தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத்
தமிழை நிலைக்கச் செய்வீர்!
எழுதவே வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! எத்தனை முறைதான் அரசின் ஆங்கிலத்திணிப்பைக் குறித்து எழுதுவது? இரு நாள் முன்னர்ப் பிறப்பித்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை கூட ஆங்கிலத்தில்தான். பொதுத்துறை உட்பட எல்லாத்துறைகளிலும் தமிழ் ஈடுபாடு மிக்கவர்களையே அரசு செயலர்களாக அமர்த்தினால்தான் தமிழைக் காண முடியும். ஆங்கிலத்தைத் திணிப்பதற்கு அவர்கள் வெட்கப்படாமல் இருக்கலாம். வேதனை உறாமல் இருக்கலாம். ஆனால், நமக்கு வெட்கம் வருகிறதே! வேதனை வருகிறதே!
சூன் 5 ஆம் நாள் உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டுத் தமிழ் நாட்டரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை வெளியிட்ட விளம்பரங்கள் அனைத்துமே ஆங்கிலம், ஆங்கிலம், ஆங்கிலம்தான்! இவற்றுள் குறிப்பிடத்தகுந்தது மேலே தலைப்பில் முதல்வரைச் சுற்றியும் ஆங்கிலத்தில் துறை அல்லது நிறுவனப்பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுதான். இதன் தொடர்பில், “இந்த ஆண்டுக்கான #World Environment Day மையக்கருவாக #Beat Plastic Pollution அறிவிக்கப் பட்டிருக்கிறது.” என அறிவித்துள்ளது. ஒற்றை வரியில் எந்த நாள் என்பதைக் கூடத் தமிழில் குறிப்பிடத் தெரியவில்லையா? நெகிழி மாசினை வெல்வோம் என்பதைக் குறிக்கும் முழக்கத்தைக் கூடத் தமிழில் தெரிவிக்கத் தெரியவில்லையா? அரசின் முத்திரை கூடத் தமிழில் இல்லையே என்ன கொடுமை இது? இப்படிப்பட்டடவர்கள்தாம் நம்மை ஆள்கிறார்கள். தமிழ்ப்படைப்பாளி தலைமைச் செயலராக இருந்தும், நற்றமிழார்வலர் தமிழ் வளர்ச்சிச் செயலராக இருந்தும் எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் என்னும் நிலையை மாற்ற இயலவில்லையா? அப்படியானால், முதல்வர் மு.க.தாலின் உள்ளத்தில் தமிழ் எண்ணம் வேரூன்ற வேண்டும். அப்பொழுதுதான் அமைச்சர் பெருமக்கள், உயர்நிலை அதிகாரிகளும் தமிழ்த்தேரில் உலா வருவார்கள். தமிழன்னையை அகம் மகிழச் செய்வார்கள்.
தமிழ் நாட்டில் பொதுமக்களிடமும் ஊடகத்தினரிடமும் கலைத்துறையினரிடமும் தமிழ் வளர்ச்சித் துறையினரிடமும் அனைத்து நிலை அரசு அதிகாரிகளிடமும் ஆங்கிலம் ஒட்டிக் கொண்டு தமிழ் மறைக்கப்படுவது அல்லது தொலைக்கப்படுவது கண்டு, தமிழன்னை அலறுகிறாள்; அரற்றுகிறாள்; அலமருகிறாள்; மனஞ்சுழல்கிறாள்; நடுங்குகிறாள்; வருந்துகிறாள்; வேதனை யுறுகிறாள்; துன்பத்தில் ஆழ்கிறாள்; துயரத்தில் மூழ்கிறாள். இத்துயர் போக்கும் கடப்பாடு ஆள்வோருக்கு அல்லவா உள்ளது?
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை(திருவள்ளுவர், திருக்குறள் 555)
ஆம். தமிழன்னை அழுகை, ஆட்சியை அசைத்துப் போடும் படையாக மாறும். அதற்கு இடம் தரலாமா?
முதல்வர் மு.க.தாலின் இந்திய முதல்வர்களுள் முதல்வராக உள்ளார். பிற மாநில முதல்வர்களும் இவரது வழிகாட்டுதலை வேண்டுகிறார்கள், விரும்புகிறார்கள், பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டின் செயலைப் பின்பற்றி பிற மாநிலங்களும் சாதிமுறைப் பாகுபாடான வருணாசிரமத்தை ஒழிக்க விரும்புகின்றனர். இந்தி, சமற்கிருதத் திணிப்புகளை அகற்ற விழைகின்றனர். தத்தம் மாநிலம் தன்னுரிமையுடன் திகழப் பேரார்வம் கொண்டுள்ளனர். “ஒரே நாடு, ஒரே மொழி”, “ஒரே நாடு, ஒரே மதம்” “ஒரே நாடு, ஒரே தேர்தல்” போன்ற முழக்கங்கள் செயல் வடிவம் காணாமல் தொலைந்து போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதற்குத் தமிழ்நாடும் முதல்வர் மு.க.தாலினும் வழிகாட்டுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள். அப்படியானால் ஒன்றியத்தின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் தமிழக அரசு நீடிக்க வேண்டும். மு.க.தாலின் முதல்வராக என்றும் தொடர வேண்டும். இதுவே அனைவரின் எண்ணம்.
ஆனால், இந்த எண்ணம் ஆள்வோருக்கு இல்லை போலும்!
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, ‘வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம்’ 2011-ஆம் ஆண்டு மார்ச்சு 1-ஆம் நாள் முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசால் இயற்றப்பட்டது. புலம் பெயர் தமிழர்கள் நலன் துறையும் உருவாக்கப்பட்டது. ஆனால் அவர், “புலம்பெயர் தமிழர் நலவாரியம்” அமைப்பதாக அறிவித்தும் , ஆட்சி மாற்றத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை் அக்குறையைப் போக்க, முன்வரவில்லை. ஆனால், முதல்வர் மு.க.தாலின், வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்’ அமைத்துள்ளார். அவர்கள் நலன் குறித்த மாநாட்டையும்நடத்தியுள்ளார். இவ்வாறு தமிழர்கள் இங்கிருந்தாலும் வேறு எங்கிருந்தாலும் அவர்கள் நலனில் கருத்து செலுத்தும் முனைப்பில் உள்ளார்.
ஆனால், தமிழ் வாழ்ந்தால்தானே தமிழர் வாழ்வர். தமிழ் நாட்டிலேயே தமிழின் வாழ்வை முற்றாக்க முயலும் பொழுது அயலகங்களில் தமிழ் எங்ஙனம் வாழும்? உலகெங்கும் தமிழர் எப்படி வாழ்வர்? இதனை உணராமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையே முழு மூச்சாகக் கொண்டு அரசு செயல்படுவது குறித்துக் கவலைப்படவில்லையே! மணிப்பிரவாளத்தால் தமிழ்நாடு தன் நிலப்பகுதிகளை இழந்தது; தமிழ் தன் செல்வாக்கைப் பறி கொடுத்தது. இதனை அறிந்தும் மக்களைப்போல் அரசும் ஆங்கிலம் கலந்து புதுவகை மணிப்பிரவாளத்தைப் பரப்பி வந்தால் ஆட்சிக்கு எங்ஙனம் நற்பெயர் கிட்டும்?
இந்தியால் தமிழை அகற்ற முயன்ற பேராயக்(காங்.)கட்சி ஆட்சியைத் தொலைத்தது. ஆங்கிலத்தால் தமிழை அகற்ற உழைத்து மக்கள் தந்த ஆட்சியை தி.மு.க. இழக்க வேண்டுமா?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 448)
“குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்” என முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி விளக்குகிறார். உணர்த்துவோர் இருப்பினும் அதனை உணர்வோராக அரசினர் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருப்பின் எப்பொழுதும் அழிவில்லை.
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பழி கூறினாலும் அவற்றிலுள்ள உண்மைகளையும் அரசு ஆராய்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். தோழமைக் கட்சியினரும் மக்கள் நல ஆர்லர்களும் நடுநிலை இதழ்களும் கூறுவனவற்றைச் செவி மடுக்க வேண்டும். தமிழாட்சி குறித்துப் பலரும் இடித்துரைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், கேளா அரசாக இருந்து என்ன பயன்?
ஆங்கிலத்திணிப்பிற்கு எதிராக மக்கள் போராடும் நிலை வரும் பொழுது தமிழ்ப்பகைவர்கள் தமிழ்ப்பற்றாளர்கள்போல் ஊடுருவி அரசை அசைக்கப் பார்ப்பார்கள்; ஆட்சியைக்கவிழ்க்கும் சதிவலையைப் பின்னுவார்கள். இவற்றிற்கெல்லாம் அரசு இடம் கொடுக்க வேண்டுமா?
எனவே, தாங்கள் விரும்புவதற்கிணங்கவும் தமிழார்வலர்களும் மனிதநேயர்களும் முற்போக்காளர்களும் தன்மதிப்பு உணர்வாளர்களும் வருணாசிரம எதிர்ப்பாளர்களும் விரும்புவதற்கேற்பவும் இந்த ஆட்சி நிலைக்க முதல்வர் மு.க.தாலின் உடனடியாக ஆங்கிலத்திணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். தமிழைப் பயன்படுத்தாதவர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லை என்னும் நிலை வர வேண்டும். முதற் கட்டமாகத் தமிழைப் பயன்படுத்தாதவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பில் வேலை இல்லை என்றாக்க வேண்டும். சிறு பொறி நெருப்பாகும் என்பதை உணர்ந்து விழிப்புடன் செயற்பட வேண்டும். தமிழ் காக்கும் அரசாக மாறி மும்மொழித்திணிப்புகளையும் அகற்றி, வழிபாடு, கல்வி, வேலை, உயர்நிலை வரையிலான நீதி மன்றங்கள் என எங்கம் தமிழ் வீற்றிருக்கச் செய்து தம் ஆட்சியையும் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment