Friday, August 31, 2012

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி


                                                    குமரித்தமிழ் வானம்
தமிழ்ப்பேரறிஞர்
பேராசிரியர் சி.இலக்குவனார்
நினைவுச் சொற்பொழிவு
நாள்:  ஆவணி 6, 2043   * ஆக 22, 2012 * புதன் கிழமை மாலை 6.30 மணி
இடம்:  தமிழ்வானம் அரங்கம்,  50/22,கணபதிநகர்,செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோயில் 629 002
வாழ்த்துரை
-       இலக்குவனார் திருவள்ளுவன்
பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி
குமரித் தமிழ் வானம் திங்கள் தோறும் அறிஞர்கள் நினைவாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இவ்வமைப்பின் இயக்குநர் திரு சுரேசு ஆற்றும் அரும்பணியால் ஆன்றோர்கள் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பாகிறது. வானம் உள்ளளவும் தமிழ் வானத்தின் பணியும் தொடரட்டும்!
தமிழ்வானத்தின் திங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இத்திங்கள்  தமிழ்ப்பேரறிஞர் சி.இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு அமைந்துள்ளது அறிந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் உணர்வாளர் கவிஞர் நா.முத்திலவேனார் தலைமையில் குறள்நெறி ஆய்வறிஞரும் இதழாளரும் ஆன முனைவர் சிவ.பத்மநாபன் அவர்கள் பேராசிரியரின் திருஉருவப்படத்தைத் திறந்து வைப்பது பொருத்தமானதே!
தண்டமிழ்த் தொண்டர் தமிழ்வானம் செ.சுரேசு அவர்கள் தொடக்கவுரை யாற்ற, தமிழ்த்தேசியப்பேரவையாளர் ந.மணிமாறன் அவர்கள் இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவது பேராசிரியரின் தமிழ்ப்பணியை நினைவுகூரவும் அவர் வழி நாம் நடைபோடவும் பெரிதும் உதவியாக அமையும் என்பதில் ஐயமிலலை.
இந்நிகழ்வில் என் வாழ்த்துரையும் இடம பெறச் செய்தமைக்கு முதலிலேயே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் மொழிக்காகச் சிறை சென்ற ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்மட்டும்தான். தமிழர் தளபதி எனத் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் அவர்களைத் தமிழ்ப்பகைஅரசின் காவல்துறை இந்திஎதிர்ப்புத் தளபதி எனக் குற்றம் சுமத்தி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் அடைத்ததில் வியப்பொன்றும் இல்லை. அத்தகைய பெருமைக்கும் போற்றுதலுக்கும்  உரிய பேராசிரியச் செம்மலுக்கு விழா எடுப்பவர்களைப் பாராட்டுகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியரான பேராசிரியர் அவர்கள், தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிஞரல்லாத மக்களுக்கு அறிமுகப்படுத்தியதால்தான் இன்றைக்கும் அவை வாழ்கின்றன. வாழ்வியல் அறிவியல் நூலான தொல்காப்பியத்தை உலக மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் பேராசிரியர். அபபணியின் பெரும்பகுதி நடைபெற்றது இம்மாவட்டத்தில் அப்பெருந்தகை பணியாற்றிய பொழுதுதான்.
தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பையும் உயர்தனிச் செம்மொழியாகத் திகழும் சீர்மையையும் அயலவர் அறிய ஆங்கிலத்தில் தமிழ்மொழி குறித்து < Semantemes and Morphemes in Tamil Language, Tamil Language- Introduction, Tamil Language – Phonetics,Tamil Language, Tamil Language – Semantics,Tamil Language Syntax ஆகிய > நூல்கள் எழுதி வெளியிட்டு அருந் தொண்டாற்றியதும் இம்மண்ணில்தான்.
குமரிமண்ணிலுள்ள தெ.தி.இந்துக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்த பொழுதுதான் அணிவணக்கத்தைத் திருவள்ளுவர் படத்திற்கு வழங்கச் செய்து உலகப்பெரும்புலவரைப் போற்றினார் பேராசிரியர். இதுவரை யாரும் நிகழ்த்தியிராத அளவிற்குத் திருவள்ளுவருக்கு – மாபெரும் ஊர்வலத்துடனும் கலை நிகழ்ச்சிகளுடனும் மாணாக்கர்கள், இளைஞர்கள், அறிஞர்கள், தமிழன்பர்கள், பொதுமக்கள் சூழத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவப்படத்தை யானைமீது வைத்து – மிகச்சிறப்பான விழா எடுத்ததும் இம்மண்ணில்தான்!
தனியார்கல்லூரி ஆசிரியர்கள் நிலைமை இன்றைக்கும் மோசமாகத்தான் இருக்கின்றது. வீரர்களை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது தனியார் கல்லூரிகளில்தான். அவர்களின் உரிமைக்காகப் பலவழிகளிலும் போராடிப் பெரும்பாலான உரிமைகளை மீட்டுத்தந்தவர் பேராசிரியர். இங்குதான் நேர்மைக்கு இடமில்லை எனச் சாதிப் போர்வையில் பேராசிரியர் விரட்டி யடிக்கப்பட்டார். விரட்டியடித்த கல்லூரியினரேபேராசிரியர் பணிக்காலம்தான் கல்லூரியின் பொற்காலம் எனக் கூறி அவரை மீண்டும் முதல்வராகப் பணியமர்த்தியதும் இம்மண்ணில்தான்.
சாதிவெறியினரால் 1952 இல் விருதுநகரில் இருந்து  துரத்தப்பட்டார்   மன்பதை காக்கும் தமிழ்ப் போ்ராளிபேராசிரியர் சி.இலக்குவனார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் காமராசை எதிர்த்து நின்ற அறிவியல் அறிஞர் சி.டி.நாயுடு எனப்பெறும் கோ.துரைசாமி அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டார் பேராசிரியர். இதனால் நாடார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு நாடாரை எதிர்ப்பதா என்று விரட்டப்பட்டபொழுது தலைவரும் அமைதி காத்தார். அத்தேர்தலில் பேராசிரியர் அவர்கள் தலைவர் காமராசரை எதிர்த்துத் தவறாக ஒன்றும் பேசவில்லை. அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நாட்டிற்குத்  தொணடாற்ற வேண்டும் என்றும் அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம்  நம் நாடு அறிவியல் உலகில்  பல புதுமைகளைக் காண வேண்டும் என்றும் பேசினார்.
தாம் நடுநிலையாளர் என்பதை உலகிற்கு உணர்த்த  கருமவீரர் காமராசர் எனப் பேராசிரியர் நூல் எழுதி வெளியிட்டதும் இம்மண்ணில்தான். பேராசிரியர் கருதியவாறே முதல்வரான பெருந்தலைவர் பேராசிரியரின் தமிழ்ச்சார்பினையும் தன்னலம் கருதாத்  தொண்டுகளையும் புரிந்து கொண்டு அவரைச் சிறப்பு செய்யஎண்ணியதும் இம் மண்ணில் பேராசிரியர் இருந்தபொழுதுதான். பொதுக்கூட்டம் ஒன்றில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு பார்வையாளராக அமர்ந்திருந்த பேராசிரியரை அடையாளம் கண்டு கொண்டு அருகில் வந்து நலம் உசாவிப் பெருந்தலைவர் காமராசர் எளிமையில் உயர்ந்தவராகத் தம்மை உலகிற்கு  உணர்த்திய நிகழ்வு நடந்ததும் இம்மண்ணிலதான. பேராசிரியர் தமிழ்நாட்டின் தலைநகரில்தான் பணியாற்ற வேண்டும்; அவரது தொண்டு சுருங்காமல் விரிய வேண்டும் என அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் தலைநகருக்கு அழைத்ததும் இம்மண்ணில்தான்.
இன்றைக்கு அரசால்  ஏற்கப்பபெற்று தமிழ்த்தாய் வாழ்த்தாக மனோண்மணியம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடல் பாடப்படுவதை அனைவரும் அறிவர். பேராசிரியர் அவர்கள், இப்பாடலை முதலில் தமிழ்வாழ்த்தாக மேடைநிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடச் செய்து அறிமுகப்படுத்தியதும் இதே மண்ணில்தான்.
தமிழ் உரிமைப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின்  போர்க்குணங்களையும் தமிழுக்குக் கேடயமாக விளங்கிக் காத்த உரிமைப் போராட்டங்களையும் நாம் நினைவுபடுத்திக் கொள்வது அப்போர்க்குணம் அழியாமல் நம்மிடம் பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். கல்வி, ஆட்சி, கலை, வழிபாடு என எல்லா நிலைகளிலும் தமிழே இருக்கப் போராடியவர் பேராசிரியர் அவர்கள். தமிழின் பேரால் போராட்டங்கள் நடத்தி ஆட்சியில் அமர்ந்தவர்களே  நேற்றைக்கும் இன்றைக்கும் எனத்  தமிழ்ப்பகைச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  தமிழ்ப்பகையை எதிர் கொண்டவர்களே இன்றைக்குத் தமிழ்ப்பகைக்கு நட்பாகப் போனதால் தமிழன்பர்கள் கையறு நிலையில் இருக்கின்றனர். இந்நிலையை மாற்றித் தமிழுக்கு அன்பரெனில் நமக்கும் அன்பரே! தமிழுக்குப் பகை எனில் நமக்கும் பகைவரே! என நாம் உறுதியுடன் தமிழ்க்காப்புப் போரில் ஈடுபட  அவரது நினைவு நமக்குத் துணை நிற்கட்டும்!
தம்வாழ்வையே தமிழ்நலம்  நாடிய பேராட்டக்களமாக அமைத்துக் கொண்டவர் பேராசிரியர்.   அவர் வழியில் வாழ அவரது குறிக்கோளை  நினைவு கொள்வோம்!
அவரது  குறிக்கோளின்படி . . . . மொழிகளின் சமஉரிமையை நிலைநாட்டவும் தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை, தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்கு பெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும் காலத்துக்கேற்ப மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும், ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே இனி நம் வாழ்நாட்பணி எனக் கொள்வோம்.
இலக்குவனார் வழி நின்று இன்தமி்ழ் காப்போம்!

No comments:

Post a Comment

Followers

Blog Archive