Saturday, September 26, 2015

வலைமச் சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்


thalaippu_valaimachorkal

   கணிப்பொறி தொடர்பாகவும் பிறஅறிவியல் தொடர்பாகவும் மிகுதியான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டி உள்ளன. அறிவியல் கலைச்சொற்கள் அவ்வப்பொழுது சொல்லாக்க ஆர்வலர்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட கலைச்சொற்களைக் கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான், இவற்றால் பயன் விளையும். இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர்தான்.   இனியேனும் படைப்பாளர்கள் தமிழ்க்கலைச் சொற்களையே பயன்படுத்தும் வேண்டுகோளுடன் கட்டுரையைத் தொடருகிறேன். கணிணிச் சொற்களில்  வலைப்பணி(Network) சார்ந்த கலைச் சொற்களைக் காணலாம்.
  கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் குறித்துக்,‘கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும்ஒலிபெயர்ப்புச் சொற்களும்’ என்னும் (செருமனியி்ல் நடைபெற்றஇணையத் தமிழ் மாநாட்டுக்) கட்டுரையிலும் <http://thiru-padaippugal.blogspot.in/2010/06/1.html> ‘கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு’என்னும் (கோவையில் நடை பெற்ற இணையத் தமிழ் மாநாட்டுக்) கட்டுரையிலும்குறித்துள்ளேன். எனவே சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் குறிப்பிட விழைகிறேன்.
   கலைச்சொற்கள் என்ற பெயரில் அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் புகுத்துவது அடியோடு நிறுத்தப்பட வேண்டும். முன்னரே நடைமுறையில் உள்ள கலைச்சொற்களை அறிந்து, தக்கனவாய் இருப்பின், அவற்றையே பயன்படுத்த வேண்டும். ஒரே சொல்லிற்கு ஒவ்வொருவரும் புதுப்புதுச் சொற்களை அறிய முற்படுவது காலக்கேடும் பயன்கேடும் ஆகும். அதே நேரம்  பயன்பாட்டில் உள்ள சொற்கள் தவறாக அல்லது வேறு பயன்பாட்டில்இருப்பின், வேறு சொற்களை அறிய முற்படுவதே சரியானதாகும். கலைச்சொற்களைத் தொடர்களாக அமைக்கக்கூடாது; இவை சுருக்கமாகவும், செறிவாகவும், தெளிவான  பொருள் உடையனவாகவும், பொருள் மயக்கம் இல்லாதனவாகவும் இருத்தலே சிறப்பு. சுருக்கக் குறியீடுகள் அல்லது தலைப்பெழுத்துச் சொற்கள் தமிழிலேயே இருக்க வேண்டும். கலைச்சொற்களைப்பாடநூல்களிலும் பயன்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் நாம் வலைமச் சொற்கள் குறித்துக் காண்போம்.
  வலைமச் சொற்கள் எனப் பார்க்கும் பொழுது கணிணி தொடர்பான பிற பிரிவுகளில் பலவும்  தொடர்புடையனவாக உள்ளமையைக் காணலாம். எனவே ஆயிரக்கணக்கில் உள்ள கலைச்சொற்கள் முழுமையையும் காணக் கால வரையறை இடம் தராது. எனவே, கால வரையறைக்கு உட்பட்ட எண்ணிக்கையில்  வலைமக்கலைச்சொற்களைக் காணலாம்.
அ.) வலைமம் (Network)
  வலைப்பணி என்பதற்கு மாற்றாகச் சிலர் பிணையம் எனக் கையாளுகின்றனர். பிணையம் என்பது ஒருவரை விடுவிப்பதற்கு அளிக்கப்படும் பிணை அல்லது காப்பினைக் (bail or security) குறிப்பதாக அமையும். பிணைக்கப்படுவது என்னும் பொருளில்  கையாள எண்ணினாலும் இத்துறையில் அச்சொல் பொருந்தாது. குறுக்கு நெடுக்குக்கட்டமைப்பு, கணிணிக்கட்டமைப்பு என்பன விளக்கமாக அமைந்தாலும் கலைச்சொல்லாக அமையவில்லை. நிகரம் என்பது,  நிகரத் தொகை என்பது போன்ற  இடங்களில் சரியாக இருக்கும். மருத்துவத்தில் பத்தியம் என்னும் பொருளிலும் இச்சொல் கையாளப்படுகிறது. சிலந்தி வலை, மீன் வலை முதலான இடங்களில்  உரியவாறு கையாளப்படுகிறது. இங்கே நாம் வேறு வலைகளில் இருந்து வேறுபடுத்துவதற்காக வலைப்பணியைச் சுருக்கமாக வலைமம் எனலாம். 

தொடரும்
– இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive