Sunday, November 25, 2018

புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க!

தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன், திருவள்ளுவர் கூறும் படைமாட்சி இலக்கணத்திற்கேற்ப செம்மாந்த படை அமைத்தவர்.
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761)
என்கிறார் திருவள்ளுவர்.
இதற்கு விளக்கம் தரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்,
“அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும். அப் படையே வெல்லும் திறன் பெற்றிருக்கும்.”
என்கிறார். இந்த இலக்கணத்தின் படி அமைந்தது பிரபாகரனின் விடுதலைப்புலிகள் படையே!
“படைவீரர்களிடத்தில், ஒழுக்கக் குறைபாடான செயல்கள் இருத்தல் கூடாது” எனத் திருக்குறள் 769 இல் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். உலகிலேயே மதுவை நாடாத பெண்களின் கற்பிற்கு இழுக்கு சேர்க்காத ஒழுக்கமான படையாக இருப்பது பிரபாகரனின் விடுதலைப்புலிகள் படையே! ஒரு நாட்டிற்கு உதவச் செல்லும் அடுத்த நாட்டுப் படையாக இருந்தாலும் ஐ.நா.வின் பன்னாட்டுப்படையாக இருந்தாலும் எதிரிப்படை போல் பெண்கள் கற்பழிப்பில் ஈடுபடுவதை வரலாற்று நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அவ்வாறு இல்லாமல் ஒழுக்கமே உயிர்நாடி எனப் பிரபாகரன் அறநெறிப்படையை அமைத்திருந்தது பாராட்டிற்குரியதல்லவா?உலகம் உள்ளளவும் போற்றுதலுக்கு உரியது அல்லவா?
உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது. (குறள் 762) என்கிறார் திருவள்ளுவர்.
பெரும் நெருக்கடி ஏற்பட்டாலும் அழிவினால் துன்பம் வந்தாலும் அஞ்சாமையுடைய சிறப்பு தொன்று தொட்டு வரும் பெருமை கொண்டுள்ள  வீர மரபு கொண்டுள்ள படைக்குத்தான் இருக்கும் என்கிறார்.
இத்தகைய வீர மரபு கொண்டவர்களே தமிழ்ஈழப்படைஞர்கள். குறைவான எண்ணிக்கையில் மிகுந்த எண்ணிக்கை உடைய வீரர்களுடன் போரிட்ட அஞ்சாமையும் உலகின் பிற நாடுகள் எதிரியுடன் இணைந்து அழிக்க முற்பட்ட பொழுதும் எதிர்த்துப் போரிட்ட துணிவும் பிரபாகரனின் தமிழ் ஈழப்படையான விடுதலைப்புலிகள் படைஞர்களிடம் இருக்கின்றன.
 பல்வேறு வசதிக் குறைபாடுகள் இருப்பினும் தாய் நாட்டு நலன் காக்கத் தயங்காமல் போரிடும்  வீரமரபினரின் படையைச் சிறப்பாக நடத்துநர் மேதகு பிரபாகரன்.
இனப்படுகொலையாளிகளுடன் போரிடுவது மட்டுமல்லாமல், போர்க்கருவிகள், போர் ஊர்திகள் உருவாக்கவும் அவற்றிற்கான உதிரிப்பாகங்கள் உருவாக்கவும் தொழிலறிவும் அறிவியலறிவும் பெற்றவர்க ளே தமிழ் ஈழப்படைஞர்கள்!. மண்ணிலும் விண்ணிலும் நீரிலும் போரிடும் திறமை பெற்றவர்கள். வானூர்திகள் இயக்கவும்   ஏவுகணைகள் செலுத்தவும் நாவாய்கள் ஓட்டவும் நன்கறிந்தவர்களே விடுதலைப்புலிப் படையினர்.
போர் என்றால் மரணம் வர வாய்ப்பு உள்ளது. வராமலும் போகலாம். ஆனால் தாமாகவே மரணத்தை எதிர்நோக்கும் தற்கொலைப் படைஞர்களான கரும்புலிகள் வீரம் போற்றுதற்கும் வணங்குதற்கும் உரியதல்லவா? இத்தகைய படையை உருவாக்கிய மேதகு பிரபாகரன் சிறப்பிற்குரியவரல்லவா?
 தாய் மக்கள் மானம் காக்கவும் தாய்நாட்டு உரிமை காக்கவும் ஆட்சி நடத்திய அதற்கான சிறப்பான இருபால் இளைஞர் படையை நடத்திய மேதகு பிரபாகரன் மீண்டும் வருவார்; தம் பணியைத் தொடருவார்;  வெற்றி கரமாக அதனை முடிப்பார்; தமிழ் ஈழக் கொடி பாரெங்கும் பறக்கும்; தமிழர்கள் உரிமையுடனும் சிற்பபுடனும் வாழ்வர் என்னும் நம்பிக்கை பெரும்பான்மையரிடம் உள்ளது. அந்த நம்பிக்கையாளர்கள் சார்பாக நாமும் மேதகு பிரபாகரன் நூறு ஆண்டுகள் கடந்தும் நலமாகவும் சிறப்பாகவும் வாழ வாழ்த்துகிறோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Friday, November 23, 2018

புயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

புயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்!

அண்மையில் ஏற்பட்ட கடும்புயலால் உயிரிழந்த, உடைமைகள் இழந்த, துயருள் மூழ்கிய, வாழ்விழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம் ஆறுதல்களைத் தெரிவிக்கிறோம்.
பெரும்புயல் பாதிப்புகளைச் சரி செய்யவும் மறுவாழ்வு உதவிகளை வழங்கவும் பாடுபடும் அரசு ஊழியர்கள், அரசு சார் அமைப்புகளின் ஊழியர்கள், தொண்டு அமைப்புகள், கட்சியினர், இயக்கத்தினர், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் எனப் பலதரப்பட்டாருக்கும் நம் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறோம்.
தமிழக அரசு தன்னால் இயன்றதைச் செய்துள்ளதாகக் கருதி அதனையும் பாராட்டுகிறோம். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். எனவே, எதிர்பார்ப்பிற்கேற்ற போதிய செயல்பாடின்மைக்குக் காரணம் திறப்பாடின்மையே என எண்ண வேண்டி யுள்ளது. திறமையான அதிகாரிகள் இருந்தும் இயலாமைக்குக் காரணம் நமக்குப் புரியவில்லை. எனினும் மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் செயல்பட்டுத் துயருற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறோம்.
அனைத்துத் தரப்பாரும் பங்கேற்கும் குழுக்களை ஊர்கள் தோறும் அமைத்து மறுவாழ்வுப்பணிகளில் ஈடுபடவேண்டும். இதனால் அரசின் இடர்ப்பாடுகளைப் பிறரும் புரிந்து கொள்வர். அரசும் மக்கள் எதிர்பார்ப்பிற்கேற்ப மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட இயலும்.
தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழாம்(NDMA)-இல் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்பதிற்கு மேல் இராத வகையில் இருக்க வேண்டும் என்பது விதி. இப்போதைய உறுப்பினர்கள் நால்வர்தாம். எல்லா மாநிலங்களுக்கும் வாய்ப்பு கிட்டும் வகையில் சுழற்சி முறையில் மேலும் ஐவரை  உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்.
இந்தக் குழாம் இதுவரை 6 முறை மட்டுமே கூடியுள்ளது. நாட்டில் எந்தப்பகுதியில் இயற்கைப் பேரிடர் கூடாமல் இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? கண் துடைப்பாக இந்த அமைப்பு இருந்து பயனில்லை. உரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களை நியமிக்கவும் உரிய காலங்களில் கூட்டத்தைக் கூட்டவும் எந்த மாநிலமாக இருந்தாலும் தேவைப்படும் பொருளுதவியை அளிக்கவும் மத்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.
இச் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்திய மத்திய அரசைக் கண்டிக்க வேண்டும். மத்திய அரசிற்கு மிகுதியான வரி வருவாய் கிடைப்பது தமிழ்நாட்டில் இருந்துதான். என்றாலும் தமிழ்நாடு என்றால் மத்திய அரசு பாரா முகமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு இயற்கையால் பெரும்பேரிடர் ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு கருதிப் பார்க்காது. நாம் கேட்கும் உதவிக்கும் மத்திய அரசு தரும் உதவிக்கும் தொடர்பில்லாத அளவில் சிறிய தொகையையே  வழங்கும். எடுத்துக்காட்டாக அண்மைய  உதவிகளைப் பார்ப்போம்.
2011 புயலின் பொழுது தமிழக அரசு 5249 கோடி உரூபாய்  உதவித் தொகைகேட்டதற்கு 500 கோடி உரூபாய்தான் முதலில் விடுவித்தது.
2016 வருதா புயலின்பொழுது தமிழக அரசு 22573 கோடி உரூபாய் நிதியை விடுவிக்க வேண்டியதற்கு வெறும் 226 கோடி உரூபாய்தான்  அளித்தது.
2017 ஒக்கி புயலின் பொழுது தமிழக அரசு 13250  கோடி உரூபாய் நிதி வேண்டியதற்கு ஒப்பிற்காக 280 கோடி உரூபாய் தந்தது.
புயல் மழை வெள்ளப்பாதிப்புகளைப் பார்ப்பதற்கு உடனடியாகவும் மத்திய அரசு அல்லது தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழாம் வராது. காலங்கடந்து வந்தாலும் ‘அவனவன் அப்பன் வீட்டுப் பணத்தைக் கேட்பதுபோல்’ மத்திய அதிகாரிகள் நடந்து கொள்வர். உரிய உதவித்தொகையைப் பெறுவதற்கு நடத்தும் போராட்டமே பெரும் போராட்டமாக இருக்கும் பொழுது தமிழக அரசுதான் என் செய்யும்? இதுபோன்ற பிற மாநில அரசுகளும் என்னதான் செய்யும்?
 பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன்படி இயற்கைப்பேரிடர் வரையறைக்குட்பட்டவாறான நிதி உதவியைத் தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்க வேண்டும். மாறாக இழப்புகளுக்கான முழுத் தொகையையும் கேட்கக் கூடாது. மத்திய அரசும் தேவைப்படும் தொகையைக் குறைக்காமலும் காலந்தாழ்த்தாமலும் வழங்க வேண்டும்.
தேசியப்பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழாத்திலிருந்து மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழாம்களுக்குப் போதிய எதிர்பார்ப்புத் தொகைகளுக்கு முன்பணமாக வழங்க வேண்டும்.
இதுபோன்ற இயற்கைப் பேரிடர் எப்பொழுது ஏற்பட்டாலும் தமிழக அரசும் பிற மாநில அரசுகளும் கேட்கும் உதவித்தொகையில்  75 விழுக்காட்டிற்குக் குறையாமல் உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். எஞ்சிய தொகையை  உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் விடுவிக்கட்டும்.
மத்திய அரசிற்கு உள்ளபடியே நாட்டுமக்கள் நலன்களில் ஈடுபாடு இருக்குமெனில், ஊடகங்கள் மூலம் துயரங்கள் அறிய வந்தவுடன் தானாகவே முன்வந்து உதவித்தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறான நடைமுறைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு மக்களும் கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதற்கு இணங்காவிட்டால் நம் கண்டனக் கணைகள் மத்திய அரசின் மீது பாய் வேண்டும்.
இந்திய அரசே!
உடனடியாகத் தமிழக அரசு வேண்டும் உதவித்தொகைகளை விடுவி!
மக்களின் துயரங்களில் பங்கு கொண்டு துயர் தணிப்புபப் பணிகளில் ஈடுபடு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Saturday, November 17, 2018

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் 

பேரா.சி.இலக்குவனார் மாணவப்பருவத்தில் விடுமுறைக்காலங்களில் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் தனித்தமிழ் பொழிவுகள் நடத்தினார்; தமிழின் பெருமை, தமிழ் இலக்கியச் சிறப்பு, அயற் சொற்கள் கலப்பின்றித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டியதன் இன்றியமையாமை முதலானவற்றை வலியுறுத்தினார்.
முத்தமிழ்க்காவலர், செந்தமிழ் மாமணி எனப் போற்றப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப் பருவத்தில் இருந்தே தனித்தமிழ்ப் பாவலராகவும் தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகவும்  திகழ்ந்து தனித்தமிழ்க் காப்பிற்குத் தொண்டாற்றித் தனித்தமிழ்க் காவலராகப் போற்றப்படுகிறார்.
 பள்ளியில் படிக்கும் பொழுது தன்மதிப்பு இயக்கப் பற்றாளரான ஆசிரியர் அறிஞர் சாமி சிதம்பரனார் ‘இலட்சுமணன்’ என்னும் இவரின் பெயரை ‘இலக்குவன்’ என மாற்றினார். இப்பெயர் மாற்றம் இலக்குவனாரைத் தனித்தமிழில் முழு ஈடுபாடுகாட்டச் செய்தது. தமிழ்ப்பற்று ஊட்டி வளர்க்கப்பட்ட இலக்குவனார், அயற்சொற்களை அகற்றித் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் நிலைப்பாட்டிற்கு வந்தார். எனவேதான் உடன் பயிலும் மாணாக்கர்களிடம் மட்டுமல்லாமல், ஊர் தோறும்  சென்று ஊர் மக்களிடமும் (தனித்)தமிழ் ஆர்வத்தைத் தூண்டினார்.  இவ்வாறு மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர் அக்காலத்தில் வேறு எவரும இலர்.
புலவர் வகுப்பு பயிலும் பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்  தனித்தமிழ்ப்பாவியத்தை இயற்றினார்; தனித்தமிழ்ப் பாடல்களையே எப்பொழுதும் இயற்றினார்.
பள்ளித் தமிழாசிரியராய்ச் சேர்ந்த பின்னும், கல்லூரிப்பேராசிரியராய்த் திகழ்ந்த பொழுதும் மாணாக்கர்கள் வருகை எடுப்பின் பொழுது ‘உள்ளேன் ஐயா’ எனத் தமிழில் கூறுமாறு செய்தார். இஃது ஓர் இயக்கமாகத் தமிழ்நாடு எங்கணும் பரவியது.
விளையாட்டு வகுப்புகளிலும் ‘அன்பே கடவுள்’ என (love all என்பதற்கு மாற்றாக)த் தொடங்குவது, ஒன்று, இரண்டு, மூன்று என்பனபோல் தமிழில் சொல்வது என்னும் வழக்கத்தை உண்டாக்கினார்.
நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் இவரிடம் தமிழ் பயின்றவர் சொல் விளங்கும் பெருமாள். தனித்தமிழில் பேசுவதும் தமிழ்ப்பற்றை ஊட்டுவதுமே பேரா.இலக்குவனாரின் அன்றாடச் செயல்பாடு என்னும் அவர், ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.
ஒரு நாள் யாப்பருங்கலக் காரிகை நடத்திக் கொண்டிருந்தார். “ஐயா, ஒரு சந்தேகம்” என்றேன் நான். பேராசிரியர் முகத்தில் கருமேகம் திரண்டது. புத்தகத்தை மேசை மீது போட்டார். நிலைமையை உணர்ந்த நான்  “ஐயா, தெரியாமல்”  என்றேன்.
“ஐயா, நமது வகுப்பில் மறந்தும் பிற சொல் பேசலாமாய்யா? அதற்காகவாய்யா நான் இத்தனை பாடுபடுகிறேன். ஐயம் என்னும் சொல் இருக்க ஐயர் சொல் ஏனய்யா” என்றார்.
 நான் கண்ணீர் விட்டு அழாக்குறையாக எத்துணை வேண்டியும் மனம் ஒப்பினாரில்லை. கேட்ட ஐயம் போன இடம் தெரியவில்லை.  அன்றிருந்து வகுப்பில் யாரேனும் மறந்தும் பிற சொல் கலப்பரோ?” (செந்தமிழ், திசம்பர் 1973)
இவ்வாறு மாணாக்கர்கைளத் தனித்தமிழில் பேசச் செய்தார். ஐயர் தமிழ் என்று சொன்னாரே தவிரப் பேரா.சி.இலக்குவனார் சாதி வேறுபாடு பார்ப்பவ ரல்லர். பிராமண மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை  இல்லை என்பதால், கல்வி உதவித் தொகை தரும் நிறுவனங்களைக் கண்டறிந்து தானே விண்ணப்பப் படிவத்தை வாங்கி வந்து  பூர்த்தி செய்யச் செய்து அனுப்பி உதவித் தொகை கிடைக்கச் செய்வார்.  பணமுடையால் கல்லூரிக்குப் பணம் கட்டாத ஏழை மாணவர்களுக்குத் தாமாகவே முன் வந்து உதவும் பொழுதும் சாதி வேறுபாடு பார்க்காமல் இயலாமையை மட்டும் கருதி உதவுவார்.
பேரா.சொல் விளங்கும் பெருமாள் தன் கல்லூரிக்காலத்தில் பேராசிரியரின் தமிழ்க்காப்புப்பணியை நினைவு கூர்ந்து மேலும் பின்வருமாறு கூறுகிறார்.
“மாணவர்கள் தங்கள் கைகளில் தார்ச்செட்டி தூக்கித் தெருக்களில் காணப்படும் தமிழ்க்கொலைப் பெயர்களை அழித்தல் வேண்டும் “என்பார். “சிறு வெற்றிலைப்பாக்குக் கடைகளிலும் பெரிய உணவு விடுதிகளிலும் வண்ணக் குடிகளுக்கும் உணவு வகைகளுக்கும் நற்றமிழ்ப்பெயர்களைச் சூட்டவேண்டும்” என்று ஊக்கமூட்டுவார். இவ்வாறு அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களிலும் தமிழ்ப்பெயர் இருக்க வழி காட்டினார்.
ஒரு சமயம் தெ.தி.இந்துக்கல்லூரி முதல்வராக இருந்தபொழுது “நித்தியவெள்ளி உண்கலன் ஒன்று கேட்பாரற்றுக் கிடைத்துள்ளது. உரியவர் அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவிப்புப் பலகையில் அறிவிப்பை ஒட்டி யிருந்தார். இதனை அன்றைய ஆளுங்கட்சி சார்ந்த இதழ் ஒன்று கேலி செய்து எழுதியிருந்தது. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனாரிடம் கூறிய பொழுது, “அப்படியாவது உண்கலன் என்னும் நற்றமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் அல்லவா? மகிழ்ச்சி அடைவோம்” என்றார். இவ்வாறு நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது கண்டு உவகை கொள்பவர் அவர்.
 தனித்தமிழ் எனப்படும் தூய தமிழ் என்பது எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல. “தமிழ்மொழி மேலும் தமிழர் பண்பாட்டு மேலும் பிறர் பிறரால் ஏற்றப்பட்டிருந்த மாசுகளின் வழியாகத் தொல்காப்பியத்திலும் மாசேற்றப்பட்டிருந்தது. தமிழ்நெறிக்கு மாறாகச் சொல்லப்பட்ட – உரை காணப்பட்ட, அவற்றின் அழுக்கை அறவே துடைத்து மேலைநாட்டு ஆய்வியல் அறிஞர்களின் எண்ணத்தில் படிந்திருந்த கறைகளையும் மாற்றினார்.”(புலவர் மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன்,செந்தமிழ்க்காவலர் இலக்குவனார், பக்.14). இவ்வாறு தமிழின் தூய்மை துலங்கவும் பேரா.சி.இலக்குவனார் பாடுபட்டார்.
பேரா.சி.இலக்குவனார் தாம் பணியாற்றிய ஊர்களிலெல்லாம் தமிழ் அமைப்புகளைத் தோற்றுவித்தார். அவை மூலமும் மாலை நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும் நடத்தும் தமிழ் வகுப்புகள் மூலமும் தனித் தமிழ்ப்பற்றினை ஊட்டினார்; தனித்தமிழை மாணவர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பரப்பினார். வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், செய்தி யிதழ்கள் ஆகியவற்றில் அயற்சொற்களைக் களைந்து நல்ல தமிழ் வழங்கப்பாடுபட்டார். தமிழ்க்காப்புக்கழகம் முதலான தம் அமைப்புகளைத் தனித்தமிழ் பரவச்செயற்படுத்தினார்.
தாம் நடத்திய சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி முதலான பல் வேறு இதழ்கள்  மூலம் தனித்தமிழ் வளரப் பாடுபட்டார்.
  தமிழின் தூய்மை காக்கப்பட வேண்டும் எனப் பாடுபட்டவர் பேரா.சி.இலக்குவனார். எனினும் ‘தூயதமிழ்’ என்றும் ‘நல்ல தமிழ்’ என்றும் சொல்வதை விரும்புவதில்லை. அவ்வாறு சொன்னால், ‘மாசுடைத் தமிழ்’ என்றும் ‘கெட்ட தமிழ்’ என்றும் இருப்பதாகப் பொருள் வரும் என்பார். பயன்பாட்டில் பிற மொழிச் சொற்களைக் கலப்பது  பயன்படுத்துவோர் தவறு. அதற்காகத் தமிழ் மொழியைக் குற்றம் சொல்லக் கூடாது என்பார். எனினும் கலப்பிலிருந்து அடையாளப்படுத்துவதற்காகத் ‘தனித்தமிழ்’ எனச் சொல்லப்படுகிறது. தனித்தமிழ் என்ற சொல்லாட்சி அடிப்படையில் தமிழின் தூய்மையைக் காத்த பேராசிரியர் சி.இலக்குவனார் தனித்தமிழ்க்காவலர் என்று அழைக்கப் பெறுகிறார்.
தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த  தனித்தமிழ் இயக்கப் பாதையில் நடைபோட்டு எண்ணம், சொல், செயல், படைப்பு, பணிகள்  களப்பணி மூலம் தமிழ்க்காப்பில் சிறந்திருந்த தனித்தமிழ்க் காவலர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் வழியில் நாமும் பிற சொற் கலப்பினை அகற்றித் தமிழ் வளர்ப்போம்!
வாழ்க தமிழ்! ஓங்குக இலக்குவனார் புகழ்!
இலக்குவனார் திருவள்ளுவன்
[கார்த்திகை 01, 2049/ நவம்பர் 17. 2018 தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் 109 ஆம் பிறந்த நாள்]
– தினசரி நாள் 17.11.2018

Thursday, November 8, 2018

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ்நாட்டில் எல்லாக் கட்சியின் ஆட்சிகளிலும் தமிழ் வளர்ந்தும் உள்ளது; தளர்ந்தும் உள்ளது. எனினும் எந்த ஆட்சியிலும் தமிழ் எல்லா நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக மாற்ற எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசு, இருக்கின்ற பயன்பாட்டு நிலைகளிலும் தமிழைத் தொலைத்து வருகின்றது.
பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி தொலைக்கப்பட்டு வருகிறது. மாணாக்கர் எண்ணிக்கை குறைகிறது என்றால் அதை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் தமிழ்வழிப்பள்ளிகளை அரசு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றுகிறது.  அரசு மழலைப்பள்ளிகள் தொடங்க இருக்கிறது. ஆனால் அங்கு தமிழைத் தொலைத்துத்தான் அப்பள்ளிகளைத் தொடங்குகிறது.
பத்து அகவை வரை குழந்தைகளுக்கு அயல்மொழியறிவே திணிக்கப்படக்கூடாது என்பது கல்வி உளவியல். அதற்கு மாறாகப்பிஞ்சு உள்ளங்களில் ஆங்கிலத்தைத் திணித்துத் தமிழைத் தொலைக்கிறது தமிழக அரசு.
 பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 90 விழுக்காட்டிற்கு மேல் தமிழ் ஆட்சிமொழிச் செயல்பாடு இருந்தது. அத்தகைய துறைகளில்கூட இன்று தமிழ்ச்செயல்பாடு குறைந்துள்ளது. பதிவேடுகள், மடல்போக்குவரத்து, அறிவிப்புகள், மாறுதல் ஆணைகள், எனப் பல இடங்களிலும் தமிழ் இல்லை.
தேர்வாணையப் பாடத்திட்டங்களில் தமிழ் வரலாற்றிற்கு முதன்மை இல்லை. முதன்மை மட்டுமல்ல உரிய பங்கும் இல்லை.
தமிழ் மொழிச்சிறப்பு, தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பு, தமிழ் நாகரிகச் சிறப்பு, தமிழ் வரலாற்றுச் சிறப்பு முதலானவற்றை வெளிப்படுத்தும் வகையில் தேர்வாணையத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் இல்லை.
அதைவிடக் கொடுமை, தேர்வு வினாக்களைத் தமிழில் குறித்துத் தருவதற்குத் தக்கவர் இல்லை என்று கூறிச் சில தாள்களின் வினாத்தாள்களைத் தமிழில் தரப்போவதில்லை என அதன் செயலர் அறிவித்தார். அவரது கருத்துக்குப் பரவலாக எதிர்ப்பு ஏற்பட்ட பின்னர், அவர் தனது கருத்தை மறுத்திருக்கிறார்.
அப்படித்தான் தமிழ்வழிப்பள்ளிகைள மூடப்போவதில்லை என்று முதலில் அறிவித்தார்கள். பின்னர் எந்தெந்தப் பள்ளிகளை மூடப்போவதில்லை என்று அறிவித்தார்களோ அவற்றை எல்லாம் ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றி வருகின்றனர். ஒரு பள்ளியில் ஆங்கிலம் வருகின்றது என்றால் தமிழ் அங்கே தொலைக்கப்படுகிறது என்றுதானே பொருள்.
அரசு கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளை அறிமுகப்படுத்திய பொழுது அரசியலறிவியல், சமூகவியல் துறைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தனர். அந்தப் பாடங்களுக்குத்தான் தமிழில் வினா எடுக்க யாரும் இல்லையாம்!
 தமிழ்நாட்டுப்பாடநூல் கழகமே 50 ஆண்டுகளுக்கு முன்னரே கலையியல் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க அத்தாள்களுக்கான வினாக்களைத தமிழில் எடுக்க யாருமில்லை என்பது முரணில்லையா?.
மேனிலைக் கல்விக்கான பாடத்திட்டத்தில் அரசியல் அறிவியல் இருக்கும் பொழுது அதை நடத்தும்ஆசிரியர்களால் வினாத்தாளா அளிக்க முடியாது? அப்படியானால், ஆளில்லாமல் அல்ல, மனமறிந்தே தமிழைத் தொலைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிதான் இப்படி உள்ளது என்றால் முதன்மை எதிர்க்கட்சியும் அப்படித்தான் உள்ளது. தி,முக. சட்ட மன்ற உறுப்பினர்கள்தான் ஆங்கிலவழிப் பள்ளிகளைத் தொடங்க வலியுறுத்துகின்றனர். எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மழலையர் கல்வி நிலையிலேயே ஆங்கிலம் வேண்டும் என்று வழக்கு  தொடுக்கின்றார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், “தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்துகிறார்.
இவையெல்லாம் அவர்களின் தனிப்பட்டகருத்து என்று இவற்றை ஒதுக்க முடியாது. எதிர்க்கட்சியின் தலைமை அதற்கு உடன்படுவது ஏன்?
அவர்களும் ஆங்கிலவழிப் பள்ளிக்காவலர்களாக விளங்குபவர்கள்தானே! தங்கள் ஆட்சியில் அவர்களும் தமிழைத் தொலைத்தவர்கள்தானே! எனவேதான் இன்றைய ஆட்சியின் தமிழ்த்தொலைப்பிற்கும் அமைதி காத்து அதற்கு உடந்தையாக உள்ளனர்.
பொதுமக்களும் தமிழ் அமைப்புகளும்தான் குழந்தைகளின் எதிர்காலம் கருதிக் குரல் கொடுத்துத் தமிழ்நாட்டில் தமிழ் வாழச் செயலாற்ற வேண்டும் தமிழ்நாட்டில்  தமிழ் நிலைக்குமா அல்லது அரசு தமிழைத் தொலைக்குமாஎன்பது மக்கள் கைகளில்தான் உள்ளது.
இலக்குவனார் திருவள்ளுவன்
தினமணி 09.11.2018

Followers

Blog Archive