ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2
பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும்
முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து
போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது
அழிவிலிருந்து மீட்ட அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம்
படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம்.
அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில்
அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ்
நூல்களே. இதன் பயனாய் அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ்
இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில் அரங்கேறின.
இத்தகைய அரும் பணியில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்களுள் முதன்மையானவர்களுள் ஒருவராகத் திகழ்பவரே ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்.
அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி அச்சேற்றியவர் என்றால் அனைவரும் குறிப்பிடுவது அறிஞர் உ.வே.சா. அவர்களைத்தான். அவரது பணி போற்றுதற்குரியது என்றாலும் அவருக்கும் முன்னோடியாகப் பதிப்புச் செம்மல்கள் பலர் இருந்துள்ளனர்.
அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலரும் சி.வை.தாமோதரனாரும்
ஆவர். பதிப்புப் பணியில், உலகில் நமக்குக் கிடைத்துள்ள முதல் வாழ்வியல்
அறிவியல் நூலான தொல்காப்பியத்தை முழுமையாகப் பதிப்பித்த, தாமோதரனாரே
முன்னோடி என்றும் அவர் யாழ்ப்பாணத்துக்காரர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு
உ.வே.சா. குறிப்பிடப்படுவதாகவும் பலருக்கு வருத்தம் உண்டு.
உண்மையில் இலங்கை அல்லது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் புறக்கணிக்கப்படவில்லை. பொதுவாகவே
பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களையே முன்னிலைப்படுத்தி மகிழும் போக்கு
அவ்வகுப்பினருக்கு வழங்கப்படும் முதன்மையால் நிலவுகின்றது.
மேலும் தமிழ் வரலாறு இந்தியத்தால்
மறைக்கப்பட்டு உலகு தழுவிய தமிழ் வரலாறு உணர்த்தப்படாமையாலும் பிற நாட்டு
நல்லறிஞர் வரலாறு மறைவாகப் பேசப்படும் நிலை உள்ளது. தாமோரதரனார்தான் தன் வழிகாட்டி என்று கூறுகிறார் அறிஞர் உ.வே.சா.
“தமது ஓய்வு நேரத்தைத் தமிழ்
ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச்
சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார்
அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல
ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து
வெளியிட்டவர் தாமோதரனாரே! இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி
செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும்.’’
என டி.ஏ. இராசரத்தினம் பிள்ளை அவர்களின் ‘தாமோதரம் பிள்ளை அவர்கள்
சரித்திரம்’ (சென்னை, 1934) என்னும் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் அறிஞர் உ.வே.சா கூறியுள்ளமையால், அறிஞர் தாமோதரனாரின் பதிப்புப்பணியைப் பாராட்ட வேறு சான்று தேவையில்லை.
உண்மையில், திருநெல்வேலி அம்பலவாணக்
கவிராயர் (முதல் நூல் பதிப்பாண்டு 1812), அ.முத்துசாமிப் பிள்ள(1816),
புதுவை நயனப்ப முதலியார் (1835), முகவை இராமாநுசக் கவிராயர் (1840),
களத்தூர் வேதகிரி முதலியார் (1832), மழவை மகாலிங்கையர் (1847), தாண்டவராய
முதலியார் (1824), திருத்தணிகை க.விசாகப் பெருமாளையர் (1828), திருத்தணிகை
க.சரவணப் பெருமாளையர் (1830), திருவேங்கடாசல முதலியார் (1830), காஞ்சிபுரம்
மகாவித்துவான் சி.எசு. சபாபதி முதலியார் (1837), தொண்டை மண்டலம்
இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர்(1824), மகாவித்துவான்
சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை(1851), யாழ்ப்பாணம் நல்லூர் க.ஆறுமுக நாவலர்
(1849), வடலூர் இராமலிங்க அடிகள் (1851), காயல்பட்டினம் செய்குஅப்துல்
காதிரு நயினார் லப்பை ஆலிம் (1842), என அறிஞர் தாமோதரனாருக்கு முன்னரே அறிஞர் பலர் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆறுமுகநாவலரின் வழிகாட்டுதலால்
தாமோதரனார் பதிப்புப்பணியில் முனைப்பாக ஈடுபட்டார். தாமோதரனாரின்
தூண்டுதலால் உ.வே.சா. பதிப்புப்பணியி்ல் தளராமல் ஈடுபட்டார். எனவேதான்,
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் “பதிப்புப்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுகநாவலர். சுவர்களை எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை. கட்டமைத்தவர் சுவாமிநாத அய்யர்” எனப் பதிப்புப்பணிகளைப் பாராட்டி உள்ளார்.
அறிஞர் சி.வை.தா. பதிப்பித்த நூல்கள்:
நீதிநெறி விளக்கம் (1852), தொல்காப்பியம் சொல்லதிகாரம்சேனாவரையம்(1868),
வீரசோழியம்(1881), இறையனா ரகப்பொருள்(1883), தணிகைப்புராணம்(1883),
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்(1885), கலித்தொகை(1887),
இலக்கண விளக்கம்(1889), சூளாமணி (1889), தொல்காப்பியம்
எழுத்ததிகாரம்(1891), தொல்காப்பியம் சொல்லதிகாரம்(1892) ஆகியனவாகும்.
பதிப்புப்பணியுடன் கட்டளைக் கலித்துறை,
வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை, காந்தமலர் அல்லது கற்பின்
மாட்சி (புதினம்) முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்டார்.
அறிஞர் சி.வை.தாமோதரனார் அவர்களைப்பற்றிய
அறிஞர்கள் சிலரின் பாராட்டுரைகள் வருமாறு: அறிஞர் கா.சு.பிள்ளை, ‘‘தமிழ்
நூல்களை அச்சியற்ற முயன்றவருள் மிக உழைத்தவர்’’ எனப் பாராட்டி உள்ளார்.
‘‘தொல்காப் பியமுதலாந் தொன்னூல்களைப் பதிப்பித்து ஒல்காப் புகழ்மேவியவர் ’’
என அறிஞர் உ.வே.சா. அவர்கள் பாராட்டி உள்ளார்கள்.
‘‘ஏட்டி லிருந்த வருந்தமிழ் நூல்க ளெனைப்பலவுந்
தீட்டி வழுக்களைத் தச்சினி லாக்குபு செந்தமிழ்சேர்
நாட்டி லளித்துயர் தாமோ தரேந்திர னண்ணுபுகழ்
பாட்டி லடங்குந் தகைத்தோ புலவர்கள் பாடுதற்கே ’’
என்கிறார் சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவரவர்கள்
‘‘உண்மையான அன்போடு உண்மையான தமிழ்த் தொண்டு புரிதலே பிள்ளையவர்களின் பெருநோக்கமா யிருந்தது” என்கிறார் வையாபுரியார்.
‘‘கோடி புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே” என்கிறார் மேதை வேதநாயகம்பிள்ளை அவர்கள்.
“தாமோ தரம்பிள்ளை சால்பு எடுத்துச் சாற்ற எவர்
தாமோ தரம் உடையார்”
தாமோ தரம் உடையார்”
என்கிறார் செம்மொழிஅறிஞர் பரிதிமாற்கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயணசாத்திரியார்.
அறிஞர் தாமோதரனார் இலங்கை
யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதப் பிள்ளை-
பெருந்தேவி அம்மாள் ஆகியோர் மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார்.
தொடக்கத்தில் 12 ஆம் அகவைக்குள்ளாகத் தம்
தந்தையாரிடமே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் முதலான இலக்கிய இலக்கண
நூல்கள் சிலவற்றை முறையாகப் பயின்றார். சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர்
என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும்
சில இலக்கண நூல்களையும் கற்றுக் கொண்டார்.
இதன்பின்னர் தெல்லிப்பளை அமெரிக்க ஊழியக்
கல்லூரியில் (மிசின் பாடசாலையில்) சேர்ந்து ஆங்கிலம் பயின்றார். தொடர்ந்து
வட்டுக்கோட்டைப் பல்கலைக் கல்லூரியில் (யாழ்ப்பாணத்தில் ‘செமினறி’
சாத்திரக் கலாசாலையில்) 9 ஆண்டுகள் ஆங்கிலம், கணக்கு,அறிவியல், தத்துவம்
கற்றுத் தேர்ச்சி பெற்றார்.
கோப்பாய் சக்தி வித்தியாசாலையில்
ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இங்குதான் இவரது முதல்பதிப்புப்பணி
அரங்கேறியது(1852 ஆம் ஆண்டு: நீதிநெறி விளக்கம்). ஆங்கிலக்கல்வி பயிலக்
கிறித்துவராக மாறி, சி.எல். டபிள்யூ. கிங்க்சுபரி எனப்பெயர் சூட்டிக்
கொண்டவர் மீண்டும் சைவச்சமயத்திற்கு மாறினார்.
யாழ்ப்பாணத்துப் பாதிரியார் ‘பேர்சிவல்’,
சென்னையில் இருந்து வெளியிட்ட, ‘தினவர்த்தமானி’ எனும் தமிழ் இதழின்
ஆசிரியர் பொறுப்பேற்றார். இக் காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ்
கற்றுக் கொடுத்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலிரண்டு பட்டதாரிகளும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்நத சி.வை. தாமோதரனாரும் டி.சி.டபிள்யூ விசுவநாதரும் ஆவர்.
அறிஞர் தாமோதரனார் பல்கலைக்கழகப்பட்டம்
பெற்றதும் கள்ளிக்கோட்டை அரசுப் பள்ளியில் உதவியாசிரியராகப் பணியில்
சேர்ந்தார். கல்விப்பணியுடன் பணியாட்சியிலும் (நிருவாகத்திலும்)
சீர்திருத்தங்கள் செய்து சிறந்து விளங்கியமையால், அரசாங்க வரவு
செலவுக்கணக்குச்சாலையில் கணக்காய்வாளர் பணிகிடைத்து அப்பதவியிலும் சிறந்து
விளங்கினார்.
இதன் தொடர்ச்சியாகக், கேட்பாளர்
(விசாரணைக் கர்த்தர்) என்னும் பணியில் சேர்ந்தார். 1871 ஆம் ஆண்டில்
சட்டத்துறையில் பட்டம் (பி.எல்.) பெற்றார். இவரின் தமிழ்ப்புலமை
பாராட்டப்பட்டுச் சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக
நியமிக்கப்பட்டார்.
1882 இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு
பெற்றபின் கும்பகோணத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்து 1887ஆம் ஆண்டில்
புதுக்கோட்டை அரசில் சில ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார். அப்பொழுது
தலைமை நீதிபதி என்ற முறையில் மன்னருக்கு மாற்றாக அவர்சார்பில் தலைமை
ஆட்சியாளராகவும் இருந்தார். 1895 ஆம் ஆண்டில் அரசினர் ‘இராவ் பகதூர்’
பட்டமளித்துப் பாராட்டினர்.
பணி ஓய்விற்குப்பின்பு பதிப்புப்பணிகளில்
முழுமையாக ஈடுபட்டார். இவர் வழங்கிய பதிப்புரைகள் ஆராய்ச்சித் திறனும்
புலமைச்சிறப்பும் மிக்கன. தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவன. இவரது
உரைநடைகளைத் தொகுத்துத் தாமோதரம் என்னும் பெயரில் நூல் வந்துள்ளது. இவரைப்பற்றிய வரலாற்று நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் வந்துள்ளன.
ஓலைச்சுவடிகளின் பதிப்புப்பணியின் துயரம் குறித்து அறிஞர் தாமோதரனார், ‘‘என்
சிறு பருவத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது
தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும்
புத்தகங்களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப்
பார்த்தாலன்றோ தெரிய வரும்! ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகின்றது; கட்டு
அவிழ்க்கும் போது இதழ் முறிகின்றது; ஒன்றைப் புரட்டும்போது துண்டாய்ப்
பறக்கிறது. இனி, எழுத்துகளோவென்றால் வாலுந் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்
கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது’’ எனத் தம் கலித்தொகைப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அக்காலச் சூழலாலோ இதழாசிரியராக இருந்ததாலோ தாமோதரனாரின் நடையில் அயற் கலப்பு இருக்கும். எனினும் உள்ளம் தூய தமிழைக்காப்பதாகவே இருந்தது.
எனவேதான், ‘தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற
தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?’ எனத் தமிழறிஞர்களிடம்
வினவித் தமிழ்த்தாயைக் காக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தினார்.
தம்ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவின் ஆதி மொழி தமிழே என்றும் சங்க இலக்கியம் யாவும் தனித்தமிழ் நூல்களே
என்றும் இவர் நிறுவுகிறார். “ஆரிய சம்பந்த மின்றித் தமிழ்க் கிரந்தங்கள்
கிடையா” என்போருக்கு, ‘‘இது பிறவிக் குருடன் சூரிய சந்திர ருண்மையை மறுத்த
தொக்கும். இதனை முன்னரே நிராகரித்திருக்கின்றேன். இதன் பொய்மையை மதுரைச்
சங்கத்து நூல்களுள் ஒன்றையாவது பார்த்து உணர்வாராக. இக் கலித்தொகையே
இதற்குச் சான்று பகரும்’’ என்கிறார்.
ஆரியர்கள்
வடமேற்குத்திசையிலிருந்து வந்தவர்கள். அவர்கள் வரும் முன்னர் இந்நாடு
முழுவதும் இருந்தவர்கள் தமிழர்களே! தொல்காப்பியம் இயற்றிய பின் சென்ற காலம்
எவ்விதத்தானும் பன்னீராயிரம் வருடத்திற் குறையாது, என்பனவெல்லாம் அறிஞர்
தாமோதரனாரின் ஆய்வுரைகளாகும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்கியப்பூக்கள் 2தொகுப்பாசிரியர் : முல்லை அமுதன்
பக்கங்கள்( 432- 443:) 432-438
No comments:
Post a Comment