kuralneri_muthirai_small01 

இதழாளர் இலக்குவனார் தாம் நடத்திய

இதழ்கள் வாயிலாக வலியுறுத்தியவை

1.    இனிய எளிய தமிழ் நடை.
2.    அயல்மொழிக் கலப்பால் தமிழ் நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்ந்து பிறமொழிக் கலப்பு இன்றியே எழுத வேண்டும்.
3.  இந்தி முதன்மை தமிழுக்கே அழிவு. எப்பாடுபட்டேனும்இந்தி முதன்மையைத் தடுத்தல் வேண்டும்.
4.   ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்திய மொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்பட வேண்டும் என விதிக்கும்நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும் தடுக்க வேண்டும்.
5.    மக்களாட்சியில் கிளர்ச்சி என்பது நோய்க்கு மருந்து போன்றதாகும். ஆட்சியாளரின் பொறுப்பை உணர்வதற்குக் கிளர்ச்சிகள்தாம் கை கண்ட மருந்தாய் உலகம் முழுவதும் காணப் பெறுகின்றன. எனவே, கிளர்ச்சிகளுக்கு எதிராக அரசு அடக்கு முறையைப் பயன்படுத்தக் கூடாது. கிளர்ச்சிகளுக்குக் காரணமானவற்றை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்க முன்வந்தால் கிளர்ச்சியாளர்கள் அரசின் உறுதி மொழிகளை ஏற்றுப் போராட்டங்களைக் கைவிட வேண்டும்.
6.  வாழ்வியல் நூலாம் தொல்காப்பியத்தையும், வாழ்க்கை நெறி நூலாம் திருக்குறளையும் கண்களாகக் கொண்டு போற்றி முழுமையாய்ப் படித்துப் பின்பற்றி வாழவேண்டும்.
7.  சங்க இலக்கியக் காலம் நம் பொற்காலம். சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்ப வேண்டும்.
8.    பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூடாது. அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
9.    தமிழ்ப் பெயரே சூட்ட வேண்டும். தமிழிலேயே எழுத வேண்டும். தமிழிலேயே பேச வேண்டும்.
10.  ஆசியக் கூட்டரசு, உலகக் கூட்டரசு என்ற படிநிலைகள் வரவேண்டும். எனவே, இந்தியா, இந்தியக் கூட்டரசாகத் திகழ வேண்டும். தன்னுரிமையுடைய மாநிலங்களின் கூட்டாக ‘இந்தியக் கூட்டரசு நாடுகள்” என்ற வகையில் திகழ வேண்டும்.
11.    நீதிமன்ற மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அனைத்துநிலை மொழியாகவும் தமிழ் இருத்தல் வேண்டும்.
12.    மூட நம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறிவோடு வாழ வேண்டும்.
13.    வண்டமிழை வட்டார மொழி என்று கூறற்க.
14.    தமிழர்க்குத் தேசிய மொழி தமிழேயாகும்.
15.  நடுவணரசுடன் தமிழ் மக்கள் தமிழ்மொழியிலேயே தொடர்பு கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
16.   வேண்டிய மொழிகளை விரும்பிக் கற்கலாம். ஆனால், இந்திதான் தேவை என்ற சூழலை உருவாக்கிவிட்டு, இந்தியைப் பெரும்பான்மையோர் விரும்பிக் கற்கிறார்கள் என்ற போர்வையில் இந்தியை இங்கே பயிற்றுவிக்கக் கூடாது.
17.    செய்தியிதழ்கள் செந்நெறி போற்ற வேண்டும்.
18.    தமிழை அழிவிலிருந்து மீட்க இதழ்கள் அயல்மொழிக் கலப்பின்றியே எழுத வேண்டும்.ளு
19.    செந்தமிழைக் காப்போர்க்கே தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
20.    ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே நாடு என்பன நம்மை அழிப்பன.