Sunday, April 21, 2019

திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 – பேரா. வெ.அரங்கராசன்


அகரமுதல


திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 – பேரா. வெ.அரங்கராசன்


திருக்குறள் சான்றோர்

இலக்குவனார் திருவள்ளுவன் 2/2

வருணாசிரம எதிர்ப்புக் குறள் விளக்கங்கள்

இலக்குவனார் திருவள்ளுவன் தரும் குறள் விளக்கங்களிலேயே புரட்சியும் புதுமையும் கொண்ட திருவள்ளுவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவது,  கடவுள் வாழ்த்து குறள்களுக்கு அவர் தரும் விளக்கங்கள் ஆகும். வருணாசிரமக் கொள்கையை எதிர்த்தே திருவள்ளுவர் முதல் அதிகாரத்தை அளித்துள்ளார் என்கிறார்.
வருணாசிரமப்படித் தலையில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் உயர்வானவர்கள், காலில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் கீழானவர்கள். ஆனால் திருவள்ளுவர் 7 குறட்பாக்களில் தாளைத் தலைதான் வணங்க வேண்டும் எனக் காலை உயர்த்துகிறார். எனவே, உயர்விற்குரிய காலில் பிறந்தவர்கள் என்பது உண்மையானால் இவர்களே உயர்வானவர்கள் என்கிறார்.
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்  (குறள் 617)
என்னும் திருக்குறள் மூலம் உழைப்பவர்களின் கால்களில்தான் திருமகள் உறைகிறார் எனக் கூறி ஆரியத்திற்கு எதிராக உழைப்பவர்களைத் திருவள்ளுவர் போற்றுகிறார் என விளக்குகிறார்.

திருக்குறளுக்கு ஒரு வரி விளக்கங்கள்
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம், வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் நூல்களில் அறத்துப்பால்,பொருட்பால் குறள்களுக்கு ஒரு வரி விளக்கங்கள் அளித்துள்ளார். இவை மிகச் சிறப்பான உரைகளாக அமைந்துள்ளன.
சான்றுக்குச் சில:
கெடுப்பதும் கொடுப்பதும் மழையே!
அறிவு வலிமையால் ஐம்புலன் காத்திடு!
அரியன செய்து பெரியாராய்த் திகழ்!
அறம் செய்! பழிச் செயல் விடு!
பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்!
சாவா மருந்தாயினும் விருந்தினருடன் உண்க!
நல்ல வழியில் வந்தாலும் பெறாதே!
உண்மை என்னும் விளக்கே உண்மையான விளக்கு.
எண்ணித் துணி! துணிந்த பின் எண்ணாதே!
குடிகளைக் காக்க குறைகளைக் களை!
மருந்து வேண்டா எனில் செரித்தது அறிந்து உண்!
பிறருக்குக் கொடுக்காமல் புவிக்குச் சுமையாய் இராதே!
துன்பம் வரும் பொழுது உன்னையே விற்காதே!
நேர்மையான தூய பணி
இவர், காதணி விழா, பூப்பெய்தல் விழா முதலான சடங்கு சார் எந்த விழாக்களையும் நடத்தியதில்லை. அவ்வாறு நடத்தினால் அலுவலத்தினரையும் துறையினரையும் அழைக்க வேண்டும். அவர்கள் வந்திருந்து தரும் பரிசு, அவர்களுக்குப் பதவி வழியில் இவர் செய்த நன்மையைக் கருதி வழங்குவதாக இருக்கும். அதுவும் கையூட்டுதான் என்று சொல்லி எதையும் நடத்தியதில்லை. பிறருக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், பணி ஓய்வு நேரும்பொழுது வழியனுப்பு விழாக்களை இவர்தான் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்துவார். இவர் எந்த நேர்விலும் தனக்காக இத்தகைய விழாக்கள் நடத்த உடன்படவில்லை. பணி நிறைவின் பொழுதும் துறையினர் அளிக்க இருந்த விழாவை மறுத்துவிட்டார். இந்த அளவிற்கு 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இவர் குறள்நெறிப்படி தூய நேர்மையாளராகத் திகழ்ந்துள்ளார் என்பது பெரிதும் பாராட்டிக்குரியது.

திருக்குறள் தொடர்பான இவரது படைப்புகள் வருமாறு:
திருக்குறள் பற்றிய நூல்கள் – 2
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

திருக்குறள் பற்றிய கட்டுரைகள் – 14
  1. உழைப்பு நெறி,
  2. குறளும் கீதையும்,
  3. குறளும் வேதமும்,
  4. மாண்புறு குறளும் மாணா மனுவும்,
  5. நான் விரும்பும் நூல் – திருக்குறள்
  6. எனக்குப் பிடித்த திருக்குறள்,
  7. ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து,
  8. குறள்நெறி அறிஞர் இலக்குவனார்
  9. வள்ளுவர் வாய்மொழி (குறள்நெறி பற்றிய தொடர்)
  10. வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது,
  11. மாநில மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும். திருக்குறளையும் போற்றுங்கள்!
  12. திருக்குறளில் கலைச்சொற்கள்
  13. தமிழ்ச்சிமிழ் – திருக்குறள் (திருக்குறள் தொடர்பான தமிழ் இலக்கிய மேற்கோள்கள், பாடல்கள் கட்டுரைக் குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பு – கணிணிப்பதிப்பு (2002)
  14. பேராசிரியர் வெ.அரங்கராசனது ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ – ஆய்வுரை
ஆம். என்னுடைய நூலுக்கும் மிக அருமையான ஆய்வுரையைத் தந்துள்ளார்.
இணையத் தளங்களிலும் நட்பு, ‘அகரமுதல’ முதலான இணைய இதழ்களிலும் வலைப்பூக்களிலும் திருக்குறள் பற்றிய ஆன்றோர்கள், சான்றோர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கட்டுரையாளனாகிய நான் எழுதிய ‘திருக்குறள் அறுசொல் உரை’யையும் ‘அகரமுதல’ மின்னிதழில் வெளியிட்டு இலக்கியம் வலைப்பூவில் பதிந்து மடலாடல் குழுக்களிடையேயும் முகநூல், சுட்டுரை முதலான இணையத் தளங்களிலும் பரப்பியுள்ளார்திருக்குறள் தொடர்பானற்றை உலகம் முழுவதும் இவர் பரப்பும் பணி எல்லாராலும் பாராட்டப்பெறுகிறது.
திருக்குறள் பற்றிய பாடல்கள் – 2
  1. வள்ளுவர் மாலை (நாட்டியத்திற்கான வணக்கப்பாடல்)
  2. திருக்குறள் நூலைக் கற்றிடுவோம்!

திருக்குறள் தொடர்பான நூல்கள் கணியச்சில் வெளியீடு – 3
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பின் வரும் நூல்கள்:
  1. திருக்குறள் எளிய பொழிப்புரை (கணியச்சு)
  2. வள்ளுவர் கண்ட இல்லறம் (கணியச்சு)
  3. வள்ளுவர் வகுத்த அரசியல் (கணியச்சு)

பிற பணிகள்:
தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்த்தொண்டர் குழு, இறைநெறி மன்றம், நூலக வாசகர் வட்டம், இலக்குவனார் இலக்கிய இணையம் முதலான அமைப்புகள் மூலம் பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள், பிற நிகழ்ச்சிகள் நடத்தியும் பங்கேற்றும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். கலைமன்றங்கள், சிறுவர் மன்றங்கள் மூலம் தமிழ்க்கலைகளை வளர்க்கவும் பரப்புவும் பயிற்றுவிக்கவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். 14 நூல்களில் இவரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 20 புத்ததகங்கள் எழுதியுள்ளார். 5 புத்தகங்கள் பதிப்பித்துள்ளார்.1500க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். இவை தவிர, கதைகள், தொடர்கதைகள், நம்பிக்கைத் தொடர்கள், பாடல்களும் எழுதியுள்ளார். இலக்கிய இதழ்களில் மட்டுமல்லாமல் அரசியல் விழிப்புணர்வு இதழ்களிலும் இவரது பேட்டிகளும் கட்டுரைகளும் வருகின்றன. அயல்நாட்டு இதழ்களிலும் இவரது படைப்புகள் வருகின்றன. தொலைக்காட்சிகளிலும் அவ்வப்பொழுது பங்கேற்றுத் தமிழின் சிறப்பையும் தமிழறிஞர்களின் சிறப்பையும் கூறி வருகிறார். ‘அகரமுதல’ என்னும் மின்னிதழ் ஆசிரியராக உள்ளார். இணைய வழியாகத் தமிழ் பரப்புவதில் முன்னோடியாகவும் முதலாமவராகவும் உள்ளார்.
நல்வாய்ப்பிற்கு நன்றி
இலக்குவனார் திருவள்ளுவன் குறித்து உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். திருக்குறளைப் பரப்பி வருபவர் பலர் உள்ளனர். ஆனால் மாணவப் பருவத்திலேயே திருக்குறள் வழி நடந்துதிருக்குறள் வழியில் குற்றவாளிகளைத் திருப்பித் திருந்தியப் பாதையில் வாழச் செய்து நல்லறம் புரிந்தவராக, என்றும் குறள்நெறிப்படி வாழ்பவராக இவர் உள்ளதால் இவரைப்பற்றிப் பேசும் நல்வாய்ப்பு தந்த திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகனராசு அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

நிறைவுரை                             
இலக்குவனார் திருவள்ளுவன், பள்ளிப் பருவத்தில் இருந்தே திருக்குறளில் ஈடுபாடுகாட்டி, குறள்நெறியில் வளர்ந்து, குறள்நெறியைப் பரப்பி, பிறர் திருக்குறள் வழியில் வாழத் தூண்டுகோலாகத் திகழ்ந்து வருபவர். எனவே,  திருக்குறள் சான்றோர் என்றால் இவர்தாம் திருக்குறள் சான்றோர்.
இலக்குவனார் திருவள்ளுவன் 133 ஆண்டு புகழுடன் வாழ்ந்து
குறளறத்தை மேலும் பரப்பட்டும்!
–  பேரா. வெ.அரங்கராசன்
முன்னாள் தலைவர்தமிழ்த்துறை,
கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,
கோவிற்பட்டி 628 502

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 81-90 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

(குறள்நெறி)

81.அன்பில்லாதவருடன் வாழாதே!
82.புறத்துறுப்புகளால் பயன் வேண்டுமெனில், உள்ளுறுப்பாம் அன்பு கொள்!
83. அன்பில்லாமல் உயிரிருந்தும் பிணமாகாதே!
84.விருந்தினரைப் போற்றி இல்வாழ்க்கை நடத்து!
85. சாவா மருந்தாயினும் விருந்தினருடன் உண்க.
86. விருந்தோம்ப இயலாது வறுமையாளனாகாதே!
87. விருந்தினரைப் போற்றி வருந்தாமல் வாழ்!
88. வீட்டில் திருமகள் வாழ, விருந்தோம்பு!
89. விருந்தினர் உண்டபின் உண்!
90. தேவையெனில், விருந்தினர்க்கு விதையையும் உண்பி!

(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவன்

Tuesday, April 16, 2019

வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்!
சித்திரை 05, 2050 வியாழன் 18.04.2019
வாக்குப்பதிவு நாளன்று நாம் அனைவரும் தவறாமல் ஆற்ற வேண்டிய கடமை மறவாமல் வாக்களிப்பதே!
வேறு என்ன பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் வாக்களிக்க வேண்டும்.
நாம் வாக்களித்து நாட்டின் போக்கு மாறப்போகிறதா? என அலட்சியமாக இல்லாமல் ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.
 வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை
 அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை
நாடார் வாக்கு போடார் பிறர்க்கு
செட்டியார் வாக்கு கிட்டிடா பிறர்க்கு
 தேவர் வாக்கு வேறெவர்க்கு மில்லை
 முதலியார் வாக்கு முதலியார் தமக்கே
(தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்துரத்தப்பட்டேன்: அ-ள் 34-39)

என்றெல்லாம் சாதிக் கண்ணோட்டம் காணாமல் நடுநிலையுடன் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் என்றதும் தூத்துக்குடி, நெடுவாசல், ஏறுதழுவல்(சல்லிக்கட்டு), பொதுத் (நீட்/NEET) தேர்வு, பாலுறவு கொலைகள், குழந்தைகள் கொலைகள், மாணவிகளின் கற்பைச் சூறையாடல், எங்கும் ஊழல்- எதிலும் ஊழலால் வேலையின்மை, தொழில் வாய்ப்பின்மை, ஏவூர்தி ஊழல், படைக்கருவிகள் ஊழல், பணமதிப்பிழப்பால் வாழ்விழப்பு முதலான துயர நிகழ்வுகளும் உயிரிழப்புகளும் கண் முன் நிழலாடும்.
 சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவிப் பறிப்பு, பறிக்க வேண்டிய      உறுப்பினர்களின் பதவிக்காப்பு ஆகிய மக்கள் நாயகத்தைப் புதைக்கும் செயல்கள் நம் முன் நிற்கும்.
தமிழ்நாட்டில் இருந்து தமிழ் துரத்தப்படல், சமக்கிருத, இந்தித் திணிப்பு  முதலான மொழிக் கொலைகள் நெஞ்சில் தைத்த வண்ணம் இருக்கும்.
எழுவர் முதலான நீண்டகாலத் தண்டனைவாசிகள் வாழ்வைச் சிறையிலேயே முடிக்கும்  கொடுஞ்செயல்  ஓலங்கள் செவிகளில் கேட்கும்.
பல்லின மக்கள் வாழ்வதைப் புறக்கணித்து ஒரே மொழி, ஒரே சமயம்,  ஒரே கல்வி, ஒரே பண்பாடு என்ற திணிப்பு வேலைகளின் அச்சுறுத்தல் நம்மை வாட்டும்.
புயல் தாக்குதல் முதலான கொடுந்துயர் நேரங்களில் எட்டிக்கூடப்பார்க்காதவர்கள் வாக்கு கேட்டபொழுது காட்டிய முகங்கள் நமக்குத் தெரிய வரும்.
நாம் முன்னதாகவே சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
யாருக்கு வாக்களிக்க வேண்டா என்பதை முடிவு எடுக்கும் நம்மால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவெடுக்க இயலவில்லை. அல்லது நாம் விரும்பி அளிக்கும் வாக்கு விரும்பாதவர் வாகை சூட வாய்ப்பளிககுமோ என்று அஞ்சுகிறோம். எனவே, நண்பர்கள், சுற்றத்தார் பக்கம் இணைந்து உண்மையின் பக்கமான வாக்குகளைப் பெருக்க வேண்டும்.
இந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் அல்லது இன்னார்க்கு வாக்களியுங்கள் என நாம் கூறவில்லை.
மனித நேயமும் தமிழ் நேயமும் மிக்க நல்லாட்சிக்கு  யார் வந்தால் நல்லது என எண்ணிப் பார்த்துத் தக்கவருக்கு  வாக்களியுங்கள்!
வாக்கு செல்லாத வாக்குஆக மாறாத வகையில் சரியாக வாக்களியுங்கள்!
அடுத்தவர் நம் வாக்கைப் பயன்படுத்தும் முன்னர் வாக்களியுங்கள்!
அரசு விடுமுறை அளித்துள்ளது பொழுது போக்கிற்காக அல்ல! கடமையாற்றுவதற்காக என்பதை உணரந்து வாக்களியுங்கள்!
வாக்கு விற்பனைக்கானது அல்ல என்பதை உணர்ந்து பணப்பயனோ பிற பயனோ பெறாமல் வாக்களியுங்கள்!
ஒரு வேளை முன்னரே பெற்றிருந்தால் அதனை விலைத் தொகையாகக் கருதாமல் தண்டத் தொகையாகக் கருதி மனச்சான்றின்படி வாக்களியுங்கள்!
ஆராய்ந்து பாராமல் நம்பிக்கை வைத்து  நாம் தேர்ந்தெடுததால்  நம் வழிமுறையினருக்கும் துன்பம் தரும் என்பதை உணர்ந்து நலல வழிகளில் ஆராய்ந்து நல்லோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எனவே, வாக்களிக்கும் கடமையைத் தவறாமல் ஆற்றுங்கள்!
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.(திருவள்ளுவர், திருக்குறள் 508)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல

இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

இராகுல் வெற்றி பெறட்டும்!  தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்!

கட்சி முறையில் இன்றித் தனிப்பட்ட முறையில் பார்த்தால் இராகுலிடம் தற்சார்புச் சிந்தனையும் மனத்தில் சரி என்று பட்டதை ஆற்றும் துணிவும் உள்ளமை புரிகிறது.கலைஞர் கருணாநிதியிடம் ஒத்துப்போகாத அவர், தாலினுடன் இணைந்து செயலாற்றுவதும் அவரது தற்சார்பின் விளைவே ஆகும்.
பேராயக்(காங்.)கட்சியும் அடிப்படையில்   பா.ச.க.போன்றதே. எனவேதான் இராகுல் தன்னை வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிட்டும் மதத்தைக் குறிப்பிட்டும் அடையாளம் காட்டிக் கொள்கிறார்.
பசுக்கள் காப்பகம் குறித்த அவர் கருத்தும் அத்தகையதே. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்கிறவர் உயர் கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கட்டும் என்கிறார். (நீட்) பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இருக்காது என்கிறவர் விரும்புகின்ற மாநிலங்களில் இருக்கட்டும் என்கிறார். அப்படியாயின் அந்த மாநிலப் படிப்புகளில் சேர பிற மாநில மாணாக்கர்களுக்கும்   பொதுத் தேர்விற்கான ஆயத்தம் தேவைப்படும் குழப்ப நிலைதானே இருக்கும். பா.ச.க.வைக் கண்டு அஞ்சிப் பலவற்றில் அவர் அதன் நிழல் போல் பேசுகிறார். எனினும் உரியவாறு அறிவுறுத்தினால் கேட்டுக்கொள்ளும் பக்குவம் அவரிடம் உள்ளது.
இராகுலின் நாடாளுமன்றச் செயல்பாடுகளும் தேர்தல் பரப்புரைகளும் அவரது ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. அண்மையில், நாக்பூரிலிருந்து தமிழக அரசு இயக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய இராகுல், “தமிழகத்தின் தலையெழுத்தைத் தலைமை யமைச்சர் அலுவலகம்தான் உருவாக்க வேண்டுமென்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று நம்புகிறோம். இந்தியாவை வலிமை மிக்க நாடாக்குவதில் தமிழர்களின் குரல் முதன்மைப் பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ் மொழியை, தமிழ்ப் பண்பாட்டை  நாங்கள் மதிக்கிறோம்.” என்று பேசியுள்ளார்.
தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று அவர் சொல்வதன் பொருள் மாநிலங்களில் மாநிலக்கட்சிகளின் ஆளுமைக்கு எதிராக மத்தியஅரசின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதுதான். எனவே, அடுத்து ஆட்சி அமைத்தால் இச்சிந்தனைக்கிணங்கச் செயல்படுவார் எனலாம். அதனால், ஒரே ஆட்சி, ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே கல்வி என்றெல்லாம் நாட்டைச் சிதைக்கும் கட்சிக்கு மாறாக நாட்டின் பன்முகப் பண்பாட்டையும் பன்முகத் தேசிய இனங்களின் சிறப்பையும் உணர்ந்து செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.
நரேந்திர(மோடி)க்கு இராகுல் பெரியார் நூலை அளிப்பதாகக் கூறியுள்ளார். பெரியார் நூலை அளிக்கும் வகையில் இராகுலுக்குப் பெரியார் கருத்துகளில் ஈடுபாடு உள்ளதை இது காட்டுகிறது.
எனவே, இராகுல் தமிழகம் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார் எனலாம். இவற்றைப் போல் அவர் தமிழர் தொன்மை, தமிழர் வரலாறு இலங்கை-ஈழ வரலாறு முதலியவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர் படுகொலைகளுக்கான மன்னிப்பை அவர் கேட்க வேண்டும்.  எனினும் அவர் அவ்வாறு கேட்கத் தயங்கினால், இனித் தமிழ் ஈழ அறிந்தேற்பிற்காகப் பாடுபட வேண்டும். இப்பொழுதே  தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் மத்தியில் ஆட்சி அமைத்ததும் தமிழ் ஈழ ஏற்பை அரசு சார்பில் அறிவிப்பதாகவும் தெரிவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கான தண்டனைகளைக், காலம் வழங்கட்டும். நாம் இன்றைய சூழலில் நிகழ்காலம் குறித்துமட்டும் கருத்து செலுத்துவோம். நமக்கு உடனடித் தேவை தமிழ் ஈழத்திற்கான அறிந்தேற்பே! எனவே, அதற்கான உறுதியை இராகுல் வழங்கட்டும்.
அவ்வாறு சொல்லாத வரையில் நாம் பேராயக்(காங்.)கட்சியை மன்னிக்க முடியாது.  பேராயக்(காங்.)கட்சி  மாநிலக்கட்சி என்ற முறையில் உ.பி.யில் வெற்றி பெற்று மாநிலக் கட்சிகள் அமைக்கும் கூட்டாட்சியில் இடம் பெறட்டும். பிற மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் தமிழ் நாட்டில் பேராயக்(காங்.)கட்சி தோற்றால்தான் தமிழக மக்களின் ஆறா மனவலியை அக்கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள்.
தமிழகப் பேராயக்கட்சித் தலைவர்கள் உண்மை நிலையை மத்தியத் தலைமக்கு உணர்த்தத் தவறிவிட்டார்கள். அத்துடன் அவர்களின் தவறான கருத்துகளுக்கேற்பத் தாளம் போட்டு அவர்களைத் தூண்டி விட்டார்கள்.  எழுவரை விடுதலை செய்வது குறித்த இராகுல் கருத்திற்கு மாறாக முந்தைய தலைவரான  திருநாவுக்கரசர் எழுவரை விடுதலை செய்யக் கூடாது என்று தெரிவித்தார். எப்பொழுதும் தமிழினப் பகைவனாக விளங்கும் (இளங்)கோவன் எழுவரை விடுதலை செய்வதாக அறிவித்தால் சிறைக்கே சென்று அவர்களை அழிப்பதாக அறிவித்தவன்தான். முந்தைய தேர்தல் முன்பு வரை தி.மு.க.விற்கு எதிராகவே செயல்பட்ட அவன், பின்னர்தான் தி.மு.க.விற்கும் துதிபாடினான். கலைஞர் கருணாநிதி அவன் நடிக்கிறான் என்று  தெரிந்தும் அவன் பக்கம் இருந்தார். (பெருந்தலைவர் காமராசர் வழியில் அர் விகுதியைப் பயன்படுத்தவில்லை.) இவர்கள் இருவரும் மண்ணைக் கெளவும் வகையில் தோற்கடிக்கப்படுவதுதான் நாட்டிற்கு நல்லது. தமிழ் ஈழ மக்கள் படுகொலைகாரர்களையும் சட்டத்தின்படி விடுதலை செய்ப்படவேண்டிய அப்பாவிகள் எழுவர் விடுதலைக்கு எதிராக முழங்குபவர்களையும் தோற்கடிப்பதே தமிழ் மக்களின் இலக்காக இருக்க வேண்டும்.
தாலினைக் கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப்பேசுவது தவறு. ‘தாயைப்போல பிள்ளை’, ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’, ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’  ‘வாத்தியார் பிள்ளை மக்கு ‘ என்பனவெல்லாம் பெற்றோர்- -பிள்ளைகள் திறமை எப்படியும் அமையாலம் என்பதற்குச் சான்று. சிலவற்றில் தாலின் தந்தையைப்போலும் வேறு சிலவற்றில் அவரைவிடக் குறைவான திறத்துடனும் மற்றும் சிலவற்றில் கூடுதல் திறமையுடனும் செயல்படுவதே இயற்கை. எனவே, அவரது வழியிலேயே இவர் செல்ல வேண்டும் எனப் பொருள் அல்ல. ஆதலால், அறிந்தும் அறியாமலும் ஏறத்தாழ இரு நூறாயிரம் தமிழ் ஈழ மக்கள் படுகொலைகளுக்கும் நிலப்பறிப்புகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் காரணமாகத் தி.மு.க.அரசும் இருந்தமைக்காக அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழீழ ஏற்பை அறிவித்து மத்திய அரசும் அறிவிக்க ஆவன செய்ய வேண்டும்.
மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா மாறத் தாலின் இராகுலுடன் இணைந்து செயல்பட்டு வலிவும் பொலிவும் மிக்க நாடாக நம் நாட்டை மாற்ற வேண்டும்.
தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல

Followers

Blog Archive