அன்றே சொன்னார்கள்49
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -11
பதிவு செய்த நாள் : April 21, 2011கட்டடங்கள் என்பன வீடுகள் அல்லது மாளிகைகள் முதலானவற்றுடன் அறச்சாலை முதலானவற்றையும் குறிக்கும். ஆங்காங்கே வழி நடைப்பயணத்திற்கென மாந்தர்க்குச் சோறிடும் அறச்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இவை போல் கால்நடைகளுக்கென வைக்கோல் இடும் சாலைகளும் வைக்கோல் தின்று வயிறு நிறைந்த உடன் எருதுகள் நீர் குடிக்க வேண்டும் என்பதால் நன்னீர்க்குளங்களும் அமைத்து இருந்து உள்ளனர். துறவிகள் தங்கும் தவப்பள்ளிகளும் அமைத்திருந்தனர். குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளே அடக்கின முன்றிலை உடைய பெரிய எருத்திற்கு வைக்கோலிடும் பல சாலையினையும் தவம்செய்வோர் உறையும் இடங்களையும் உடைய தழைத்துத் தாழ்ந்தபொழில்கள் சூழ்ந்த தவப்பள்ளிகளை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டுஎருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவின் (பட்டினப்பாலை 51-52)
எனக் குறிப்பிடுகிறார்.
‘வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்இல்‘ (357-8)
என்னும் ஆசிரியர் மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி அடிகட்கு, ‘மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலும் பெயர்களைப் பெறுதலின், வகைபெற வெழுந்தென்றார்‘ என்று நச்சினார்க்கினியர் சிறப்புரை எழுதி உள்ளார். இதனை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் விளக்கமாக,
ஒவ்வொரு மாடமும் அல்லது மாளிகையும், சுற்றுச்சுவர், முகமண்டபம், தலைவாசல், இடைகழி(நடை), முன்கட்டு, உள் முற்றம், பின்கட்டு, கூடம், அடுக்களை (சமையலறை), புழைக்கடை (கொல்லைப்புறம்), மனைக்கிணறு, குளிப்பறை, சலக்கப்புரை (கழிவறை), சாலகம் அல்லது அங்கணம் என்னும் பகுதிகளையுடைய தாயிருந்தது; மேனிலையில் நிலாமுற்றமிருந்தது எனத் தெரிவிக்கிறார்.
இவற்றுடன், அக்கால மாளிகைகள், காற்றோட்டத்திற்காகக் காலதர், சாளரம், பலகணி என்னும் பல்வகை அமைப்புகளைப் பெற்றிருந்தன. இன்றைக்கு நாம் பலகணி வசதி உடன் தனியாக வெண்டிலேட்டர் (ventilator) என்னும் வசதியையும் வைத்துள்ளோம். அதனைக் குறிப்பதுதான் காலதர் என்பது. ( கால் – காற்று ; அதர் -வழி; காற்று வரும் வழி). அறிவியல் சார்ந்த கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகக் காலதரைக் குறிப்பிடலாம்.
முரட்டுத்துணியால் அமைக்கப்பட்ட கூடாரம், படமாடம் என்றும் திரையால் அமைக்கப்பெற்ற மண்டபம், மண்டப எழினி என்றும் சொல்லப்பட்டமையால் கட்டட அழகிற்குத் துணியையும் இக்காலம்போல் அன்றே பயன்படுத்தி உள்ளனர் எனலாம்.
குற்றமற்ற சிறப்பை உடைய மாளிகை பற்றி ஆசிரியர் இளங்கோ அடிகள்,
‘சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்கும் கடிமனை‘ (சிலப்.14:146-7) எனக் கூறி உள்ளார்
இதற்கு விளக்கம் தரும்பொழுது அருஞ்சொல்உரைகாரர் ஓடு கொண்டு வேயப்படாமல் பொன்னால் வேயப்பட்ட மனை என்று விளக்கம் தருகிறார். ஆசிரியர் சாத்தனாரும் காஞ்சி நகரில் கூடுதற்குரிய பொது அம்பலமும் பொன்னால் வேயப்பட் டிருந்ததாகச்
சாலையுங் கூடமும் தமனியப் பொதியிலும்‘ (மணிமேகலை : 28: 66)
என்னும் அடியில் தெரிவிக்கிறார். எனவே, சுடாத மண், சுட்டமண், ஓடு என்பனவற்றைக் கொண்டுமட்டும் அல்லாமல் பொன்னையும் கொண்டு கூரைகள் வேயப்பட்டிருந்தமை செல்வச் செழிப்புடன் கட்டடக்கலைச் சிறப்பிற்கும் சான்றாகும்.
மன்றம், அம்பலம், பொதுவில், அரண், மதில் எனப் பலவாக அமைந்தனவும் கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும். இவற்றைப் பிறிதொரு சமயம் பார்ப்போம். இதுவரை பார்த்த கட்டடச் சிறப்பிற்கு முத்தாய்ப்பாக நெடுநல்வாடை கூறும் கட்டட அமைப்பை அடுத்துப் பார்க்கலாம். அதற்கு முன்னர், கற்பனைக்காக அல்லது உயர்வு நவிற்சிக்காகக் கட்டடங்கள் பெரிய அளவில் இருந்தமையாகக் கூறியதாகக் கருத வாய்ப்பில்லை என்பதை நாம் தெளிய வேண்டும். ஏனெனில், சிறிய வீட்டினை அவ்வாறே குறிப்பிட்டுள்ளனர். (மனை என்பதை மனையில் நடத்தும் இல்லறத்தைக் குறிக்கவும் பயன்படுத்தினர். குடும்ப ஒளிவிளக்காகத் திகழும் தலைவனை (அல்லது குடும்ப விளக்காகிய தலைவியன் கணவனை)ப் புலவர் ஐயூர் முடவனார்
மனைக்கு விளக்கு ஆகிய வாள்நுதல் கணவன் (புறநானூறு : 314.1)
என்று குறிப்பிடுகிறார்.) உள்ளது உள்ளவாறுதான் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்பதற்குச் சில சான்றுகள் பார்க்கலாம்.
இலைவேய்ந்த குடிசைகள், குற்றில்கள், சிற்றில்கள், மண்சுவர்க்கூரை வீடுகள், பச்சைச் செங்கல் சுவர்க் கூரை வீடுகள், சுட்ட செங்கல் சுவர்க்கூரை வீடுகள், எனப் பலவகையான உறையுள் (குடியிருக்கும் வீடுகள்) பற்றிக் குறிப்பிட்டு உள்ளனர்.
புலவர் முதுகண்ணன் கூவை இலைகளால் வேயப்பட்ட நான்கு கால்களை உடைய பந்தல் போல விளங்கும் சிறு குடிசையைக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறுமனை (புறநானூறு : 29.19-20)
எனக் குறிப்பிட்டுள்ளார். சிறிய குடிலைப்
பண்ணன்சிறுகுடி (புறநானூறு 15:13) என்கிறார் புலவர் கோவூர்க்கிழார்.
பெரிய கோலங்கள் மூலம் அழகு சேர்த்துள்ள சிறிய வீடுகளைப் புலவர் மதுரை மருதனிளநாகனார்
அகல்வரிச் சிறுமனை (நற்றிணை : 283.3) என்பதன் மூலம்
உணர்த்துகிறார்.
எலிகள் மடிந்து கிடக்கும் பழைய வீட்டைப் புலவர் பெருங்குன்றூர்க் கிழார்
இல்எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் (புறநானூறு 211.19) எனக்
குறிப்பிட்டுள்ளார். இதைப்போன்ற பாழடைந்த வீடுகளை உள்ளவாறே பாழடைந்த நிலையில் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இயல்பான மனைகள் பற்றியும் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் (முல்லைமாலை நகர் புகல : அகநானூறு: 324.15), புலவர் ஓதலாந்தையார்(மனைகெழுபெண்டிர் : குறுந்தொகை: 382.5), புலவர் மருதனிளநாகனார் (மணமனை : கலித்தொகை : 68.18; 70.10), மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (இம்மனை அன்று; அஃது உம்மனை : அகநானூறு 56.14), எழூஉப்பன்றி நாகன் குமரனார் (முருகுமனை: அகநானூறு: 138.10), புறத்திணை நன்நாகனார் (மனை என்னாம்: புறநானூறு : 384.13), புலவர்கோமான் நெடுங்கோட்டனார் (கடிமனை : நற்றிணை 40.1), ஆசிரியர் புலவர் முடத்தாமக்கண்ணியார் (பொருநராற்றுப்படை : 185, 223) ஆசிரியர்புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பெரும்பாணாற்றுப்படை (256,299) ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி : 268,423,423) ஆசிரியர் புலவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் (நெடுநல்வாடை : 45) ஆகியோர் குறித்துள்ளனர்.
பொதுவாக எவ்வகை அடைமொழியும் இன்றி, இல்லம் என்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (பசிப்பிணி மருத்துவன் இல்லம் : புறநானூறு :173), புலவர் கயமனார் (பெருஞ்சோற்று இல்லத்து : அகநானூறு : 275.9), புலவர் நல்லந்துவனார் (கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்ற : கலித்தொகை : 142.64), புலவர் ஒக்கூர் மாசாத்தியார் (மெல்லிய அரிவை இல் : அகநானூறு: 384.7) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, சிறிய வீடுகளைச் சிறிய வீடுகளாகவே குறிப்பிட்டுள்ளதால், உள்ளது உள்ளபடி பன்மாடக் கட்டடங்களை அவ்வாறுதான் குறிப்பிட்டள்ளனரே தவிர, மிகையாகவோ புனைந்துரையாகவோ கூறவில்லை.
மேலும், குடி, நகர், மாளிகை என்னும் தமிழ்ச் சொற்கள் இந்திய நிலப்பரப்பு முழுமையும் சமசுகிருதம் முதலான பிற மொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு வருவதை நோக்குமிடத்து இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுமையும் அன்று பரவி இருந்த தமிழர்கள் எல்லா இடங்களிலும் சிறப்பான கட்டடங்களை எழுப்பி வசித்து வந்துள்ளனர் என உணரலாம்.
No comments:
Post a Comment