புறநானூறு கூறும்
இழிசினன் இழிமகனல்லன்
சங்க இலக்கியங்களில் செருகப்பெற்றுள்ள சாதியாண்மைக் கருத்துகளை
அறிந்து செம்மையாக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு உள்ளது. புறநானூறு முதலான சங்க
இலக்கியங்களில் ஆரியர் வருகைக்கு
முன்னர் இயற்றப் பெற்ற பாடல்களும் உள்ளன. ஆரியர் வருகைக்குப்
பின்னர் இயற்றப் பெற்ற பாடல்களும் உள்ளன. என்றாலும் ஆரியத் தாக்கத்திற்குப்
பெரிதும் ஆட்படாத பாடல்களே மிகுதியாக
உள்ளன. ஆனால், ஏடு படி எடுப்போரின் தவறுகளாலும், ஆரியமே உயர்வு என
எண்ணியோராலும் ஆரியத் திணிப்பாளர்களாலும் பாடல்களிலும் உரையாசிரியர்களின் அவர்கள்
காலச்சூழல்களில் தவறான புரிந்துணர்வில் எழுதப் பெற்ற உரைகளினாலும் சாதியக்
கருத்துச் செருகல்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வகையில், புறநானூற்றுப்
பாடல்களில் இடம் பெறும் இழிசினன், இழிபிறப்பாளன், புலையன் முதலான சொற்கள் பற்றிய
ஆய்வு சாதியச்செருகல்கள் பற்றிய
விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்தும்.
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள இழிசினன் என்பது
இழிபிறப்பாளன் என்னும் பொருளில்தான் வருகின்றதா என அறிய அச்சொல் இடம் பெற்றுள்ள
பாடல்களைப் பார்ப்போம்.
ஆமூர் மல்லன் என்பான் மற்போரில்
வென்றி ஆமூரைக் கைக்கொள்ள எண்ணி வந்தான். அவனுடன் கோப்பெருநற்கிள்ளி பொருது வெற்றி
வாகை சூடினான். அதனை விளக்க வந்த புலவர் சாத்தந்தையார், அவன் போர்விரைவைப் பாராட்டிப் பின்வரும் பாடலைப்
படைக்கின்றார்.
சாறுதலைக் கொண்டெனப்
பெண்ணீற் றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற
ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன்
கையது
போழ் தூண்டு ஊசியின்
விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை
போரே. (புறநானூறு : 82)
இப்பாடலில், தொழிலாளி ஒருவனின் வினைத்திறனை வெளிப்படுத்தும் விரைவு உவமையாகக் கையாளப்பெறுகிறது.
மனைவியின் பேறுகாலம் நெருங்கி
விட்டது. பிறக்கும் குழந்தையை வரவேற்க விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். அதற்கான
ஆயத்தப் பணிகளுக்காக வீடு திரும்பவேண்டும்.
அதே நேரம், மகப்பேறு என்பது மறுபிறவி அல்லவா? மனைவியின் அருகே இருக்க வேண்டும். ஆதலின் உடன் சென்று உதவ வேண்டிய கடப்பாடும் உள்ளது. இவன் தொழிலோ கட்டில்
பின்னுவது. மழை பொழிவதுடன் ஞாயிறும்
மறைந்து கொண்டு உள்ளது. இருட்டுவதற்குள் இத் தொழிலை முடிக்க வேண்டிய கட்டாயச்
சூழலும் மறு பக்கம். இச் சூழலில் மனைவியைப் பார்க்கவும் மகவை வரவேற்கவும் வீடு
திரும்ப வேண்டிய இவன் எவ்வளவு விரைவாகக் கட்டில் வாரினைப் பிணைப்பதற்காக
வாரூசியைச் செலுத்துவான்! அத்தகைய
விரைவில் பொருநனை வீழ்த்தி வெற்றி கண்டான் மன்னன்.
மற்போருக்கு அழைத்த மல்லன்
வெற்றி பெற்றால் ஆமூர் அவன் வயப்படும்; நகர் இழப்பு மட்டுமன்று மன்னனுக்கும்
நகர மக்களுக்கும் மான இழப்புமாகும். சற்றுத் தோய்வு ஏற்பட்டால்கூட வந்த
மல்லன் வெற்றியின் பக்கம் சென்று விடலாம். எனவே, அவனுக்குச்
சிறிதும் இடம் கொடுக்காதபடி அவனை அயரச் செய்து வாகை சூட மன்னன் விரைந்து
போரிட்டான். இந்த விரைவே அவனுக்கு வெற்றி வாகையைச் சூடி தந்தது. இவ்விரைவிற்கு
ஒப்பிடப் புலவர் தேர்ந்தெடுத்ததுதான் வினைத்திறம் மிக்கக் கட்டில் தொழிலாளியின்
வாரூசியைச் செலுத்தும் மிகு விரைவு.
இதைத்தான் புலவர் சாத்தந்தையார் நயம்பட உரைக்கின்றார்.
வாரூசியைக்கொண்டு கட்டிலைப் பிணிக்கும்
தொழிலாளியின் விரைந்த பணியைப் புலவர் உவமையாகக் கூறுகிறார் என்றால், அச்செயல்
உயர்வான ஒன்று அல்லவோ? அவ்வாறெனில் அச்செயலுக்குரிய
தொழிலாளியை இழிந்த பிறப்பாளனாகப் புலவர் கூறவாரா? ஆகவே,
இழிசினன்என்றால் இழிந்த பிறப்பாளன் என்று சொல்வதும் புலையன் எனப்பொருள்
தந்து புலையன் என்றால் இழிந்த பிறப்பாளன் என்று சொல்வதும் குற்றமன்றோ?
உவமை கூறுங்கால் உவமையாக வரும்
பொருள் உவமிக்கப்படும் பொருளை விட உயர்ந்ததாக
இருத்தல் வேண்டும். ஒப்பிட்டுக்
கூறுவதற்குரிய காரணங்கள் என்ன? சிறப்பு, நலன், காதல், வலி என்ப பற்றியே ஒப்பிட்டுக் கூறல் இயலும்
என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய
ஆராய்ச்சி, உவம இயல்). எனவே, தொழிலாளர்களின்
சிறப்பு உயர்வாகக் கருதப்பட்டமையால்தான் புலவர்கள் உவமையாகக் கையாண்டுள்ளனர்
எனலாம்.
உவமை கூறுங்கால் உலகத்தார் உள்ளங்கொண்டு மகிழுமாறு
கூறுதல் வேண்டும். ஒப்புமைதானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது.
மயில்தோகை போலும் கூந்தல் என்பதுதான் பொருந்துமே யன்றி காக்கைச் சிறகன்ன கருமயிர்
என்பது பொருந்தாது. ஒற்றுமைக்குப் பாலும் நீரும் போல் என்பதுதான் பொருந்துமேயன்றி, ‘காஃபியும் டிக்காசனும்’ என்பது பொருந்தாது. இருளன்ன கருங்கூந்தல் என்பதுதான் பொருந்துமேயன்றித் ‘தார்’ அன்ன கூந்தல் என்பது பொருந்தாது (இலக்குவம்: பக்கம்303)
என்றும் இக்கால வழக்கின்படியும் எடுத்துக்காட்டுகள் கூறிப்
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் விளக்குகிறார். எனவே, புலவர்கள்
உயர்வானவற்றை உவமையாகக் கையாளும் பொழுது உவமைக்குக் காரணமான சிறப்பிற்குரியவரை இழி
பிறப்பாளனாக இழித்துக் கூறுவரோ? ஆகவே, அவ்வாறான
விளக்கம் யாவும் தவறேயாகும்.
இடைக்காலத்தில் ஒருவர் தவறாக விளக்கம் தர அடுத்து வந்தவர்களும் அத்தவறான விளக்கப் பாதையிலேயே
பின்தொடர்ந்து விட்டனர். ஆரியச் செருகல்களைக் களைந்து தமிழ்நெறிக்கேற்ப விளக்கம்
நல்கிய அறிஞர்களும் இவ்விடங்களில் அமைதி காத்தது
ஏன் என்று தெரியவில்லை.
இழிசினன் என்பதில் வரும்
இழி(தல்) என்ன பொருளில் வருகின்றது எனப் பார்ப்போம். இழிதல் என்றால் இறங்குதல், விழுதல் முதலான
பொருள்களே உள்ளன. அருவி நீர் வீழ்வது அருவி இழிதரும்
என்றே புலவர்களால் சொல்லப்படுகின்றது.
வலவ நெடுந்தேர் தாங்குமதி என்று இழிந்தனன்
என்னும் அகநானூற்றுப்பாடலடியிலும்
(66.13) தேரினை நிறுத்துமாறு கூறி இறங்கினன் என்பதற்கு இழிந்தனன் என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது.
பத்தாம் நூற்றாண்டு எனப்படும் சீவகசிந்தாமணியிலும் (2238)
மேலைநீள்
விசும்புறையும்
வெண்மதியம்
விசும்பிழுக்கி
நீலமா
சுணத்தோடு
நிலத்திழிந்த
தொத்தனவே.
என்ற பாடலடிகளில், இறங்குதல் அல்லது வீழ்தல்
என்னும் பொருளில்தான் வருகின்றது.
முன்னர்க் குறித்த பாடலிலும், தைப்பதற்காக
வாரூசி மேலே இருந்து கீழே இறங்குவதைத்தான்
இச்சொல் குறிக்கின்றது. இறங்குதல் என்பது பண்பாட்டிலிருந்து
இறங்குவதையும் பின்னர்க் குறித்துள்ளது.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை (குறள் 964) எனத் தெய்வப்புலவர்
திருவள்ளுவர் தலையில் இருந்து கீழே முடி வீழ்வதுடன்
ஒப்பிட்டுப் பண்பில் இருந்து கீழே இறங்கும் நிலையைக் குறிப்பிடுகிறார்.
காலப்போக்கில், இழிதல்
காலத்திற்கேற்ற பொருள் வளர்ச்சியோ மாற்றமோ இழிபொருளோ உற்றிருக்கலாம். இழிதல் என்பது
பண்புநிலையில் இருந்து இழிவதைக் குறிப்பிடும் பழக்கம், சாதித்திணிப்புக் கருத்துகளால் உருவான சாதிய
நிலையில் இழிந்த மனிதன், இழிந்த சாதி என்றெல்லாம்
கற்பிக்கப்பட்டு விட்டன. ஆனால், இக் கற்பிதங்களைச் சங்க
இலக்கியக் கருத்தில் திணிப்பது தவறாகும்.
இழிசினன் என்பதை, இழி, சினன் என இருசொற்களின் சேர்க்கையாகப் பார்த்தால்
< சினன் என்பது புத்தனைக் குறிக்கின்றது. புத்தன் என்றால் புத்தி
உள்ளவன் அறிவார்ந்தவன் எனப் பொருளாகிறது. அப்படிப் பார்த்தால் > இழிதல் தொழிலில் அறிவாண்மை உடையவன் எனப் பாராட்டாகத்தான் எடுத்துக் கொள்ள
வேண்டும். எனவே, இழிசினன் என்றால் இழிவானவன் என எண்ணுவது
எவ்வளவு பெருந்தவறு!
இது தொடர்பில் வேறு சில கருத்துகளையும் பார்ப்போம். புறநானூற்றில், இழிசினன்
என்னும் சொல் வரக்கூடிய பிற இடங்களைப் பார்க்கும் முன்னர் சங்கக்கால உயர்ந்த
நெறியைப் பார்க்க வேண்டும்.
சங்கக்காலத்தில் பிறப்பாலோ தொழில் முறையாலோ உயர்வு தாழ்வு
கற்பிதம் கிடையாது. உழைப்பையும் உழைப்பாளர் களையும் உயர்வாக மதித்த காலம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் (குறள் 972)
எனத் தெய்வப்புலவர்
திருவள்ளுவர் உணர்த்திய தமிழ் நெறி அவருக்கு
முன்பிருந்தே மலர்ந்து சிறந்திருந்த தமிழ்நாட்டில் பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பித்ததாகக்
கருதுவது தவறாகும். சான்றுக்கு இரண்டு பார்ப்போம்.
புலவர் ஔவையார், அதியமான் நெடுமானஞ்சியைப்
பற்றிப் பாடும் பாடலில் தொழிலாளர்களின்
வினைத்திறனை மதிக்கும் பழந்தமிழர் பண்பை நாம் உணரலாம்.
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர்
எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே(புறநானூறு 87) என்கிறார்
புலவர் ஔவையார்.
ஒரு நாளுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன், ஒரு திங்கள் முயன்று கலைநுட்பத்துடன் ஒரு தேர்க்காலைச் செய்வதாயின்,
முழுத் தேரையும் உருவாக்க
எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வான்? அவ்வாறு பார்த்துப்
பார்த்துச் செய்வதற்கு எவ்வளவு வினைத்
திட்பம் நிறைந்தவனாக அவன் இருக்க வேண்டும்.
அத்தகைய தச்சனைத்தான் மன்னனுக்கு உவமையாகப் புலவர் கூறுகின்றார்.
மன்னனைப்போல் தச்சன் எனக் கூறாமல்
தச்சனைப்போல் மன்னன் எனப் புலவர் கூறுகின்றார் எனில், நம்
தமிழ் முன்னோர், உழைப்பையும் உழைப்பாளிகளையும் எவ்வளவு
உயர்வாகப் போற்றி வந்துள்ளார்கள் என உணரலாம் அல்லவா?
மற்றொரு பாடல் ஒன்றையும் பார்ப்போம். புலவர் கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியின் வள்ளண்மையைப் பாராட்டிப்
பாடும் பாடலிது.
பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமட் குரூஉத்திரள் போல அவன்
கொண்ட குடுமித்து இத் தண்பணை நாடே. (புறநானூறு 32.6-10)
என்கிறார் புலவர்.
நல்லறிவுடைய குயவர் குடும்பத்துச்சிறார், வேலைப்பாடுமிக்க மண்கலங்கள் செய்வதற்காகப் பச்சை மண்ணைக் கொண்டு வந்து
வைக்கின்றனர். அதைக்கொண்டு குயவன், தான் கருதும் வடிவில்
எல்லாம் - எண்ணியவாறெல்லாம் -
மிகச்சிறப்பாக மட்கலங்களை வடித்தளிக்கின்றான்.
குயவன் எவ்வாறு பச்சை மண்ணைத் தான் கருதியவாறெல்லாம் சிறந்த கலங்களாக
மாற்றுகின்றானோ, அதுபோல் சோழன்நலங்கிள்ளியும் தன்
நாட்டைத் தான் விரும்பிய வாறெல்லாம்
சிறப்பாக உருவாக்குவதாகப் புலவர் பாராட்டுகின்றார். இங்கும் மன்னனைப்போல் குயவன்
வினைத் திறம் இருப்பதாகப் புலவர் பாடவில்லை. வகைவகையாக வடிவமைக்கும்
குயவனைப்போல் மன்னனும் தன் நாட்டை
வடிவமைப்பதாகத்தான் பாராட்டுகின்றார். நல்லறிவுடைய சிறார் என்பதில் இருந்தே
குயவனும் குடிப்பெருமை மிக்கவன் என அறியலாம். எனவே, சங்கக்காலம்
என்பது உழைப்பைப் போற்றிய காலம்! உழைப்பாளர்களைப் போற்றிய காலம்! அத்தகைய
காலத்தில் உழைப்பாளர்களை இழி பிறப்பாளர்களாகக் கருதுவரோ!
இழிசினன், இழிபிறப்பாளன் என்பதற்குப் புலையன் என்று பொருள் தருகின்றனர். புலையன் என்பதை
இழி சொல்லாகக் கருதுவதும் தவறே. எனவே, புலையன்,புலைத்தி, புலையர் என வரும் இடங்களையும் பார்ப்போம்.
துடியெறியும் புலைய
எறிகோல் கொள்ளு மிழிசின(புறநானூறு 287.1-2)
அதே புலவர்
சாத்தந்தையார் பாடிய பாடலில் வரும் அடிகள்தாம்
இவை. துடிப்பறை கொட்டுபவனையும் பறையை
முழக்கும் குறுந்தடியைக் கைக்கொள்பவனையும் இழிவானவன் என்று சொல்வாரோ! துடியர் போல் பறையர், பாணர் ஆகியோரும்
புலையர் என அழைக்கப்படுகின்றனர்
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந் நான்கல்லது குடியும் இல்லை (புறநானூறு 335.7-8)
எனப் புலவர்
மாங்குடிக்கிழார் முழங்கிய சங்கக்காலத்தில்
இசைத்தொழில் புரிபவரைத் 'துடியெறியும் புலைய' என இழிவு
நோக்கில் கூறியிருக்க முடியுமோ?
புலையன் என்பதுகூடச் சங்கக் காலத்தில்
இழிவான சொல்லாக
இருந்ததில்லை. புல்லுதல், பொருந்துதல், ஒட்டுதல், ஏற்றல்,
அழுக்கு நீக்கல் முதலான
பொருள்களில் புலையன் என்பது வழங்கப் பெற்றிருக்க வேண்டும். கட்டிலைப் பொருந்தச் செய்பவருக்கும்
சுடுகாட்டில் உடலங்களை ஏற்பவருக்கும் அழுக்கு நீக்குப் பணிகளை ஆற்றும்
வண்ணாருக்கும் இவற்றின் அடிப்படையிலேயே புலையன் எனப் பெயர் வந்திருக்க வேண்டும். இத் தொழில் பார்த்தவர்கள் கல்வியில் கருத்து
செலுத்தாச் சூழலிலும் சாதியக் கருத்துகள் திணிக்கப்பட்டக் காலச்சூழலிலும் பின்னர்
பொருள் இறக்கம் ஏற்பட்டிருக்கலாம். சடங்காளன், முடி திருத்துநன் ஆகிய இருவருமே புரோகிதன் எனவும் புலையன் எனவும் குறிக்கப் பெற்றிருப்பதை
உரையாசிரியர்கள் மூலம் அறியலாம். சங்கக்காலத்தில் தொழிலையும்
தொழிலாளியையும் இழிவுபடுத்தும் பொருளில் எச் சொல்லும் அமைந்திருக்க வாய்ப்பே
இல்லை.
'புலையன்
ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு' (புறநானூறு 360.19) என்பது புலையனைக் குறிக்கும் மற்றொரு பாடலடியாகும்.
இப்பாடலின் தொடக்கத்தில்
பெரிதாராச்
சிறுசினத்தர்
சிலசொல்லாற்
பலகேள்வியர்
நுண்ணுணர்வினாற்
பெருங்கொடையர்
கலுழ்நனையாற் றண்டேறலர்
கனிகுய்யாற்
கொழுந்துவையர்
தாழுவந்து தழூஉமொழியர்
பயனுறுப்பப்
பலர்க்காற்றி
ஏம மாக விந்நில
மாண்டோர்(புறநானூறு 360 1-8)
எனப் பண்பார்ந்த முறையில் பாடிய புலவர் இறுதியில் இதற்கு
மாறாகப் புலையன்என்பதை இழிவு நோக்கில் கூறியிருப்பாரோ! தொழிலால் புலையன் என
அழைக்கப்பெற்றதை இழிஞன் என்ற பொருளில் கையாள்வது மிகப்பெருதும் தவறன்றோ!
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று (புறநானூறு 363)
எனச் சிறுவெண்தேரையாரின் நல்லறத்தை வலியுறுத்தும் பாடலில்
அதற்கு மாறாக வரும் இழிபிறப்பினோன் என்ற சொல் மூலச்சொல்லை நீக்கிய இடைச்செருகலாகத்தான்
இருக்க வேண்டும். இதேபோல்,
வில்உழுது உண்மார்
நாப்பண் ஒல்என
இழிபிறப்பாளன் கருங்கை
சிவப்ப
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி(புறநானூறு 170.4-5)
எனப் புலவர் உறையூர் மருத்துவன்
தாமோதரனார் வில்லேர் உழவரின் இடையே பறை ஒலி எழுப்புபவனை இழிபிறப்பாளன் எனக்
கூறுவதாக வருகின்றது. இதே பாடலின் பிற்பகுதியில்
நசைவர்க்கு மென்மை
யல்லது பகைவர்க்கு
இரும்புபயன் படுக்குங்
கருங்கைக் கொல்லன்
விசைத்தெறி கூடமொடு
பொரூஉம்
உலைக்கல் லன்ன வல்லா
ளன்னே
என்கின்றார் புலவர்.
அன்பர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் பிட்டன் கொற்றன், பகைவர்களிடம் வன்மையாக இருப்பதாகக் கூறும் புலவர் அதற்கு
உவமையாக, இரும்புக் கொல்லனால், உலைக்களத்தில்
அடிக்கப்படும் வலிமையான கல்லைக் கூறுகிறார். கொல்லனின் வலிமையை ஒப்பிட்டு மன்னனின்
வலிமையைக் கூறுவது, முன்பு சொன்னதுபோல் உழைப்பின் சிறப்பை
வெளிப்படுத்துவதுதானே! ஒரே பாடலிலேயே உழைப்பாளியைப் போற்றவும் தூற்றவும் செய்வார்
யாருமுண்டோ? எனவே, தண்ணுமைக் கலைஞர்களை இழிவாகச்சொல்லியிருக்க
இயலாது எனவும் இழிபிறப்பாளன் என்பது
மூலச்சொல்லை நீக்கிய இடைச்செருகலே எனவும்
அறியலாம்.
மடிவாய்த்
தண்ணுமை யிழிசினன்
எனப் புலவர்
கழாத்தலையார் (புறம். 289.10) என்பதும் தண்ணுமைக் கலைஞரை
இழிவானவனாகக் கருதுகிறார் என எண்ணுவது அறமாகுமோ?
சமக்காலச் சங்க இலக்கியங்களி்ல்
புலையன், புலைத்தி முதலான சொற்கள் இடம் பெறும் பாடல்அடிகளையும் பார்ப்போம். புலையனது அகன்ற
வாயையுடைய தண்ணுமை என்னும் பொருளில்
புலையன்
பேழ்வாய்த் தண்ணுமை (நற்றிணை : 347.5-6) எனப்
புலவர் பெருங்குன்றூர்க்கிழார் கூறுகிறார்.
மலை போன்ற யானைமீது ஏறி நடத்திச்சென்று புலையன் பெருந்துடியை
ஒலிக்க, அயல்நாட்டிற்
புகுந்தது குறித்துக் கபிலர்
மலையமா ஊர்ந்து போகிப்
புலையன்
பெருந்துடி கறங்கப்
பிறபுலம் புக்கு(நற்றிணை 77.1-2 ) எனக்
கூறுகிறார்.
ஆடைகளைஅவற்றின் தன்மைக்கேற்ப ஆராய்ந்து கழுவுந்தன்மையில் தன் கை
ஓயாமல் ஆடை ஒலிக்கும் வறுமையில்லாத புலைத்தி என்பதைப் புலவர்
அஞ்சிலஞ்சியார்
உடை ஓர் பான்மையின்
பெருங்கை தூவா வறன் இல் புலைத்தி
(நற்றிணை 90.1-3) என்கிறார். புலைத்தி
வறுமையில்லாதவள் என்னும் பொழுதே அவளது உயர்நிலை புரிகிறது. எனவே, இத்தகைய புலைத்தியை இழிவானவளாகக் கருத இடமில்லை.
புலவர் கழார்க் கீரன் எயிற்றியன்,
நலத்தகைப் புலைத்தி பசை
தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித்
தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத்
திரி கடுக்கும் (குறுந்தொகை 330)
எனப் புலைத்தியை நலம் மிக்கவளாகவும் தகைமை உள்ளவளாகவும்தான்
குறிப்பிடுகிறார். இத்தகைய பெண்ணை எவ்வாறு இழிபிறப்பாளள் என இழிவுபடுத்தி
இருப்பார்கள்.
புதுவன ஈகை வளம் பாடி,
காலின்
பிரியாக்
கவி கைப் புலையன் தன் யாழின்
இகுத்த
செவி சாய்த்து
(கலித்தொகை
95.9-11) வளம்பாடும் யாழிசைக்கலைஞரைப் போற்றி இருப்பார்களே
அன்றி, இழிமகன் என்று தூற்றி இருக்கமாட்டார்கள். மேலும்,
ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ
(கலித்தொகை
72.14 ) [நாம் துணிகளை அடித்துத் துவைப்பதால் அழுக்கு
போவதாகக் கருதுகிறோம். ஆனால், அறிவியலறிஞர்கள் அடிப்பதால்
ஏற்படும் ஒலி மூலமே அழுக்கு போவதாகக் கண்டறிந்தனர். இந்த அறிவியல் உண்மையைப் பழந் தமிழறிஞர்கள்
அறிந்திருந்தமையால் ஆடை ஒலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.]
மாதர்ப் புலைத்தி
விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப்
புட்டில் (கலித்தொகை 117.7-8 )
வலைவர் போல, சோர் பதன் ஒற்றி,
புலையர் போல, புன்கண் நோக்கி,
தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்; (கலித்தொகை 55.17-19
)
‘பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்? (கலித்தொகை 68.19
)
பொய் போர்த்துப் பாண்
தலை இட்ட பல வல் புலையனை(த்) (கலித்தொகை 85-22)
பல திறமை மிக்கப்புலையன் எனக் கூறுவோர் எங்ஙனம் இழிவாகவும்
கூறுவர்?
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி (மதுரை
மருதன் இளநாகனார் : அகநானூறு 34.11) எனப் பிற
பாடல்களிலும் இவை இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு, சங்க
இலக்கியங்களில், புலையன் அல்லது புலைத்தி என்பது தொழில் அடிப்படையில் குறிக்கப்பெற்றுள்ளன. எனவே, இழிசினன்
என்பதும் புலையன் என்பதும் இழிவான பொருளில் சங்கக்காலத்தில் கையாளப்பெறவில்லை.
சங்கக்காலச் சூழலில் பார்க்க வேண்டிய கருத்தைப் பிற்காலச் சூழலில் பார்ப்பது தவறு
அல்லவோ!
ஆராய்ச்சி என்ற பெயரில் இன்றைய
மன்பதைச் சூழலைச் சங்கக்காலத்தில் திணித்துப்பார்த்து, அக்காலத்தை
இழிவாகக் கூறும் போலிப் பொதுவுடைமையாராய்ச்சியாளர்களும் இழித்துப்பேசி மகிழ்வு
காணும் துன்பியர்களும் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். அந்த மயக்கத்தில்
பலர் அப்பாதையில் தடுமாறிச் செல்கின்றனர். அவ்வாறில்லாமல் சங்கச் சூழலில் சங்க
இலக்கியங்களை ஆராய்ந்தால், சாதி என்னும் சொல்கூட உருவாகா
அக்காலத்தில் அனைவரும் இணை என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது என உணரலாம். பின்னர்
இடைச் செருகர்களால் ஏற்பட்ட களங்கத்தைப்போக்க வேண்டியது நம் கடமை என ஒவ்வொருவரும்
உணர வேண்டும். இல்லாத சாதியால் பொல்லாத வேறுபாட்டைத் திணிக்கும் போக்கிற்கு
முற்றுப்புள்ளி இட வேண்டும்.
புறநானூற்றில் ,தொழிலாளர்களை மன்னர்களுக்கே உவமையாகக் கூறிச் சிறப்பித்துள்ளதை
உணர்ந்து மூலத்திலோ உரையிலோ சாதிச்
செருகல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைக்
களைய வேண்டும். தமிழ்
நெறிக்கேற்பத் தமிழ் இலக்கியப் புரிதலுணர்வை வளர்க்க வேண்டும்.
புறநானூற்றுப் புகழ்பாடிப்
புதுமைத்தமிழ் வளர்ப்போம்!
++++++++000+++++++++
SIRANTHA AAYVU !! NANTRI !!
ReplyDeleteநன்றி ஐயா.
ReplyDelete