வைகோவிற்கு அழகல்ல!
உலக மக்களால் போற்றப்படும் மக்கள் நலத்தலைவர் வைகோ. அவரது கடும் உழைப்பும் விடா முயற்சியும் வாதுரைத்திறனும், அநீதிக்கு
எதிரான போராட்டக் குணமும் மாற்றுக்கட்சியினராலும் பாராட்டப்படுகின்றன.
ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துத் தமிழின உணர்வாளர்களின்
நெஞ்சில் இடம் பதித்துள்ளார். இருப்பினும் அவர் புகைச் சுருள் (cigarette) விற்பனை தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகள் அவரது பண்பிற்கு ஏற்றதல்ல! அவருக்குப் பெருமை சேர்ப்பதுமல்ல!
மது விலக்கு
வேண்டிப்போராடும் வைகோவிடம் செய்தியாளர் ஒருவர் அவரின் மகன் புகைச்சுருள்
முகவராக உள்ளதுபற்றிக் கேட்டதற்குத் தான் மாற்றாள் முலம் நடத்தவில்லை
என்றும தன் மகன் உரிய முறைப்படி முகவாண்மை பெற்று விற்பதாகவும் கூறியதுடன், “தமிழக அரசு புகைச்சுருள் விற்பனையைத் தடை செய்யட்டும்; என் மகன் கடையை மூடி விடுவான்” என்றும் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் மேனாள்அமைச்சர்களும் தலைவர்களும் மது ஆலைகளை நடத்தி வருவது குறித்து மக்கள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதால், அவர்கள் மது விலக்கு நடைமுறைக்கு வந்துவிட்டால் மது ஆலையை மூடிவிடுவார்கள் எனத் தி.மு.க.வின் நிழல் தலைவரான பொருளாளர் தாலின் கூறினார்.
[“திமுகவை சேர்ந்தவர்கள் மதுபான ஆலைகளை நடத்துவதாக பாமக நிறுவனர் இராமதாசு, பாசக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராசன், நாம்
தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கூறுகின்றனர். மதுவிலக்கு
வந்துவிட்டால் மது உற்பத்தி ஆலைகளும் மூடப்படும் என்பதை அவர்கள்
புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தாலின் தெரிவித்துள்ளார் (தமிழ் இந்து நாள் ஆக. 03)]
மது ஆலைக்குத் தடை வந்துவிட்டால் மூடித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லையே! அதே நேரம், மதுவிலக்கு வந்து விட்டால் தமிழ்நாட்டில் விற்பனை செய்ய முடியாதே தவிர, அயல்
மாநிலத்தவர் அயல்நாட்டினர் தேவைகளுக்காக என்று உற்பத்தி செய்து விற்க
இயலும். அதையே கள்ளத்தனமாகத் தமிழ் நாட்டிலும் விற்க இயலும். என்றாலும்
இதைப் போன்ற அறிவார்ந்த மறுமொழியை வைகோவும் தெரிவித்திருப்பது வியப்பாக
உள்ளது. புகைச்சுருள் விற்பனை முகவர் என்ற முறையில் புகைக்குத் தடை வந்தது
எனில் விற்க இயலாது. வேறு மாநில மக்களுக்காக எனத் தமிழ்நாட்டில் விற்க
இயலாது. எனவே, இதை ஒரு விடையாகக் கூறுவது சரியல்ல.
மேலும் மதுவுடன் ஒப்பிட்டுப் புகைச்சுருள் அத்தகைய தீங்குடையதல்ல எனக் கூறியுள்ளதும் சரியல்லவே! புகையால், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய்
முதலான பல்வேறு நோய்கள் வருகின்றன என்பதும் புகை வெளி வரும் பொழுது
அருகிலுள்ளவர் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கிறது என்பதும் இறப்பிற்கு
இரண்டாவது காரணம் புகைதான் என்பதும் பிறவும் வைகோ அறியாதன அல்ல. எனவே, நாம் அதை விளக்கத் தேவையில்லை.
தன்மீதே பழி சுமத்துகிறார்களே என்ற உணர்ச்சி வேகத்தில் வெடித்த சொற்கள் அவை.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள் வர் பழிநாணு வார் (திருவள்ளுவர், திருக்குறள் 433)
அல்லவா? எனவே, கேட்டவர் எப்படிக் கேட்டார் எனத் தெரியாவிட்டாலும் அதன் உண்மையை உணர்ந்து தன் மகன் புகைச்சுருள் முகவாண்மையைக் கைவிடச் செய்வதே வைகோவிற்கு அழகு. இவ்வாறு செய்வதை யாரும் ஏளனமாகக் கூறினால் அவர்களுக்குத்தான் இழுக்கு. வைகோவிற்கும் அவர் மகனுக்கும் பெருமையே!
மக்களுக்குத் தீங்கு விளைவிப்பதில் மிகுதி, குறைவு என்ற அளவுகோல் தேவையில்லை.
குடிப்பழக்க உயிரிழப்பு நேரிடையானது. புகைப்பதால் வரும் உயிரிழப்பு
மறைமுகமானது. புகைச்சுருள் விட்டு விட்டால் புதியதாய் மேற்கொள்ள அவர்
மகன் படிப்பிற்கும் பட்டறிவிற்கும் ஏற்ற எத்தனையோ தொழில்கள் உள்ளன.
ஆதலின் மக்கள் நலத் தலைவரான வைகோ மக்கள் நலம் கருதி, தன்மகனின் புகைச்சுருள் முகவாண்மையைக் கைவிடச் செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றோம்.
புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர்.
(கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூறு 182.5-6)
பழி தவிர்ப்பீர்! புகழ் பெறுவீர்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அகரமுதல 93 ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 : இதழுரை
No comments:
Post a Comment