Monday, December 28, 2015

சிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்

சிலம்பரசன்02 : Simbu-Silambarasan02

சிறியன சிந்திக்கலாமா?

சிந்தனையைச் சிதற அடிக்கலாமா?

  திடீரென்று விழிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்புகள் குறித்துக் காண்பதற்கு முன் சிலம்பரசன் செயல்பாடு குறித்துக் காண்போம்.
  சிம்பு என்னும் சிலம்பரசனின் செயல் பண்பாடற்றது. மழலை நிலையிலிருந்தே திரைத்துறையில் இருப்பவர்; நடிகர், பாடகர், இசையமைப்பாளர் முதலான பல்வேறு துறைகளில் தந்தை வழியில் மலர்ந்து பல்துறை வித்தகராக வலம் வருபவர்; மேலும் பல முன்னேற்றங்களைக் காணும் திறமையும் வாய்ப்பும் உள்ளவர்; காதலில் தோல்விகளைச் சந்தித்த பொழுதும் தாடி வளர்த்து ஊக்கமிழந்து சோர்வடையாதவர்; தன்னம்பிக்கை மிக்கவர். இத்தகைய ஆற்றல் மிக்க இளைஞர் படைப்பாளி என்ற முறையிலும் கலைஞன் என்ற முறையிலும் மன்பதை நோக்கில் சிந்திக்காமல் செயல்படுவது வருத்தத்திற்குரியது. இருப்பினும் அவரது பண்பாடற்ற செயலை மன்பதைக்கு எதிரான குற்றமாகக் கருதத் தேவையில்லை. ஆனால், இவரது செயல் அவரது கண்ணோட்டத்தில் சட்டப்படியான குற்றமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரின் பெற்றோர்க்கும் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவாக்கிற்கிணங்க வளர்ந்து வாழ வேண்டியவர், சிறியன சிந்திக்கலாமா? சிலம்பரசன் என்னும் பெயருக்கேற்ப திரைக்காவியம்படைக்க வேண்டியவர் சிந்தனையைச் சிதற அடித்து வழி தவறலாமா? என்பதை எண்ணிப் பார்த்துக் குடும்பத்தினருக்குத் தலைக்குனிவு ஏற்படுத்தியமைக்காக அவர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். படம் வராவிட்டாலும் தன் மீது நம்பிக்கை கொண்டுள்ள தன் நேயர்களிடம் தான் திசைமாறிப் போனதை ஒத்துக் கொண்டு அவ்வழியை யாரும் பின்பற்ற வேண்டா என வேண்டி இனியேனும் பண்பரசனாக வாழ வேண்டும்.
  பொதுவாகத் திரைப்படங்களில்   பாடலில் அல்லது உரையாடலில் தணிக்கைக்குரிய சொல் அல்லது சொற்கள் வரும் பொழுது ஓசை மூலம் மறைப்பதே வழக்கம். அதற்கும் முன்பு நயம் கருதி மறைப்போசை வருவதுமுண்டு. அதில் குறிப்பிடத்தக்கதாக வாலி எழுதி விசுவநாதன் இராமமூர்த்தி இசையில் கோபாலகிருட்டிணன் இயக்கிய ‘கற்பகம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’ என்னும் படப்பாடலைக் கூறலாம். இதில் புதுமணப்பெண்ணின் வெட்க உணர்விற்கேற்பப் பாடும் பொழுது ‘தூக்கம், தொட்டில், வெட்கம், முத்தம்’ ஆகிய சொற்கள் வரவேண்டிய இடங்களில் இசையுடன் இணைந்த வாயொலி மூலம் அவை மறைக்கப்பட்டிருக்கும். எனினும் இது நயம் கருதியதே தவிர தவறான சொல்லை மறைப்பதற்காக அல்ல. மறைப்போசை பாடல் மூலம் புகழ் பெற எண்ணினால் சிலம்பரசன் இவ்வாறு பாடியிருந்திருக்க வேண்டும்.
 வெள்ளத்துயரில் சிக்கியதான், வெள்ளத்தால்  துயருற்றவர்களுக்கு உதவி வந்த நான், அந்த நேரம் இந்தப் பாடலை வெளியிட்டிருப்பேனா என்றெல்லாம் அவர் கேட்கிறார். அவர் பொதுவில் பாடவில்லை, வெளியிடவில்லை என்பதுபோல் கூறியிருப்பது அவ்வாறு பாடினால் தவறாகும் என்று புரிந்து கொண்டதாகத்தான் பொருள். அத்தகைய பாடலைத்திறமை வாய்ந்த அவர் பாடியிருக்க வேண்டிய தேவையில்லையே! எனவே, இதுபோன்ற எண்ணங்களுக்கு ஆட்பட்டிருப்பதே பண்பாட்டுச் சிதைவு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். கவிஞர் அறிவுமதி, கவிஞர் தாமரை முதலான கவிஞர்கள் சிலர் வழியல் பிறமொழிக்கலப்பில்லாத நல்ல பாடல்களைப் பாடும் பண்பாளராக வருவதைப் பெருமையாக எண்ண வேண்டும். (அவர்களின் பாடல்களுக்கும் நாட்டிய இயக்குநர்கள் உடலசைவுகளின் மூலம் இழுக்கை உண்டாக்குவது தனிக்கதை.)
  பொதுவாக உடலுறுப்புகளின் பெயர்களைக் கூறுவது குற்றமல்ல. ஆனால், மருத்துவரிடம் குறைபாடு, நோய்முதலானவைபற்றித் தெரிவிக்க அல்லது மாணாக்கர்களிடம் பாடம் நடத்த தெரிவிக்க என்பன போன்ற காரணங்களில் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் பொழுதும் பிறப்புறுப்பு, கருவாய் மறைவுறுப்பு என்பன போன்று வழக்கிலுள்ள இடக்கரடக்கலாகப் பயன்படுத்த வேண்டும். (இதையே ஆங்கிலத்தில் கூறும் பொழுது தவறாகக் கருதுவதில்லை. ) தமிழிலும் முன்னர், பெண்களின் மார்புறுப்பை வெளிப்படையாகக் குறிப்பிட்டு இலக்கியங்கள் வந்துள்ளன. அக்காலத்தில் அவை தவறாக எண்ணப்படவில்லை. இக்காலம் மாறியுள்ளது. எனினும் சில பெண் கவிஞர்களே ஆண்கள் பாடக்கூடாத முறையிலெல்லாம் பாடுகிறார்கள் என்பதும் உண்மை. என்றாலும் எந்தச் சொல்லாக இருந்தாலும் சொல்வதன் நோக்கம், சொல்லும் முறையில்தான் பண்பாடு இருக்கிறது. “காதல் தோல்வி கண்ணடால், கவலைப்படவேண்டா, உனக்கென ஒருத்தி பிறந்திருப்பாள்” என்ற நல்ல கருத்தைக் கூற வந்த இடத்தில், தேவையற்ற சொல் எதற்கு? அற்ப இன்பமோ வீண்பெருமையோ எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் கூட அவ்வாறு பயன்படுத்தியது தவறு என்பதைச் சிலம்பரசன் உணர வேண்டும்.
  அதே நேரம் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும். கீழ்மையான சொற்கள் தணிக்கையில் மறைக்கப்பட்ட பின்பு அதை எழுதிய அல்லது அதனுடன் தொடர்புடைய யாருக்கு எதிராகவும் யாரும் போராடியதில்லை. அவ்வாறிருக்க அவரது படங்களைப் புறக்கணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் கீழ்மையின் தொடக்கமே அவர்தான் என்பதுபோல் போராடுவது ஏனென்றுதான் புரியவில்லை.   பொதுவாகவே திரைப்படங்களில் இப்படிப்பட்ட சொற்கள் முழுமையாக அல்லது முதலெழுத்துமட்டும் சொல்லி வெளிவருவது வழக்கமாகிவிட்டது.
 ‘வெ’ எழுத்தில் தொடங்கும் நான்கெழுத்துச் சொல்லைத்திட்டும்பொழுது பயன்படுத்தினால் கெட்ட சொல்லாகவே கருதப்படும். இப்பொழுது படங்களில் பலமுறை கூறுகின்றனர்.
  தலைவன், தலைவியிடம் “மெதுவா, மெதுவா, தொடலாமா” என்பது போய், தலைவனிடம் தலைவி “கட்டிப்பிடிடா கட்டிப்பிடிடா” எனச் சொல்லும் காலம் வந்து விட்டது. இலைமறை காயாக உடலைக்காட்டி வந்த நடிககைள் முழுமையாகக் காட்டும் அளவிற்கு நீலப்படம்போல் படங்கள் வருகின்றன. இருபொருள்படப் பேசிய காலம்போய் வெளிப்படையாகவே கூசும்வகையில் பேசும் அல்லது பாடும் காலம் வந்துவிட்டது. அப்பொழுதெல்லாம் பெண்கள்அமைப்பினர் உறங்கிக் கொண்டிருந்ததால் இது குறித்துக் கண்டிக்கவில்லை போலும்!
  சிலம்பரசனுக்கு எதிராகப் போராடியது விளம்பரத்திற்காகவோ வேறு எதற்காகவோ இல்லையெனில் இவற்றிற்கு எதிராகவும் போராட வேண்டும்.
  சரோசாதேவிக் கதைகள் என்பனவற்றைவிட மோசமான கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. கருவாய் அல்லது பிறப்பு உறுப்பை இப்பொழுது கண்டிப்பிற்கு உள்ளாகும் சொல்லைப் பயன்படுத்தி முகநூல் பதிவுப் பெயர்களாக வைத்திருப்போரும் உள்ளனர். மக்கள் சார்பாளரான கவிஞர் பெயருடன்சேர்த்தும் ஒருவர் முகநூல் கணக்கு வைத்துள்ளார். அரசியல் தலைவர்களைத் தாக்கும்போர்வையில் படிக்கஇயலாக் கீழ்மைச் சொற்களைப் பயன்படுத்துவோரும் உள்ளனர். எனவே, இவற்றிற்கெதிராகவும் சிலம்பரசனுக்கு எதிராகப் போரிடுவோர் இனிப் போராட வேண்டும். இதுவரை ஏன் போராடவில்லை எனக் கேட்கவில்லை. ஏனெனில் இப்பொழுதுதான அவர்கள் விழித்திருப்பார்கள். எனவே, இனியாவது போராட வேண்டும் என்கிறோம்.
 ஈழத்தில் தமிழ்ப்பெண்கள் மார்பில் சிங்கள முத்திரை குத்தியதுடன் “இங்கே தமிழச்சிகளின் மார்பு விற்கப்படும்” என்றெல்லாம்   சிங்களர்கள், பலகைகள் வைத்த பொழுது வராத சினம், பெண்களின் பிறப்பு உறுப்பில் மிளகாய்ப்பொடிகளைத்தூவியும் வெடி வைத்தும் வேறு வகையிலும் துன்புறுத்தியும் உயிரைப் பறித்த பின்பும், மறைவுறுப்புகளைச்  சிதைத்தும் இசையரசி போன்றவர்களைத் துன்புறுத்திய பொழுதும் வராத சினம், இனியாவது நம் நாட்டில் பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராகவும் ஊடகங்களில் குறிப்பாகத் தொலைக்காட்சிகளில் இழிவாகக் காட்டப்படுவதற்கு எதிராகவும் வந்தால் மகிழ்ச்சி. ஈழப்பெண்கள் துன்புறுத்தப்பட்டபொழுது அவர்கள் வெளிநாட்டவர்கள்தானே என்ற எண்ணத்தில்கூட சினம்வராமல் அமைதியாக இருந்திருக்கலாம்.
  நம் நாட்டில் நடைபெறும் கேடுகளுக்கு எதிராக அவற்றைத் துடைத்தெறியும் வகையில் சினந்து போராடலாம் அல்லவா? சிறார் சிறுமிகளை அவர்கள் அறிந்தும் அறியாமலும் ஒழுக்கக்கேடான அசைவுகளை மேற்கொள்ளத் தூண்டுவதற்கு எதிராகவும் இயற்பியல் வேதியியல் முதலான அறிவியல் சொற்களை உடலிணைப்பு சார்ந்து பொருள்வரும் வகையிலும் கையாள்கிறார்கள் அல்லவா? அவற்றைத் தடுக்கும் வகையில் இக்காவலர்கள் போராடட்டும்! மறைந்து ஒழிந்து போயிருக்க வேண்டிய பாடலைப் பாரறியச் செய்யும் வகையில் பரப்புரை மேற்கொண்ட வகையில் இவர்களும் குற்றவாளிகள்தாம். எனவே, இக்குற்றச் செயல்களுக்காகவாவது இனி ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் நிகழும் பெண்களுக்கு எதிரான கீழ்மைச் செயல்களை எதிர்த்துப் போராடட்டும்!
  ஊடகங்கள் வாயிலாக வரும் பண்பாட்டுச் சிதைவுகளுக்குத் தொடர்ந்து பெண்கள் அமைப்புகள் போராடட்டும்! வெல்லட்டும்!
simbu-aniruth
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைAkaramuthalaHeader

அகரமுதல 111 – மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015

No comments:

Post a Comment

Followers

Blog Archive