தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

04

“பணமி ருந்தார் என்ப தற்காய்ப்
பணிந்தி டாத மேன்மையும்
பயமுறுத்தல் என்ப தற்கே
பயந்திடாத பான்மையும்
குணமி ருந்தார் யாவ ரேனும்
போற்று கின்ற கொள்கையும்
குற்ற முள்ளோர் யாரென் றாலும்
இடித்துக் கூறும் தீரமும்
இனமி ருந்தார் ஏழை யென்று
கைவி டாத ஏற்றமும்
இழிகு லத்தார் என்று சொல்லி
இகழ்த்தி டாமல் எவரையும்
மணமி குந்தே இனிமை மண்டும்
தமிழ்மொ ழியால் ஓதிநீ
மாநி லத்தில் எவருங் கண்டு
மகிழு மாறு சேவைசெய்.”வதே தமிழரின் பண்புகள்
என நாமக்கல்லார் விளக்கியது ஏட்டளவில் நின்றுவிட்டதே!

  குறுக்குவழியில் செல்வம் குவிக்கும் அரசியலாளர்களிடமும் அதிகாரிகளிடமும் அடிபணிந்து கிடப்பதே வாழ்வின் இலக்கு என்பதே இன்றைய போக்காக மாறிவிட்டதே! சாதி துறந்து காதலால் ஒன்றிணைவோர் உயிர்கள் பறிக்கப்படும் அவலம் ஓங்கும் பொழுது நாம் பெருமைப்பட எதுவும் உள்ளதா?

  உலகின் பல இடங்களில் மக்களினம் தோன்றாத பொழுதே பண்பாடு, நாகரிகம், கலை, இலக்கியம் முதலானவற்றில் தலைசிறந்து விளங்கியவர்கள் நம் முன்னைத் தமிழர்கள். ஆனால், அவர்களுக்குத் திருமண முறையை ஆரியர்கள்தாம் கற்றுத் தந்தனராம்! எந்த ஆரியர்கள்? கடவுள் பிறப்புக் கதைகளிலும் கடவுள் வாழ்வியல் முறைகளிலும் ஒழுக்கக்கேடுகள் தவிர வேறு கற்பிக்காத பண்பாடற்ற கதைகளின் உரிமையாளர்களான ஆரியர்கள்! தமிழர்களைப் பார்த்துத் தங்கள் எழுத்து முறையை அமைத்துக் கொண்ட ஆரியர்கள்! இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்மரபுகளைக் காப்பதற்காக நூல் எழுதிய தொல்காப்பியரின் தொல்காப்பிய நூற்பா ஒன்றையே தவறாக விளக்கி அவர்களுக்கு வலு சேர்க்க முயல்வதுதான்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப                                                                      (நூற்பா 1091)
என்கிறார் தொல்காப்பியர்.

  ‘ஐயர்’ என்பது தமிழில் தலைவரைக் குறிக்கும். வீரனொருவன் தன் தலைவர் முன்னால் யாரும் நின்று போரிட இயலாது என்பதைக் குறிக்கும்பொழுது,

என் ஐ முன் நில்லன்முன் தெவ்விர்                            (குறள் 771)

என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஐ, ஐயன், ஐயர் என்பன தலைவரைக் குறிக்கும் சொற்களாகும். காதலித்து மணம் முடிப்பதாக உறுதி கூறியவர்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் போனதால் அல்லது திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்க்கைத்துணையை விட்டு நீங்கியமையால், தலைவர்கள் திருமணப் பதிவு முறையை நடைமுறைப்படுத்தி ஒழுங்கு செய்துள்ளனர். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளனர். இருப்பினும் அதை மறைத்து, வேண்டுமென்றே ஆரியர் வந்த பின் தான் திருமண முறை தமிழ் நாட்டிற்கு வந்ததாகத் தவறாகக் குறிப்பிடுவோர் செல்வாக்குடன் உள்ள பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன் : Ilakkuvanar thiruvalluvan