தமிழரால் வாழும் கலைஞர்களே! பிற துறையினரே!
தமிழர்க்காகவும் வாழுங்கள்!
மெல்லிசை மன்னர்
(ஆங்கில முதல் எழுத்துகளில்) எம்.எசு.வி. (என அழைக்கப்பெறும் மனயங்கத்
சுப்பிரமணியன் விசுவநாதன்) அல்லது ம.சு.விசுவநாதன் ஆனி, 2046, சூலை 14,
2015 அன்று இசைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தன் இசையால் பன்னூறாயிர மக்களைக் கட்டிப்போட்டவரைக் காலன் கட்டிப்போட்டுவிட்டான்.
ஆனி 11, 1959 / சூன் 24, 1928 அன்று
கேரளாவில் பாலக்காட்டு அருகில் உள்ள எலப்புள்ளி என்னும் ஊரில்
சுப்பிரமணியன் – நாராயணக்குட்டியம்மாள் (நானிக்குட்டி) ஆகியோரின் மகனாகப்
பிறந்தார். நான்காம் அகவையிலேயே தந்தையை இழந்தமையால் பள்ளிக்கூடம் பக்கம்
எட்டிக்கூடப்பார்க்கவில்லை. கண்ணனூரில் இருந்த (சிறைச்சாலையில்
பணியாற்றிவந்த) தன் தாத்தா கிருட்டிணன்(நாயர்) வீட்டில் வளர்ந்தார்.
பள்ளிசெல்லவில்லையே தவிர, நீலகண்ட பாகவதரிடம் கருநாடக இசைபயின்றார். 13 ஆம்
அகவை முதல் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
சிறையில் நீலகண்ட பாகவதர் நடத்திய
நாடகத்தில் சிறுவன்(உ)லோகிதாசனாக நடித்ததுதான் இவரது திரையுலக நுழைவு.
இசையமைப்பாளர் எசு.என்.சுப்பையா(நாயுடு)விடம் உதவியாளராகச் சேர்ந்து
இசையமைப்பாளராகப் புகழ் பெற்றவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம்,
கன்னடம்,இந்தி எனப் பல மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை
அமைத்த பெருமைக்குரியவர். இவற்றுள் 700 படங்கள் இசையமைப்பாளர்
இராமமூர்த்தியுடன் இணைந்து இசைத்தவை. பின்னணிப்பாடகர்கள், இசையமைப்பாளர்கள் எனப் பலரை உருவாக்கிய சிறப்பிற்குரியவர்.
நடிகர்திலகம் சிவாசி கணேசனால் இவருக்கு ‘மெல்லிசை மன்னர்’ என்னும் பட்டம்
வழங்கப்பட்டது. மிகக்குறைந்த அளவில் 3 இசைக்கருவிகள் கொண்டும், மிகுதியான
எண்ணிக்கையில் 300 இசைக்கருவிகளைக் கொண்டும் இசை யமைத்துப் புகழ் பெற்றவர்.
‘இசையமைப்பது என்பது இப்படித்தான்’ என மக்களிடம் மேடையில் முதலில்
நிகழ்ச்சி நடத்தியவரும் இவரே. ஏறத்தாழ 10 படங்களில் நடித்து நடிகராகவும்
விளங்கியவர். இவரைப்பற்றிப் பல கூறுவதற்கு உள்ளன. எனினும் நாம் சொல்ல
வருவது வேறு. அதற்கு முன்னதாக இவருடனான சந்திப்புகளைப் பகிர
விரும்புகின்றேன்.
ஒருமுறை கவிஞர் தஞ்சைவாணன், ஆவணப்படம் ஒன்றின் இசையமைப்பு தொடர்பாக எம். எசு.வியைச் சந்திக்க வேண்டும் என்று அழைத்தார்.
“எம்.எசு.வி. பாடல்கள் மிகவும்
பிடிக்கும். என்றாலும், அவரது நேர்காணல்கள் அல்லது கட்டுரைகளில் இணையராக
இசையமைத்துப்புகழ் பெற்ற பாடல்களைக் குறிப்பிடுகையில் மறந்தும் மெல்லிசை
மன்னர் தி.கி.இராமமூர்த்தி பெயரைக் குறிப்பிடுவதில்லை. என்னதான்
பிரிந்திருந்தாலும் சில இடங்களிலாவது குறிப்பிட்டிருக்கலாம். இத்தகைய
நேர்மையின்மை உடைய அவரைப் பார்க்கப்பிடிக்கிவில்லை” என்றேன்.
“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்,
ஆவணப்படம் குறித்து எதுவும் கேட்டால் நீங்கள் சரியாகச்சொல்ல முடியும்.
உங்கள் வருத்தத்ததை அவரிடமே நேரில் தெரிவியுங்கள். உணர்ந்து கொள்வார். எனவே
உடன் வாருங்கள்” என்றார் எனவே அவருடன் சென்றேன்.
இருவரும் அவரது இல்லம் சென்றோம்.
தொடக்கத்தில் நீண்ட காலத்திற்குப் பின்னரான நண்பரின் சந்திப்பு என்பதால்
தஞ்சைவாணருடனே மகிழ்ந்து நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
என்னிடம், ஆவணப்படத்திற்கு அரசு உதவி
புரிகிறதா என்பது குறித்துக் கேட்டார். கலைபண்பாட்டுத்துறை, இயல்இசை
நாடகமன்றம், தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை மூலம் நடைபெறும் ஆவணப்பட
உதவிகள், ஊக்குவிப்புகள் குறித்துக் கூறினேன். பிறகு, மென்மையாக, “நீங்கள்
ஏன், இணைந்து இசையமைத்துப் பாடிய பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுகையில்
உங்கள் இணையர் இராமமூர்த்தி பெயரைக் குறிப்பிடுவதில்லை. இப்பொழுது நீங்கள்
பிரிந்திருந்தாலும், மெல்லிசை மன்னர்களாக இசைந்துதானே எங்களை
மயக்கினிர்கள்” என்றேன். சற்று அமைதியாக இருந்துவிட்டு, “நீங்கள்
சொல்வதுபோல் சொல்லியிருக்கலாம். முதலில் சொல்லியிருந்து அப்பகுதியை
எடுத்திருந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதன் பின்னர் நானும் சொல்வதை
விட்டு விட்டேன். இனி வாய்ப்பு வந்தால் சொல்கிறேன். உங்களைப்போல்
பலருக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். இனி நான் கவனத்தில் கொள்கிறேன்”
என்றார். உடன் கவிஞர் தஞ்சைவாணன், சிரித்துக்கொண்டே “நான் சொன்னது
சரிதானே” என்றார். குறையைச் சுட்டிக்காட்டும்பொழுது அதைப் புறக்கணிக்காமல்
ஒத்துக் கொண்ட பண்பு எனக்குப் பிடித்திருந்தது.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவரை
மீண்டும் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. தமிழின் சிறப்பைப்பற்றிய
ஆவணப்படம் ஒன்று சரியாக அமைந்துள்ளதா எனப்பார்க்குமாறு அப்போதைய
கல்வியமைச்சர் தம்பிதுரை கூறினார். அதற்காக உரிய படநிலையம் ஒன்றிற்குச்
சென்றிருந்தேன். மெல்லிசை மன்னரும் (எம்.எசு.வி.) வந்திருந்தார். பேசத்
தொடங்கியதுமே அவர், “கவிஞர்(தஞ்சைவாணன்) எப்படியிருக்கின்றனார்” எனக்கேட்டு
முந்தைய சந்திப்பை மறக்கவில்லை என்பதை வெளிப்படுத்தினார். விவரம்
தெரிவித்து நலம் உசாவினேன்.
ஆவணப்படம் தொடர்பில், அறிஞர்கள் வரிசை
முறை அவர்களின் காலமுறைப்படி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன். உடனே
தம்பிதுரை “இப்படிப்பட்ட தவறுகள் நேரக்கூடாது; உடனே மாற்றியமையுங்கள்” எனக்
கூறினார். அதில் இடம் பெற்ற புலமைப்பித்தன் பாடலில் “அமிழ்து அமிழ்து
அமிழ்து என்று சொன்னால் (அமிழ்)தமிழ்தமிழ் எனவரும்” என்று இருந்தது. உடனே
மெல்லிசை மன்னர் “என்ன அருமையாக எழுதியுள்ளார்” என்றார். உடன்
தம்பிதுரையும் “புலவர் என்றால் புலவர்தான்! அவரைப்போலப்பாடல் எழுத
யாருள்ளனர்” என்றார். “புலமைப்பித்தன் அருமையாக எழுதுபவர். என்றாலும்
இவ்வாறு முன்பே சொல் வழக்கு உண்டு. பாரதிதாசனும் அவ்வாறு பாடியுள்ளார்.
“அமிழ்தமிழ் தமிழ்தெனில் இருதமிழ் கிட்டிடும்.”
“அமிழ்தமிழ் தமிழ்தெனச்
செப்பும் வண்ணம் செய்திறம் பெறுக!”
“அமிழ்தமிழ் தென்பேன் நான்”
என்று குறிப்பால் நமக்குப் பாரதிதாசன் உணர்த்துகிறார்.” என்றேன்.
“அப்படியா? என்றாலும் இங்கே அதனை அருமையாகச் சொல்லியிருக்கிறார் அல்லவா” என்றார் தம்பிதுரை.
“உண்மைதான். அடிக்கடி இதனைச்
சொன்னால்தான் பரவும் அந்த வகையில் புலமைப்பித்தன் தெளிவாகவும் தனி
அடிகளாகவும் இங்கே எழுதியுள்ளார்” என்றேன்.
சிறிது நேரம் கழித்து இடைவேளை நேரத்தில்
மெல்லிசை மன்னர்(எம்.எசு.வி.) “தமிழ்த்தாய் வாழ்த்திற்கு நான்தான்
இசையமைத்தேன். தெரியுமா” என்றார். “ஆமாம். கலைஞர் உங்களுக்குத் தந்த நல்
வாய்ப்பு. இதனால் நிலைத்த புகழ் உங்களுக்கு” என்றேன். உடன் எம்.எசு.வி.
“எனக்குப் பொதுவாகவே தமிழைப் பற்றிய பாடல்வரிகள் அல்லது தமிழ்ச்சுவை
பாடலடிகள் என்றால் மிகவும் பிடிக்கும்” எனச் சொல்லி அவ்வாறு சிலவற்றைக்
கூறினார். “மறக்காமல் இவற்றை நீங்கள் சொல்வது உண்மையிலேயே உங்களுக்கு உள்ள
ஆர்வத்தைக் காட்டுகிறது” என்றேன். தமிழ் ஒலிப்பினைப்பற்றிய பேச்சு தொடங்கி,
நாட்டியம்பற்றிப் பேச்சு சென்ற பொழுது நான், “தொடக்கத்தில் நடராசர் படத்தை
அல்லது படிமத்தை வைத்துவிட்டு விநாயகர் பற்றியே பாடுகிறார்கள். ஏன் இந்த
முரண்பாடு” என்றேன். “நடராசர்தானே நாட்டியத்திற்கு அரசர். எனவே அவர்
படத்தைத்தானே வைக்க வேண்டும்” என்றார். “அப்படியானால் அவரைப்பற்றிப் பாட
வேண்டியதுதானே” என்றேன். “சமய வேறுபாடில்லாமல் அனவைரும் தமிழ்த்தாய் அல்லது
திருவள்ளுவர் படம் வைத்து வாழ்த்துப்பாடல் பாடி ஆட வேண்டும்” என்றேன்.
அருகிருந்த நாட்டியக்கலைமாமணி செல்வம்,
“நாங்கள் திருவள்ளுவன் ஐயா எழுதியுள்ள பாடலைத்தான் தொடக்கத்தில் பாடுவோம்”
என்றார். அந்தப் பாடலைக் கேட்டதும் நானும் கூறினேன்.
“அடடா! தமிழ்நாட்டியங்களுக்கு
இப்படித்தானே பாடல் அமைக்க வேண்டும்” என எம்.எசு.வி.கூறினார்.
இடைவேளைப்பொழுது இவ்வாறு இனிமையாகக்கழிந்தது. விடைபெறும் நேரம் (அவரது
உதவியாளர் ஒருவர் என்னிடம் வந்து, நீங்கள் பாடல்பற்றித் தெரிவிக்கும்
கருத்துகளும் பாடலும் நன்றாக உள்ளன. நீங்கள் திரைப்படத்திற்குப் பாடல்
எழுதலாமே” என்றார். “நீங்கள் இசையமைக்கப் போகிறீர்களா” என்றேன்.
(எம்.எசு.வி.) அண்ணாவிடம் சொல்லிவிட்டு இசைத்தொகுப்பே வெளியிடலாம் என்றார்.
சிரித்துக் கொண்டே வந்துவிட்டேன்.
இவ்வாண்டு கண்ணதாசன்
சிலையமைப்புக்குழுவின் முதன்மையாளர் ஒருவரிடம், “எம்.எசு.வி.
கண்ணதாசனைப்பற்றி எங்கும் சிறப்பாகக் கூறுகிறாரே! சிலையமைப்பிற்கு உதவி
செய்தாரா” என்றேன். “ஏன் கேட்கிறீர்கள்” என்றார்.
“உண்மையிலேயே மொழி, இன வேறுபாடின்றி
உதவுகிறாரா என்ற ஐயம். பொதுவாக ஒருவருக்குச் செல்வாக்கு இருந்ததென்றால்
அவரிடம் நெருக்கமாக இருப்பதுபோல் காட்டுவது உலக வழக்காக உள்ளது. இவரும்
அதற்கு விதிவிலக்கில்லையா என அறிய ஆவல்”. என்றேன்.
“யாரிடமும் கூறாதீர்கள். உங்கள்
ஒருவரிடம் மட்டும்தான் கூறுகின்றேன்” என்று பீடிகை போட்டார். “அவருடனோ
அவரைச் சார்ந்தாவர்களிடமோ எனக்குத் தொடர்பு இல்லாத பொழுது நான் யாரிடம்
என்ன கூறப்போகிறேன்” என்றேன். (என்றாலும் தமிழ்நலம் கருதி அவர் சொன்னதை
இங்கே இப்பொழுது பதிகிறேன்.) “கண்ணதாசனைப் பற்றி எல்லா இடங்களிலும் மிகவும்
புகழ்ந்து பேசுவார் எம்.எசு.வி. என்றாலும், சிலையமைப்பிற்கோ தொடர்ந்து
ஆண்டுதோறும் நடத்தும் விழாக்களுக்கோ ஒரு காசுகூட அவர் தந்ததில்லை” என்றார்.
“நீங்கள் கேட்க வேண்டியதுதானே” என்றேன். “அவராகத் தராதது எனக்கு வருத்தமாக
உள்ளது. எனவே, அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை” என்றார். “அப்புறம் எதற்கு
அவரைத் தலைவராகப் போட்டுள்ளீர்கள்.” “தொடக்தக்தில் கண்ணதாசனின் மீது
அளவுகடந்த அன்பு கொண்டுள்ளாரே என்றுதான் தலைவராகப் போட்டோம். அவர் பணம்
தராவிடிலும் அமைப்பின் தலைவராக இருந்ததால் சிலை அமைப்பு வேலை எளிதில்
முடிந்தது. ஒவ்வோர் ஆண்டும் நான் பெரும் பணம் செலவழிக்கிறேன்” என்றார்.
எம்.எசசு.வி. பழகுவதற்கு இனியவர்.
சிறந்த இசைக்கலைஞர்களுள் முன்னிலையில் இருப்பவர். அவர் சந்தித்த
பல்லாயிரக்கணக்கானவர்களுள் சுட்டிக்காட்டினாலன்றி என்னைப்பற்றிய நினைவே
அவருக்கு வந்திருக்க வாய்ப்பில்லாத நிலைதான் இரண்டு சந்திப்புகளும்.
என்றாலும் இயல்பாகவும் தமிழ்ப்பாடல்கள் மீதான பற்றுடனும் பேசிய அவர் என்
நினைவில் பதிந்து விட்டார். என்றாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழர்களால்
புகழேணியில் ஏறியவர் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்ற கேள்வி எழுகிறது?
எனவேதான், கண்ணதாசன் சிலையமைப்புபற்றித் தெரிவிக்கிறேன்.
தென்னகக் கலைஞர்களுள் பெரும்பாலோரை வாழ
வைப்பது தமிழ்நாடாகத்தான் இருக்கின்றது. இருப்பினும் போலியாகத் தமிழர்களைப்
பாராட்டும் அக் கலைஞர்கள் தமிழர்களுக்கு நன்றிக்கடனாக எதுவும்
செய்வதில்லை. சான்றுக்கு ஒன்று சொல்லலாம். தமிழ் மக்களால் புகழ் பெற்ற
பாடகியின் மகளும் திரைத்துறையில் தமிழர்களால் புகழ் பெற்றார். எனினும் தன்
சொத்துக்களை எல்லாம் கேரளத்தில் உள்ளவர்கள் பயனுறும் வகையில் எழுதி
வைத்தாரே தவிர, தான் சார்ந்த திரைத் தொழிலாளக் குடும்பங்களுக்குக்கூட
ஒன்றும் உதவவில்லை. (அவரது இறுதி முறி செயல்படுத்தப்படாமல் இருப்பது வேறு
செய்தி.)
காலம் மாறிக் கொண்டுள்ளது. தமிழர்கள்
விழிப்படைகிறார்கள். வாழும் கலைஞர்களே! உங்களின் திறமையால் நீங்கள் பெறும்
புகழ் மற்றொருவர் திறமை வர மறைந்து விடும்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியமில்லை உயிர்க்கு
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளதை நினையுங்கள்.
உங்கள் பெயர் நிலைக்க வேண்டுமென்றால், ஊதியத்தில்
ஒரு பகுதியையேனும் இந்த நாட்டு மக்களின் நல்வாழ்விற்கெனச் செலவழியுங்கள்.
நீங்கள் சார்ந்த கலைத்துறைக்கெனச் செலவழியுங்கள்! நீ்ங்கள் நடத்த எண்ணும்
தொழில் நிறுவனங்களைத் தமிழகத்தில் தொடங்குங்கள்.
அறக்கட்டளை அமைத்தும், குழந்தைகளைத்
தத்தெடுத்தும் பிற வகைகளிலும் இப்போது கலைஞர்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவது
மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் உங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியைத்
தமிழ்நாட்டவர் நலனுக்கெனச் செலவழியுங்கள். பிற மாநிலப் படங்களில்
பங்கேற்றால் அங்குள்ளவர்களுக்கும் உதவுங்கள். எதிர்கால வாழ்விற்கான சேமிப்பில் ஒரு பகுதியும் நிலைத்த புகழுக்கான அறப்பணியில் ஒரு பகுதியும் செலவிடுங்கள்.
எம்.எசு.வி.மறைவிற்கும் இதற்கும் என்ன
தொடர்பு உள்ளது என எண்ணாதீர்கள்! அவரது மறைவின்பொழுது அவர்பற்றிய எண்ணங்கள்
அலைமோதியதால் இதனைக் கூற வேண்டும் என்று தோன்றியது. கூறுகிறேன்.
“தமிழ்நாட்டவரை மதிக்காதவரை நாமும்
மதிக்கமாட்டோம்” என்னும் சூழல் வளர்ந்து வருவதால், தமிழ், தமிழர்
நலனுக்கெனச் சிறிதேனும் உங்கள் பங்கைச் செலத்துங்கள்.!
உங்களை வளர்ப்பதும் வாழ்விப்பதும் தமிழ்
மக்களெனும் பொழுது அவர்களுக்கு உதவுவதுதானே உங்கள் கடமையாக இருக்கமுடியும்.
மொழி, இன வேறுபாடின்றிக் கலைஞர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ்
மக்களை நீங்கள் புறக்கணித்தால் நீ்ங்கள் வாழ்ந்தே பயனில்லை அல்லவா?
உங்களைத் தங்கள் குடும்பத்தினரிலும் மேலாக எண்ணும் தமிழ் மக்களை உங்கள்
குடும்பத்தில் ஒருவராக எண்ணி மதியுங்கள். தமிழை மதித்துப் போற்றுங்கள்!
தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவுவதன் மூலம்
உங்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள்!
தமிழரால் வாழும் கலைஞர்களே! பிற துறையினரே!
தமிழர்க்காகவும் வாழுங்கள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அகரமுதல 88,ஆடி 03, 2046 / சூலை 19, 2015 : இதழுரை
No comments:
Post a Comment