Thursday, January 19, 2017

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017


வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 7/7


  “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்; மனித வாழ்விற்கான இலக்கணம் தமிழில்மட்டும்தான் உள்ளது; கற்புநெறிப்படி ஆடவரும் வாழவேண்டும்; தமிழ்நெறியைத் தமிழருக்காக, தமிழ் முன்னோர்கள் மரபுவழிமட்டும் நின்று உரைப்பதே தொல்காப்பியம் என இலக்குவனார் விளக்கும் பல கருத்துகளையும் ஆய்வாளர் நமக்கு அளிக்கிறார்.
  திருக்குறளுக்குப் பரிமேலழகர் வடநூற் கருத்துகளை ஒட்டி உரை செய்தமையையும் இலக்குவனார் அதனை மறுத்துத் தமிழர் மரபுப்படி விளக்கி யுள்ளமையையும், “பரிமேலழகர் – சி.இலக்குவனார் உரை ஒப்பீடு” மூலம் ஆய்வாளர் இரா.உமாதேவி ஆராய்ந்தளிக்கிறார்; அதிகார வைப்புமுறையிலும் குறள் வரிசை முறையிலும் பரிமேலழகரிடமிருந்து இலக்குவனார் வேறுபட்டுள்ளதையும் விளக்கியுள்ளார்.
  தொல்காப்பியருக்குப் பிற்பட்டகாலத்தவர் திருவள்ளுவர் என  ஆராய்ந்து பேராசிரியர் சி.இலக்குவனார் நமக்குத்  தந்துள்ளனவற்றை      முனைவர் இரா.செகதீசன் “தொல்காப்பியரா? திருவள்ளுவரா?”   என வினா தொடுத்து விடையாக விளக்குகிறார்; தொல்காப்பியர் தொகுத்தளிக்காத  அற்று, அனைய உவம உருபுகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்பதுபோன்ற ஆதாரங்களை இலக்குவனார் தெரிவிப்பதை நமக்கு இவர் விளக்குகிறார்; காய்ப்பு உவப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் சமய அரசியல் கலப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் இன்றைய ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகப் பேராசிரியர் இலக்குவனார் விளங்குவதையும் ஆய்வாளர் எடுத்துரைக்கிறார்.
    “வணிகவியல் பார்வையில் இலக்குவனார் கூறும் வாணிகம்”  எனச்  சங்கக்கால வணிகவியலை  நமக்கு இலக்கியம் வாயிலாக வழங்குவதை முனைவர் கோ.வீ.பிரேமலதா வணிகவியல் துறை நோக்கில் வடித்துத் தருகிறார். உள்நாட்டு வணிகம், அயல்நாட்டு வணிகம், போக்குவரத்து முதலியவற்றைப் பேரா. இலக்குவனார் விளக்கியுள்ளார்; இதன் மூலம் வணிகம் குறித்த பின்னாளைய வரையறைகளைப் பழங்காலத்திலேயே தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது; என வணிகவியல் அறிஞர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டுக்கட்டுரை அளித்துள்ளார்.
 இலக்கிய வரலாற்றை ஆய்வுக்கண்கொண்டு அலசுகிறார்; புத்தம் புதுக் கருத்துகளை  வல்லமையுடன் எடுத்துரைக்கிறார்; இலக்கியம்பற்றியும் தமிழ்பற்றியும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறும் கருத்துகள்  வழி  ஆராய்கிறார்; இவ்வாறு  ‘பழந்தமிழ்’ நூல் படைத்துள்ளார்;  இவற்றைக் குறிப்பிட்டுச்,  “சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு” எனச் சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர்  வேல்முருகன் சிறப்பாக அளிக்கிறார்; சங்கப்புலவர்களின் படைப்புகளையும் மேனாட்டுஅறிஞர்களின் ஆய்வுகளையும்  நுணுகிக்கற்ற இலக்குவனார்,  ஆய்வுக்கண்கொண்டே எதையும் அலசுகிறார்; புதிய கருத்துகளையும் அளிக்கிறார்; யாவற்றையும் நெஞ்சம் கவரும் வண்ணம் எளிமையாக விளக்குகிறார் என்கிறார்.
  “இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம்” குறித்து ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’நூலை அடிப்படையாகக் கொண்டு முனைவர் க.தமிழமல்லன், விரிவாக ஆராய்ந்து அளித்துள்ளார்; பேராசிரியர் இலக்குவனார்  சில குறட்பாக்களை முறை மாற்றி அளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  பேரா.சி.இலக்குவனார், ‘திருக்குறள் – எளிய பொழிப்புரை’ வழங்கும் பொழுது குறட்பாக்களை  நடைமுறை வைப்பின்படியே அளித்துள்ளார். எனினும் குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ்த் திருக்குறள் கருத்துகளை ஆராயும் பொழுது, அத்தலைப்பிற்கேற்ப முறை மாற்றி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலக்கணத்தின் துணைக்கொண்டு இலக்குவனார் திருக்குறளின் பல இடங்களை அழகாக விளக்குகிறார்; மறுக்க  வேண்டிய இடங்களில் பரிமேலழகரின் கருத்துகளை மறுக்கிறார்; ஆரியச் சார்பிலான கொடிய கருத்துகளைத் தெளிவாக மறுக்கிறார்; தனித்தமிழில் படைக்கிறார்;பல்துறைப் புலமை கொண்டு திருக்குறளுக்குச் சிறப்பான உரை யளித்துள்ளார் என்று பல்வகைக் கண்ணோட்டத்தில் ஆய்வாளர் அளிக்கிறார்.
  பேராசிரியர் சி.இலக்குவனார் பல்வேறுநிலைகளிலும் பல்வேறு துறைகளிலும் முன்னெடுத்துக்காட்டான அரும் பணிகளை ஆற்றியுள்ளார். அவற்றில், கல்விப்பணி, சொற்பொழிவுப்பணி, படைப்புப்பணி, தொல்காப்பியப் பரப்புரைப்பணி, காலஆய்வுப்பணி, சொல்லாய்வுப்பணி, சங்க இலக்கியப் பரப்புரைப்பணி,  குறள்நெறிப் பரப்புரைப்பணி, இதழ்ப்பணி,  ஆற்றுப்படுத்தும் பணி, தமிழ்க்காப்புப்பணி, ஆகிய  சிலவற்றைத் தொகுத்துக் கருத்தரங்கத்தின் மையத் தலைப்புரையாக “இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள்”  கட்டுரை அமைந்துள்ளது.
  கட்டுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளவாறு,   பேராசிரியரின் படைப்புகள் மேலும் விரிந்த ஆய்விற்குரியனவே!  பேராசிரியரின் ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’, எக்காலத்திற்கும்  ஏற்ற திருக்குறளுக்கு எக்காலத்திற்கும் ஏற்ற அறிவியல் அணுகுமுறையான விளக்கங்கள் கொண்டது. இது குறித்த  கட்டுரையை முனைவர் க.தமிழமல்லன் மட்டும் விரிவாக அளித்துள்ளார். இந்நூற்சிறப்பை ஆய்வாளர்கள் உணர்ந்து மாணாக்கர்க்குத் தெரிவிக்க வேண்டும்.
  பேராசிரியரின் முதல் படைப்பாகிய தனித்தமிழ்க் குறும்பாவியமான ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ ஆராய்ந்து போற்றுதற்குரியது.  தழுவல் ஆக்கத்திலும் தலை சிறந்தது.  இதில் இடம் பெற்ற கவிதைகள் குறிக்கப் பெற்றிருப்பினும் இப்பாவியம் குறித்த கட்டுரை இல்லை.  வாழ்க்கை நிகழ்வுப் பாவியமான  பேராசிரியரின் ‘துரத்தப்பட்டேன்’, ஆற்றுப்படை இலக்கணத்திற்கேற்ப எழுதப்பெற்ற பேராசிரியரின் ‘மாணவர் ஆற்றுப்படை’  முதலானவையும் விடுபட்டுள்ளன. இவை, சிறப்பான முறையில் ஆய்வு செய்திருக்க வேண்டிய நூல்களாகும். இதழியலறிஞர் பேராசிரியர் இலக்குவனார் எழுதிய தலையங்கங்கள் குறித்தும் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். பேராசிரியரின் ஆங்கில நூல்கள் குறித்த கட்டுரைகளும் இடம் பெறவில்லை. இவை போல்  இக்கருத்தரங்கத்தில் பார்க்கப்படாத நூல்கள் குறித்த ஆய்வுகள் இனி இடம் பெற வேண்டும். பேராசிரியர் நூல்களில் குறிப்பிட்ட சில பகுதிகளையே பலரும் ஆய்வுக்களன்களாக அமைத்துக் கொண்டது தற்செயல் நிகழ்வுதான். இனி, ஆய்வுத் தளங்களை வரையறுத்துக் கொண்டு  கருத்தரங்கங்கள் நடத்தப் பெற வேண்டும்.
   வாழ்க்கைக் குறிப்புகள் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்கப்பட்டு நீக்கலாம் எனப் பதிப்பாசிரியர் முதலில் கருதி,  அதன் பின்னர் அந்தந்தக் கட்டுரைஅளவில் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நீக்கவில்லை என அறிந்தேன். சில மேற்கோள்கள் திரும்பத் திரும்பக் கையாளப்பட்டிருப்பினும் பார்க்கும் கோணம் மாறுபடுவதால் கூறியது கூறலாக் கருத இயலவில்லை. நம் கருத்தில் ஆழப் பதிவதற்காக மீண்டும் மீண்டும்  இடம் பெற்றுள்ளன எனக் கருதலாம். எனவே, இவ்விரு இயல்பு நீங்கலாகப் பார்க்கும் பொழுது பேராசிரியரை அவரது படைப்புகள் வழியாகவும்  பணிகள் வாயிலாகவும்  நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளனர் எனலாம். ஆய்வாளர்கள் சிலர் தொடக்க நிலையில் உள்ளதால் அதற்கேற்ற நிலையில் படைப்புகள் உள்ளன. என்றாலும் பேராசிரியரை அறியாதவர் அறியச் செய்ய அவை உதவுகின்றன. எனவே, இக்கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு பாராட்டிற்குரியதாகவே உள்ளது. இதனைப் பாடமாக வைப்பதன் மூலம்  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்லாமல், கடந்த நூற்றாண்டின் தமிழ்ச்சூழல், தமிழ்காக்கும் போர்க்களம், தமிழின் செம்மொழித் தன்மை, தொன்மை முதலான சிறப்புகள் ஆகியவற்றையும் இக்காலத்தலைமுறையினர் அறிய இயலும். அதற்கு ம.தி.தா.இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையினர் முயல வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் ஆன்றோர்கள் உரைகளையும் இடம் பெறச் செய்வது மேலும் சிறப்பாக இருக்கும்.
  பேராசிரியர் இலக்குவனாரைப்பற்றிய பார்வை பலவாக இருப்பினும் படைப்பிலும் களத்திலும் தமிழ்ப்பரப்புப் பணியிலும் தமிழ்க்காப்புப் பணியிலும் சிறந்து நின்ற செந்தமிழ் அரிமா அவர் என்பதே அனைவரும் கண்ட கவினுறு காட்சியாகும்.
  சிறப்பான முறையில் கட்டுரை அளித்துள்ள கட்டுரையாளர்களுக்கும் இதற்குக்காரணமான கல்லூரி ஆட்சிக்குழுவினர், முதல்வர், தமிழ்த்துறைத்தலைவர், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறையினர், மணிவாசகர் பதிப்பகத்தார் என அனைவருக்கும் பாராட்டுகள்!
இலக்குவனார் புகழ் பாடி  இனிய தமிழ் வளர்ப்போம்!
நற்றமிழை நானிலமெங்கும் பரப்புவோம்!

இலக்குவனார்திருவள்ளுவன்

Wednesday, January 18, 2017

விருதாளர்களைப் போற்றுவதுதானே சிறப்பித்தலாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

விருதாளர்களைப் போற்றுவதுதானே சிறப்பித்தலாகும்!

  புதிய அரசின் முதல் விழா, திருவள்ளுவர் திருநாளாகவும் அறிஞர்களையும் ஆன்றோர்களையும் விருதுகள் அளித்துப் போற்றும் விழாவாகவும் நடைபெற்றது மகிழ்ச்சிக்குரியது.
  இன்று (தை 02, 2048 / சனவரி 15, 2017) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்வளர்ச்சித்துறையின் திருவள்ளுவர் திருநாள் – விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. செய்தித்துறையினர் கட்டுக்கோப்பான முறையில் நடத்தினர். காவல்துறையினரும் கெடுபிடித் தொந்தரவு இன்றி,  அமைதியான  சூழலை உருவாக்கியிருந்தனர். அரங்கத்தில் இடமின்றித் திருப்பி அனுப்பவேண்டிய  சூழல் வரும்வரை அனைவரையும் உள்ளே அனுப்பிக்கொண்டுதானிருந்தனர். அரங்கத்தில் சிறப்பிக்கப்படுநரின் குடும்பத்தினர் ஒளிப்படம் எடுக்கும்பொழுதுதான் வழக்கம்போல் துரத்திவிட்டனர்.
  தனிப்பட்ட முறையில் ஒளிப்படங்கள் எடுக்கக்கூடாது என்றால் எப்படி ஒளிப்படங்களைப் பெறுவதாம்! ஒளிப்படக்கலைஞர் விருதாளர்களிடமும் நலிந்த தமிழறிஞர்கள் ஐம்பதின்மரிடமும் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு கட்டணத்தைத் தெரிவிப்பாராம். அவர் சொல்லும் முறையில்  கட்டணத்தை வழங்கியபின்னர் ஒளிப்படங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பெறுமாம். பங்கேற்பாளர்களுக்கான ஒளிப்படங்களை விழா ஏற்பாட்டாளர்கள்  தங்கள் பொறுப்பில் பெற்று அனுப்பி வைப்பதுதானே அவர்களைச் சிறப்பிப்பதாகும்.
  இனி வரும் விழாக்களில் விழா நடத்தும் துறையினரே தங்கள் செலவில் ஒளிப்படங்களை உரியவர்களுக்கு அனுப்ப வேண்டும். அல்லது அவர்கள் தத்தம் பொறுப்பில் ஒளிப்படங்கள் எடுக்க இசைவு தர வேண்டும்.
  ஆட்சித்தலைமையும் கட்சித் தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதற்கு உ.பி.மாநிலத்தில் தந்தை மகன் கருத்துமாறுபாடும் கட்சிப்பிளவும் எடுத்துக்காட்டாகக் கூறப்படும். ஆனால், இரண்டும் ஒருவரிடமே இன்மையால் கட்சிக்கொடிகள், கட்சித் தோரணங்கள் முதலான ஆரவாரம் இன்றி இயல்பாக இருந்தது. இயல்பாகவே  முதல்வர் பன்னீர்செல்வம்  எளிமையானவர்  என்பதால், இச்சூழல் எளிமைக்கு  எளிமை சேர்த்து அழகூட்டியது.
  தமிழறிஞர்கள் சிறப்பிக்கப்பெறும் விழா என்பதால்,  தவறாகப் பேசிவிடுவோமோ என்ற அச்சத்தில் பெரியார் விருதாளர் பண்ருட்டி இராமச்சந்திரன் நீங்கலான – வரவேற்புரை யாற்றிய தலைமைச்செயலர்  முதற்கொண்டு அமைச்சர் பெருமக்கள் – அனைவரும் பேசாமல் எழுதிவந்து வாசித்தனர். அரசியல் மேடைகளில் ஆர்ப்பரிக்கின்ற அமைச்சர்கள் இங்கே வாசித்ததுபோல்,  பாடியும் கதைசொல்லியும் அவையைக் கவர்ந்த முதல்வர் பன்னீர்செல்வமும் கண்களை நிமிர்த்தாமல் வாசித்தார். இனி,  இவர்கள் வரும் விழாக்களில் உரையாற்றிச் சிறப்பினைச் சேர்க்க வேண்டும்.
  சிறப்பாக விழா நடைபெற்றாலும் விருதாளர்கள் தக்க  முறையில் சிறப்பிக்கப்பெறவில்லை. தக்கமுறையில் தங்க வைத்தும் ஊர்திகள் அனுப்பி அழைத்தும் விழா முடிந்ததும் அனுப்பி வைத்தும் தமிழ்வளர்ச்சி இயக்ககத்தினர் விருந்தோம்பலில் குறை வைக்கவில்லை. அப்படி என்றால் என்ன குறைபாடு என்கின்றீர்களா?
  அறிஞர்களுக்கும் ஆன்றோர்களுக்கும்  பொன்னாடை அணிவித்து, விருது அளித்து, உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை வழங்கியதுடன்,  அவரவர்க்குரிய தகுதியுரையையும் அப்படியே வழங்கி விட்டனர்.  பொதுவாகத் தகுதியுரை வாசித்து விருதாளர்களைப் பெருமைப்படுத்தித்தான் விருது வழங்குவதே முறையாகும். ஆனால், விழா அரங்கத்தைச் செய்தித்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையால், மேடை ஒழுங்கில் மட்டுமே கருத்து செலுத்தினர். தகுதியுரையை வாசித்து வழங்காமல் எல்லார்க்கும் தொகுப்பாளரைக்கொண்டு ஆற்றிய தமிழ்ப்பணிக்காக விருது வழங்கப்படுவதாக அறிவிக்கச் செய்தனர். விருதாளர்களுக்கும் விருதாளர்களின் குடும்பத்தினருக்கும் மட்டுமல்லாமல் வந்திருந்த தமிழன்பர்களுக்கும் இது வருத்தமளிப்பதாக இருந்தது. தங்களைப்பற்றிய சிறப்பினைக்கூறி அதற்குஅவையோர் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்பொழுது விருது வாங்குவதுதானே விருதாளர்களுக்கு உண்மையான உவகையாக இருக்கும்!
  எந்தச் சிறப்புகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன என அறியும் பொருட்டு,  “இவருக்கு எதற்காக வழங்கப்பட்டது” என ஒவ்வொருவர் குறித்த விருது அறிவிப்பின்பொழுதும் அவையோர் அடுத்தவரிடம் கேட்டது, “இவருக்குப்போய் எதற்காகக் கொடுத்தார்கள்” என்ற தொனிபோல் மாறிவிட்டது.
  செயலத்துறையைப் பொருத்தவரை, தமிழ்வளர்ச்சித்துறையும் செய்தித்துறையும் இணைந்த திணைக்களம்தான். தமிழ்வளர்ச்சித் துறையுடன் இணைந்து விழாவைச் சிறப்புற நடத்த வேண்டுமே தவிர, தமிழ்வளர்ச்சித் துறையைப் புறக்கணிக்கக்கூடாது. தமிழ்வளர்ச்சி இயக்குநரே சுவரோரமாக,  வாயிலருகே நின்று கொண்டிருந்தார். இதுவரை இல்லாத வகையில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் ஐம்பதின்மருக்குத் திங்கள்தோறுமான பொருளுதவி ஆணைகள் வழங்கப்பெற்றன. அவர்கள் தமிழ்வளர்ச்சி இயக்குநரைத்தான் அறிவார்கள். அவரை விழாவில் புறக்கணித்துள்ளார்களே எனப் பலரும் வருத்தப்பட்டார்கள்.
 தமிழ்வளர்ச்சித்துறையினருடன் இணைந்து நடத்தியிருந்தால். விருதாளர்களுக்கான தகுதியுரை வாசிக்கப்பெற்று விருதாளர்கள் பெருமைப்படுத்தப்பட்டிருப்பர். தகுதியுரையை வாசிக்கும் வகையில் தமிழ்வளர்ச்சி இயக்குநருக்கும் பிற அலுவலர்களுக்கும் பங்களிப்பு இருந்திருக்கும்.
  ஆனால், அவ்வாறு தகுதியுரை வாசிப்பதே முறை எனத் தமிழ்வளர்ச்சித்துறையினர் மன்றாடியும் மறுக்கப்பட்டதாக அறிய வந்தோம். துறையமைச்சரிடமோ முதல்வரிடமோ செயலர் தெரிவித்திருந்தால், அவர்களே  தகுதியுரை வாசிக்கப்பெற்று விருது வழங்கலே முறை என்று சொல்லியிருப்பர். ஆனால், முடிவு எடுத்தவர்கள் தங்கள் அளவில் தவறான முடிவெடுத்து விழாவிற்குக் களங்கம் சேர்த்து விட்டனர்.
  போனது போகட்டும்! இனியாவது விருது வழங்கும்பொழுது விருதாளர்களுக்கான தகுதியுரைகளை வாசித்துப் பெருமைபடுத்தி விருதுகளை வழங்க வேண்டும் என்பதில் கருத்து செலுத்தட்டும்! தமிழ்வளர்ச்சித்துறையைக் கிள்ளளுக்கீரையாக எண்ணாமல் மதிப்பதன் மூலம் தமிழறிஞர்களையும் மதிக்கட்டும்!
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (திருவள்ளுவர், திருக்குறள் 528)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

Tuesday, January 17, 2017

சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4) – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4)

வடிவச் சுருக்கத்திற்கு வழிகாட்டி
  பல நேர்வுகளில் கலைச் சொற்கள் சுருக்கமாகவும் செறிவாகவும்  இல்லாமல் தொடராக அமைந்து உள்ளன. எனவே, எளிமை கருதிப் பலரும் அயற்சொல் பயன்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சொல் விளக்கம் என்பது வேறு; கலைச் சொல் என்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டு கலைச்சொல் காணுநர் சுருங்கிய கலைச் சொல் வடிவங்களைக்காண்பதில் நாட்டம் செலுத்த  இவ்வாய்வு உதவும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் நடைக்கு உந்துதல்
  தமிழ்ப்பயன்பாட்டில் ஆர்வம் உள்ளதாக வெளிப்படுத்திக் கொள்ளும் பலர், எளிமை கருதிப் பிற சொற்களைப் பயன்படுத்துவதே சரி எனத் தங்களையும் குழப்பிக்கொண்டு பிறரையும் குழப்புகின்றனர். இத்தகையோர் போக்குதான் தமிழ்ப்பகைவர்கள் போக்கைவிடக் கொடுமையாக உள்ளது. தமிழ் மக்கள் தாங்கள் கண்டுபிடிக்காத  பொருள்களுக்கெல்லாம் தமிழில் பெயர் சூட்டுவது வீண் வேலை என்று பரப்புகின்ற இவர்களால் தமிழ்ச் சொல் பயன்பாடு குறைகின்றது. அத்தகையோரும் தமிழ்ச் சொல்வளத்தை உணருவதன் மூலம் தமிழ்ப் பயன்பாட்டில் நடைபோட உந்துதலாய்  இவ்வாய்வு அமையும் என எதிர் நோக்குகின்றேன்.
தமிழால் சொல்ல  இயலும்! தமிழில் சொல்ல இயலும்!
  இன்னும் சிலர் பெயர்ச்சொற்கள் அயல் மொழியில்  இருந்தால் என்ன? சுருக்கக்  குறியீடுகள் ஆங்கிலத்தில் இருந்தால் என்ன? அனைவருக்கும் அப்பொழுதுதானே புரியும் என்ற தவறான எண்ணத்தில் அயற்சொற்கள் பயன்பாட்டைப் பெருக்குகின்றனர். சீன நாட்டில் சுருக்கக்  குறியீடுகளும் சீன மொழியில்தான் குறிக்கப்பெற வேண்டும் எனச் சட்டம் இயற்றித் தங்கள் மொழியைக் காக்கின்றனர். நம் நாட்டிலும் அத்தகைய நிலை வரவேண்டும். ஆனால், இது போன்ற கருத்துகளை ஆராயும் தளமாக  இவ்வாய்வு  வரம்பு அமையவில்லை. எனினும்,  விலை மதிப்பில்லாத் தமிழ்ச் சொற்செல்வங்கள் நம்மிடையே  இருக்கையில் நம்மைவிட வறியவரிடம் ஏன் கடன் வாங்க வேண்டும் என்ற உணர்வை இவ்வாய்வு ஏற்படுத்தும்; எல்லாம் தமிழால் சொல்ல  இயலும்! தமிழில் சொல்ல இயலும்! என்ற நம்பிக்கையை  இவ்வாய்வு ஏற்படுத்தும்.
கலைச் சொல் வள விரிவிற்குத் துணைநிற்கும்
  முழுமையான கலைச் சொற்களாக அமையும் சங்கச் சொற்களை  எடுத்துரைப்பதுடன் இவ்வாய்வு முற்றுப்பெறவில்லை; அதற்கும் மேலாகச் சங்கச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு  கலைச் சொல் வளத்தை விரிவு படுத்த இயலும் என்பதை உணர்த்தும் வகையில் அவற்றை முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ ஒரு பகுதியாகவோ கொண்டு அமையும் கலைச்சொற்களையும்  கண்டறிந்து பழஞ்சொல் மீட்டுருவாக்கம் பல வகைகளிலும் கலைச் சொல் வள விரிவிற்குத் துணைநிற்கும் என்பதை உணர்த்துகிறது. எனவே, இவ்வாய்வு மிகுதியான சொற்கள் நம்மிடையே பயணம் செய்ய வழிவகுத்துள்ளதாகக் கருத வேண்டும்.
இலக்கியச் சொற்கள் கலைச்சொற்களாக மலரும் வாய்ப்பு
  இவ்வாய்வு மூலம் புதிய கலைச்சொற்களைமட்டுமே கண்டறிய வேண்டும் என்று எண்ணவில்லை.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சொற்களும் நடைமுறையில் உள்ள கலைச்சொற்களும் சங்கக்காலத்திலிருந்தே பயன்பாட்டில் உள்ளவைதாம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அவையும் குறிக்கப்பெற்றுள்ளன.  பல்வேறு துறைகளிலும் உள்ள கலைச்சொற்கள் அடிப்படையில் இலக்கியச் சொற்கள் இன்றைய கலைச்சொற்களாக மலரும் வாய்ப்பை இவ்வாய்வு வெளிப்படுத்தி உள்ளது. எனினும் நமது கலைச்சொற்களின் அகராதிகளில் அடங்காத பல கலைச்சொற்களும் உள்ளன; அவற்றையும் தமிழில் கொணர வேண்டும் என்ற எண்ணம் இருப்போருக்கு மேலும் பல கலைச்சொற்களைச் சங்கச் சொற்களிலிருந்து கண்டறிய இயலும். எனவே, அத்தகைய எண்ணம் கொண்டோர் இவ்வாய்வின் தொடர்ச்சியாகச் சங்கச் சொற்களில் இருந்து மேலும் பல புதிய கலைச் சொற்களை அறிமுகப்படுத்த முன்வரவேண்டும்.
சொற்கருவூலத்திற்குத் துணை சங்கச்சொற்களே!
  தமிழ்ச் சொல்வள வங்கிக்குப் பெரிதும் துணை நிற்பன சங்க இலக்கியச் சொற்களாகும். நாம் புதுச் சொல் புனையும் பொழுது நடைமுறைச் சொற்கள் கை கொடுக்காத பொழுது சங்க இலக்கியச் சொற்கள் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்வதே எளிய சொல்லாக்கப் பணியாக அமையும்.
அடையாளம் காட்டுதல்
  இதுவரை சங்கக் கடலில் மூழ்கிப் பல்வகை முத்துகள் எடுக்கப்பட்டுள்ளன. அள்ள அள்ளக் குறையாத வற்றாக் கருவூலம்தான் சங்க இலக்கியம். எனினும் சங்கக் கடலில் மூழ்கி கலைச் சொல் முத்துகளைக் கண்டெடுத்தோர் யாருமிலர். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சங்க இலக்கியச் சொற்களை அடிப்படையாகக் கொண்ட புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளனவே தவிர, முழுமையாய்ப் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கினார் யாருமிலர். சங்க இலக்கியத்திலிருந்து வேளாணியல் சொற்கள், வானியல் சொற்கள், ஆட்சியியல் சொற்கள், மருத்துவ இயல் சொற்கள், கணக்கியல் சொற்கள், பிற அறிவியல் சொற்கள் எனப் பல்வகைக் கலைச் சொற்களை அடையாளம் காணுவதே இவ்வாய்வுத் திட்டத்தின் நோக்கமாகும். இம் முயற்சியில் நூறு சொற்கள் கலைச் சொற்களாகக் கண்டறியப்பட்டாலும் அல்லது கலைச் சொல் வடிவாக்கத்திற்கு உரிய அடிப்படைச் சொற்களாகக் கண்டறியப்பட்டாலும் இதன் மூலம் பல நூறு சொற்களை உருவாக்க இயலும். எனவே, பணியின் அளவைப் பார்க்காமல் அருமையை நோக்கும் பொழுது சங்க இலக்கியச் சொற்களிலிருந்து கலைச் சொற்களை அடையாளம் காட்டும் பணி என்பது மிகவும் இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாகின்றது. அந்த வகையில் இன்றைய தமிழ்க்கலைச்சொல் கருவூலத்தில் சங்கச்சொற்கருவூலத்திலிருந்து நன்முத்துகள் சில,  அனைவரும்  ஏற்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. உரைத்துப் பார்ப்பின் தமிழின் உயர்வு புரியும். மேலும் இப்பணியில் ஈடுபடுவதற்கான இன்றியமையாமை புரியும். அத்தகைய அரும்பணியில் சிறுபணியைத் தொடங்கி வைக்கும் நல்வாய்ப்பு கிட்டிய மகிழ்ச்சியில் நன்றி கலந்த மகிழ்ச்சியுடன் ஆய்வுத்தளத்திற்கு அழைக்கின்றேன்.
இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive