குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்
- இலக்குவனார் திருவள்ளுவன்
(1/5, 2/5, 3/5, 4/5 ஆகியவற்றின் தொடர்ச்சி.
தொடர்ச்சிப் பகுதியை 5/5 இல் காண்க.)
91. யானை (களிறு, பிடி, வேழம்,நெடுங்கைவன்மான்)
யானையின் துதிக்கை பெரியதாய் இருக்கும்
‘பெருங்கை வேழம்’
பாலைபாடிய பெருங்கடுங்கோ: குறுந்தொகை: 37:3
யானையின் மருப்பு (தந்தம்) வெண்மையாய் இருக்கும்.
‘வெண்கோட்டுயானை’
படுமரத்து மோசிகீரனார்: குறுந்தொகை: 75:3
யானையின் (துதிக்)கை நீளமாய் இருக்கும்
‘நெடுங்கை வன்மான்’
மதுரைப் பெருங்கொல்லனார்: குறுந்தொகை :141:4
யானையின் கண் சிறியதாய் இருக்கும்.
‘சிறுகண் பெருங்களிறு’
மதுரைக்கதக்கண்ணனார்: குறுந்தொகை: 88:2
யானை வலிமை வாய்ந்தது.
‘கடும்பகட்டு யானை’
ஔவையார்: குறுந்தொகை: 91:6
யானையின் வாய் பெரியதாய் இருக்கும்.
‘கயவாய்ப் பேதை யானை’
குட்டுவன் கண்ணனார்: குறுந்தொகை: 179:5-6
யானையின் கால் (பேயின் பல்லைப் போன்ற) பருத்த நகம் உடையதாயும் பெரியதாயும் இருக்கும்.
‘பழூஉப் பல் அன்ன பருவுகிர்ப் பாவடி
இருங்களிறு’
கச்சிப் பேட்டு நன்னாகையார்: குறுந்தொகை: 180:1-2
பெருமழையினால் கழுவப்பட்ட தூய்மையான கற்பாறை, அழுக்கு நீங்கக் குளிப்பாட்டப்பட்ட யானைபோல் இருக்கும்.
‘மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்’
கபிலர்: குறுந்தொகை: 13:1-2
92. வௌ்ளாடு
வௌ்ளாட்டின் தலை சிறியதாக இருக்கும்.
‘சிறுதலை வௌ்ளை’
அம்மூவனார்: குறுந்தொகை: 163:2
(வௌ்ளை-வௌ்ளாடு)
பறவைகள்:
93. பறவைகள்
பறவைகளின் சிறகுகள் வளைந்து இருக்கும்
‘கொடுஞ்சிறைப் பறவை’
தாமோதரனார்: குறுந்தொகை: 92:2
94.அன்றில்
ஆண் அன்றிலின் தலை, நெருப்பைப் போன்று சிவப்பு நிறமாக இருக்கும்.
பெண்அன்றிலின் அலகு இறாமீனைப் போன்று வளைந்து இருக்கும்.
‘நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பேடை’
மதுரை மருதனிள நாகனார்: குறுந்தொகை: 160:1-2
அன்றில் பறவை பனைமர மடலில் கூடுகட்டி வாழும்.
‘மன்றஅம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை அன்றில்’
உலோச்சனார்: குறுந்தொகை: 177:3-4
அன்றில், பனைமரமடலில் சிறு சுள்ளிகளால் கூடுகட்டி வாழும். இதன் காலின் நிறம் கருமையாக இருக்கும்.
‘பெண்ணைக்
கொழுமடல் இழைத்த சிறுகோல் குடம்பைக்
கருங்கால் அன்றில்’
குன்றியனார்: குறுந்தொகை: 301: 3
95. அன்னம்
அன்னப்பறவையின் கால்கள் குறுகியன.
‘குறுங்கால் அன்னம்’
கணக்காயர் தத்தனார்: குறுந்தொகை: 304:5
96. எழாஅல்
(புல்லூறு அல்லது வல்லூறு என்றும் அழைக்கப்படும் இப்பறவை வலிமை வாய்ந்தது.)
பிற பறவைகளை அடித்துண்ணும் இயல்பினது.
‘எழாஅல்உற வீழ்ந்து’
தூங்கலோரியார்: குறுந்தொகை: 151:2
97. கிளி (கிள்ளை)
கிளியின் அலகு வளைந்து இருக்கும்
‘வளைவாய்ச் சிறுகிளி ’
மதுரைப் பெருங்கொல்லனார்: குறுந்தொகை: 141:1
98. குருகு ( நாரை)
குருகுகள் புன்னை மரத்தில் தங்கும்.
‘வதிகுருகு உறங்கும் இன்னிழல் புன்னை ’
நரிவெரூஉத் தலையார்: குறுந்தொகை: 6:2
நாரையின் கால்கள் தினையின் தாள்கள் போன்று சிறியனவாய் இருக்கும்.
‘தினைத்தாளன்ன சிறுபசுங்கால
(ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்)
குருகு’
கபிலர்: குறுந்தொகை: 25:3-5
முள்முருங்கையின் இதழ் போன்று நாரையின் சிறகுகள் மென்மையாய் இருக்கும். இதன் வாய் சிவப்பாக இருக்கும்.
‘கவிர் இதழ் அன்னத் தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரை’
வாயிலான் தேவனார்: குறுந்தொகை: 103:2
(கவிர்-முள்முருங்கை; தூவி-இறகு)
குருகு வெண்ணிறமாய் இருக்கும்.
‘வெண்குருகு’
மாதிரத்தனார்: குறுந்தொகை: 113:3
நாரை, ஆரல் மீனை உண்ணும்
‘ஆரல் அருந்த வயிற்ற
நாரை’
பொன்னாகனார்: குறுந்தொகை: 114:4-5
குருகு ஆரல்மீனை உண்ணும்
‘ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகு’
கபிலர்: குறுந்தொகை: 25:4-5
குருகு மீன் உண்ணும்
‘மீன்ஆர் குருகு’
அம்மூவனார்: குறுந்தொகை: 163:3
கொக்கு பறக்கும் பொழுது வெண்ணிறமுடையதாகவும் இருக்கும்போது (மழைக் காலத்து) குவிந்த ஆம்பல் பூவின் நிறமுடையதாகவும் காணப்படும்.
‘மாரி ஆம்பலன்ன’
குன்றியனார் : குறுந்தொகை: 117:1
99. குருவி
சிட்டுக்குருவியின் சிறகு ஆம்பல் பூவின் வாடிய தோற்றம் போல இருக்கும்
‘ஆம்பல் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனையுறை
குரீஇ’
மாமிலாடனார்: குறுந்தொகை: 46:1-2
ஊர்க்குருவி அடியிட்டு நடக்காமல் துள்ளித் துள்ளி நடக்கும்.
‘உள்ளூர்க்குரீஇத் துள்ளுநடைச்
சேவல்’
வடம வண்ணக்கன் தாமோதரனார்: குறுந்தொகை: 85:2
கருவுற்ற பெண்குருவி குஞ்சு பெற்றெடுக்க, ஆண் குருவி கூடுகட்டித் தரும்
‘சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்’
வடம வண்ணக்கன் தாமோதரனார்: குறுந்தொகை: 85:3
100. கூகை
வாகை என்னுமிடத்தில் கூகை மிகுதியாக உள்ளது.
‘கூகைக் கோழி வாகை’
பரணர்: குறுந்தொகை: 393:3
101. கோழி (கானங்கோழி, சேவல்)
நாட்டுக் கோழியின் கால்கள் குறுகியன.
மனையுறைக் கோழிக் குறுங்கால் பேடை’
ஒக்கூர் மாசாத்தியார்: குறுந்தொகை: 139:1
102. சிறுவெண்காக்கை
சிறுவெண்காக்கை கடற்கரையில் வாழும்.
‘பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை’
கபிலர்: குறுந்தொகை: 246:1
103.தும்பி (வண்டு, சுரும்பு)
வண்டின் சிறகுகள் அழகாக இருக்கும்; சிறியனவாய் இருக்கும்.
‘அஞ்சிறைத் தும்பி’
இறையனார்: குறுந்தொகை: 2:1
‘குறுஞ்சிறைத் தும்பி’
ஆசிரியர் பெருங்கண்ணனார்: குறுந்தொகை: 239:4
வரிகளை உடையது வண்டு
‘வரி வண்டு’
கல்லாடனார்: குறுந்தொகை: 260:2
பாலைநிலத்துப் பூக்களில் தேன் வறண்டு இருக்கும்.
வேனிலால் வெம்பிய மராமரத்தின் வேனிற் காலத்தில் மலர்ந்த ஒற்றைப் பூங்கொத்தில் தும்பி என்னும் வண்டும் தேன் என்னும் வண்டும் இணைந்து தேனெடுத்தும் வயிறுநிறையாமல் சென்றன.
‘தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை
வேனில் ஓர் இணர் தேனோடுஊதி
ஆராது பெயரும் தும்பி ’
(காவன் முல்லைப் பூதனார்: குறுந்தொகை: 211:4-6)
காந்தள் அரும்பு மலரும் முன்பே வண்டுகள் அரும்பினைத் திறக்கும்.
‘காந்தளம் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும்’
கருவூர்க்கதப் பிள்ளை: குறுந்தொகை: 265:2
104. புறா (புறவு)
புறாவின் கழுத்தில் புள்ளிகளும் முடியும் இருக்கும்; சிறு சிறு காலடியாய் வைத்து நடக்கும்.
‘பொறிமயிர் எருத்தில் குறுநடைப்பேடை’
மதுரைச் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 151:4
பெண்புறாக்கள் ஆண்புறாக்களை அழைக்கும்.
‘புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்’
குடவாயில் கீரத்தனார்:குறுந்தொகை: 79:4
105. மகன்றில்
மகன்றில் பறவை நீரில் வாழும்; ஆண் மகன்றிலும் பெண் மகன்றிலும் கூடி இணைபிரியாது வாழும்.
‘நீருறை மகன்றில் புணர்ச்சி’
சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை: 57:2
106. மயில் (தோகை, மஞ்ஞை)
முகில்களின் முழக்கம் கேட்டவுடன் மயில்கள் அகவும்.
‘மின்னுபு
வான்ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்எதிர்
கான மஞ்ஞை கடிய’
கோவத்தனார்: குறுந்தொகை: 194:1-3
காட்டில் வாழும் மயில் பாறைமீது முட்டை இடும்.
‘கான மஞ்ஞை அறையீன் முட்டை’
கபிலர்: குறுந்தொகை: 38:1
(அறை-பாறை)
107. வங்காப் பறவை
(பெண்) வங்காப் பறவையின் கால்களின் நிறம் சிவப்பு; இதன் குரல் வேய்ங்குழலின் இசைபோன்று இனியமையாய் இருக்கும்.
‘வங்காக் கடந்த செங்காற்பேடை குழலிசைக் குரல்’
தூங்கலோரியார்: குறுந்தொகை: 151:1-3
108. வாவல்
வௌவாலின் சிறகுகள் நீல நிறமாகவும் மெல்லியதாகவும் நகங்கள் வளைந்தும் இருக்கும்.
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை’
(புலவர் பெயர் தெரியவில்லை) குறுந்தொகை: 201:3
மீன்கள்:
109. இறால் (இறவு)
இறால்மீனின் கால்கள் முள்போன்று இருக்கும்; முதுகு வளைந்து இருக்கும்.
‘முட்கால் இறவின் முடங்கு ’
நம்பி குட்டுவனார்: குறுந்தொகை: 109:1
110. சுறா (கோட்டு மீன்)
சுறா மீனிற்குக் கொம்பு இருக்கும். (எறியுளி என்னும் கருவி கொண்டு இம்மீனைப்பிடிப்பர்.)
‘கோட்டு மீன்’
கணக்காயர் தத்தனார்: குறுந்தொகை: 304:4
பொதுவான நூல்களிலேயே அறிவியல் குறிப்புகள் இருக்கின்றன எனில், இவ்வறிவியல் உண்மைகள் மக்கள் அனைவருக்கும் அறிந்த எளிய உண்மைகளாக இருந்திருக்க வேண்டும். மேனாட்டார் பிற்காலத்தில் தெரிவித்த அறிவியல் உண்மைகளுடன் ஒப்பிடும் பொழுதுதான் பழந்தமிழரின் அறிவியல் சிறப்பு மேலும் புலனாகும்.
அறிவியல் தமிழை ஆழக் கற்போம்.
தமிழில் அறிவியலை வென்றெடுப்போம்.
Migavum Thelivaana Karuthu.. Makkalukku Theliya vendum arivu..
ReplyDelete