thalaippu_valaimachorkal

5

ஐ.) இலி /இன்மை(null)
நல்(null)  என்றால் வெறுமை அல்லது ஏதுமற்ற என்று பொருள்.  நல் என்னும் தமிழ்ச்சொல்லிற்கு நல்ல என்று பொருள்.  ஆனால், ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினால் நல்ல என்னும்  பொருந்தாப் பொருள் அல்லவா தோன்றும்.
நல் என்று தமிழ்வரிவடிவிலேயே பயன்படுத்திவிட்டு நல் என்றால் நல்ல அல்ல என்று சொல்வதால் பயனில்லை. அந்த இடத்தில் வேண்டுமென்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் படிப்போர் தவறாகவே எண்ணுவர். எனவே, நல்மோடம் எனத் தமிழில் பெயர்த்து எழுதுவதைவிடத் தமிழ்க்கலைச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
மோடம் (Modem – Modulation/Demodulation) என்பதுதரவை மாற்றித் தரும் கருவி; அஃதாவது, கணிணியில் இருந்து தொலைபேசிக் கம்பிகள் வழியாக அனுப்புவதற்காக அல்லது தொலைபேசிக் கம்பியில் இருந்து கணிணிக்கு வந்துசேருவதற்காகத் தரவினை மாற்றித் தரும் கருவி; ‘தருவி’ யின்றி இரு கணிணிகளை வடம் (கேபிள்) வழி  இணைப்பதும் உண்டு. இவ்வடமே  தருவியிலி  (null modem)  எனப்படுகிறது.
இலி – null;
தருவியிலி – null modem
தருவிச்சொற்கள் சில :
மாறு நிலை தருவி(சமச்சீரற்ற என்பதைவிட மாறுபட்ட  வேகங்களை உடையதால் மாறுநிலை என்பது சரியாக அமையும்.)
Asymmetrical modem
தொலைவு வரம்பு தருவி Limited-distance modem
நேரிணை தருவி Direct connect modem
ஒருங்கிணை   தருவி Integral modem
தொலைபேசித் தருவி Telephone modem
குரல் தகைவு தருவி Voice-capable modem
குரல் உணர்    தருவி Voice recognition modem
அகநிலை தருவி Internal modem
அழை  நிலை தருவி Dial-up modem
வட நிலை தருவி Cable modem
தொடர்முறை தருவி Analog modem
ஒலிக்குறிப்பு தருவி Acoustic modem
ஒ.) விசைப்பி – switch
ஆளி, இணைப்பி, இணைப்புமாற்றி, சுற்றிணை, சொடுக்கி, தாவி, திறப்பான், திறப்பி, தூண்டுவிசை, தொடர் மாற்றி, தொடு சாவி, நிலைமாற்றம், நிலைமாற்றி, பாதைமாற்றி, மடை, மின் பொருத்தி, மின்விசை மாற்றுக்குமிழ், விசை இயக்கி, விசை,
என சுவிட்சு/switch என்பதற்கு ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு வகையாகக் கையாளுகின்றனர் .பயன்முறை அடிப்படையில் பெரும்பாலும் சரியாக இருந்தாலும் பொருள் மயக்கம் தரும் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு சொல்லும் சரியான பொருளை வெளிப்படுத்தவில்லை என ஒரு சாரார் கருதுவதாலேயே புதுப்புதுச் சொற்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்துகின்றன.
விசை என்னும் சொல், கீ/key என்னும் பொருளில் பரவலாகக்   கையாளப்படுவதால், இதற்குப் பொருந்தாது. எனினும் விசை அடிப்படையில், விசைப்பி எனலாம்.விசைப்பு என்பதை switching  எனலாம்.
விசைப்பி– switch
தன்னியக்க வலைம விசைப்பி– Automatic network switching
ஓ.) சீர்மம் (ideal)
இலக்கியலான, இலட்சியம், உயர் குறிக்கோள், உயர்வான, எடுத்துக்காட்டாக விளங்குவது, கற்பனைச் சார்பான, குறிக்கோள் நிலை, குறிக்கோள் வடிவான, கனனவியலான, குறிக்கோள், குறைவிலா நிறைசெப்பம், சால்பு சீர்மை, செயல்துறை சாராத, நிலையான, கருத்தியலான,  புனைவியலான, பொ௫த்தமான, முழுநிறைநலம், முன்மாதிரி,
என ஐடியல்/ ideal என்பதற்கு வெவ்வேறு சொற்கள் கையாளப்படுகின்றன.
சீர்மை அடிப்படையில் சீர்மம் எனக் குறித்து சீர்ம வலைமம் எனலாம்.
சீர்மம் –ideal
சீர்ம வலைமம் – ideal network
இவ்வாறு வலைமச் சொற்களைத் தமிழில் எண்ணித்தமிழிலேயே வெளிப்படுத்தலாம். முதலில் குறிப்பிட்டவாறு காலச்சுருக்கத்தால்  சில மட்டுமே பார்த்துள்ளோம். எனினும் அனைத்துக் கலைச் சொற்களையும் தமிழில் பயன்படுத்தலாம்.ஆனால், நடைமுறையில் கணிணிநூல்களிலும் கட்டுரைகளிலும் தமிழ்வரிவடிவில் ஆங்கிலமே பரவலாகப்பயன்படுத்தப்படுகின்றது.
  தமிழ்க்கலைச் சொற்களை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஆர்வம் மிக்கவர்களே, அவற்றைப் பயன்படுத்தாமை அல்லது  புதிய கலைச்சொற்களைத் தேடுவதில் நாட்டம் காட்டாமை போன்றவற்றால் இவ்வாறு, ஆங்கிலக் கலைச் சொற்களைத் தமிழ் எழுத்து வடிவில் பயன்படுத்தும் அவலத்தை அரங்கேற்றுகின்றனர்.  சான்றாகச்  சொல்ல வேண்டுமெனில் வலைமம் குறித்து 960 பக்கத்தில் ‘நெட்வொர்க் தொழில்நுட்பம்’ என்னும் நூலை எழுதி உள்ள நூலாசிரியர், பலரின் தமிழார்வத்திற்கு உந்துதலாக உள்ளவர்.
 ஆனால், இந்நூலைத்தமிழ் நூல் என்று கூறுவதற்கு இயலவில்லை. அருவினை ஆற்றும் ஆர்வத்தில் பெருமுயற்சி மேற்கொண்டு நூலை உருவாக்கி உள்ளார் ஆசிரியர். ஆனால்,   அருவினை அருந்தமிழ்க்கொலை புரிய அல்லவா  துணை நின்றுள்ளது.“மார்னிங் எய்ட் ஓ கிளாக் பிரேக்  ஃபாசுட் முடித்துவிட்டு நைன் ஏஎம் வண்டியில் ஆஃபீசுக்குப்  புறப்பட்டு டென் ஏஎம்  போய்ச்  சேர்ந்தேன்” என்று அன்றாடம் மொழிக் கொலை புரிவதற்கும் முழுக்க முழுக்க ஆங்கிலக் கலைச் சொற்களையே பயன்படுத்தி நூலை எழுதுவதற்கும் வேறுபாடு இல்லை. இவ்வாறு எழுதுவது மொழிக் கொலை மட்டுமல்ல அறிவுக் கொலையுமாகும்.ஆங்கிலத்தில் கணிணியியல் படித்தவர்கள் தமிழறிந்தவர்களாக இருப்பின் அவர்களுக்கு இந்நூல் எளிமையாக அமையலாம். ஆனால் முதலிலேயே தமிழில் படிப்பவர்களுக்கு ஆங்கிலக்கலைச்சொற்களை முழுக்க முழுக்கப்பயன்படுத்தி எழுதி உள்ளமையால், இந்நூல் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். உளவியல் அடிப்படையில் இது சரியானதல்ல. சொல்லை அறிமுகப்படுத்தும்பொழுதே தமிழில் அறிமுகப்படுத்தினால் எளிதில் புரியும். ஆதலின் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்தி மறுபதிப்பு வெளியிடுவது ஆசிரியருக்கும்பெருமை சேர்க்கும்; படிப்போர்க்கும் பயன்பெருக்கும்; தமிழுக்கும் வளமை நல்கும்.
  இவ்வாறே அனைத்துப் படைப்பாளர்களும் நல்ல தமிழிலேயே எழுத வேண்டும். தெரியாச் சொல்லிற்கான உரிய சொல்லை அறிவதில் சோம்பல், முயற்சியின்மை, நாட்டமின்மை போன்றவற்றால் தமிழுக்குக் கேடு செய்வதைப் படைப்பாளிகள் உணர வேண்டும்.  இத்துறையாயினும் வேறு எத்துறையாயினும், பாடநூல்களும் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட வேண்டும்.
 அறிவியல், தமிழ்வழி  இருப்பின் அறிவியலும்  வளர்ந்தோங்கும்! தமிழும் சிறந்தோங்கும்!
பார்வையில் பட்டவை :
  1. Computer Dictionaryகணிப்பொறி அகராதி (English – Tamil)  – இராம்குமார் ; திருநெல்வேலி தெ.சை.சி.நூ.கழகம்
  2. மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி – மணவை முசுதபா ; மணவை வெளியீடு
3.நெட்வொர்க் தொழில்நுட்பம் – மு.சிவலிங்கம் :பாரதி பகத் பதிப்பகம்
  1. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரகராதி
  2. தமிழ்இணையக்கல்விக்கழகத்தின் கலைச்சொற்கள் தொகுப்பு
  3. ஐரோப்பிய அகராதி (http://eudict.com/)
  4. தமிழ் கியூபு அகராதி (http://tamilcube.com/)
– இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar thiruvalluvan+