Wednesday, January 5, 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்? – இன்மதியில் இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


by Inmathi Staff | சன 5, 2022 | கல்வி



ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு  ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை அரசு உருவாக்கியிருப்பதில் எனக்கும் இரட்டை மகிழ்ச்சி. தமிழறியாதவர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணியில் அமர்ந்து கொண்டு, மக்களுக்கும் அரசிற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக் கொண்டும் மக்கள் குறைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் காலங்கடத்திக் கொண்டும் மண்ணின் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்.

இதுவரை தமிழறியாத பிற மாநிலத்தவர் தமிழர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதற்கு அடியோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டரசு மட்டுமல்லாமல், ஒன்றிய அரசு, அரசு சார்பு நிறுவனங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், ஒன்றிய அரசின் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என அனைத்திலும் தமிழக அரசின் தமிழ்த் தேர்வுத்தாளை எழுதுவதைக் கட்டாயமாக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழறிந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு என்பதும் இதனால் தமிழ் ஆட்சிமொழித்திட்டம் முழுமையாக நிறைவேற வாய்ப்பு கிட்டும் என்பதும் முதல் மகிழ்ச்சி.1990 களில் தேர்வாணையத்திலிருந்து வல்லுநர்கள் சிலரை அழைத்து இது குறித்துக் கருத்தரங்கம் நடத்தினார்கள். அப்பொழுது நான் தெரிவித்த கருத்துகள் படிப்படியாக நிறைவேறிக் கொண்டுள்ளன. அவ்வகையில் ஒன்றான இத்திட்டமும் நிறைவேறுவதால் இரண்டாவது மகிழ்ச்சி. என்றாலும் பெரும் வருத்தங்களும் உள்ளன.

தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல. வாழ்வியல் நூலாகும். ஆனால், அதனைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்காதது மிகப்பெரும் தவறாகும். எனவே, உடனடியாகத் தொல்காப்பியத்தைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான நூல் தொல்காப்பியம். ஆனால், அடிப்படைப் பாடத்திட்டங்களில் தொல்காப்பியம் இல்லை.  பட்ட, பட்ட மேற்படிப்பு நிலையில் இலக்கணம் என்ற அளவிலும்  பண்பாட்டுத்தாளிலும் தொல்காப்பியம் இடம் பெற்றுள்ளது. எனவே, அறியாமல் நேர்ந்த தவறு என்று சொல்ல இயலாது. திட்டமிட்டுத் தொல்காப்பியத்தை தேர்வுத்திட்டக் குழுவினர் மறைத்துள்ளனர் என்று கருத இடம் உள்ளது. இந்திய வரலாற்றை எழுதுபவர்கள் தொல்காப்பியத்தைப் படிக்க வேண்டும் என்பார் பேராசிரியர் இலக்குவனார்.  தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல. வாழ்வியல் நூலாகும். ஆனால், அதனைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்காதது மிகப்பெரும் தவறாகும். எனவே, உடனடியாகத் தொல்காப்பியத்தைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

திருக்குறளில் 19 அதிகாரங்களைத் தேர்வுத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். பொதுவாகப் பார்த்தால் அல்லது ஐந்தால் வகுபடும் எண்களைக் குறிப்பிடுவார்கள். அது என்ன 19 என்று தெரியவில்லை.

ஈராண்டிற்கு ஒரு முறை 25 அதிகாரங்களைத் தேர்வுத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் வேலைக்கான தகுதி பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவதன் மூலம் திருக்குறள்களைத் தொடர்ந்து அறிய வாய்ப்பு கிடைக்கும்.

தேர்வுத் திட்டத்தில் பெருங்குறைபாடு ஒன்றும் உள்ளது. சமற்கிருதம் என்பது ஒரு தாளாக உள்ளது.

தேர்வுத் திட்டத்தில் பெருங்குறைபாடு ஒன்றும் உள்ளது. சமற்கிருதம் என்பது ஒரு தாளாக உள்ளது. பழைய தேர்வுத் திட்டத்திலும் உள்ளதால், கடந்த ஆட்சியிலேயே சேர்த்திருப்பார்கள் எனக் கருதுகிறேன். பல மொழிகளுக்குமான தேர்வுத்தாள் இருப்பின் சமற்கிருதத்திற்கும் வைத்திருந்தால் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் வேலை பார்ப்பதற்கு எதற்குப் போலியான செம்மொழியான சமற்கிருதத்திற்கு எனத் தனித்தாள் தேவை? ஒன்றிய அரசு சமற்கிருதத்தைத் திணிப்பது போதாதா, தமிழக அரசும் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமா? எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாகச் சமற்கிருதத் தேர்வுத்தாளை அகற்ற வேண்டும்.

வரலாற்றுப் பாடத்திலும் தமிழர் நாகரிகமும் தமிழர் பண்பாடும், தமிழக வரலாறும் முதன்மை பெறும் வகையில் தேர்வுத்திட்டத்தை அமைக்க வேண்டும். சங்க இலக்கியம் என்பது பெயரளவிற்கு இல்லாமல் அதன் முழுமையான சிறப்பை அறியும் வகையில் தேர்வுத்திட்டம் இருக்க வேண்டும். இந்தி எதிர்ப்புப் போர்கள் வரலாற்று முதன்மையானவை. எனவே, ஒன்றிய அரசு எதிர்க்கும் என்று எண்ணாமல் தேர்வுத்திட்டத்தில் இவையும் இடம் பெற வேண்டும். ஆங்கில மொழித் தேர்வுத்தாளிலும் தமிழ், தமிழர் வரலாறு இடம் பெற வேண்டும்.

காலந்தோறும் தமிழ் எழுத்து முறை என்பது தவறான வரலாறாகும். “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என இலக்கண நூல்கள் தொன்று தொட்டு மாறாமல் எழுத்து வடிவங்கள் உள்ளன எனக் கூறுகின்றன. சிற்சில மாற்றங்களைத் தவிர எழுத்தமைப்பில் மாறுதல்கள் இல்லை. கல்வெட்டு எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியாகக்கருதக் கூடாது. ஓலைச்சுவடிகளில் அத்தகைய மாற்றங்கள் இல்லை. எனவே, தவறான வரலாறாக உள்ள எழுத்துவடிவ வளர்ச்சி குறித்த பாடத்தை நீக்க வேண்டும் என்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.

– இன்மதி நாள் 05.01.2022

காண்க. More should be done for Tamil in TNPSC exams: Scholar

Wednesday, November 17, 2021

இலக்குவனார் வலியுறுத்தும் கல்விக் கொள்கை- இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 




இலக்குவனார் வலியுறுத்தும் கல்விக் கொள்கை


 தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பன்முக அறிஞராகவும் களப்பணிகளில் ஈடுபட்ட போராளியாகவும் திகழ்ந்தவர். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர். இதற்காகத் தமிழ்க்கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் எக்காலமும் எப்பொழுதும் வலியுறுத்திவந்தவர். தமிழ்வழிக்கல்விக்கு மூடு விழா நடத்திக் கொண்டு வரும் நாம் இப்பொழுதாவது இத்தகைய அழிவுப்பணிக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். தமிழ் நலப்பணிகளில் கருத்து செலுத்தும் தமிழக அரசு தமிழ்நாட்டில் கல்வி என்றால் அது தமிழ் வழிக்கல்வியே என்னும் சீர்நிலையைக் கொண்டுவர வேண்டும்.

பேரா.சி.இலக்குவனாரின் தொடக்கக் கல்வியைச் சற்றுப் பார்ப்போம்.  இலக்குவனார், வைத்தியலிங்க(த் தேவ)ர், சீனுவாச(த்தேவ)ர் ஆகியோர் வீட்டுத் திண்ணைகளில் நடைபெற்ற பள்ளிக்கூடம் சென்று பயின்றார். இவர் தந்தையாரைப் போன்று பிள்ளைகளைக் கல்வியில் வல்லவர்களாக ஆக்குவதில் நாட்டம் கொண்ட கு.சி.அமிர்தலிங்க(த் தேவ)ர் என்பவர் தம் வீட்டையொட்டியே பள்ளிக்கூடம் ஒன்று அமைத்தார். அங்கு ஆசிரியர் கண்ணுசாமி(பிள்ளை) அனைவருக்கும் பாடங்கள் கற்பித்தார்.

இவற்றில் படித்த இலக்குவனார், தம் 7 ஆம் அகவைக்குள்ளாகவே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிசாரம், கிருட்டிணன் தூது, நிகண்டுகள், கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் கற்றார். மாலையில் விளையாட்டு, இரவில் நாடகப்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், வழிபாட்டுப் பாடல் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டமையால் தம் அகவைக்குரிய முழுமையான கல்வியைப்பெற்றார் எனலாம்.

பத்து அகவை வரை எழுத்துக்கல்விக்கு முதன்மை அளிக்காமல்  கேள்வியறிவு மூலம் வாய்மொழிக்கல்விக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்பது பேரா.இலக்குவனார் கருத்து. கல்வி உளவியலாளர்களும் இவ்வாறுதான் வலியுறுத்துகின்றனர். உருசியா முதலான நாடுகளில் இதனைப் பின்பற்றுகின்றனர். நாமும் மனப்பயிற்சியை வளர்த்தெடுக்கும் இக்கல்வி முறையால் அறக்கருத்துகளைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதன் மூலம் நல்ல தலைமுறையினரை உருவாக்க இயலும்.

“வாழ்வில் நன்கு வெற்றி பெறவும், எல்லாரும் கூடி, உறவாடி இன்புற்று வாழவும், மன்பதையில் மேலோராக மதிக்கப்படவும், செல்வத்தை ஈட்டவும், ஈட்டிய செல்வத்தை நன்கு துய்க்கவும், தாம் இயல்பாகப் பெற்றுள்ள ஒட்பமும் அழகும் சிறப்புறவும், ஆட்சி முறையில் பங்குகொண்டு பணியாற்றவும், வாலறிவன் நற்றாள் தொழவும் கல்வியே பெருந்துணையாவது என்று கருதி அனைவருக்கும் கல்வி தர வேண்டியது அரசின் கடமை,”[ இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)] அனைவரும் கற்கவேண்டியது மக்கள் கடமை என்கிறார் பேரா.இலக்குவனார்.

“தமிழ், சுருங்கிய எல்லைக்குள் எல்லாத் துறையிலும் மக்களுக்குப் பயன்படு கருவியாக அமைந்துள்ள நிலையையும் இழந்துளது. சமயத்துறையில் ஆரியமும், ஆட்சித்துறையில் ஆங்கிலமும், தேசியத் துறையில் இந்தியும், இசைத் துறையில் தெலுங்கும் செல்வாக்குப் பெற்றுத் தமிழ் வீட்டளவில் நின்றது. வீட்டளவிலும் நற்றமிழ் ஆட்சிபெற்றிராது கலப்புத் தமிழாக, உருக்குலைந்த தமிழாக நின்றுவிட்டது. என வருத்தப்படுகிறார் முத்தமிழறிஞர் இலக்குவனார். இந்த அவலத்தை நாம்  எவ்வாறு போக்க வேண்டும்? தமிழர்களும் பலவகைகளிலும் சிறந்தால்தான் தமிழ் மொழி சிறப்படைய இயலும். தமிழர்கள் தாம் சிறப்படைய முயல்வதோடு தம் மொழி பற்றியும் அறிந்துகொள்ள முயலுதல் வேண்டும்.” எனக் குறிப்பிட்டுத் தமிழ் மதிப்புடையதாக எல்லா இடங்களிலும் திகழத் தமிழர்கள் எல்லா இடங்களிலும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்கிறார். இல்லான் கருத்தை எவர்தான் ஏற்பர்? எனவே, தமிழர்கள் தம் நிலையை உலக அரங்கில் உயர்த்திக் கொண்டு தமிழுக்கு உயர்வு கிட்ட வழி வகுக்க வேண்டும் என்கிறார். அங்ஙனம் தமிழர்கள் உயர்த்திக் கொள்ள அவர்களுக்குத் தேவை தமிழ்வழிக் கல்வி என வலியுறுத்துகிறார்.

திருக்குறட் பொருட்பாலில் இறைமாட்சிக்குப் பின்னர்க் கல்வி, கல்லாமை, கேள்வி எனும் தலைப்புகளில் கல்வியின் இன்றியமையாமையும் பயனும் வற்புறுத்தப்படுகின்றமையால்  அக்கால மக்கள் கல்வியைக்  கண்ணெனவே போற்றி வாழ்ந்துள்ளனர் என்கிறார். நாமும் கல்வியை அனைவருக்கும் உரிய உரிமையாகக் கருதிக் கல்வி இல்லாதார் யாருமில்லை எ்னும் நிலையை உருவாக்க வேண்டும் என்கிறார்.

தமிழ் நாட்டில் உலகம் போற்றும் அறிவியல் அறிஞர்களோ பொருளியல் வல்லுநர்களோ தோன்றாமைக்குக் காரணம் என்ன என வினா தொடுக்கிறார் பேரா.சி.இலக்குவனார். நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே “பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய நாம், இரு நூறாண்டுகட்குக் குறைந்த வரலாற்றினுடைய நாடுகளின் நல்லன்பை நாடி உதவி பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ஆகவே உடனே கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்று கூறுவதில் பொருந்தாத் தன்மையோ, புதுமையோ புரட்சியோ இருக்க இடமின்று. ” [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965].    எனவே, எல்லா நிலையிலும் தமிழ்வழிக்கல்வி வேண்டும் என வலியுறுத்துகிறார்.

தமிழ்க் காப்பிற்காகவும்தமிழ் வழிக் கல்விக்காகவும் என இரு முறை சிறை சென்றவர் தமிழ்ப்பயிற்றுமொழிக் காவலர் பேரா.சி.இலக்குவனார். உலகிலேயே மொழிக்காகச் சிறை சென்ற முதல் மொழியாசானாகிய அவர் குரலுக்கு நாம் செவிமடுக்க வேண்டுமல்லவா? நம் நாடு முன்னேற நாட்டு மொழியையும் நாட்டுமொழி வாயிலான கல்வியையும் நாம் கற்க வேண்டும் என அவர் வலியுறுத்துவதை நாம் இப்பொழுதாவது பின்பற்றாவிட்டால் நாம் அழிவுப்பாதைக்குச் செல்வதைத் தடுக்க முடியாது அல்லவா?

“தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்ததக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.” [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965.] எனப் பெரிதும் வருந்தி உரைக்கிறார். மேலும் இது குறித்துச் செந்தமிழ்க்காவலர் பேரா.சி.இலக்குவனார் கூறும் அறிவுரை வருமாறு :

 “தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்று மொழிச் சொற்களின் கலப்பால் ஆகிய கலவை மொழிதான் இடம்பெறும். அவ்வாறாயின் தமிழ் மெல்ல இனிச் சாகும் என்றுதான் கொள்ள வேண்டும். தமிழர் இருக்கத் தமிழ் மறைந்தது என்றால் அதனினும் நாணத்தக்க இழிவு வேறொன்றும் இன்று. தமிழர் உயர்தல் வேண்டும்; உலக நாடுகளின் மன்றத்தில் தமிழர் இடம் பெற்றால் தமிழும் அங்கு இடம் பெறல் வேண்டும். ஆனால் தமிழர்களில் சிலர் தாம் உயர முயல்கின்றனர்; தமிழ் உயர விரும்பிலர். தம் உயர்வுக்குத் தடையெனக் கருதுகின்றனர். வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் எல்லாரும் எங்குச் சென்றாலும் தம் மொழியிலேயே பேசுகின்றனர். ஆனால் தமிழர்களோ தம் நாட்டிலேயே தமிழில் பேசுவதற்குக் கூச்சப்படுகின்றனர். தமிழில் பேசுதற்கு நாணுறும் தமிழன், தமிழனாகப் பிறந்ததற்கும் நாண வேண்டியவனே. வையம் அளந்த தமிழ், வானம் அளந்த தமிழ் என்று கூறிக்கொண்டு தம் வயிற்றை அளந்து கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்து மறுமலர்ச்சி பெற்றுவிடாது என வருந்தி உரைக்கிறார்.

 “தமிழராகப் பிறந்தவர்கள் தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் பயிலாது சாதல் கூடாது. இரண்டும் தமிழரின் இரு கண்களாகும். இரண்டையும் பயிலாதவர்கள் இரு கண்களும் அற்றவர்களே.” என்கிறார். எனவேதான் அவர் தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பாடத்திட்டங்களில் சேர்த்தார். ஆங்கிலத்தில் சேக்சுபியர் எனத் தனித்தாள் இருப்பதுபோல் தமிழில் திருக்குறள் எனத் தனித்தாள் இருக்க வேண்டும் என வலியுறுத்திப் போராடினார்.  ஆனால், அது நிறைவேறவில்லை. தொல்காப்பியத்தையும் மூலநூலாகப் படிப்பிக்காமல் உரைநூலை மட்டும் கற்கும் வகையில் மாற்றியுள்ளனர்.

உயர்நிலைப்பள்ளிகளில் ஒரே நேரம் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு வந்த அப்போதைய அமைச்சர் அவினாசிலிங்கத்தை இலக்குவனார் பாராட்டுகிறார். அதுபோல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் அனைத்துப் பாட வகுப்புகளிலும் தமிழைப்பயிற்றுமொழியாக்க வேண்டும் என்கிறார். ஆனால், இன்றைய நிலைமை மோசமாகி விட்டது. உயர்நிலைப்பள்ளிகளிலும் தமிழ்வழிக்கல்வி என்பது கானல்நீராகிக் கொண்டுள்ளது. கல்வியின் எல்லா நிலைகளிலும் தமிழே பயிற்றுமொழியாக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 “தமிழ் வழியாகப் படித்தலே தமிழர் பிறப்புரிமையாகும். அதுவே அறிவைப் பெருக்கும் எளிய இனிய வழியாகும். ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்ட நம் நாட்டிலேயன்றி வேறு எங்கணும் வேற்று மொழியாகப் படிக்கும் இயற்கைக்கு மாறுபட்ட நிலையைக் காண இயலாது.” ஆதலின், “தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட பிறகு தமிழ்வழியாகப் படித்துப் பட்டம் பெற்றோர்க்கே ஆட்சித்துறையில் இடம் அளித்தல் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு அரசு இதற்கு மாறாகச் செயல்புரிந்து வருகின்றது. தமிழக அரசுத்துறையில் பணிபுரிய முன்வருவோர்க்குத் தமிழறிவு இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது. தமிழ் வழியாகப் படித்து வருவோரை இவ்வாறு ஒதுக்கினால் எங்ஙனம் தமிழ் வழியாகப் படிக்க முன்வருவர்? ஆதலின் தமிழ் வழியாகப் படித்தோர்க்கே தமிழக அரசுத் துறையில் முதலிடம் என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும்.”

கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் தமிழ்வழிப்படித்தோர்க்கு 20 விழுக்காடு முன்னுரிமை என ஆணை பிறப்பித்துள்ளனர். எனினும் இந்த ஆணை ஓரளவே வரவேற்பிற்குரியது. முழுமையாகப் பாராட்டுவதற்குரியதல்ல. எடுத்துக்காட்டாக 20 பணியிடங்கள் காலியாக இருந்தது என்றால், முதல் 4 இடம் தமிழ்வழிப்படித்தோருக்குக் கிடைக்காது. வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆணைக்கிணங்க 200 பணியிடங்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்தால், பட்டியல் இனத்தவருக்கு 150 ஆவது இடமும் பட்டியல் சாதியில் அருந்ததியருக்கு 166 இடமும் இசுலாமியருக்கு 188 ஆவது இடமும் வழங்கப்பெறும். இஃது எங்ஙனம் முன்னுரிமை அளிப்பதாக இருக்கும்? இனச்சுழற்சி முறையில் சேர்க்கப்பட்டுச் சுழற்சி முறையில்தான் பணி வழங்கப்படும். 80 விழுக்காடு தமிழ்வழிப் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஆனால், 20 விழுக்காடுதான் வழங்கப்படுகிறது. அதுவும் முன்னுரிமை அடிப்படையில் அல்ல.  எனவே, தமிழ்வழிப்படித்தவர்களுக்கு முதலுரிமை வழங்கும் வகையில் மறு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கல்வி என்பது தமிழ் வழியில் மட்டும்தான் என்பதை நடைமுறைப்படுத்தினால் வருங்காலங்களில் முன்னுரிமை என்பதற்குத் தேவையில்லாமல் போய்விடும்.

சுருக்கமாகச் சொல்வதாயின் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பின்வருவனவற்றை வலியுறுத்திக் கல்விக்கொள்கையை உணர்த்துகிறார்.

  1. மழலை நிலையில் திருக்குறளையும் ஆத்திசூடி முதலான பிற அற நூல்களையும் கற்பிக்க வேண்டும்.
  2. மழலைநிலையிலேய தமிழர் விளையாட்டுகளிலும் தமிழ்க்கலைகளிலும் பயிற்சி அளிக்க வேண்டும்.
  3. தமிழ்நாட்டில் உயர்நிலைப்பள்ளி வரை தமிழ் மட்டுமே மொழிப்பாடமாக இருத்தல் வேண்டும்.
  4. கல்வியகங்களின் எல்லா நிலைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  5. முழுமையாகத்தமிழ் வழிப்படித்தவர்கள் உருவாகும்வரை தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் தமிழ்வழிப்படித்தவர்களையே அமர்த்தல் வேண்டும்.
  6. பட்ட வகுப்புகளில் திருக்குறளுக்கெனத் தனித்தாள் இருத்தல் வேண்டும்.
  7. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறளை அனைவரும் அறியும் வகையில் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

தமிழ்மொழிக்கல்விக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் முத்தமிழ்ப்போர்வாள் பேரா.சி.இலக்குவனார் முழங்குவதற்கு முதல்வர் மு.க.தாலின் செவி மடுக்க வேண்டும்முந்தைய ஆட்சியாளர்கள் வழியில் செல்லாமல், சிறப்பாகப் பணியாற்றி வரும் அவர், தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தமிழ்க்கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப அயல்மொழியினருக்கு மட்டும் அயல்மொழிக் கல்வியை அளித்தால் போதுமானது. அதுபோல் தமிழர்க்கு உயர்கல்வியில் அயல்மொழி கற்பதற்கான வாய்ப்பைத் தந்தால் போதுமானது.

அகரமுதல இதழுரை

இலக்குவனார் திருவள்ளுவன்

(கார்த்திகை 01,1940, 17/11/1909 தமிழ்ப்போராளி

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த நாள்.)




Monday, August 9, 2021

கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா?

 பதவி ஆசை உள்ள ஓய்வு பெற்ற சிலரும் உயர்பதவியில் அதிகாரச் சுவையைச் சுவைக்க விரும்பும் சிலரும் தங்கள் பதவி அரிப்பைத் தணித்துக் கொள்ள புதிய பல்கலைக்கழகம் ஒன்றுக்குக் குரல் கொடுத்துள்ளார்கள். நேரடியாகத் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதே! அதனால் அவர்கள் எடுத்துள்ள கருவியே விடுதலைச்சிறுத்தை.  எனவேதான், “கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும்..” – என அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திருமாவளவன் மூலம் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அக்கட்சியில் உள்ள இதழாளர், சாதி எதிர்ப்பு இயக்கவாதி, தீவிர இயக்கவாதி மூலம் அவரிடம் இக்கருத்தைச் சேர்த்து வெளியிடச் செய்துள்ளார்கள்.

அவர்களின் நோக்கம் கலைஞரைச் சிறப்பிக்க வேண்டும் என்பதல்ல. முகநூல் நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல் கலைஞர் நிகழ்த்துக்கலைப் பல்கலைக்கழகம் என ஒன்றை அமைப்பது பொருத்தமாக இருக்கும். திரைப்படங்களுக்கு வாய்ப்பு தேடுபவர்களுக்கும் திரைத்துறையில் தங்களை மெருகேற்றிக் கொள்தற்கும் உதவியாக இருப்பது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உரையாடல் வரிகள்தாம். கலைஞர் என்னும் பெயருக்குக்  காரணமே அவரின் திரைக்கலை ஈடுபாடுதானே. கலைஞர் திரையியல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கலாமே. கவிதையில் புதுவகை உரைவீச்சை அறிமுகப்படுத்திப் பல்லாயிரக்கணக்கில் எழுதியவர் கலைஞர். கலைஞர் கவிதையியல் பல்கலைக்கழம் ஒன்றை அமைக்கலாமே. ஆனால், அப்படி யெல்லாம் அமைத்தால் பதவி ஆசையர்களின் நோக்கம் நிறைவேறாதே. எனவேதான் மொழியியல் பல்கலைக்கழகம் வேண்டுகின்றனர்.

 இது குறித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் தமிழ்த்துறையினரும் குறிப்பாக மொழியியல் துறையினரும் எதிரான கருத்தைத்தான் கொண்டுள்ளனர். “மொழியியல் அறிஞர் கணித்தமிழ்ச்செயற்பாட்டாளர் முனைவர் தெய்வசுந்தரம் கூறுவது போன்று இருக்கின்ற மொழியியல் துறைகளைச் சரியாகச் செயல்பட வைக்காமல் மொழியியல் துறைகளையே தோற்றுவிக்காமல் மொழியியல் பல்கலைக்கழகம் எதற்கு” என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள்.

 மொழியியல் துறையின் தாயாகத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே மொழியியல் துறைச் செயல்பாடு சொல்லும்படி இல்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் இதுதான் நிலை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையே இல்லை. மொழியியல் துறை இருக்கின்ற 3 பல்கலைக்கழகங்களிலும் துறைத்தலைவர் நிலையிலான பதவியில் பதவி நிலைக் குறைந்தவர்களே உள்ளனர். வேறு சில பதவிகளும் நிரப்பப்படாமல் உள்ளன. இருக்கின்றவற்றைக் காப்பாற்றாமல் புதிய கூத்தை அரங்கேற்ற வேண்டுமா என்கின்றனர்.

 சிலர் முன்னாள் முதல்வர் செயலலிதா பெயரிலான பெயரளவு பல்கலைக்கழகம் மூடப்படும் நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகத்தை நிறுவுவது அவப்பெயர் ஏற்படுத்தும். எனவே, அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றாது என்கின்றனர். இருப்பினும் நம் செவிகளில் வந்து விழும் கருத்துகளைச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?

தொல்காப்பியர் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர். தொல்காப்பியப் புலமையாளர்களும் போற்றுதலுக்குரிய மொழியியல் அறிஞர்களாக உள்ளனர். ஆனால், மொழியியல் அறிஞர்கள் சிலர் தமிழை அழிப்பதற்கு இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். வாழும் மொழி எனச் சொல்லிக் கொண்டு கொச்சை வழக்குகளைப் பரப்பி வருகின்றனர். உயர்தனிச் செம்மொழியின் இலக்கியங்களாக உயர்ந்த நடை இருக்கக்கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். கொச்சை நடையைப் பார்த்து இனி வருவோர் இஃது எங்ஙனம் செம்மொழியாகும் எனக் கேட்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். எனவே, மொழியியலுக்கு எனப் பல்கலைக்கழகம் அமைத்தால் அத்தகையோர்களின் ஆளுமைக்கு அகப்பட்டுத் தமிழ்மொழி சிக்கிச் சின்னா பின்னமாகும் என்கின்றனர். எனவே மொழியியல் என்னும் பெயரில் தனித்த பல்கலைக்கழகம் தேவையில்லை என அஞ்சுவோர்களின் கருத்துகளுக்கு தமிழ் நல அரசு மதிப்பு கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

 வேறு மாநில மொழியியல் பேராசிரியர் வேறு ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றார். தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மொழியியல் துறையினரின் ஆதிக்கம் உள்ளது. தங்கள் துறையினரே பதவிகளில் அமர வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பர். எடுத்துக்காட்டாக ஒன்றையும் தெரிவிக்கின்றார். உயராய்வு நிறுவனம் ஒன்றில் இயக்குநர் பதவிக்குத் தகுதிவாய்ந்த இலக்கிய அறிஞர்கள் நால்வர் விண்ணப்பத்திருந்தனர். அவர்களுள் பட்டறிவு மிகுந்த ஒருவரை அப்பதவியில் அமர்த்த இருந்தனர். ஆனால், மொழியியல் துறையினரே இப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதற்காக அந்நியமனம் மேற்கொள்ளப்படாமல் இருக்கத் தடையாக இருந்தனர். ஆனால் வேறு வகையிலான போராட்டமாகக் காட்டிக் கொண்டு அப்பதவியைக் காலியிடமாக ஆக்கினர். இதனால் அந்நிறுவனத்தின் வளர்ச்சி பல ஆண்டுகள் பாதிக்கப்பட்டன என்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பதவிக்கு மொழியியல் துறையைச் சேர்ந்த யாரும் விண்ணப்பிக்கவில்லையாம். இத்தகையோரின் செல்வாக்கால்தான் மொழியியல் பல்கலைக்கழகத்திற்கான குரல் வந்துள்ளது. இதனைச் சாதியக் குரலாக மாற்றவும் சதி நடப்பதாக அவர் கூறினார்.

நேர்மையான பேராசிரியர்களும் அதிகாரிகளும் மற்றொரு கருத்தையும் முன் வைக்கின்றனர். கடந்த ஆட்சியில் பல்கலைக்கழகங்களில் பணி நியமன முறைகேடுகளால் துணைவேந்தர், பதிவாளர்,  வேறு நிலை அதிகாரிகள் விசாரணை வளையங்களுள் சிக்கி உள்ளனர்.  இதுவரை இருந்த கட்சிச் செல்வாக்காமல் தண்டனையிலிருந்து தப்பி வந்தனர். புதிய ஆட்சியிலும் தப்பிக்க வேண்டுமே. எனவேதான் ஓய்வு பெற்றவர்களுக்கு ஆசை காட்டி இக்கோரிக்கையை வைக்கின்றனர். இதன் மூலம் தங்களை அரசின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு விசாரணையிலிருந்து வெளியே வர முயல்கின்றனர். எனவேதான், இத்தகைய கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால் இருக்கின்ற பல்கலைக்கழகங்களை உருப்படியாகச் செயல்படச் செய்யாமல், அவரவர் துறை சார்ந்து, சிறுகதை இலக்கியப் பல்கலைக்கழகம், புதின இலக்கியப்பல்கலைக்கழகம் போன்று பல்கலைக்கழகங்கள் அமைக்கக் குரல் கொடுப்பர் என்கின்றனர். பல்கலைக்கழகங்கள் பெருகுவது தவறில்லையே என்றால், இருப்பனவற்றைப் பேணாமல், இல்லாதனவற்றிற்குப் பறப்பானேன் என்கின்றனர். விசாரணை வளையத்திலுள்ள தண்டனை பெற வேண்டியவர்கள் தப்பிப்பதற்கு அரசே பாதுகாப்பு வளையத்தை அமைத்துக்கொடுப்பது முறையல்லவே என்கின்றனர்.

இவர்களின் நோக்கம் கலைஞரைச்சிறப்பிப்பதல்ல என்பதற்கு மற்றொன்றையும் நினைவு படுத்துகின்றனர். இத்தகையோர், கலைஞரின் ஒரு படைப்பையாவது ஆய்வு செய்ய மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார்களா? ஆய்வு உலகில் மதிக்கப்படவேண்டிய கலைஞரை அங்கே மதிக்காமல் இப்போது வீண் முழக்கமிடுவானேன் என்கின்றனர். 

இத்தகையோர் கலைஞர் செம்மொழி விருதுகளை வழங்குவதற்குக் குரல் கொடுத்தார்களா? நாம் குரல் கொடுத்து வந்தோம்.”கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி!” என நக்கீரனிலும் கட்டுரை எழுதியிருந்தோம். புதிய அரசு அமைத்ததும் முதல்வருக்கு மடல் அனுப்பினோம். தமிழ்அமைப்புகள் சார்பிலான புதிய அரசிற்கான வாழ்த்தரங்கத்திலும் கோரிக்கை வைத்தோம். முதல்வர் மு.க.தாலினும் விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கப் புதிய தெரிவுக் குழுவை அமைத்துள்ளார். ஆனால், நேற்றுவரை அவரை நினைக்க அஞ்சியவர்களுக்கு இன்றைக்குத் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மீது பாசம் பொங்கிக் கொண்டு வந்துவிட்டதாம். யாரேனும் இவர்கள் நடிப்பை நம்புவார்களா?

 மொழியியல் பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்னவாம்? உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும்தானாம். இப்பொழுது தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை என ஒன்று உள்ளது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழியியல் புலமும் அயல்நாட்டுத் தமிழர் புலமும் உள்ளன. இவற்றைக் கொண்டே பன்மொழிக் கற்பிப்பை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலுமே பன்மொழிப் புலத்தை அமைக்கலாம். நாம் பிற மொழிகளை அறிவது சிறப்புதான். எனினும் நம் முதல் கடமை தமிழே அறியாத தமிழர்களையும் தமிழ்நாட்டில் உள்ள பிற மொழியினரையும் தமிழ் அறியச் செய்வதுதான்.

 இருக்கின்ற சமற்கிருத அமைப்புகளையெல்லாம் பல்கலைக்கழகத் தகுதி அளித்து உயர்த்தி வருகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டரசும் உலகத்தமிழராய்ச்சி நிறுவனம், தமிழ் இணையக்கல்விக்கழகம் முதலிய அரசு நிறுவனங்களையும் மதுரைத்தமிழ்ச்சங்கம், கரந்தைத்தமிழ்ச்சங்கம் முதலான தமிழ்ச்சங்கங்களையும் பல்கலைக்கழக நிலைக்கு மேம்படுத்தலாம். கட்டமைப்பு உள்ள கல்வி நிறுனங்களைத் தகுநிலைப்பல்கலைக்கழகங்களாக மாற்றாமல் புதிய பல்கலைக்கழகம் அமைத்துக் கட்டமைப்பை உருவாக்குவது வீண் வேலையன்றோ?

 “பெருக்கத்து வேண்டும் பணிதல்” என்னும் திருக்குறளடிக்கு(963) எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் முதல்வர் மு.க.தாலின். தனக்கொரு நீதி, பிறருக்கொரு நீதி என்றோ தன் கட்சியினருக்கு ஒரு நீதி, பிற கட்சியினருக்கு ஒரு நீதி என்றோ பாராமல் நடுநிலையுடன் செயல்படுபவர். இவரைத்தவிர வேறு யாரும் முதல்வர் பொறுப்பில் அமர்ந்திருந்தால் அவர் நின்றாலும் நடந்தாலும் ஊர் தோறும் சென்றாலும் ஆரவாரப் புகழ்ச்சி உரைகளே கேட்டிருக்கும். செல்லுமிடங்களிலெல்லாம் வரவேற்புப் பதாகைகளும் வெட்டுருக்களும் ஆடம்பரக் காட்சிகளுமே வீற்றிருக்கும். ஆனால், இவர் முன்னெடுத்துக்காட்டான தலைவராகத் திகழும் ஆன்றோராக் காட்சி அளிக்கிறார். எனவே, கலைஞரின் பெயரைப் பயன்படுத்திப் பல்கலைக்கழகம் கேட்குநரின் பேராசையை நிறைவேற்ற மாட்டார்; ஊழலில் திளைத்தோர் தப்பிப்பதற்கு இடம் தர மாட்டார்; மொழிக்கொலைஞர்கள் தங்கள் கொலைப்பணியைத் தொடர வாய்ப்பு தரமாட்டார் என நம்புகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல

ஆடி 25, 2052 / 10.08.2021

Friday, June 25, 2021

தமிழைத் துரத்தும் பள்ளிக் கல்வித் துறை – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




தமிழைத் துரத்தும் பள்ளிக் கல்வித் துறை

 நாளும் நற்செயல்கள் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு நற்பணிகள் ஆற்றி நல்லரசு நடத்துகிறார் முதல்வர் மு.க.தாலின். அமைச்சர் பெருமக்களும் அவர் வழியில் நல்லரசு நிலைக்கத் துணை நிற்கின்றனர். ஆனால், அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் தமிழுக்குக் கேடு செய்யும் வகையிலும் அதிகாரிகள் சிலர் திட்டமிடுகின்றனர். அதற்கு அரசும் துணைபோகும் அவலம் நேர உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளைக் பெருக்கும் வகையில் சட்டமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதற்கிணங்க “அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்கள் நீக்கப்படும்” என்றார். இதனால் ஆங்கிலவழிக்கல்வி பெருகித் தமிழ்வழிக்கல்வி மறையும் நிலைதான் ஏற்படுகிறது.

அரசு மாறினாலும் முந்தைய அரசின் நல்ல திட்டங்களைத் தொடர வேண்டும். என்றாலும் நடுநிலையாளர்களாகக் காட்டும் வகையில் முந்தைய அரசின் தீய செயல்களையும் தொடர வேண்டும் என்றில்லை. ஆனால், தமிழ்வழிக்கல்விக்குச்சாவு மணி அடிக்கும் முந்தைய அதிமுக அரசின் திட்டங்களைத் தொடரும் வகையில் அரசு அறிவிப்புகள் வருகின்றன.

 “தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாத்திரங்களும் தமிழ் மொழி மூலமாகவே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோர் எல்லோரும் கொண்டிருக்கிறார்கள்” என்றார் பைந்தமிழ்த்தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்.

நம் நாட்டில் காந்தியடிகள் முதலான தலைவர்கள் பலரும் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியுள்ளனர்; இப்பொழுதும் கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். பயிற்சிமொழிக் காவலர் பேரா. முனைவர் சி.இலக்குவனார், “உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.  நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம்.” எனத் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகிறார்.

 துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா(நாயுடு) “மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பன்முக அணுகுமுறை தேவை. இது தொடக்கப்பள்ளி மட்டத்திலிருந்தே தொடங்கி உயர் கல்விக்குத் தொடரப்பட வேண்டும். குறைந்தது தாய் மொழியில் செயல்பாட்டு கல்வியறிவு உறுதி செய்யப்பட வேண்டும்.” என்றார். ‘தாய்மொழிக்கல்வி மூலம் தாய்நாட்டு வளர்ச்சி’ என்பதை இலக்காகக் கொண்டு வெங்கையா(நாயுடு) வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். நாடு முழுவதும் அந்தந்த மக்களின்தாய்மொழி வழியிலான கல்விக்கு ஒன்றிய அரசு உதவும் வகையில் அவர் செயலாற்ற வேண்டும்.

 அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்று, 22 நாடுகளில் 160 மொழிக் குழுக்களிடம்  தாய்மொழிக்கல்வி குறித்து விவரம் திரட்டியது.  பெரும்பாலான மாணக்கர்களின் பள்ளிக்கல்வி முழுமை பெறாததற்கும் பிறமொழியைக் கற்கும் திறன் இழந்ததற்கும் தாய்மொழி அல்லாத பிற மொழிக்கல்விதான் காரணம் என ஆய்வு முடிவைத் தெரிவித்தது. இதனால் 2008இல் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு  தாய்மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே பிற மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே உயர்கல்வி  என்பதையே  வலியுறுத்தத் தொடங்கியது.

இமயமலை போலுயர்ந்த

ஒருநாடும் தன்மொழியில்

தாழ்ந்தால் வீழும் (தமிழியக்கம்)

எனப் பாவேந்தர் பாரதிதாசன் இதைத்தான் வலியுறுத்துகிறார். 

 “எல்லா நாடுகளுமே தத்தம் நாட்டில் உள்ள பிற நாட்டினரின் தாய்மொழிக்கல்வியில் கருத்து செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, நார்வே, சுவீடன் முதலான ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டில் வளரும் பிற மொழியினரின் குழந்தைகளுக்கும் அவரவர் தாய்மொழியைக் கற்பிக்க வழிவகை செய்துள்ளன. நார்வே நாட்டில் தமிழ்மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண், நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது.

பாப்பூ நியூ கினியா  நாட்டில் கணிசமான தொகையில் மக்கள்பேசும் 450 மொழிகளைக் கல்வி மொழிகளாக அந்நாடு பின்பற்றுகிறது.

எத்தியோப்பாவில், தாய் மொழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, கற்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையானது பெருமளவில் குறைந்தது.

பிலிப்பைன்சு அரசாங்கம் 2012 இல் அனைத்துத் தொல்குடி மக்களும் அவரவர் தாய் மொழி வழியே கல்விக் கற்பதைக் கொள்கை முடிவாக எடுத்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

பிற மொழிக் குழந்தைகள் சுவீடனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பெற்றோர்களின் இடப்பெயர்வின் காரணமாகச் சுவீடனில் வாழ்ந்தாலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்தாலும் தாய்மொழிக்கல்வியை அவர்களுக்கு அளிப்பதைச் சுவீடன் கல்வித்துறை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. நம் நாட்டிலோ இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அயல் மொழிக்கல்வியைத் திணிப்பதையே அரசுகள் கடமையாகக் கொண்டு செயல்படுகின்ற அவலம் உள்ளது.“

தாய்மொழி சார் கல்வி(mother tongue-based education) உள்ள நாடுகளில் கல்வி வளர்ச்சியும் பிற வளர்ச்சியும் சிறப்பாக உள்ளன. அயல்மொழி சார் கல்வி உள்ள நாடுகளில் இவை பின்தங்கியே காணப்படுகின்றன.

பொதுவாக அயல்மொழியினர் ஆட்சியில் கட்டுப்பட்ட நாடுகளில் எல்லாம் தாய்மொழிக்கல்வி புறக்கணிக்கப்படுகிறது. இவற்றுள் எந்தெந்த நாடுகள் விழிப்படைந்து தாய்மொழிக்கல்விக்கும் தாய்மொழிவழிக்கல்விக்கும் மாறியனவோ அங்கெல்லாம் வளர்ச்சியைக் காண முடிகிறது.

பிற நாட்டு அரசுகள் தத்தம் நாட்டில் வாழும் அயல் நாட்டார் தத்தம் தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறவேண்டும் என்பதில் முனைப்பாகக் கருத்து செலுத்திச் செயல்படுகின்றன. தமிழ் நாட்டிலோ நாட்டு மக்கள் தம் தாய்மொழியிலான தமிழில் கல்வி கற்பதற்குத் தடையாகச் சூழல்கள் உள்ளன.

நாம் எதற்கெடுத்தாலும் மேல் நாட்டைப் பாருங்கள், சப்பானைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள் என்கிறோம். ஆனால் வளர்ச்சி பெற்ற அந்நாடுகள் தத்தம் தாய்மொழியில் கல்வி அளிப்பதால்தான் வளர்ந்துள்ளன என்பதை மறந்து விடுகிறோம். ஒருவர் தன் தாய்மொழி யல்லாத பிற மொழியில் படிக்கும் பொழுது பிற மொழிப்பாடமே ஒரு சுமையாக அமைகிறது. இதனால், அம்மொழியில் படிக்கும் துறைப்பாடங்களும் சுமையாக மாறிவிடுகின்றன. கல்வியாளர்களின் இக் கருத்தை உணர்ந்து எலலா நாடுகளும் தாய்மொழிக்கல்வியில் கருத்து செலுத்துகின்றன. பிற மொழிக்கல்வியால் உருப்போடும் மனனக் கல்விமுறைதான் வளர்கிறது. மாறாகத் தாய்மொழி வழிக்கல்வியானது ஆசிரியர் மாணாக்கர் உறவை மேம்படுத்தி ஐயங்களை அகற்றவும் தெளிவு பெறவும் உதவுகிறது. இதனால் மாணாக்கர்களின் சிந்தனை ஆற்றல் பெருகுகிறது.

“தாய்மொழிக் கல்வியால்தான் இன்று நான் என் கனவுகளை அடைய முடிந்தது” என்கிறார் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று விண்வெளி வீரராகப் பயிற்சி பெற்று வரும் தமிழக மாணவி உதய கீர்த்திகா

தமிழ்நாட்டைச்சேர்ந்த புள்ளி விவரங்கள் அளித்தால் திராவிட ஆட்சிகளை நஞ்சாக எண்ணுவோர், இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்பர். எனவே, பிற மாநில விவரங்களைப் பார்ப்போம்.

மூவாண்டிற்கு முன்னர் அண்டைய மாநிலமான கருநாடகாவில் ஆங்கிலவழித் திணிப்பு நிகழ்ந்த பொழுது எழுந்த எதிர்ப்பலையை நாம் காண்போம். அன்றைய முதல்வர் குமாரசாமி, சோதனை முயற்சி எனச் சொல்லி கருநாடகத்தில் இருக்கும் 28,847 தொடக்கப் பள்ளிகளில் ஆயிரம் பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழியாகக், கல்வி கற்பிக்கப்படும் என்றார்.

ஆனால், இதற்குக் கன்னட செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆங்கில வழிக் கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்றார் சாகித்திய அகாதமியின் முன்னாள் செயற் குழு உறுப்பினர் நரஃகள்ளி பாலசுப்பிரமணியா. அவர், “பொறியாளரும் அரசியல் வல்லுநருமான விசுவேசுவரையா, விண்வெளி ஆராய்ச்சியாளர் உடுப்பி இராமச்சந்திரன்(யு.ஆர்.இராவு), புகழ்பெற்ற அறிவியலாளரான சிந்தாமணி நாகேச இராமச்சந்திரன் (சி.என்.ஆர்.இராவு) முதலான சமூக முன்னோடிகள் அனைவரும் பத்தாம் வகுப்புவரை கன்னட வழிக் கல்வியில் பயின்றவர்களே” என்றார்.

“படிப்பதும், எழுதுவதும் புரிந்து கொள்ளும் மொழியில் இருந்தால், மாணவர்களுக்கு இரண்டாம் மொழி ஒன்றைக் கற்பது எளிதாக இருக்கும். மொழியைக் கற்பித்தல் குறித்த புரிதல் நம் நாட்டில் பெரிதாக இல்லை. கல்வியில் தாய் மொழி முதன்மைப் பங்கு வகிக்கிறது. இதனை நாம் புரிந்துகொள்வது இல்லை. தாய் மொழியைச் சரியாகக் கற்கும் ஒருவரால் இரண்டாவது,  மூன்றாவது மொழிகளை எளிதாகக் கற்க முடியும்” என்றார் பேராசிரியர் இராம்பால்.

“இரண்டாண்டுகளுக்கு முன் கருநாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அரசு பள்ளிகளில் கன்னடவழிக் கற்பிப்போர் குறித்த நிலையை விளக்கியது. அஃதாவது கருநாடக அரசுப் பள்ளிகளில் கன்னட வழியில் பயிலும் மாணவர்களில் 35 விழுக்காட்டினர் பட்டியல் வகுப்பு மாணவர்கள். 60 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்தவர்கள், எஞ்சியுள்ளவர்கள் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் பிள்ளைகள்” என அம்மாநிலப்பள்ளிக் கல்வி அதிகாரி ஒருவர் விளக்கினார்.

உலக நாட்டு அமைப்புகளின் ஆய்வு விவரங்கள், தங்களுடைய இளமைக் காலத்தில் தாய்மொழியில் கல்வி கற்கும் குழந்தைகள், பிற மொழிகளையும், பிற பாடங்களையும், தாய்மொழியில் கல்வி கற்காத  குழந்தைகளைவிடச் சிறப்பாக கற்றுத் தேர்ச்சி பெறுகின்றனர் என்பதை உறுதியாக்குகின்றன. எனவேதான்,  கல்வியின் தரம் உயரத் தாய்மொழியிலான கல்வியை ஆதரிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கங்களாக அவை கூறுகின்றன.

எனவே, மழலைப் பருவத்திலேயே தமிழையும் தமிழ் வழிக்கல்வியையும் அளிப்பதன் மூலம், நாம் குழந்தைகளை அறிஞர்களாகவும் வல்லவர்களாகவும் ஆக்க முடியும்.

நாம் முழுமையாகத் தாய்மொழிக்கல்வியையும் தாய்மொழி வழிக்கல்வியையும் நடைமுறைப்படுத்தாவிட்டால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது என ஆன்றோர்கள் கூறுவதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தப் பின்வரும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

  1. கல்வித்துறையை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தாய்மொழி வழிக்கல்விக்கான ஒதுக்கீடுகளை மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்க வேண்டும்.
  2. பணி வாய்ப்பு இல்லாமல் தாய்மொழிக்கல்வி வெற்றி பெறாது. எனவே, எல்லாப்பணித்தேர்வுகளும் அனைத்து மாநில மொழிகளிலும் நடைபெற வேண்டும்.
  3. மத்திய அரசின் எல்லாக் கல்வி நிலையங்களும் அயலகக் கல்வி நிறுவனங்களும் பிற கல்வி நிறுவனங்களும் அவை இருக்கும் மாநில மக்களின் மொழிகளில் கல்வி கற்பிக்க வேண்டும்.
  4. அரசியல் யாப்புப் பட்டியலில் உள்ள தேசிய மொழிகள் அல்லாத பிற தாய்மொழிக் கல்வியும் அவ்வம் மொழியினரின் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
  5. உயர்நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அயல்நாட்டு நிறுவனங்களிலும்மாநில மொழிகளே ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும். இதனைத் தமிழ்நாட்டு முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.

அப்பொழுதுதான் தமிழ் வழிக் கல்விக்கு எத்தகைய இடையூறும் இருக்காது. மக்களுக்குத் தமிழ் வழிக்கல்வியில் நம்பிக்கையும் வரும்.

தனியார் பள்ளிகள் நிதிநிலை ஆதாரங்களைத்திரட்டிக் கொண்டு ஆங்கிலவழிப்பள்ளிகளை நடத்துவதற்கு இசைவு தரக் கூடாது. உடனடியாக அனைத்து ஆங்கில வழிப்பள்ளிகளையும் மூட வேண்டும். தமிழ் வழியிலான கல்வி கற்பிக்கும் பள்ளிகள் மட்டுமே இயங்க வேண்டும். அவையும் தரமான நிலைகளில் இருக்க வேண்டும். கல்விப்பணி என்பது அறப்பணி. வணிகம் அன்று! எனவே, சொந்த நிதி ஆதாரத்தில் பள்ளி நடத்த மட்டுமே இசைவு தர வேண்டும். நன்கொடை பெற்று நடத்துவதற்கு இடம் தரக் கூடாது. இதுவரை நன்கொடை பெற்று நடந்து வரும் பள்ளிகளில் நன்கொடையாளர்களைக் கொண்ட கூட்டுறவுக் கல்வியக முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு ஒத்து வராவிடில் அப்பள்ளிகளை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். மகுடைத் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில் மேலும் சில திங்கள் தாய்மொழி வழிக்கல்வியை மட்டுமே நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்காக மூடி இருந்தால் ஒன்றும் குறைந்து போய் விடாது.

‘தமிழைத்துரத்தும் பள்ளிக்கல்வித்துறை’ என்னும் அவலநிலை மாற வேண்டும். இதற்குத் தமிழ் வழிக்கல்விக்கு எதிரான அதிகாரிகளைத் தூக்கி அடிக்க வேண்டும். தாய்மொழிக்கல்வியில் நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே உயர் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். தேசிய அளவில் ஆங்கில மொழியில்  நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளை அவர்கள் சுலபமாக எதிர்கொள்ள ஆங்கில வழிக்கல்வி தேவை எனப் பரிந்துரைத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநரை அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்வழிக்கல்வியும் தரமான ஆங்கிலமொழிக் கல்வியும் தரப்படும் வகையில் நம்பிக்கை உடையவரைப் பள்ளிக் கல்வி இயக்குநராக  அமர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில், ஆங்கில வழிக் கல்வியை அறவே நீக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியையும் ஆங்கில மொழிக் கல்வியையும் சிறப்பாக அளித்தல் வேண்டும். முதல்வர் வழியில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி விரைவில் நடவடிக்கை எடுத்துப் பள்ளிக்கல்வியில் தமிழை வாழவைக்க வேண்டும்.

பிற மொழித் திணிப்பு எதிர்ப்பு நமது காப்புரிமை!” என்னும்  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முழங்கிய முழக்கத்தை நாம் மறவாமல் பின்பற்ற வேண்டும்!

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 



Followers

Blog Archive