொடருக்கு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கும் கருத்து தெரிவிப்பவர்களுக்கும் என்நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏற்புடைக் கருத்தாய் இருப்பினும் மாறுபட்ட கருத்தாய் இருப்பினும் உடனுக்குடன் மறுமொழி அளிக்க நேரமும் கணி மின்னஞ்சலைப் படிக்கவும் விடை விடுக்கவும் மிகு நேரம் எடுத்துக் கொள்ளும் வீட்டுக்கணிப்பொறி அமைப்பும் இடம் தரவில்லை. எனினும் தெரிவிக்கும் கருத்துகளைக் குறித்து வருகின்றேன். எனவே தொடர்ந்து கருத்துகளை எதிர்நோக்குகின்றேன்.
வேந்தன் அரசு எப்பொழுதும் கருத்து தெரிவிப்பதில் முன்நிற்கிறார். அவருக்கு நன்றி.
நூ.த.உ)லோ.சு. பட்டறிவு துணை கொண்டு தோல் பாகுபாடு குறித்து அருமையாக விளக்கம் அளித்துள்ளார். அவருக்கும் நன்றி.
புதிய கலைச்சொற்களை மிக இயல்பாகத் தம் கட்டுரைகளில் பயன்படுத்தும் முனைவர் இராம.கி. தம் சிறப்பான கருத்துகளைப் பகிர்ந்தமைக்கும் நன்றி.
நான் சொல்லாக்கம் குறித்துப் பல கட்டுரைகள் படைத்துள்ளேன்.
  1. ‘ஒரு சொல் – பல பொருள் : கலைச் சொல்லாக்க வளர்ச்சியின் முட்டுக்கட்டை’,
  2. ‘இதழியல் சொல்லாக்கம் – திறனாய்வும் நெறிமுறையும்’,
  3. ‘அன்றாட நடைமுறையில் சொல்லாக்கம்’,
  4. ‘இன்றைய தேவை குறுஞ்சொற்களே!’,
  5. ‘கணிணிக் கலைச் சொற்கள்’,
  6. ‘ஒலி பெயர்ப்புச் சொற்கள்’,’
  7. நேர் பெயர்ப்புச் சொற்கள்’,
  8. ‘தமிழில் சுருக்கக்குறியீடுகள்’,
  9. ‘வலைமச் சொற்கள்’, முதலான கட்டுரைகளிலும்
  10. ‘சங்க இலக்கியச் சொற்களும் கலைச்சொல் ஆக்கமும்’
என்னும் ஆய்வேட்டிலும் சொல்லாக்க நெறிமுறைகள்பற்றிக் குறித்துள்ளேன்.
கலைச்சொற்கள் நிலைப்பதற்குப் பின்வரும் பண்புகள் இன்றியமையாதவை.
1. சுருக்க அமைவு – செறிவு
2. விளக்கம் உடைமை – பொருள் விளக்கம்
3. பிறழ்பொருள் இன்மை – தெளிவு
4. பொருள் வேறுபாட்டை உணர்த்துதல் – பாகுபாடுடைமை
5. தமிழ்நிலமெங்கும் பயன்படும் தன்மை – பொதுமை
ஒரே சொல்லே வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் நேர்வு வரினும் பொருட்பாகுபாட்டைத் தெளிவாக உணர்த்த வேண்டும். இதனையே பாகுபாடுடைமை என்பது குறிக்கிறது.
கலைச்சொற்கள் தமிழ்நாட்டில் ஒருவகையாகவும் தமிழ் வழங்கும் பிற பகுதிகளில் வேறு வகையாகவும் இலங்கக்கூடாது. தமிழ்கூறு நல்லுலகெங்கும் ஒரே பொருளை உணர்த்தும் பொதுமைப் பண்பு வேண்டும். (ச.இ.சொ.க.சொ.ஆ.பக்கம் 26-27)
கலைச்சொற்கள் எளிமையும் செம்மையும் தூய்மையும் உடையனவாக இருத்தல் வேண்டும். எனவே, பிற மொழிச்சொற்களையும் ஒலிபெயர்ப்புச் சொற்களையும் கையாளுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
புரிதலுக்குத் தேவை எனக் கருதும் இடங்களில் மட்டும் அடைப்பிற்குள் அவற்றைக் குறிப்பிடலாம்.
எவ்வாறு நம்மால் பிடியளவு மண்ணைக்கூட உருவாக்க முடியாதோ அதுபோல் புதிய சொல் எதையும் உருவாக்க முடியாது. இருக்கின்ற சொற்களைச் சுருக்கியோ, விரித்தோ இணைத்தோ வடிவமாற்றம்தான் செய்ய இயலும்.
கலைச்சொற்கள் ஆக்க வேண்டும் என்று சொல்வது பொருந்தாது. தமிழில் சொற்கள் இருக்கின்றன. மேனாட்டுக் குறியீடுகளை உணர்த்தும் தமிழ்ச்சொற்கள் தமிழ்மொழிக்கண் உள்ளன. நாம் ஒன்றும் புதிதாய் ஆக்க வேண்டுவதில்லை. இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து வழங்க வேண்டுவதே நமது கடமை. தமிழ் மொழியில் கலைச்சொற்கள் காண்டல் என்று சொல்வதே பொருந்தும்.” (மேற்கோள் : முனைவர் இ.மறைமலை, சொல்லாக்கம் ப.16)
என்னும் மூதறிஞர் இராசாசியின் கருத்திற்கு நான் நூற்றுக்கு நூறு உடன்படுகின்றேன்.
 எனவே, பழஞ்சொற்களைக் கண்டறிந்து வழங்குவதைக் கடமையாகக் கொண்டுள்ளேன்.
 அவ்வாறு பழஞ்சொற்களைக் கையாளுகையில், ஒரே பொருளில் பல சொற்கள் இருக்கும் நேர்வுகளில், தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
 அச்சொற்களுள் எச்சொல் பெரிதும் ஒத்து வருகிறது, வேறுபொருள் பயன்பாடின்மை என்பனவற்றின் அடிப்பிடையில்தான் கலைச்சொற்களைக் காண வேண்டியுள்ளது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது என் மறுமொழிக்குத் தேவையிராது. எனினும் சிலவற்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
 ‘விதிர்’ என்பது நடுக்கத்தை முதன்மைப்படுத்துவதால் ‘அதிர்’ என்பதே சிறந்ததாய் அமையும். எனவே, அதிரி-vibrio என்பது பொருத்தமாக இருக்கும்.
 ‘இயல்’ என்பதை அறிவியல், பொருளியல், போன்று துறையறிவைக் குறிக்கப் பயன்படுத்துவதால் வேறு இடங்களில் இதனைப் பயன்படுத்தக்கூடாது என்பதை வரையறுத்துக் கொண்டுள்ளேன்.
 அம் விதி சேர்க்கப்பட்டுள்ள நேர்வுகளில் இகரத்தை அடுத்து வருமிடங்களில் இயம் என்பதுபோல் தோன்றுகின்றது.
 ‘உ’ என்பதன் அடிப்படையாக அமைவன உயர்ந்த இடத்தைக் குறிக்கும்.   நமக்கு மேலிடத்தில் – உயர்ந்த இடத்தில் இருந்து வரும தரவே ‘உத்தரவு’. மேற்புரத்தில் உயர்வாக அமைவதே ‘உத்தரம்’. இவற்றின் அடிப்படையில் ‘உம்பர்’ என்பதும் அமையும். எனவே புகழையும் உயர்ச்சியையும் குறிக்கும் ‘நிவப்பு’ என்பதை வேறு தக்க இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைக் கவனத்திற்குக் கொணர்ந்த வேந்தன் அரசிற்கு நன்றி.
   உள்ளுறுப்புகளை மறைக்க உதவுவதால் தோல் hide எனப்படுகிறது.இதனைப் புறணி என்று சொல்லலாம். விதைத்தோலுக்குப் புறணி எனலாம்.இவற்றுள் சிலவற்றுக்குத் தொலி வழக்கில் உள்ளது.பழத்தோல், மீன்தோல் தோலி எனப்படுகின்றன.
   தோலினால் ஆனக் கேடயம் தோல் எனப்படுகிறது. காழ் என்பதற்குக் கொட்டை என்றும் பொருள் உண்டு. தேயிலை நீர் தேநீர் எனப்படுவதுபோல் கொட்டையிலிருந்து காழிலிருந்து பெறப்படும் நீர் காழ்நீர் எனப்படலாம் என நான் காழ் என்பதைக் கொட்டைஎன்ற பொருளுக்கு வரையறுத்துள்ளேன். தொல்காப்பியர் குறிப்பிடும் மரக்காழ் பொதுவாக வயிரம், உறுதிப்பாடு என்ற பொருள்அடிப்படையில் தான் குறிக்கின்றனர்.
   Xylem is one of the two types of transport tissue in vascular plants, phloem being the other. The word xylem is derived from the Greek word ξύλον (xylon), meaning “wood”; the best-known xylem tissue is wood, though it is found throughout the plant என்பது விக்கிபீடியா தரும் விளக்கம். எனவே, மரம் என்பதன் அடிப்படையில் அறிஞர் அ.கி.மூர்த்தி ‘மரவியம்’ என்பது மிகச்சரியாகப்படுகிறது. எனவே, அதனைக்கையாண்டுள்ளேன்.
 நூ த லோ சு குறிப்பிடும் வணிக வரையறைபற்றிய சிந்தனை இதுவரை எழவில்லை. எனினும் சொல்என்பது பொருளைச் சுமந்து செல்லும் ஊர்திதானே! பயன்படும் இடங்களுக்கேற்பத்தானே பொருள் தருகிறது. எனவே, வேறு சொல் அமையாதவரை, பரவலான பயன்பாட்டில் இல்லாத அதள் – leather என்பதைப் பயன்படுத்துவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.
அல்லது விதைத்தோலுக்குத் தொலி என வரையறுத்தப் புறணி என்பதைப் பதப்படுத்தப்படாத தோலுக்குக் கூறலாம்.
 தோல் – உடலின் மேலே போர்வையாக அமைவது. (skin / hide)
அதள் – பயன்பாட்டிற்கு உதவும் பதப்படுத்தப்பட்ட உயிரினத்தோல்கள்
புறணி – பதப்படுத்தப்படாத உயிரினத்தோல்கள்
 தொலி – விதைத்தோல்
தோலி – பழத்தோல்
  இந்த இடத்தில் சொல்லாய்வு என்னும் பெயரில் இயங்கும் முகநூல் குழுவையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
 சொல்லாய்வுப் பகிர்விற்குச் சிறந்த தளமாக உள்ளதால் கணி.மணி.மணிவண்ணன், பேரா. இரா.செல்வா, பேரா.கா.சேது முதலானவர்களுக்கும் கருத்தாளர்களுக்கும் நன்றி. தினமணியில் வரும் சொல் புதிது வாரம் ஒருமுறை வருவதாலும் சொல்லாக்க நெறிமுறைகளுக்கு மாறானவை இடம் பெறுவதாலும் சரியில்லை. ஆனால், இத்தளத்தில் மேற்கோள் கருத்தை முழுமையாக அறியும வாய்ப்பு உண்மையும் அன்றாடம் புதுப்புதுச்சொல் பற்றிய அறியவும் அறியாதவற்றைக் கேட்டுப் பெறவும் வாய்ப்பு உள்ளமையாலும் சிறப்பாக உள்ளது. ஆனால்,இதில் தவறான எடுகோள் ஒன்று இடம் பெறுகிறது.
ஒரு சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை என்றால் அது தமிழ்ச்சொல் அல்ல எனக் கூறுவதே அத்தவறான எடுகோளாகும்.
ஆயிரக்கணக்கான இலக்கியங்களில் நமக்குக் கிடைத்தவை 18தாம். எனவே, எல்லாச் சொற்களும் இவற்றில் அடங்கியிருக்கும் என எதிர்பார்ப்பது தவறாகும்.
ஒரு சொல் நேரடியாக இடம் பெறாவிட்டாலும் அதன் வேர் வடிவம் அல்லது பிற வடிவம் இடம் பெற்றிருந்தாலும் அச்சொல் சங்கக்கால அல்லது சங்கக்காலத்திற்கு முற்பட்ட சொல் எனத் தெளியலாம்.
சான்றாகப் பகவன் என்பது சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை என்பதால் தமிழ்ச்சொல் அல்ல என்பதுபோல் தெரிவிக்கப்படுகிறது.

காலத்தின் பகுப்பே பகல். அதனடிப்படையில் பிறந்தனவே பகலோன், பகவன் என்பன.
ஆதி பகவன் முதற்றே உலகு என்னும் பொழுது ஆதியாகிய பகவனை ன் – சூரியனை – முதலாக உடையது இவ்வுலகம் என்னும் அறிவயில் உண்மை வெளிப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் 29 இடங்களில் பகு என்னும் சொல்லும் 12 இடங்களில் பகுக்கும் என்னும சொல்லும் 4 இடங்களில் பகுத்து என்னும் சொல்லும் இதனடிப்படையிலான பகுத்தூண் என்பது ஓரிடத்திலும் பகு அடிப்படையில் பகல்(123), பகல்நாள்(1),பகலிட(1), பகலோன் (1) பகவு(1) பகற்குறி(2), பகா(1), பகாஅர்(1) உள்ளமையைச் சங்க இலக்கியச்சொல்லடைவு சுட்டுகிறது.அவ்வாறிருக்க பகவன் என்பதைத் தமிழல்ல என்பது எவ்வாறு பொருந்தும்?
ஒரு சொல்லைத் தமிழ் என்று மெய்ப்பிக்க வேண்டும் என்பவர்கள் அச்சொல் தமிழல்ல என மெய்ப்பிக்கலாம் அல்லவா? எனவே, அக்கால இலக்கியங்களில் நேரிடையாக இடம் பெற்றிருந்தால் மட்டுமே தமிழ்ச்சொல் என்னும் தவறான   எடுகோள் களையப்படின் இத்தளம் மேலும் சிறப்பாக அமையும்.
கருத்தாளர்களுக்கும் பதிவாளர்களுக்கும் பகிர்வாளர்களுக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
ilakkuvanar thiruvalluvan01 - இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive