va.u.chithambaranar02

(இ)ரியாத்தில் செந்தமிழ்ச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார்

நூற்றாண்டு விழாவீரச் செம்மல் வ.உ.சி நினைவேந்தல்

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/05/ilakkuvanar01.png
(ரியாத் : சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாக புரட்டாசி 22, 2041 / 8.10.2010 வெள்ளி அன்று செந்தமிழ்ச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா- வீரச் செம்மல் வ.உ.சி நினைவேந்தல், முருகேசன் அவர்கள் தலைமையில். தேனி செயராமன் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. பேராசிரியர் இலக்குவனார் பற்றி இணைய அரங்கத்தின் மூலம் சென்னையிலிருந்து இலக்குவனார் திருவள்ளுவன் ஆற்றிய உரை)
  அயலகத்தில் கால் ஊன்றியிருந்தாலும் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாய்க் கொண்டுள்ள பேரன்புசால் தமிழன்பர்களே! நண்பர்களே! ஆன்றோர்களே! தாய்மார்களே! இருபால் இளைஞர்களே! குழந்தைகளே!
  பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கத்தின் தலைவர் பொறிஞர் முருகேசன் அவர்களே! முன்னிலை வகிக்கும் பேராசிரியர் முனைவர் வ.மாசிலாமணி அவர்களே!
  பிரான்சு நாட்டிலே சிறப்பாகப் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிப் பிறருக்கு முன்மாதிரியாகத் திகழும், இலக்குவனார் நினைவுரை ஆற்றும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்களே! ‘இலக்குவனாரும் வ.உ.சிதம்பரனாரும்’ என்னும் தலைப்பில் ஒப்புமை உரை ஆற்ற வந்துள்ள தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் திரு கோ.திருநாவுக்கரசர் அவர்களே! வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு ப.இரமேசு அவர்களே! செயலர் திரு கி.வை.இராசா அவர்களே! பொருளர் வி.ஞா.சேகரன் அவர்களே! இவர்களுடன் இணைந்து ஈடில்லாத் தொண்டாற்றும் பிற பொறுப்பாளர்களே! எழுத்துக் காப்பில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ் மொழிக் காப்பில் ஈடுபட்டு வரும் பொறிஞர் நாக.இளங்கோவன் அவர்களே! அனைவருக்கும் வணக்கம்.
  வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் வளையா உள்ளத்துடன் தமிழ் பரப்பும் பணி ஆற்றி வருவதும் தலைமுறை தோறும் தமிழ் தழைக்க அருந்தொண்டாற்றுவதும் பாராட்டிற்குரியது. விழாக்கள் மூலம் அறிஞர்களையும் ஆன்றோர்களையும் நினைவுகூரும் பெருஞ் செயலும் போற்றுதற்குரியது! பிறர் பின்பற்ற வேண்டியது! அந்த வகையில் தமிழ்மொழிக் காவலர் இலக்குவனார் நூற்றாண்டு விழாவையும் விடுதலைப் போராளி வண்டமிழ் அறிஞர் வ.உ.சிதம்பரனார் நினைவேந்தலையும் நடத்துவது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
அமிழ்தாகத் தமிழாகத் தவழும் பிள்ளை
அருந்தமிழுக்குச் சந்தனமாய்க் கமழும் பிள்ளை
குமிழியுடைக் குங்காற்றை அளையும் பிள்ளை
கும்மாள மிடும் சிரிப்பாய்க் குழையும் பிள்ளை
சிமிழுருட்டிக் கையுயர்த்தித் தரையை மோதித்
தீம்தீமென் றேமிதிக்கும் செல்லப் பிள்ளை
தமிழ்க்குப் பட்டாடைநெய்ய உலகநாதர்
தறிபூட்டத் தவமிருந்து பெற்ற பிள்ளை!
என்பார் எங்களூர்க் கவிஞர் வாய்மைநாதன் தம்முடைய ‘கப்பலுக்கொரு காவியம்’ நூலில்.
  ஆம்! தவமிருந்து பெற்ற பிள்ளைதான் செக்கிழுத்த செம்மல் செந்தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள். தம் உடைமை யாவையும் ஈகம் செய்தவர்! உடலுக்குப் பிறர் விளைத்த துன்பங்கள் யாவற்றையும் பொறுத்துக் கொண்டவர்! உரையாசிரியராகவும் மொழிபெயர்ப்பு அறிஞராகவும் நூலாசிரியராகவும் இதழாளராகவும் எழுத்துச் சிதைவிற்கு எதிரான மொழிக்காப்பினராகவும் தொல்காப்பியம் பரப்பும் பதிப்பாசிரியராகவும் குறள்நெறி போற்றும் கோமானாகவும் தொழிலாளர் தோழனாகவும் திகழ்ந்தவர் சிதம்பரனார் அவர்கள். நாட்டுக் காப்பிற்காகப் பல கொடுந்தண்டனைகளும் பெற்றதுடன் கொட்டடியில் செக்கிழுக்கும் கொடுமைக்கும் ஆளானவர்! எனினும் இன் முகத்துடன் அனைத்தையும் ஏற்ற ஏந்தல் அவர். வாழும் பொழுதும் உழைப்பிற்கேற்ற உயர்வு காணாதவர். மறைந்த பின்னும் நன்றி கெட்ட உலகத்தவரால் உரிய மதிப்பைப் பெறாதவர்.
  அவரைப் போன்ற மற்றோர் அறிஞர் பெருந்தகைதான் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். பெரும்பதவிகளும் உயர் ஊதியங்களும் காத்திருப்பினும் தாம் பெற்ற செல்வத்தைத் தமிழ்ச் செல்வம் பெருக வாரி வழங்கியவர். இந்தி எதிர்ப்புப் படைத்தளபதியாய்த் திகழ்ந்து இந்திப்பேயை விரட்டும் முயற்சியில் இடர்தரும் சிறை புகுந்து இன்னலேற்றவர்! சங்கத்தமிழை மக்கள் தமிழாக்கித் தாய்த்தமிழின் செம்மொழிச் சிறப்பை முதன் முதலில் பரப்பிய பாவலர்! தமிழ்க்காவலர்! தொல்காப்பியத்தைத் தாயகத்தில் பரப்பியதுடன் நில்லாது பாரெங்கும் பரவ ஆராய்ச்சி உரைகளுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அளித்த அறிஞர் பெருந்தகை! தெய்வப்புவலர் திருவள்ளுவரின் சீரிய சிந்தனைகளை எளிய பொழிப்புரை மூலமும் எல்லாரும் இந்நாட்டு மன்னர், அமைச்சர் யார்? வள்ளுவர் கண்ட இல்லறம், வள்ளுவர் வகுத்த அரசியல் முதலான நூல்கள் மூலமும் மக்களிடையே பரப்பியதுடன் குறள்நெறி இதழ்கள் நடத்தியும் என்றென்றும் நிலைக்கச் செய்தவர். செந்தமிழ்ச் சிறப்புகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிச் செம்மொழிச் சுடராய் ஒளிவிட்டவர். எழுத்துச்சிதைவு இன அழிப்பு முயற்சியே என எச்சரித்தவர். இந்தியத்திலும் திராவிடத்திலும் பிறர் மூழ்கியிருந்த பொழுது “தமிழர்க்குத் தேசிய மொழி தமிழே” என உணர்த்தியவர். ஒற்றையாட்சி முறையைப் பிறர் வலியுறுத்திய போது மொழி வழித்தேசிய இனங்களின் தன்னுரிமையரசுகளின் கூட்டாட்சியை வலியுறுத்தியவர்.
  தமிழ்க்காப்புத்தளபதி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். புலவர் மாணாக்கனாக இருக்கும் பொழுதே தனித்தமிழ்ப் பாவியம் படைத்தவர்; அப்பொழுதிருந்தே தொல்காப்பியச் சிறப்பையும் சங்க இலக்கிய மாண்பையும் திருக்குறளின் பெருமையையும் போற்றிப் பரப்பிப் பேணும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். தமிழ் நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் வணிக மொழியாகவும் இசைமொழியாகவும் திகழ வேண்டும் எனப் பாடுபட்டவர். ஆனால், தமிழ்நாட்டில் அந்த நிலை இன்னும் வரவில்லை. எனினும் தலைவர்கள் பலரிடம் அந்த எண்ணம் காலூன்றி இளைஞர்களிடம் அக் கருத்து மேலோங்கியுள்ளது. அதனை நிறைவேற்றும் கடமை நம் அனைவரிடமும் உள்ளது. “தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும். முழு உரிமை பெற்ற நாளாகும்” என்ற பேராசிரியர் முழக்கத்தைச் செயலாக்க நாம் பாடுபடவேண்டும். “தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் உரிமையும் முதன்மையும் பெற்று வாழ வேண்டும்” என்னும் பேராசிரியர் இலட்சியத்தைக் கனவாக்கும் வழி முறைகளில் தமிழ்அன்பர்கள் செயல்படவேண்டும்.
“இந்திய அரசு இலங்கையரசின் நட்பிற்காகத் தமிழர்களைப் பலிகொடுத்து விடும்” என்று அன்றே தம்முடைய அச்சத்தை வெளிப்படுத்தி எச்சரித்தார். நாம் விழிப்படையாததால் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் பிற வகையாலும் நம் உற்றார் உறவினர்களை இழந்து ஈழத்தமிழர்கள் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் அல்லறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. “எரியில் மூழ்கி இறந்த செம்மல் சின்னச்சாமியின் வீரச் செயல்கூடத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிலதே! என்னே கொடுமை!” என வேதனையுற்றார் செந்தமிழ்ப்படையின் மானச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். ஈழத்தமிழர்களைக் காக்கும் போரில் இன்னுயிர் நீத்த வீரப் போராளி முத்துக்குமரன் முதலானோர் உயிர்க்கொடை கூட நம் தமிழர்களைத் தட்டி எழுப்பாத அவல நிலைதானே இன்றும் உள்ளது. எனவே, இன்றைய நோய்க்கு மருந்து பேராசிரியர் அவர்களின் கருத்துகளேயாகும். அவற்றை அறிந்து நாம் பின்பற்றினாலே நம் துயரங்கள் யாவும் தூள் தூளாகச் சிதறிப் போகும்.
  அன்னைத்தமிழின் செம்மொழித்தன்மையை அறிஞர்கள் பலரும் உணர்த்தியுள்ளனர். ஆனால் அவற்றை மக்களிடையே பரப்பிய களப் போராளியாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார் மட்டுமே. அவர் நடத்திய சங்க இலக்கியம் இதழ்களும் இலக்கியம் இதழ்களும் சங்க இலக்கியம் தொடர்பான நூல்களும் மொழியியல் நூல்களும் தொல்காப்பிய ஆராய்ச்சி நூல்களும் குறள்நெறி இதழ்களும் திருக்குறள் விளக்க நூல்களும் ஆங்கில நூல்களும் உலக மொழிகளின் தாய் தமிழ் என்பதையும் அதன் செம்மொழித் தன்மையையும் பாமரரும் அறியச் செய்தன. மொழிப்போர் மூலவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், பாவேந்தர் பாரதிதாசனாரின் தமிழியக்க நூலுக்கு எடுத்துக்காட்டாகும் போராளியாகத் திகழ்ந்து தேமதுரத் தமிழோசை தெருவெல்லாம் முழங்கப் பாடுபட்டார்; அறிஞர்கள் போற்றும் அறிஞராகத் திகழ்ந்தார்; மக்கள் போற்றும் மாமேதையாகவும் திகழ்ந்தார்.
  தந்தை பெரியார் அவர்களால் ‘தமிழர் தளபதி’ என அழைக்கப் பெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்சு, குவைத்து முதலான அயல்நாடுகளிலும் விழா எடுக்கின்றனர் என்றால் தமிழ் உணர்வு இன்னும் மங்காமல் உலகத் தமிழர்களிடையே துலங்குகிறது என்றுதான் பொருள். பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் எழுச்சியின் குறியீடு; தமிழ் உணர்ச்சியின் அடையாளம். எனவேதான் பாரெங்கும் பைந்தமிழ் உணர்வாளர்கள் பேராசிரியர்க்கு விழா எடுக்கின்றனர். அந்த வகையில் எங்களிடமும் மங்காத் தமிழ் உணர்வு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் விழா எடுப்பது மகிழ்ச்சிக்குரியது. உலகெங்கும் தமிழ்ச்சங்க அமைப்புகள் உள்ளன. இருப்பினும் செந்தமிழ்ச் சங்கம் என அமைத்ததில் இருந்தே சங்கத்தினரின் செந்தமிழ்க் காப்பு உணர்வு தெளிவாகப் புலனாகின்றது. எனவே, செந்தமிழ்ச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் கனவுகளை நனவாக்கும் செயலில், எண்ணங்களைச் செயலாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ் வழங்கும் நாடுகளில் தமிழ் தலைமையும் தமிழர் முதன்மையும் பெறப் பாடுபட வாழ்த்துகின்றேன்.
சாகவில்லை! சாகவில்லை!
சிதம்பரனாரும் சாகவில்லை!
சாகவில்லை! சாகவில்லை!
இலக்குவனாரும் சாகவில்லை!

நாட்டைக் காக்கும் நல்லோர் உள்ளங்களில்
மொழியைப் போற்றும் மக்கள் உள்ளங்களில்
இனத்தைப் பேணும் இனியோர் உள்ளங்களில்
சிதம்பரனாரும் இலக்குவனாரும் வாழ்கின்றார்கள்.
எனவே, வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கத்தவர் உள்ளங்களிலும் அவர்கள் வாழ்கிறார்கள்! உங்களைத் தமிழின்பால் வழிநடத்தி நெறிப்படுத்தி வாழ்கிறார்கள்!
  எனவே, நீங்கள் உயர்ந்த பேறு பெற்றவர்கள்! எனவே, உங்களை நான் இங்கிருந்தபடியே தொழுது வணங்குகிறேன்! உங்கள் சுற்றம் சிறக்க, உங்கள் கொற்றம் சிறக்க என்றும் தமிழ் சிறக்கட்டும்! தமிழர் தாயகம் தன்னுரிமையுடன் தழைக்கட்டும்! வையம் உள்ளளவும் வண்டமிழ் வாழட்டும்! வாழ்க தமிழ்! வளர்க வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம்!
  உங்களுடன் வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்ளும் நல்வாய்ப்பு நல்கியோருக்கு நன்றி.