kaniniyil thamizh

கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு - 1

  எத்துறையாயினும் அத்துறையறிவு தாய்மொழியில் வெளிப்படுத்தப் பட்டால்தான் அம்மொழியினருக்கு முழுப் பயன்பாடு கிட்டும்; அத்துறையும் சிறப்பான வளர்ச்சியை எட்டும். அந்த வகையில் கணிணியியலில் முழுமையும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டால்தான் கணிணியியல் முழு வளர்ச்சியடைந்ததாகும்.. இப்பொழுது அந்நிலை இன்மையால், அதனை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கட்டுரையாளர்களும் நூலாளர்களும் இதழாளர்களும் தமிழில் கணிணியியலை விளக்குவதில் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், அவ்வாறு விளக்குவதில் உள்ள ஆர்வம் தமிழைப் பயன்படுத்துவதில் இல்லை. கணிணிக் கலைச்சொற்களாக நல்ல தமிழ்ச் சொற்கள் இருப்பினும் அதைப் பயன்படுத்தாதவர்களும் உளர்; தமிழ்க் கலைச்சொற்கள் இன்மையால் அயல் மொழிச் சொற்களைத் தமிழ் வரிவடிவில் எழுதுவோரும் உளர். எனவே, இந்நிலை மறைந்து இன்னிலை தோன்றப் பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபட கணிணியியலாளர்கள் முன் வரவேண்டும்.
  1. இருக்கின்ற தமிழ்க் கலைச்சொற்களைப் பயன்படுத்தல்.
  2. இல்லாதவற்றிற்குப் புதிய கலைச்சொற்களை உருவாக்கல்.
  3. நேர் பெயர்ப்புச் சொற்களைத் தவிர்த்தல்
  4. ஒலி பெயர்ப்புச் சொற்களை விலக்குதல்
  5. நடைமுறையில் பொருந்தாச் சொற்கள் இருப்பின் தக்க கலைச்சொற்களை உருவாக்கல்
  1. சொற்சுருக்க எழுத்துகளைத் தமிழில் குறிப்பிடல்.
  2. தலைப்பெழுத்துச் சொற்களைத் தமிழில் குறிப்பிடல்.
  3. விசைச் சொற்களைத் தமிழில் குறிப்பிடல்.
  4. கணிமொழிக் கட்டளைகளைத் தமிழில் அமைத்தல்.
  5. கணிப்பொறியின் பகுதிகளைத்தமிழிலேயே குறித்தல்
  சுருக்கமாகச் சொல்வதாயின், தமிழை மட்டுமே தெரிந்த ஒருவர் கணிணியியலை நன்கு புரிந்து கொள்ளும் அளவிற்குத் தமிழை மட்டுமே பயன்படுத்திக் கணிணியியலை விளக்கும் காலம் விரைவில் வர வேண்டும்.
  தமிழ் ஆர்வலரான கட்டுரையாளர் சிலர், தத்தம் படைப்புகளில் நல்ல தமிழ்ச் சொற்களைக் கையாண்டுவரினும், கணிணித்தமிழ் அறிஞர் சிலர் நல்ல தமிழ்ச்சொற்களைத் தொகுத்து அகராதிகள் வழங்கியிருப்பினும், அவற்றை அறியும் தேடுதல் வேட்கையின்றியும், அல்லது அறிந்தாலும், அத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கடப்பாட்டு உணர்வு இல்லாமலும், கணிணித்துறையினர் ஆங்கிலச்சொற்களையே கையாண்டு கணித்தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றனர். எனவே, அறிமுகப் படுத்தப்பட்ட கலைச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற உணர்வு படைப்பாளர்களுக்கு வர வேண்டும்.
  கலைச்சொல் பெருக்கத்திற்குத் தடையாக இருப்பது சொல்லைப் புரிந்து கொண்டு படைக்காமல், ‘சொல்லுக்குச் சொல்’ என்ற நேர்முறையில் ஆக்கப்படும் கலைச்சொற்களும், தமிழ்ச்சொற்களைக் கையாளாமல் ஒலிபெயர்ப்புச் சொற்களாக மூலச்சொற்களைக் கையாளலுமாகும். இவற்றை உணர்ந்து, புத்தம்புதுக் கலைச் சொற்களை நாளும் உருவாக்கவும், உருவாக்கப்பட்ட கலைச் சொற்களைப் பயன்படுத்தவும் நாம் முன்வர வேண்டும். கலைச்சொற்கள் சுருங்கியனவாகவும், அவற்றின் அடிப்படையில் மேலும் புதிய கலைச்சொற்களை ஆக்க வாயிலாகவும் அமைய வேண்டும்.
 அறிவியல் துறைகளைப் புரியவைப்பதற்கும் அறிந்துகொள்வதற்கும் கையாளப்படும் கலைச்சொற்கள் தன் விளக்கமாயும் எளிமையாயும் அமைய வேண்டும். அவ்வாறு இல்லாச் சூழலில், தவறாகப் புரிந்து கொள்ளவோ, விளங்காமல் குழப்பம் அடையவோ வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எனவே, விரைந்து வளரும் கணிணியியலில் துறைவளர்ச்சிக்கேற்ற கலைச்சொல் பெருக்கமும் அமைய வேண்டும். கலைச்சொற்கள் பெருகுவதற்கான தடைகளை நீக்க,
  1. ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையாகக் கையாளுதல்.
  2. சில நேரங்களில் ஒருவரே வெவ்வேறு வகையாகக் கையாளுதல்.
  3. நடைமுறைக்கு நல்லசொற்கள் வந்துவிட்டபின்னும் கொச்சையாகக்  கையாளுதல்.
  4. சுருங்கிய கலைச்சொல்லாக இல்லாமல், விளக்கச் சொற்றொடராகக்   கையாளுதல்.
  5. பொருள்விளக்கமான கலைச்சொல்லைக் கையாளாமல், நேருக்குநேர் மொழி
   பெயர்த்துக் கையாளுதல்.
  1. தவறான சொல்லாக்கத்தைக் கையாளுதல்
  2. சொல்லும் அதன் பயன்பாட்டுக் காலத்திற்கு ஏற்பப் பொருள்மாற்றம்
   அடைகிறது. எனவே, இதுதான் இச்சொல்லுக்குப் பொருள் என்னும்
   பிடிவாதம் இன்றிச் சூழலுக்கேற்ற பொருள் விளக்கத்தைக் கையாளாமை
ஆகியவற்றை அறவே நீக்குதல் வேண்டும்.
  ஆதலின், நடைமுறையில் இல்லாத கலைச்சொற்களுக்குத் தேடுதல் வேட்கையுடன் புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும். கலைச்சொல் புனையும் ஈடுபாடும் ஆர்வமும் இல்லாதவர்கள் கலைச்சொல் வல்லுநர்கள் மூலம் புதிய கலைச்சொற்களைப் படைக்கத் தூண்டுதலாய் இருத்தல் வேண்டும். அறிமுகமாகியுள்ள கலைச்சொற்கள் உரிய பொருள் தராதனவாகவும் தொடர்போன்றும் அமைந்து இருப்பின், அவற்றிற்கும் உரிய பொருத்தமான சுருக்கமான கலைச்சொற்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையான கலைச்சொற்களைக் கையாளுதலும், ஒருவரே வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வகையான சொற்களைக் கையாளுதலும் படிப்பவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி எதிர் விளைவுகளை உருவாக்கும். எனவே, நிலைத்துவிட்ட நல்ல சொற்களை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். அதே நேரம் நடைமுறையிலுள்ள சொல்லைவிடப் பொருத்தமான கலைச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டால் பிடிவாதத்துடன் முந்தைய சொல்லையே கையாளாமல் புதிய கலைச் சொற்களைக் கையாளும் மனப்பக்குவமும் வேண்டும். ஓரிடத்தில் பொருத்தமாக உள்ள கலைச்சொல் வேறிடத்தில் உரிய பொருளைத் தராமல் பொருந்தாமல் நிற்கும். எனவே, சொல் இடத்திற்கேற்ற பொருளைப் பெறும் என்பதை உணர்ந்து சூழலுக்கேற்ற கலைச்சொல்லையே பயன்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் அடைப்பிற்குள் ஆங்கிலச்சொல்லையோ நடைமுறையில் உள்ள சொல்லையோ குறிப்பிடத் தயங்கக் கூடாது.
  மூலச் சொற்களையும் தலைப்பெழுத்துச் சொற்களையும் சுருக்க அமைப்புச் சொற்களையும் ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டால் தவறல்ல என்னும் மனப் போக்கு பெரும்பாலாரிடம் உள்ளது. இதுவும் தவறான நிலைப்பாடாகும். இவையும் தமிழில் இருக்கும்பொழுது கணிணியறிவியல் மேலும் எளிமையாகத் திகழும். ஐ.நா. என்பது போன்ற தமிழ்ச் சுருக்கக் குறியீடுகள் பொருளை விளங்க வைக்க உதவுவதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தமிழில் இருந்தால் புரியாது என்று சொல்வதெல்லாம் மேலோட்டச் சிந்தனையே!
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்