தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

06

உடல்நலன் பேணுக!

வீரத்துடனும் வலிமையுடனும் திகழ அடிப்படைத் தேவை உடல்நலம் அல்லவா? எனவே, அதனையும் பாரதியார் வலியுறுத்துகிறார்.
பொலிவிலா முகத்தினாய் போ போ போ
பொறியிழந்த விழியினாய் போ போ போ
ஒலியிழந்த குரலினாய் போ போ போ
ஒளியிழந்த மேனியாய் போ போ போ
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ
என நலமற்ற தன்மையை விரட்டியடித்து
நோய்களற்ற உடலினாய் வா வா வா
(பக்கங்கள் 38-39 / போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்)
எனக் குறைவற்ற செல்வமாம் நோயற்ற வாழ்வினை வலியுறுத்துகிறார்.
இறைவனிடமும்,
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன் (பக்கம் 37 / விநாயகர் நான்மணிமாலை)
என வேண்டுகிறார். எனவே, உடல்நலம்பேணுவதற்காகப் பின்வரும்
கட்டளைகளைப் புதிய ஆத்திசூடியில் வழங்குகிறார்.

இளைத்தல் இகழ்ச்சி (3)
உடலினை உறுதிசெய் (5)
ஔடதம் குறை (12)
ஊண்மிக விரும்பு (6)
மூப்பினுக்கு இடம்கொடேல் (80)
(இ)யௌவனம் காத்தல் செய் (88)
(உ)ருசி பல வென்றுணர் (92)
(உ)ரூபம் செம்மை செய் (93)
எனவே, வாழும் முறைபற்றிய அறநெறிகளைமட்டும் கூறாமல், வாழ்வதற்குத் தேவையான உடல்நெறிகளையும் புதிய ஆத்திசூடியில் நமக்கு அளித்துள்ளார் பாரதியார் எனலாம்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07)