வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா? தலைக்குனிவிற்கு ஆளாகலாமா?
தமிழ்நாட்டில் மாறி,மாறி இரு கட்சிகள்
ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் இரு கட்சிகளுடனும் மாறி மாறிக் கூட்டணி
வைத்து, வெறுப்படைந்ததாலும் வைகோ முதலானவர்கள் புதிய கூட்டணியை உருவாக்க
எண்ணுவது தவறல்ல! ஆனால், கூட்டணியின் பொதுவான கொள்கைகளுக்காகத் தனக்கே
உரிய கொள்கைகளை விட்டுக் கொடுப்பது முறையல்லவே! வைகோ பொதுவான
கருத்தொற்றுமைக்காகத் தமிழ்ஈழம் பற்றியும் கூடங்குளம்
பற்றியும்பேசப்போவதில்லை என்கிறார். நாளை இவர் ஆட்சி அமைத்தால், கருத்தொற்றுமைக்காக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுப்பார் என்றுதானே பொருள். தமிழ்ஈழத்திற்காகக் குரல் கொடுப்பதாலும் போராடுவதாலும் உலகத்தமிழர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். அதனையே விட்டுக் கொடுக்கின்றாரே!
இவரை வந்தேறி எனச் சிலர் வைதாலும் இவரது போராட்டக் குணங்களால் இவரைத்
தமிழராகவே கருதி ஆதரிப்போர் பலர் உள்ளனரே, அவர்கள் முகத்தில் கரிபூசலாமா? குறைந்தது கூட்டணி மேடைகளில் பேசாவிட்டாலும் கட்சி மேடைகளில் பேசுவோம் என அறிவிக்கலாமே!
மார்க்சியப் பொதுவுடைமைக்கட்சியினர் இந்தியாவில் செஞ்சட்டைப் போர்த்திய காவியாடையினர்தாம்.
அவர்களைக் கூட்டணியில் சேர்க்காவிட்டால்தான் என்ன? அல்லது கொள்கைக்கு
ஒத்துவருமாறு அவர்களை வலியுறுத்தி மாற்றியிருக்கலாம் அல்லவா? மார்க்சியப்
பொதுவுடைமைக் கட்சியில் எளிய தொண்டர்கள் பலரும் மக்கள் சார்பாளர்கள்
சிலரும் இருப்பினும் அக்கட்சி யின் செயல்பாடு தமிழ்நலனுக்கு எதிரானதே!
அக்கட்சியைத் தமிழ்நலனுக்குத் திசை திருப்பாமல், அவர்களின் கிணற்றில்
இவர்கள் விழலாமா?
திருமா கொலைகாரக்காங்.உடனே கூட்டணி வைத்தவர். அதனால், கொள்கையில் இறங்கி
வந்திருக்கலாம். இவர் இறங்கி வரலாமா? கொள்கை மாறிய திருமாவைத் தம் பக்கம்
ஈர்ப்பதில் சிக்கல் இராது. ஆனால், காங்.உடன் கூட்டணி ஏற்படலாம் என
எண்ணி அதற்காகக் கதவைத் திறக்கும் வகையில் கொள்கையை விட்டுக்
கொடுத்திருந்தால் மன்னிக்க இயலாத குற்றமாகும்.
மார்க்சியப் பொதுவுடைமைக்கட்சியையும் தமிழ் ஈழம் பக்கம் ஈர்க்காமல், படுகுழியில் வீழலாமா?
தொடர்ந்து வரும் தோல்விச்சூழலில் கட்சி நலன் கருதி, வைகோ கூட்டணி அமைப்பது தவறல்ல. ஆனால், எந்தக் கொள்கைகள் அவரது மூச்சு எனச் சொல்லி வந்தாரோ, சொல்லியதுடன் செயல்பட்டு வந்தாரோ, அவற்றிலிருந்து பின்வாங்கலாமா?
தொடர்ந்து வரும் தோல்விச்சூழலில் கட்சி நலன் கருதி, வைகோ கூட்டணி அமைப்பது தவறல்ல. ஆனால், எந்தக் கொள்கைகள் அவரது மூச்சு எனச் சொல்லி வந்தாரோ, சொல்லியதுடன் செயல்பட்டு வந்தாரோ, அவற்றிலிருந்து பின்வாங்கலாமா?
அசைக்க முடியாத இடததில் அஇஅதிமுக உள்ளதாலும் அடிமட்ட நிலையில் தொண்டர் வலிமையுடன் திமுக உள்ளதாலும் வாக்களிக்காதாவர் வாக்குகளை நம்பிக் களத்தில் இறங்கும் வைகோ, கொள்கைச் சரிவிற்கு இடம் தரக்கூடாது என்பதை உணர வேண்டும்.
ஊழலுக்கு அப்பாற்பட்டுக் கலைஞர் பல தவறுகள் இழைத்தாலும் தங்களுக்குள்
வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டு அவர் பக்கம் நின்றவர்கள் பெரும்பான்மையர்.
கலைஞர் தம், வீட்டு மக்கள் நலனுக்காக நாட்டு மக்கள் நலனைப் புறந்தள்ளிய
பொழுதுகூட அவர்கள் வேதனையுடன் பொறுத்துக் கொண்டார்கள். ஆனால், தமிழ் ஈழ
மக்களுக்கு எமனாக வந்தவர்களுக்கு உற்ற நண்பராக இருந்ததும் இனப்படுகொலை
பற்றிக் கவலைப்படாததும் அவர்களை மாற்றிக் கலைஞரைப் புறந்தள்ளச்
செய்துவிட்டதே! கலைஞருக்கே இந்தக் கதி என்றால் வைகோ நீங்கள் எம்மாத்திரம்!?
எனவே, மக்கள் நலக்கூட்டணியின் பொதுவான கொள்கைகளில் மாற்றம் வேண்டும். இல்லையேல், வைகோ பற்றிய எண்ணத்தை மக்கள் மாற்றிக் கொள்வர். கொள்கையைப் புறக்கணித்த வைகோவை மக்கள் புறக்கணித்தால் எதிர்க்கட்சியாகக் கூட அமர முடியாது என்பதை உணர வேண்டும்.
கூட்டணி நலனுக்கான வேண்டுகோள்: தொகுதி ஒதுக்கீட்டு எண்ணிக்கை எவ்வாறு அமைந்தாலும், வைகோவே கூட்டணிக்குத் தலைமை தாங்க வேண்டும்.
கொள்கைப் பிறழ்வைத் திருத்திக்
கொண்டு வைகோ தலைமையில் அணிவகுத்துத் தேர்தலைச் சந்தித்து வாகை சூட
மக்கள்நலக்கூட்டணிக்கு வாழ்த்துகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment