Tuesday, April 19, 2011

andre' sonnaargal 47 - buildings 9 : அன்றே சொன்னார்கள் 47 - கட்டட வகைள் 9

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 19, 2011


கட்டடவியலுக்கென்று இலக்கணம் வகுத்து அதற்கேற்ப பெரிதாகவும் அகலமாகவும் பல மாடிகள் உடையதாக உயர்ந்ததாகவும் பாதுகாப்பாகவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் வீடுகளைக் கட்டி இருந்தமையைப் பார்த்தோம். இவற்றின் தொடர்ச்சியாக மேலும் சிலக் குறிப்புகளைப் பார்ப்போம்.

நாம் இப்பொழுது வீட்டிற்குக்குளிர்ச்சி தேவை எனில், செயற்கையாகக் குளிர்கலன் வைத்துக் கொள்கிறோம். பண்டைக் காலத்தில் வீடு கட்டும் முறையிலேயே தேவையான குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் அறிவியல் வித்தையை நன்கு அறிந்திருந்தனர். இவ்வாறு, மரநிழலில் அமைந்துள்ள நீர்நிலை போன்று குளிர்ச்சியான மாடித்தளங்கள் உடைய மாளிகையைப் புலவர் தாயங்கண்ணனார்,
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் (அகநானூறு: 105.7) என்கிறார்.
இப்பாடலிலேயே மணிசெய்மண்டை (மணிகள் பதிக்கப்பெற்ற பொற்கலம் உள்ள மனை) எனக் குறிப்பிட்டுச் செல்வச் சிறப்பையும் அவர் விளக்கி உள்ளார்.
மாடிகள் நிறைந்து சிறப்புற்ற மாளிகையைப் புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்,
மாட மாண் நகர் (அகநானூறு : 124.6) என்கிறார்.
உழவர்களின் தனித்தனித் தோப்புகளில் தனி வீடுகள் அமைந்திருந்தன. உழவர்களுக்கான அத்தகைய தனி மனைகளைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
தண்டலை உழவர் தனிமனை (பெரும்பாணாற்றுப்படை 355)
எனக் கூறுகிறார்.
வீடுகளுக்கான வாசல்கள் அகலமாக அமைந்து கதவுகள் ஒற்றைப் பெருங்கதவுகளாக அமைக்கப்பட்டதுடன்  இரட்டைக் கதவுகளாகவும் அமைந்திருந்தன. இரு கதவுகளைச் சேர்த்து மூடும் வகையில் அகலமான வாசலும் கதவுகளும் அமைக்கப்பட்டமையைப்  புலவர் மருதனிளநாகனார், பெரும் செல்வம் நிலையாக உள்ள மிகுதியான உணவுப் பொருள்களை உடைய பெரிய இல்லத்தின் இரட்டையாய் வந்து கூடும் கதவு எனக் குறிப்பிடும் வகையில்,
பெருந்திரு நிலைஇய வீங்குசோற்று அகல்மனை
பொருந்து நோன் கதவு ( கலித்தொகை :83.1 ) என்கிறார்.

வீட்டிலுள்ள அறைகள் நெல்கள் குவித்துச் சேமித்து வைக்கும் வகையில் பேரளவாக அமைந்திருந்தன. இவ்வாறு, நெல் குவிந்து கிடக்கும் வீடுகள், பொன்கொழிக்கும் தெருக்கள் என்று உணவு வளம் நிறைந்த வீடுகளின் சிறப்புகளையும்  செல்வ வளம் மிகுந்த நகரின் சிறப்புகளையும் புலவர் குன்றூர்க்கிழார் மகனார் கண்ணத்தனார்
நெல்மலிந்த மனை பொன்மலிந்த மறுகின் (புறநானூறு : 338.2) என்னும்
அடியில் விளக்குகிறார்.

மேலும் பிறவற்றைச்சேர்த்து வைக்கும் வகையிலும், வீடு எது, ஓடம் எது என்று தெரியாத அளவிற்கு மீன்வகைகளும் பிற பொருள்களும் மிளகு மூட்டைகளும் குவிந்திருக்கும் அளவிற்குப் பெரிய அளவில் வீடுகள் அமைந்தமையைப் புலவர் பரணர்
மிசைஅம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையால் (புறநானூறு : 343.2) எனக்
குறித்துள்ளார்.
(மிசை அம்பி – உயர்வான படகு; குவை-குவியல்; கறிமிளகு)

வீடு நிறையப் பணி செய்யும் உழவர்கள் இருந்தனர் என்பதைப் புலவர் குன்றுகட் பாலியாதனார்
மனைக் களமர் (புறநானூறு 387.25) என்னும் தொடர் மூலம்
விளக்குகிறார். எனவே, உழவர்கள் நிறைந்திருக்கும் அளவிற்கு வீடுகளும் பெரிய அளவினதாகக் கட்டப்பட்டுள்ளன.

மலர்மாலை அணிந்து மணம் வீசும் வீடுகளில் விளையாடி மகிழ்ந்தமையை ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார்,
மணங்கமழ் மனை தொறும் பொய்தல் அயர (மதுரைக்காஞ்சி : 589)
எனக்குறிப்பிட்டுள்ளார்.(பொய்தல்-விளையாட்டு).எனவே,விளையாடுவதற்கேற்ற வகையில் வீடுகள் பெரிதாக அமைந்திருந்தன எனலாம்.

பொய்கையால் சூழப்பெற்ற பூங்கா அமைந்த அழகான பெருமனைகள் இருந்தமையைப் புலவர் பரணர்,
பொய்கை சூழ்ந்த பொழில்மனை (அகநானூறு: 181.18) எனக்
குறிப்பிடுகிறார்.

இன்றைய நாகரிக உலகில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இத்தகைய வீடுகளை நாம் அமைத்துள்ளோம். இன்றைய நாகரிகச் சிறப்பை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பழந்தமிழ்முன்னோர் அடைந்துள்ளனர். நாம்அயல்மொழி வாயிலாக அறிவை இழந்து நாகரிகத்தைத் தொலைத்து நிற்கிறோம்!

No comments:

Post a Comment

Followers

Blog Archive