தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர்

அருள்செல்வனைத் தாக்கியது

அருளற்ற செயல்!

dinamalar_paambupuri_Eswararkoil
  கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும் ஆளுங்கட்சிக்கும் களங்கமே ஏற்படுத்துகிறது.
  வன்முறையைக் கையாளும் போக்கிற்கு, அடைக்கலம் நாடிவந்த ஈழத்தமிழர்களிடமும் தமிழ்ஈழம் தொடர்பான உணர்வாளர்களிடமும் தமிழ்வழிக்கல்வி முதலான தமிழ்த் தேசியப் போராட்டங்களில் ஈடுபடுவோர்களிடமும் விலைவாசி உயர்வு போன்றவற்றை எதிர்த்துப் போராடும் மக்கள் அமைப்புகளிடமும் தாங்கள் உயிர்த்திருப்பதற்கு அடையாளமாகப் போராடும் எதிர்க்கட்சிக்காரர்களிடமும் நடந்துகொள்ளும் முறைகளே நல்ல சான்றுகளாகும்.
  மக்களின் உணர்வுகளை அரசிடம் தெரிவிக்கும் பாலமாகக் காவல்துறை நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கைத்தடிகளை மக்கள் உடலில் நடமாட விடுவதும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கும் இடங்களாக மக்கள் உடல்களை மாற்றி உயிரைப் பறிப்பதுமாக இருக்கக் கூடாது.
  அண்மையில்   திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறிய காவல்துறையினரின் ஒடுக்குமுறைத் தாக்குதலை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
dinamalar_arulselvan03
திருவாரூர் மாவட்டம், பேரளம்பாக்கத்தில் உள்ள திருபாம்புரத்தில், பாம்புபுர ஈசுவரர் கோவில் உள்ளது. இதைத்தான் தமிழ்க்கொலைஞர்கள் ‘சேடபுரீசுவரர்’(சேஷபுரீஸ்வரர்) என மாற்றியுள்ளனர். இங்குள்ள இறைவியின் பெயர் வண்டார்குழலி. இப்பெயரைப் ‘பிரமராம்பிகை’ என மாற்றியும் நிலைக்கவில்லை. பாடுபுகழ் பெற்ற இக்கோயிலில் செய்தியாளர் ஒருவர் பாடாய்ப்படுத்தப்பட்டுள்ளார்.
dinamalar_arulselvan02இக்கோயிலில் ஆனி 9, 2045 / சூன் 23, 2014 அன்று நடைபெற்ற (இராகு, கேது பெயர்ச்சி)விழா ஒன்றில், நடைபெற்ற தாக்குதல்பற்றிக் கண்டனத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். இறைப்படிமத்தின் ஒப்பனை அழகைப் படம் பிடித்த ‘தினமலர்’ நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனை அங்குள்ள காவல்துறையினர் கடுமையாகத் தாக்கி உள்ளனர். ஒளிப்படங்களும் காட்சிப்படங்களும் எடுத்த ஊடகத்தினர் பிறரை விட்டு விட்டு, செய்தியாளர் அருள்செல்வனிடம் மட்டும் காவல்துறையினர் அருளின்றி நடந்துகொண்டது ஏன் எனத் தெரியவில்லை. அங்கிருந்து அப்புறப்படுத்தல் அல்லது படப்பொறியைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கடுமையாகத் தாக்கி உள்ளமை காட்சிப்படத்தில் தெளிவாகத் தெரிகின்றது. மக்கள் முன்னிலையில் மக்களுக்காகத் தகவல் தொண்டாற்றும் செய்தியாளரைத் தாக்கும் துணிவு காவல்துறையினருக்கு எவ்வாறு வந்தது? அந்தdinamalar_arulselvan04 இடத்திற்குப் பிற இடங்களில் இருந்து வந்த காவல்துறையினரும் தாக்குதலைத் தடுக்காமல் தங்கள் பங்கிற்கு மேலும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதனால், விழாவில் பங்குகொண்ட அமைச்சர் காமராசிற்கோ, அரசிற்கோ, முதல்வருக்கோ, ஆளுங்கட்சிக்கோ என்ன நற்பெயர் வாங்கித் தந்துவிட்டதாக அவர்கள் எண்ணுகின்றார்கள் எனப் புரியவில்லை. யாருக்கேனும் அடிபட்டால் தங்கள் ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய காவல்துறையினர், வதைத்துத் துன்புறுத்தப்பட்டு நினைவிழந்த செய்தியாளர் அருள்செல்வனை அழைக்க வந்த அவசர மருத்துவ ஊர்தியையும் வரவிடாமல் செய்துள்ளனர்; அதனால் வாடகை ஊர்தி மூலமே அங்கு வந்திருந்த செய்தியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
செய்தியாளர் அருள்செல்வனுக்கு வேண்டிய மருத்துவ உதவியையும் இழப்பீட்டையும் அரசு அளிக்க வேண்டும்.
 dinamalar_arulselvan01
இதுபோன்ற தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளியிட முதல்வர் முனைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊடகம் அரசின் நான்காம் தூணாக விளங்குகின்றது. மக்கள் குறைகளை அரசிற்குத் தெரிவித்தும் அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கியும் சிறந்த பாலமாக விளங்குவது ஊடகத்துறையே! ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது, முறைகேடுகளைத் தடுக்க முனைவது, கலை இலக்கியங்களை வளர்ப்பது, கல்வி வளர்ச்சிக்கு உதவுவது, திறமையாளர்களை ஊக்குவிப்பது, அருவினை புரிந்தோரைப் பாராட்டுவது என எண்ணிலடங்காப்பணிகளை ஆற்றுவது ஊடகமே!
அதே நேரம், ‘ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்குவதும்’ ஊடகமே! அரசியலாளர்கள், கலைஞர்கள் முதலானவர்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் ஊடகத்தின் செயல்பாடுகளே அடிப்படையாக அமைந்து விடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
பண்பாட்டுடன் செய்திகளை வெளியிடவும் உண்மைச்செய்திகளை உள்ளபடியே தெரிவிக்கவும் தமிழ்மொழிக் கொலை புரிவதைத் தடுத்து நிறுத்தவும் மொழி, இனப்பற்றாளர்களை வன்முறையாளர்களாகத் திரிப்பதைக் கைவிடவும் வாய்மையையும் தூய்மையையும் கண்களாகக் கொண்டு செயல்படவும் ஊடகங்களை அரசு ஆற்றுப்படுத்த வேண்டும்.
  ஊடகர் மீது கை வைப்பதால் அரசிற்குப் பொல்லாப் பெயரே விளையும். ஊடகங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் அரசிற்கு அழிவுதான் வரும். ஆனால், ஊடகங்கள் மீது மேற்குறித்த செயல்பாடுகளுக்காக அரசு கண்டிப்பாக நடந்துகொண்டால் மக்களுக்கு நன்மையே விளையும். இதனால் அரசிற்கு நிலைத்த நற்பெயரே பெருகும்.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். (திருக்குறள் 562)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மெய்யுரையைக் காவல்துறையினர் தம் நெறியாகக் கொண்டொழுகி மக்கள் நலம்பேண வேண்டுகிறோம்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (திருக்குறள் 546)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நெறியுரையை அரசு பின்பற்றி, அரசின் ஏவலனாக இல்லாமல் மக்கள் காவலனாக ஒவ்வொரு காவல்துறையினரும் நடந்து கொள்ள ஆவன செயய வேண்டும்.
அல்லல்படுத்தும் அழிவுமுறை ஒழிக!
இன்னல் நீக்கும் இனியமுறை ஓங்குக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை                                                                                       http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png

ஆனி 15, 2045 / சூன் 29, 2014