அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு
காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள்
உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும்
வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே.
ஆரியத்தின் சாதியக்கருத்தைப்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர்
வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று”
என வாழ்வியலறிஞர் திருவள்ளுவர் வேள்விக்கு
எதிரான குரலினைக் குறளிலே பதிவு செய்து விட்டார். இன்றைய காலத்திலும் அவர்
வழியிலே தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும்
வரலாற்று அறிஞர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களும் இன உணர்வாளர்களும்
தமிழறிஞர்களும் இறைநெறியாளர்களும் ஆரிய மாயையை அகற்றக் குரல் கொடுப்பதை
யாவரும் அறிவர்.
தேர்வுகளில் வெற்றி பெறவும்
தேர்தல்களில் வெற்றி காணவும் மழை பெய்யவும் உலக நலனுக்காகவும் எனப் பொய்
மூடிகளைத் தாங்கி இப்பொழுது முன்னிலும் முனைப்பாக இவை நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன. அது மட்டும் அல்ல! வேள்விப் புகையானது காற்று
மண்டிலத்தைத் தூய்மையாக்கும் என அறிவியல் சாயத்தைப் பூசி மக்களை ஏய்த்து
வருகின்றனர்.
நாம் விழிப்படையாததால்
தூங்குகிறவர்கள் தொடைகளில் கயிறு திரிக்கச் சிலர் புறப்பட்டு விட்டனர்.
அம்முயற்சிகளில் ஒன்றுதான் ‘இராமாயணம் – ஓர் உயிரியல் கண்ணோட்டம்’ என்னும்
கட்டுக்கதை. தமிழ் நலன் நாடும் தமிழ் ஓசையில் இக்கதை இடம் பெற்றுள்ளதால்
வரலாற்றை மறைக்கும் அறிவியல் போர்வையை விலக்க வேண்டியது நம் கடமையாகிறது.
இராமாயண நிகழ்வுகள் பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பான கால அளவாக இதில் கூறப்பட்டுள்ளது. உண்மையில்
தொல்காப்பியத்திற்கும் மிகவும் பிற்பட்டதே இராமாயணக் காலம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்”
போன்ற பல ஆயிரம் சங்கப் பாடல்கள் தோன்றிய காலத்திற்கு மிகவும் பிற்பட்ட
காலமே இராமனின் காலம். இதற்கான சான்றுக்கு வேறு எங்கும் போகவேண்டியதில்லை!
வால்மீகி இராமாயணத்திலேயே உள்ளது. இராமன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்காக
அயோத்திக்குத் திரும்புகையில் பல கோயில்களுக்கும் செல்வது போல்
புத்தபீடத்திற்கும் செல்வதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.(“சக்கரவர்த்தித் திருமகன் …. பவுத்த நினைவிடங்களையும் … வலமாய் வந்தான்.”-
வால்மீகி இராமாயணம்- தமிழில்: குருவிக்கரம்பை வேலு. பக்கம் 64). இராவணன்
சீதையைப் புத்தத் துறவி வேடத்தில் காண வந்ததாய்த்தான் வால்மீகி இராமாயணம்
கூறுகிறது. மேலும், இலங்கையில், அனுமான் மாநகரைத் தீக்கிரையாக்கிய பொழுது,
புத்த பீடங்களையும் எரித்ததாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
“என்னால் வனம் அழிக்கப்பட்டது.
பவுத்த விகாரம் இடிக்கப்படவில்லை. அதனையும் நான் இடித்துத் தள்ளுகிறேன்”
என்று மனத்தினுள் முடிவெடுத்து மேருமலை போல் தோன்றும் அழகான பவுத்த
விகாரத்தின் மேல் தாவினான். எவராலும் சிதைக்க முடியாததும் மிகச்
சிறந்ததுமான பவுத்த விகாரத்தை அடியோடு இடித்துத் தள்ளினான் மாருதி. (அதே நூல்:பக்கம் 160)
இராவணன் தம் அமைச்சருடன் பேசுகையில், “ஓர் அற்பக் குரங்கு … புத்தருடைய நினைவிடத்தையும் அழித்து விட்டது” எனக் குறிப்பிட்டதாக வால்மீகி கூறுகிறார். (அதே நூல்: பக்கம் 176)
இராமன் அயோத்தி திரும்புவதைக் குகனிடம்
தெரிவித்துத் திரும்பும் அனுமன் புத்தரின் நினைவிடத்தையும் பார்த்ததாக
வால்மீகி குறிப்பிடுகிறார். (அதே நூல்: பக்கம் 216)
இராமன் திரும்புவதை அறிந்த பரதன் மகிழ்ந்து, “பெரியவர்கள்,
தெய்வங்கள் வசிக்கும் இடங்களையும் நகரிலுள்ள பவுத்த மடங்களையும் நல்ல
மலர்களால் இசைவாணர்களுடன் சென்று அருச்சனை செய்யட்டும்” எனக் கட்டளையிடுகிறான். ( அதே நூல்: பக்கம் 217)
புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம்.
அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக்
குறிப்பிடுவது திட்டமிட்ட சதிச் செயலுக்கு இரையாகிய கட்டுரையாளர்களின்
அறியாமையே என நன்கு புரிகிறது.
‘சிந்துச் சமவெளி நாகரிகக் காலத்திற்கும் முற்பட்ட பாரதம்’ எனவும் உயிரியல் கண்ணோட்டக் கட்டுரையில் குறிப்பு இடம் பெற்றுள்ளது. வரலாற்று நோக்கில் மிக அண்மையில் உருவான பாரதஅமைப்பை மிகவும் தொன்மையானதாகக் குறிப்பிடுவதும் தவறாகும்.
உலகின் தோற்றக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடப்பதற்கு அல்லாத
நீர்ப்பரப்பாக எண்ணி அதற்குக் கடல் என்று பெயரிட்டனர். நாளடைவில் நாட்டில்
அமைந்த நீர்ப்பரப்பில் ஓடம், படகு, வள்ளம், தோணி, முதலியவற்றின் துணையுடன்
கடக்க முடிந்ததைப் போல நெய்தல் நில மக்களாகிய பரதவர்கள், நாவாய்கள்,
மரக்கலன்கள், கப்பல்கள் எனப் பலவற்றின் மூலமும் கடலை எளிதில் கடக்க முயன்று
வெற்றி கண்டனர். நாட்டு விளைபொருள்களை அயல்நாடுகளுக்கு எடுத்துச் சென்று
செல்வங்களைக் குவித்து வந்தனர். திரைகடலோடிச் செல்வம் சேர்த்த சிறப்பின்
காரணமாகப் பரதவர் நாடாகச் சிறப்பிக்கப் பெற்றது நம் தமிழ்க் கண்டம். இப்பரதவ நாட்டையே பின்னர் வந்தவர்கள் மிகவும் பிற்பட்ட பரதனின் நாடாக எளிதில் கற்பித்து விட்டனர்.
வரலாற்றுச் சிறப்பும் பெருமையும் பெற்ற சிந்துச் சமவெளி நாகரிகம் எனக்
குறிப்பிட்டு விட்டு அப்பொழுது இல்லாத பரதநாட்டையும் பிற்பட்ட இராமாயணக்
காலத்தையும் அதற்கும் முந்தையதாகக் கூறுவது, “மன்னா, நாடே உனக்கு அடிமை.
நீயோ எனக்கு அடிமை” என மன்னனைப் புகழ்ந்து அவனையே தனக்கு அடிமையாகக்
காட்டுவதைப் போலத், தமிழின் உயர்வுகளையெல்லாம் நடுவுநிலைமையோடு கூறுவது போல
நடித்து விட்டு, அதற்கும் முந்தையதாக ஆரியத்தைச் சிறப்பிப்பதாகும்.
கட்டுரையில், “பேசும் மற்றும் புரிதல்
திறன் கொண்ட குரங்கு, கரடி, கழுகு போன்ற விலங்குகள் இருந்ததை நாம் காண
முடிகிறது” எனவும் குறிப்பிட்டுள்ளனர். “பாட்டி வடை சுடும் கதையில் காக்கா
பாடுகிறது! நரி பேசுகிறது! எனவே, அக்காலத்திய உயிரியல் மாற்றத்தை ஆராய
வேண்டும்” என இனிமேல் கூறினாலும் கூறுவார்கள் போலும். இத்தகைய புதுவகை
ஆராய்ச்சியாளர்கள் உருவாகக் கூடாது என்றுதான் சீனாவில் விலங்கினங்கள்
பேசுவதான கதைகளுக்குத் தடை விதித்துள்ளார்கள். மேலும் இராமாயணக் கதை,
முந்தைத் தமிழர்களின் வழிமுறையினருக்கும் பிந்தை ஆரியர்களுக்கும் நடைபெற்ற
போரின் அடிப்படையிலான கதை என்பாரும் முற்றிலும் கற்பனை என்பாரும்
வரலாற்றுக் காப்பியம் என்பாரும் உள்ளனர்.
காலங் காலமாகத் தமிழ்ப் பகைவர்கள்
செய்து வருவது உண்மையுடன் பொய்யை இணைத்துப் பிணைத்து உலவ விடுவதாகும்.
எடுத்துக்காட்டாக, இப்பொழுது வரும் நாலெழுத்து இதழில் ஓரெழுத்து ஆசிரியரால்
அவ்வப் பொழுது சில அரசியல் கதைத் தொடர்கள் வெளிவருவதைக் கூறலாம்.
இவற்றில், வாழும் அரசியல் தலைவர்களுடன் கற்பனைப் பாத்திரங்களையும் கலந்து
அரசியல் நையாண்டி என்ற பெயரில் நச்சுக் கருத்துகள் பரப்பப்படுகின்றன.
வருங்காலத்தில் தமிழ்ப் பகைவர்களின் வழிமுறையினர், இத்தலைவர்களின்
நற்செயல்கள் பேசப்படும் பொழுது, கற்பனைப் பாத்திரங்களை முன்னிறுத்தி
இவையும் கற்பனையே என்பர். மற்றொரு சாரார் தீயொழுக்கத்துடன்
சித்தரிக்கப்படும் கற்பனைப் பாத்திரங்களையும் உண்மையாகக் காட்டி அவற்றின்
அடிப்படையில் உண்மையில் வாழ்ந்த தலைவர்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்துவர்.
அறியா ஆய்வாளர்கள் இதனடிப்படையில் தவறான செய்திகளை வெளியிடுவர். இதே போல்
முந்தையோர் செய்த கலப்பின் விளைவே இராமாயணம். நாம் இந்தி மொழித் திணிப்பை
எதிர்ப்பதற்காக இந்தி அரக்கி என உருவகப்படுத்துகிறோம். இந்தி மொழியை வாழும்
உயிருள்ள அரக்கியாக வரலாறு எழுதினால் எவ்வாறு தவறாகுமோ அவ்வாறுதான்
இராமாயணப் பாத்திரங்கள் பலவற்றை எண்ணிக் கொள்ள வேண்டும்.
இராமாயணக் கதைப் பாத்திரங்களுக்கும்
தமிழ்நலனுக்கு எதிரான மாயைகளுக்கும் அறிவியல் சாயம் பூசுவதோ உயிரியல்
முகமூடி போடுவதோ பகுத்தறிவை விதைத்தப் பகலவன் வாழ்ந்த மண்ணில், அறிவுப்
பயிரை வளர்த்த அறிஞர் சிறந்த மண்ணில், தமிழ்நலனுக்கு வேலியிட்டுக் காக்கும்
முத்தமிழறிஞர்கள் வாழும் மண்ணில் எதிர்ப்புகளை வென்றெடுக்கும் தமிழ்ப்
போராளிகளும் உணர்வாளர்களும் உலவிடும் மண்ணில் எடுபடாது என நாம் எண்ணி அமைதி
காக்கக் கூடாது. தமிழ் நலம் கெடுமிடமெல்லாம் தலையிட்டுத் தடுத்து நிறுத்த
வேண்டும்.
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்னும் தெய்வப்புலவர் காப்புரையை எண்ணித் தமிழ் அமுதில் அறியாமை நஞ்சு கலக்க இடம் தரக்கூடாது. புதிய புதிய கோப்பைகள் மூலம் மீண்டும் மீண்டும் எத்தனை முறை தரப்பட்டாலும் நஞ்சு நஞ்சுதான் என்னும் விழிப்புணர்வுடன்,
தமிழ் நலம் காப்போம்! தமிழ் அறம் பேணுவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
– தமிழோசை நாளிதழ்
No comments:
Post a Comment