tha.i.ka.no.po._thalaippu6

3.பணித்தரவுக் குழு:
  த.இ.க.கழகத்தின் பணிகள் சரியான முறையில் மக்களுக்குத் தரப்படுவதில்லை. வெளிப்படுத்தும்பாங்கில் உள்ள தவறு சில இடங்களில் காரணமாக அமைகின்றது. தொடக்கப் பணிகளைத் தளத்தில் கொடுத்துவிட்டு அப்பணிகள் வளர்கையில் அல்லது பெருகுகையில் அவற்றைச் சேர்க்காமை பல இடங்களில் காரணமாக அமைகின்றது. சான்றாக இதன் தளத்தில் முனைவர்பட்ட ஆய்விற்குரிய தரவு நூல்கள் உள்ளன என்பதுபோல் குறிப்பும் தொடர்பில்லாமல் வழிகாட்டியும் தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்டமும் தரப்படும் என்பன போன்ற குறிப்புகளும்தான் உள்ளன. மாறாக முனைவர் பட்டம் ஆய்விற்குப் பதிவும் வழிகாட்டியும் தரவு நூல்களும் வழங்கப்பெற்று, முனைவர் பட்டம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்பெறும் எனத் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் முனைவர் பட்ட ஆய்விற்குக் கால வரம்பு விதிக்காமல் உரிய விதிப்படியான ஆய்வு நூல்களை அளித்தால் முனைவர் பட்டம் வழங்கப்பெறும் என அறிவிக்க வேண்டும்.
  இதுபோல், 4 அகராதிகள் மட்டுமே இத்தளத்தில் உள்ளதாகக் குறிப்பு உள்ளது. அந்த நேரத்தில் பதிந்த குறிப்பாக இது இருக்கும். ஆனால், இன்றைக்கு இதன் தளம் தரும் அகராதிகள் பலவாகும். இவையாவுமே குறிக்கப்பட வேண்டுமல்லவா? எனவே, பணித்தரவுக் குழு அமைத்து அதன் மூலம் பணிகள் உடனுக்குடன் புதுப்பிக்கப்பட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும்.
 தகவலாற்றுப்படைக் குழு(Project Damirica Committee)என்பது தமிழிலும் ஆங்கிலத்திலும் வெவ்வேறு பொருள்மயக்கம் தரும் வகையில் பெயர்கள் கொண்டுள்ளது. இதன் நோக்கம் திட்டம் சார்ந்ததா? சங்கத்தமிழ் சார்ந்ததா? தகவல் சார்ந்ததா எனப் புரியவில்லை. இக்குழு என்ன செய்து வருகிறது என்ற விவரமும் இல்லை. பணித்தரவுக் குழுவே இக்குழு செய்து வரும் பணிகளைப்பார்க்கலாம். எனவே, இக்குழுவைக்கலைத்துவிடலாம்.
4. கணிணிசார் பணிஆய்வுக்குழு:
  தமிழ் வளர்ச்சி தொடர்பான கணிணி சார் பணிகளை ஆய்ந்து உரிய வல்லுநர்களிடம் தெரிவித்து ஆவன செய்வதற்காகக் கணிணிசார் பணி ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். எத்தகைய பிழை திருத்திகள் தேவை? இப்போதைய பிழை திருத்திகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்? ஒளிவழி எழுத்தறிவான் முதலான பயனேதுக்களை எவ்வாறு அமைக்க வேண்டும்? மின்னகராதி எவ்வாறு அமைய வேண்டும்? தமிழ்ப்பயன்பாடுகள் தொடர்பான கணியன்கள்(soft-wares) என்னென்ன தேவை? எந்த வகையில் அமைய வேண்டும்? என்பன போன்றவற்றை ஆராய்ந்து தெரிவிப்பதற்கான குழுவாக இது செயல்படவேண்டும்.
 ஒருங்குகுறிக்கு எனத் தனிக்குழு உள்ளது. அக்குழுவில் தமிழ்ப்புலமையருக்கான பங்களிப்பு புறக்கணிக்கப்படுவதனால் அக்குழுவைக்கலைத்து விடலாம். மாறாக இக்குழுவே ஒருங்குகுறி தொடர்பான பணிகளையும் பார்க்க வழிவகை செய்ய வேண்டும். ஒருங்குகுறியை எல்லாத் தளங்களிலும் பயன்படுத்த இயலுவதில்லை. எனவே, ஒருங்குகுறி என்றில்லாமலேயே தமிழ் எழுத்துருக்கள் படிக்க இயலும் வகையில் இக்குழு ஆராய்ந்து ஒருங்குகுறிக்கு முற்றுப்புள்ளி வைத்தலும் நன்றாகும்.
 கைப்பேசி தொடர்பான பணியையும் இக்குழுவே பார்க்கும் என்பதால் கைப்பேசி வல்லுநர் குழுவும் தேவையில்லை.
5. நெறியாளர் குழு:
  ‘ஆலோசனை நிலைக் குழு’ என்பதை ‘நெறியாளர் குழு’ என்ற பெயரில் அழைக்க வேண்டும். இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்களும் பொதுக்குழுவில் உள்ளவர்களும் இக்குகுழுவில் இடம் பெறுவது பொருத்தமற்றது. அவர்கள் அக்குழுக்கள் மூலமே நெறிப்படுத்தவும் அறிவுரை வழங்கவும் இயலும். சிலரே வெவ்வேறு குழுக்களில் இருப்பது புதிய சிந்தனை ஓட்டத்திற்குத் தடைகற்களாய்தான் அமையும். ஆதலின் இப்போதைய குழுவைக் கலைத்துவிட்டு நெறியாளர் குழு அமைக்க வேண்டும்.
 மூத்த அறிஞரான முதுமுனைவர் புலவர்மணி இரா.இளங்குமரன் தலைமை நெறியாளராக இருப்பது இக்கழகத்திற்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும். இக்குழுவிற்குப் பதவி வழி உறுப்பினர்கள் தேவையில்லை என்பதையும் உணர வேண்டும்.
  6. பணியாளர் நலன்குழு:
 பணியாளர்கள் நலன் பேணப்பட்டால்தான் அவர்கள் தரும் பணிகளும் சிறப்பாக அமையும். எனவே, அலுவலக நடைமுறைக்காகப் பணியாளர் நலன்குழு ஒன்று அமைக்கப்பெற வேண்டும். த.இ.க.கழக இயக்குநர், த.தொ.நு. செயலர், பணியாளர் பணியமைப்புத்துறைச் செயலர் அல்லது துணைச்செயலர், பணியாளர்களில் அடிப்படைப்பணியாளர்கள், எழுத்துப் பணியாளர்கள், கல்வியியல் பணியாளர்கள் என்ற முத்தரப்பிலிருந்தும் ஒவ்வொருவர் என இக்குழுவின் உறுப்பினர்களாக இருத்தல் பணியாளர் நலன்காக்க உதவும்.
கல்விப் பேரவைக் குழு, நூலகக் குழு முதலான எல்லாக் குழுக்களிலும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சேர்க்கப்பட வேண்டும்.
(இனியும் போகும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+9