தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
02
“மண்ட லத்தே இணையி லாத
வாழ்வு கண்ட தமிழகம்
மகிமை கெட்டே அடிமைப் பட்டு
மதிம யங்கி நிற்பதேன்?’’
என்று நாமக்கல்லாரே வினவுகின்றார்.
அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே,
தமிழ னென்ற பெருமை யோடு
தலைநி மிர்ந்து நில்லடா!
தரணி யெங்கும் இணையி லாஉன்
சரிதை கொண்டு செல்லடா!
என்று கட்டளையிடுகிறார்.
அதுமட்டுமல்ல,
“நமது சொந்தம் இந்த நாடு
நானி லத்தில் மீளவும்
நல்ல வாழ்வு கொள்ளச் சேவை
செய்து வாழ்க நீண்டநாள்”
எனத்தமிழ்த்தொண்டாற்றவும் வேண்டுகோள் விடுத்து வாழ்த்துகின்றார்.
நம் பெருமையை நாம் மறக்கும் நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு,
“தமிழின் பெருமையை மறந்துவிடின்
தாரணி மதிப்பில் குறைந்திடுவோம்;”
என விழிப்புணர்வு ஊட்டுகின்றார். ஆதலின்,
“தமிழன் குரலொடு ஆர்த்திடுவோம்;
தமிழக உரிமையைக் காத்திடுவோம்.”
என்கிறார் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்கள்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
இலக்கண நூல் தொல்காப்பியம். அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர்
இலக்கண நூல்கள் இருந்தன எனத் தொல்காப்பியர் கூறுவதில் இருந்து தெரிகிறது.
அவற்றுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் தோன்றி
இருக்க வேண்டும். அப்படியாயின், அவற்றுக்கும் முன்பே தமிழ் தோன்றியிருக்க
வேண்டும். இவ்வாறு கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில தோன்றிய தமிழர்களின்
மொழி உருவாகும் பொழுதே சிறப்புகள் நிறைந்ததாய், உயர்தனிச் செமமொழியாய்த்
தோன்றிய பெருமை நமக்கு மட்டுமே உண்டு. ஆனால், நாம் செந்தமிழைக்
குற்றுயிரும் குறையுயிருமாய் வதைப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அல்லது
வதைப்படுத்துவோரைப் புறந்தள்ளாமல் அமைதி காத்துக் கொண்டிருக்கும் பொழுது,
நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment