02
யார்க்கும் அஞ்சாதே! எதற்கும் அஞ்சாதே!
இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில்
வாழ்ந்த பாரதியார், மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அச்சமே என்பதை
உணர்ந்தார். எனவே, அச்சப்பேயை விரட்டுமாறு பல இடங்களில் வலியுறுத்துகிறார்.
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
(பாரதியார் கவிதைகள் பக்கம் 98/ விநாயகர் நான்மணிமாலை)
என்கிறார்.
எதற்கும் அஞ்ச வேண்டா என்பதற்காக,
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!
(பக்கம் 180/ பண்டாரப்பாட்டு)
என்கிறார். கூற்றுவனைக் கண்டும் அச்சமில்லை என்பதற்காக அவர்,
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்
(பக்கம் 183/காலனுக்கு உரைத்தல்)
என அறைகூவல் விடுக்கிறார். மேலும்,
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்
மாரவெம் பேயினை அஞ்சேன்
(பக்கம் 133/ மகாசக்தி பஞ்சகம்)
என்று கூறுகிறார். இவ்வாறு அஞ்சாமையை வலியுறுத்தும் பாரதியார் ஆத்திசூடியிலும் அதற்கான கட்டளைகளைப் பின்வருமாறு விடுக்கத் தவறவில்லை.
அச்சம் தவிர் (ஆ.சூ.1)
கீழேர்க்கஞ்சேல் (ஆ.சூ.16)
சாவதற்கு அஞ்சேல் ((ஆ.சூ. 26)
கொடுமையை எதிர்த்து நில் (ஆ.சூ. 22)
தீயோர்க்கு அஞ்சேல் (ஆ.சூ. 45)
பேய்களுக்கஞ்சேல் (ஆ.சூ. 72)
தொன்மைக்கஞ்சேல் (ஆ.சூ. 51)
ரௌத்திரம் பழகு (ஆ.சூ. 96)
வெடிப்புறப்பேசு (ஆ.சூ.107)
அச்சம் ஒழி எனக் கூறாமல், அச்சம் தவிர் எனப்பாரதியார் கூறியது ஏன் என எண்ணலாம்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் என்பது தெய்வப்புலவரி்ன் திருக்குறள் அல்லவா?
அதனால்தான்!
கீழோர்க்கு அஞ்சுவதாலும் தீயோர்க்கு
அஞ்சுவதாலும், பிறருக்கு அஞ்சித் தாழ்ந்து நடந்து பிறரின் தவறுகளுக்கு நாம்
உடந்தையாகி விடுகிறோம். எனவேதான் சீறவேண்டிய இடத்தில் சீறவேண்டும்
என்பதற்காகச் சீறுவோர்க்குச் சீறு (ஆ.சூ.28) என்கிறார்.
தீயரைக் கண்டால், எதிர்க்கும் துணிவு வேண்டுமே அன்றி அஞ்சிப் பணிதல் கூடாது
என்பதற்காகவே குழந்தைப் பருவத்திலேயே இவ்வுணர்வைப் பின்வருமாறு விதைத்தவர்
அல்லவா பாரதியார்.
பாதகம் செய்பவரைக் கண்டால் நாம்
பயங் கொள்ளல் ஆகாது பாப்பா –
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா (பக்கம் 203 / பாப்பா பாட்டு)
மேலும் மக்களின் அச்சம் கண்டு
அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
(பக்கம் 36 / பாரதச் சங்கத்தின் தற்கால நிலை)
என உள்ளம் நைந்தவர் அல்லவா பாரதியார். எனவே, ஆத்திசூடியில் மேற் குறித்தவாறு பல வகை அச்சங்களை ஒழிக்கக் கூறியதில் வியப்பில்லை.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 3)
No comments:
Post a Comment