thalaippu_valaimachorkal

4

ஏ.) protocol
  சீர் மரபு, செம்மை நடப்பு வழக்கு, செம்மை நடப்பொழுங்கு, செய்மை நடப்பொழுங்கு, நெறிமுறை, மரபு பேணுகை, மரபு முறை, மரபுச்சீர் முறைமை என வெவ்வேறு வகையாக இப்பொழுது குறித்து வருகின்றனர்.
  மின் குழுமம் ஒன்றில் பேரா. செல்வகுமார்,
நெறிமுறை எதிர் விதிமுறை/ எதிர் வரைமுறை protocol, எது சரி? இரண்டுமே சரியாக இருக்கும். தொடர்பாடல் துறையில், கணிணித் துறையில் இரண்டிலுமே இரு சொற்களும் பொருந்தும். இல்லை சுருக்கமாக நெறி என்றே சொல்லலாம். நெறி என்றால் ஒரு குறிப்பிட்ட திசை/முறைப்படி செல்லுதல்/நடத்தல். ‘புரோட்டொக்கால்’ என்பது பணி அல்லது தொடர்பாடலுக்கான் நெறிமுறை. விதிமுறை என்பதும் அதுவே. நெறி என்ன என்றால் புரோட்டோக்கால் என்ன. வகுநெறி, தொடர்நெறி, தொடக்குநெறி என்று தேவைக்கும் இடத்துக்கும் ஏற்றால்போல செய்து கொள்ளலாம்”  எனத் தெரிவித்து உள்ளார்.
 career, norm, moral, principle,  என்பனவற்றிற்கெல்லாம் நெறி என்றே குறிக்கின்றனர். எனவே, நெறி என்பதும் நெறிமுறை என்பதும்  புரொட்டக்கால் என்பதற்குப் பயன்படுத்தும் பொழுது குழப்பம் வரும்.  ஆதலின் தக்க கலைச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
  நிரல் என்பதற்கு வரிசை, முறைப்படி ஒழுங்குபடுத்தல், வரிசைப்படுத்தல் எனப் பொருள்கள் உள்ளன.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர் (குறள் எண்: 528)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். பாராட்டிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களைப் பொதுவாக நோக்காமல் தகுமுறைக்கேற்ப நோக்க வேண்டும் என்பதையே அவர் குறிப்பிடுகிறார். அதற்கு அவர் குறிப்பிடும்  சொல்லே வரிசை என்பதாகும்.  புரொட்டக்கால்/protocol  என்பதும்  வரிசை முறைப்படி அமைவதையே  குறிக்கிறது.  இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தகவல்தொடர்பிகளிடையே பரிமாறப்படுவது உரிய வரிசையமைப்பிற்கேற்ப நிகழ்வதைக் குறிக்கும் நெறிப்பாட்டை, வரிசைநெறி என்னும் பொருளிலான நிரல் நெறி எனலாம். நிரல் உடைய நெறி  என்பதால் சுருக்கமாக  நிரன்மை எனலாம்.
நிரன்மை  – Protocol
வலைம நிரன்மை Network protocol
ஓர்மி* ஒத்திசை நிரன்மை Bit synchronous protocol
தகவல்தொடர்பு நிரன்மை Communications protocol
இணைப்புசார் நிரன்மை Connection oriented protocol
கோப்பு மாற்று நிரன்மை File transfer protocol
மீஉரை மாற்ற நிரன்மை Hyper text transfer protocol (http)
இணைய நிரன்மை Internet protocol
அடுக்கு நிரன்மை உத்தி Layered-protocols technique
பல்தொகுப்பு முனைக்கு முனை நிரன்மை Multi link point-to-point protocol
வலைம நிரன்மை Network protocol
வலைமப் போக்குவரத்து நிரன்மை Network transport protocol
முனை–முனை நிரன்மை Point-to-point protocol
நிரன்மை உடன்படிக்கைகள் Protocol agreements
நிரன்மைத் தொடர் Protocol sentence
நிரன்மை அடுக்கம் Protocol stack
நிரன்மைத் தொகுமம் Protocol suite
நிரன்மை நிலைக் கடிகை Protocol-level timer
பயனர் தரவுவரி நிரன்மை User data gram protocol
[*binary digit என்பதன் சுருக்கம்தான் bit என்னும்பொழுது, மூலச்சொற்களை மறந்துவிட்டுச் சுருக்கச் சொல் அடிப்படையில் துண்டு என மொழி பெயர்த்தால் தவறான பொருள்தானே கிடைக்கும். சிலர் பிட்சிறு துண்டு, பைட்பெருந்துண்டு; மேலும் முறையே சிறுதி (சிறு துண்டு என்பதன் சுருக்கமாம்), பெருதி; துண்டம், எண் துண்டம்; விள்ளல், எட்டு விள்ளல்/அட்ட விள்ளல்; துணுக்கு, எட்டியல் என்றெல்லாம் குறிக்கின்றனர். அனைத்திற்கும் அடிப்படைக் காரணம்பிட்’ என்பதை ஒற்றைச் சொல்லாகக் கருதி மொழி பெயர்ப்பதே ஆகும். எனினும் 1,0 என்னும் இரண்டு எண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவதைக் குறிப்பதால் இருமை எண்கள், ஈரிலக்க எண்கள், இருநிலை எண்கள், இரட்டை எண்கள், ஈரடிமானம் என்று வெவ்வேறு வகையாக இச் சொல் விளக்கப்படுகிறது. எனவே சுருக்கமாக இருமம் என்று குறிப்பிடலாம். எனினும் binary என்பதன் பொருள்தான் இவ்விளக்கங்கள். ‘பிட்’ ஓர் அலகு என்ற அளவில்தான் பயன்படுகிறது. இவ்வலகில் 0,1 ஆகிய ஈரெண்கள் இருந்தாலும் பயன்பாட்டில் ஏதேனும் ஒன்றைத்தான் குறிக்கும். எனவே, அளவீடாகிய அலகைக் குறிக்கையில் ‘இருமம்’ என்பது தவறாகிறது. எனவே, ஓர் அலகு என்னும் நடைமுறைக் கிணங்க, ‘ஓர்மம்’ > ‘ஓர்மி’ என்று சொல்லலாம். அப்படியானால் பொருள் மாறுபடாதா என்றால் சொல் இடத்திற்கேற்ற பொருளைத்தானே பெற வேண்டும். எடுத்துக்காட்டாக ‘back’ என்றால் ‘பின்’ எனப் பொருள். backside – பின்பக்கம்; ஆனால், back file – முன் கோப்பு என இடத்திற்கேற்ற பொருளைப் பெறுகிறது. அதுபோல்தான்பைனரி’ என்னும் பொழுது இருமத்தைக் குறிக்கும் சொல் பைனரி யூனிட் என்னும் பொழுது ஓர்மி ஆகிறது. இல்லாவிடில்பிட்’ என்பதை இருமம் என்றால் அதன் எண்மடங்காகிய ‘பைட்’ என்பது எண்ணிரண்டு பதினாறு என்றாகும். எனவே, தவறான பொருள் உண்டாகும். மாறாக, எட்டு ‘ஓர்மி’ (பிட்) சேர்ந்தபைட்’ என்பதை ‘எண்மம்’> ‘எண்மி’ என்று சொல்லலாம். Bit – ஓர்மி; Byte – எண்மி எனச் சுருக்கமாகவே குறிப்பிடலாம். இவற்றின் அடிப்படையில் பிற அளவைகளையும் காணலாம். (கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும் ஒலிபெயர்ப்புச் சொற்களும் : இலக்குவனார் திருவள்ளுவன் <http://thiru-padaippugal.blogspot.in/2010/06/2.html&gt;]
(வலை விரியும்)
இலக்குவனார் திருவள்ளுவன்