கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 30, 2011கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம்.
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90)
வெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ படக்கூடாது. எனவே யானை மீது அமர்ந்து வெற்றிக் கொடியைப் பிடித்தால் வரும் உயரத்திற்குக் கோபுர வாயில் அமைக்கப்பட்டது. மலையைக் குடைந்து திறந்தவெளி உருவாக்குவதுபோல் (குன்று குயின்று அன்ன) அமைக்கப்பட்ட அகலமும் உயரமும் உடையதாக வாயில் அமைந்தது. எல்லா வகைப் பொருளும் வந்து குவிக்கப்படும் வளமைக்கு எடுத்துக்காட்டான (திருநிலை பெற்ற) குற்றமற்ற சிறப்பினை உடைய முன்றிலை அமைத்து அதில் மணலைக் கொண்டு வந்து பரப்பினர்.
வெற்றிக் கொடியை யானை மீது உயர்த்திப் பிடித்து உலா வரும் மரபைப் பிற புலவர்களும் கூறி உள்ளனர்.
கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
(புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் : பதிற்றுப்பத்து : 52.1)
மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி வரைமிசை
அருவியின் வயின் வயின் நுடங்க (ஆசிரியர் கபிலர் : பதிற்றுப்பத்து :69:1-2)
உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
(ஆசிரியர் பெருங்குன்றூர் கிழார் : பதிற்றுப்பத்து : 88:17)
கோல்களிற்று மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும்
(புலவர் நெட்டிமையார் : புறநானூறு : 9:7)
மலையைக் குடைந்து முனிவர் இருப்பிடம் அமைக்கப்பட்டதை ஆசிரியர் மாங்குடி மருதனார்
குன்றுகுயின்றன்ன அந்தணர் பள்ளியும் (மதுரைக்காஞ்சி:470) எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இங்கு அவ்வாறு குறிப்பிட்டது கற்பனை யல்ல என்பதையும் மலையைக் குடைந்து திறந்த வெளி அமைப்பது போன்ற அகலமும் உயரமும் உடைய வாசல்கள் முன்பு அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
உழைப்பாலும் இயற்கையாலும் வணிகத்தாலும் பெறும் செல்வங்களுடன் பகைவர் போர்க்களத்தில் விட்டுச் செல்லும் யானைகளும் பகை நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் குதிரைகள், பசுக்கள், செல்வங்கள் முதலானவையும் தோழமை நாட்டினர் திறையாகச் செலுத்தும் செல்வங்களும் எனப் பல்வகைச் செல்வங்கள் வந்து குவியும் இடம் ஆதலின், செல்வமாகிய திருநிலை பெற்றது எனக் கூறியுள்ளார். ஆசிரியர் மாங்குடி மருதனாரும்
கங்கைஅம் பேரியாறு கடல்படர்ந் தாங்கு
அளந்து கடையறியா வளம்கெழு தாரம் (மதுரைக்காஞ்சி 696-697)
என்கிறார்.
எனவே, பல்வகை வளங்களும் குவிப்பதற்கு ஏற்ற வகையில் முகப்பு இடத்தையும் வாசலையும் அகலமாகவும் உயரமாகவும் அமைத்திருந்தனர் என்பது சரிதான்.
தனி வீடுகளில் விழா அல்லது சிறப்பு நாட்களில் வீட்டின் முன்புறம் மணல் பரப்பும் பழக்கமும் இப்பொழுதும் உள்ளது. அவ்வாறு மணலைக் கொண்டு வந்து (தருவித்து) முற்றத்தில் பரப்புவது என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பழக்கமாக இருந்துள்ளது. பிற இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆசிரியர் மாங்குடி மருதனார்,
தருமணல் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப (மதுரைக்காஞ்சி 684)
(அரிஞிமிறு – வண்டுகளும் ஞிமிறுகளும்) என்கிறார்.
ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்,
விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் (மணிமேகலை : 1:50-51)
என்கிறார். எனவே, வீடுகளில் மட்டும் அல்லாமல் அகலமான வீதிகளிலும் மன்றங்களிலும் மணல் பரப்புவதும் அவ்வப்பொழுது பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.
எனவே, வீடுகளின் முன்பக்க முற்றங்களில் மணலைக் கொண்டு வந்து பரப்பும் அளவிற்கு ஒவ்வொரு வீடும் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டு இருந்துள்ளன.
உயரமான, அகலமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதை மேலே உள்ள வரிகள் மூலம் அறிந்த நாம், பிற சிறப்புகளை அடுத்துக் காணலாம்.
No comments:
Post a Comment