Monday, April 18, 2011

no need of navodhaya shool! we want Thamizh shcools!

காங்கிரசைத் தோற்கடிக்க மேலும் ஒரு காரணம் இதோ!
நமக்குத் தேவை 
தாய்த்தமிழ்ப் பள்ளிகளே!
(meenakam. katturai)
++++++++++++++++++++++++++++++++ 

நமது தேவை நவோதயா பள்ளி அல்ல!

தாய்த்தமிழ்ப்பள்ளிகளே!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 11, 2011
கருத்துகள் (0) 167 views
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (24 votes, average: 5.00 out of 5)

இந்தியா என்பது இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ இயற்கையாய் அமைந்த நாடன்று. அயலவர் ஆட்சி நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை அரசமைப்பு. இந்த அமைப்பு அனைத்துத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டால் வலிவும் பொலிவும் மிக்கதாக விளங்கும். மாறாக ஒரே மொழி ஒரே நாடு என்ற அடிப்படையில் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டால் சிதைவுண்டுப் போகும்.
ஆனால் இந்தியாவிற்கு அமைந்த நலக்கேடு என்னவெனில் மத்திய அரசு எப்பொழுதும் நாட்டு ஒற்றுமையைப் பேசிக் கொண்டே ஆரிய அரசாகச் செயல்படுவதுதான். அதன் இந்தித் திணிப்பு முயற்சிகளும் ஆரிய ஆட்சிக்குப் படிக்கட்டுகளாகத்தான் கருதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் தென்னாட்டவரும் குறிப்பாகத் தமிழ் நாட்டவரும் பெரிதும் உயிரும் உடைமையும் ஆட்சியும் மாட்சியும் இழந்து பாடுபட்டு உள்ளனர்; இருப்பினும் இந்திய வரலாறு என்றாலேயே வடவர் வரலாறு என்னும் போக்கிலும் இந்திய நிலப்பகுதி மொழி எனில் சமசுகிருத மேலாண்மைக்கு வழி விடுவதற்கான இந்தி என்றும் நடந்து கொள்வதுதான் காங்கிரசு எனப்படும் பேராயக் கட்சியின் மாறாக் கொள்கையாக உள்ளது. எனவேதான் விடுதலைக்கு முன்பிருந்தே சமசுகிருதத்தையும் இந்தியையும் திணித்து வந்தது; குடியரசாக நம் நாட்டு அரசியலமைப்பு அமைந்த பின்னும்   செயற்கையான ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தியைத் திணித்தது. இந்தி ஒன்றுதான் நாட்டு மக்களின் தேசிய மொழி என்னும் தவறான பரப்புரையையும் எக்காலத்தும் மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமசுகிருதத்திற்கு மிக மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது.
அவற்றின் ஒரு பகுதிதான் இந்தியைத் திணிக்க வில்லை எனக் கூறிக் கொண்டே இந்தியைத் திணித்து வருவது. இந்தித் திணிப்பால் 1967 இல் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்த பின்னும் தன் தவறான பரப்புரையால்  தேசிய மொழி பற்றிய தவறான விதைகளை விதைத்துவிட்ட செருக்கில் நவதோயா பள்ளிகள் மூலம்  தமிழை அழிக்க மூக்கை நீட்டிப் பார்க்கிறது.
தமிழக அரசின் மொழிக் கொள்கை இரு மொழித் திட்டம் எனத் திட்டவட்டமாக அறிவித்து நவோதயா பள்ளிகளுக்குத் தமிழ் நாட்டில் இடம் இல்லாமல் செய்து விட்டதைக் காங்கிரசால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. மத்தியில் தற்போதைய ஆட்சி அமைந்தது முதல் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் தொடங்க வலியுறுத்தி வருகிறது. மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளிப்படையாகவும் பன்முறை பேசி உள்ளார். இருந்தும் தமிழ்நாட்டின் அரசு அசையாமையால் தேர்தல் சூழலைப் பயன்படுத்தித் தன் முயற்சியில் வெற்றி பெறலாம் எனக் கருதிக் காங்கிரசுச் சட்ட மன்ற உறுப்பினர்கள் மூலம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது.
நவோதயா பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கலாம்; இந்தித் திணிப்பு இல்லை; பள்ளி ஒன்றிற்கு இருபது கோடி உரூபாய் வீதம் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி நடத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிற்றூர்ப் பகுதியினரும் மிகுதியாய்ப் பயன் பெறுவர்; இவைதான் இந்திக்கு வால்பிடிப்போர் கூற்று. சட்டமன்றத்திலேயே பொய்யான தகவல்களைக் கூறும் இவர்களை என்னவென்று சொல்வது?
நவோதயா பள்ளி என்பது 6 ஆம் வகுப்பில் இருந்து உள்ள மேனிலைப்பள்ளியாகும். எடுத்த உடன் ஆங்கில வழியையும் இந்தி வழியையும் திணிக்க வேண்டாம் என்பதற்காக 6 ஆம் வகுப்பிலும் 7 ஆம் வகுப்பிலும் மாநில மொழிகளில் பாடம் கற்பிக்கப்படலாம். ஆனால் மெல்ல மெல்ல மாணவர்களை அயல்மொழிக் கல்விக்கு ஆயத்தப்படுத்தி 7 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்விற்குப் பின் ஆங்கில வழிக்கு  மாறும் வகையில்தான் கல்வித் திட்டம் உள்ளது. 9 ஆம் வகுப்பில் இருந்து அறிவியல் பாடமும் கணக்குப் பாடமும்  ஆங்கிலத்திலும் சமூக அறிவியல் பாடம் இந்தியிலும் இருக்கும்.
பின்னர் ஆங்கில வழியாகவும் இந்தி வழியாகவும் படிக்க இருப்பதால் முதலில் இருந்தே அந்த மொழிகளில் படிக்கத்தான் யாவரும் விரும்புவர். இருப்பினும் முதலில் கூறிய பின்பு தொடக்க ஆண்டுகளில் தாய்மொழி வாயிலாகவும் சொல்லித் தருகின்றனர். எனவே இதனைத் தாய்மொழி வாயிலான கல்வி என்றோ தமிழ்நாட்டில் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படும் என்றோ கூறுவது தவறாகும்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்கினால் வடக்கே மும்மொழித் திட்டத்தின் கீழ்த் தமிழ் கற்பிக்கப்படும் வாய்ப்பு கிட்டும் என்றும் அடுத்த பொய் மூட்டை அவிழ்த்துவிடப்படுகிறது.
1985 இல் நவோதயா பள்ளி அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்தே மும்மொழித்திட்டம் உள்ளது. ஆனால் இது வரை எந்த ஓர் ஆண்டிலும் மும்மொழித்திட்டத்தின் கீழ் வட நாட்டில்  தமிழோ பிற தென்னிந்திய மொழிகளோ கற்பிக்கப்படவில்லை என்பதை நிதிநிலை அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.  நவோதயா பள்ளியை இங்குத் தொடங்கினால் வடக்கே தமிழ் கற்பிக்கப்படும் எனக் கூறும் மேதையர் புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள் இருக்கின்றனவே! ஏன் அம்மாநில மக்கள் மொழியான தமிழ் வடக்கே கற்பிக்கப்படவில்லை என்பதை விளக்குவார்களா?
புதுச்சேரி நவோதயா (வித்யாலயா) பள்ளியின் பாடத்திட்டங்களைப் பார்த்தால் தமிழுக்கான பட நேரம் குறைவாகத்தான் உள்ளது. அது மட்டுமல்ல! இந்தி முதலான பிற துறைகளின் ஆசிரியர்கள் முழு நேர ஆசிரியர்களாக உள்ளனர். ஆனால் தமிழுக்கு அவ்வாறு இல்லை.
இந்தியா முழுவதும் 600 நவோதயா பள்ளிகள் உள்ளன. எவற்றிலுமே (இந்தி நீங்கலான) மாநிலத்தாய்மொழி முதன்மையாக  இல்லை. எனவே, பாட மொழி பற்றிய கருத்தையும் தவறாகவே பரப்பி வருகின்றனர்.
கல்வித்துறை என்பது மாநிலப் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் பொதுப்பட்டியலுக்கு மாற்றியதால்தான் இந்த அவலங்கள் தொடருகின்றன. நவோதயாவிற்கு வால் பிடிக்காமல் பேராயக் கட்சியினர் அதற்கான நிதி ஒதுக்கீட்டைத் தமிழ் நாட்டில் தமிழ் வழிப் பள்ளிகளுக்குப் பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஓர் அரசு புத்தியல் பள்ளி என மாவட்டந்தோறும் பள்ளிகள் தொடங்க மத்திய அரசின் பொருளுதவி கிடைத்தால் தமிழ்வழிக்கல்வி வளம் பெறும்; அறிவியல் அறிஞர்களும் பிற துறை அறிஞர்களும் தமிழ் நாட்டில் பெருகுவர்.
அரசு மருத்துவமனைக்குத் தங்கள் தலைவர் பெயர் வைத்ததாலேயே அரசு இதற்கும் உடன்படும் எனப் பேராயக் கட்சியினர் தப்புக் கணக்கு போடக் கூடாது. எனவே, நவோதயா வித்யாலயா நிதியுதவியைத் தமிழ்நாட்டின்  தமிழ்வழி அரசு பள்ளிகளுக்குப் பெற்றுத்தராமல் இந்திப்பள்ளியை இறக்குமதி செய்யச்சதி செய்தால் அடியோடு காணாமல் போக நேரிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
பேராயக்கட்சியானது தமிழர்கள் இளிச்சவாயர்கள், மானங்கெட்டவர்கள், கொத்தடிமைகள் என எண்ணிக்கொண்டு தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே நவோதயா பள்ளியைத் தமிழகத்தில் திறப்பதைக் கொள்கையாக அறிவித்துள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவாவது நாம் அக்கட்சியை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். நவோதயா பள்ளிக்கான நிதி நல்கைகளைத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்க வகை செய்ய வேண்டும். மாவட்டத்திற்குக் குறைந்தது ஒரு தமிழ்வழிக் கல்வியான  கல்விக்கூடத்தையாவது அனைத்து வசதிகளுடனும் கட்டணமின்றியும் சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும்.
தமிழ்வழிக் கல்வி நமது பிறப்புரிமை!
பிற மொழித் திணிப்பு எதிர்ப்பு நமது காப்புரிமை!

No comments:

Post a Comment

Followers

Blog Archive