(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 தொடர்ச்சி)
09
தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில்
சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே
50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனக் குறிப்பிட இயலவில்லை.
பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை
நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள் பிற நாட்டின் பெயர்கள்
மாறின எனில் அவ்வாறே புதிய பெயரில் அழைப்பர். பம்பாய் மும்பை என மாறியதும்
மும்பை என்று அழைக்ககும் நம்மவர்களே சென்னையைச் சென்னை என்று அழைப்பதில்லை.
மெட்ராசு என்று திரைப்படமும் வருகிறது. தமிழ்ப்பெயர் சூட்டிய
படங்கள் இப்பொழுது வருகின்றன. பெரும்பாலும் அவை நல்ல படங்களாகவே
இருக்கின்றன. தமிழ்ப் பெயர் சூட்டிய படங்கள், தமிழ்ப் பண்பாட்டை
எதிரொலிக்கும் படங்கள் நன்றாக இல்லாவிட்டாலும்கூட நாம் பார்த்து
ஊக்கப்படுத்த வேண்டும். அதே நேரம் தமிழில் இல்லாப் பெயர் தாங்கி வரும்
படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பார்க்காமல் புயறக்கணிக்க வேண்டும்.
எனவே, மெட்ராசு படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் எனத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வேண்டுகின்றேன். பிற அமைப்புகளிடமும் இதனைத் தெரிவிக்க வேண்டுகின்றேன். அரசாணையையும்
மீறி நம் தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் இருக்கும் துணிவு
உள்ளவர்கள் இருக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கையில் தமிழர் எனப்
பெருமைபட என்ன இருக்கிறது?
மத்திய அரசில் தமிழ்நாடும் உள்ளது எனில் தமிழ்மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நீதிமன்றங்களும் மண்ணின் மக்களான தமிழர்களின் உணர்வை மதித்துத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும்.
ஆனால், நடப்பதென்ன? உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க
மத்திய அரசு தடை. தமிழர்கள் தமிழர்களுக்காகக் கட்டிய தமிழ்க்கடவுள்களின்
கோயில்களில் தமிழ்வழிபாட்டிற்கு உள்ள தடையை நீக்க மத்திய அரசு முயல்வது
இல்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையில் அல்லல் பட்டு வரும்
அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சொன்னாலும் மத்திய
அரசு அதற்கு முட்டுக்கட்டை.
தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள்அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் கொலைகாரனைத்தான் வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, மத்திய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.
கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல்
நாடகம்போட்டு மீட்டு வரும் மத்திய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக்
குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக
இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன் கைகோத்துக் கொண்டு தொடர்ந்து
தமிழர்நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தியராக எண்ணினால் இணையுரிமை கொடு! இல்லையேல் தனியுரிமை கொடு! எனக் கேட்டு மத்திய அரசை வழிக்குக் கொணரும் திறமைகூட நம்மிடம் இல்லை.
தொலைபேசி முதலான மத்திய அரசு தொலைபேசிகளில் வணக்கம் ஒலிக்காது; நமசுகாரம்தான் நச்சரிக்கும்.
பண எடுப்பு மையங்களில் ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆனால் பலவற்றில் தமிழைக் காணோம்!
வங்கியின் படிவங்கள் தமிழைப் புறக்கணிக்கின்றன. நாம் அவ்வங்கிகளைப் புறக்கணிப்பதில்லை!
அங்கன்வாடி முதலான பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழை நாமே வெளியேற்றிக் கொண்டுள்ளோம்.
தமிழகக்காவல்துறை ஆங்கிலேயர்க்குச்
செயல்படுவதுபோல் அறிவிப்புகள், வழிகாட்டும் குறிப்புகள் யாவற்றிலும் தமிழ்
இல்லை. தமிழன்னைக்குக் காவல் தேவையில்லை என விட்டுவிட்டார்கள் போலும்!
தொடர்வண்டி அறிவிப்புகளில் தமிழ் இல்லை.
எச்சரிக்கை, அபாய அறிவிப்பு என்றெல்லாம் தமிழ்நாட்டில் இந்தியிலும்
மலையாளத்திலும் காண முடியும். ஆனால், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு எதற்கு எச்சரிக்கை என்று தமிழில் தருவதில்லை!
மின்னேணி முதலான அனைத்து அவசர உதவி
அறிவிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் தமிழைக் காணமுடியாது. தமிழர்கள்
எல்லாம் தெரிந்தவர்கள் என்று விட்டுவிட்டார்ளா? இப்படியாவது தமிழர்
எண்ணிக்கையைக் குறைக்கலாம் என எண்ணுகிறார்களா? எனத் தெரியவில்லை.
உணவகங்களில் உணவுப் பெயர்கள் தமிழில்
இல்லை! உணவு நிரலும் தமிழில் இல்லை! தமிழையா சாப்பிடப்போகிறார்கள்!
தருவதை வயிற்றில் திணித்துக் கொண்டு ஓடட்டும் என எண்ணுகிறார்களோ!
தங்கும் விடுதிகளான உறைவகங்களில் அறைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. கட்டண விவரங்கள், வசதி வாய்ப்புகள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டில்
இருந்து கொண்டு தமிழர்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழர்களி்ன் மொழியான
தமிழைப் புறக்கணிக்க இவர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது? தமிழர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள். முரண்டுபிடிக்கும் பொழுது மெதுவாகத்தட்டினாலே வீழ்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை போலும்! நமக்குள்ள உரிமைகளைக்கூடக் கேட்க முடியாமல் வாய் மூடி இருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
உறைவகங்களில் தங்குவதற்கான பதிவில் தமிழ்
இல்லை. உணவகங்களில் நாம்தான் பணம் கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முதலான
விழா அல்லது நிகழ்வுக் குறிப்புகளை அவர்கள் தமிழில் எழுத மாட்டார்களாம்!
என்ன கொடுமை இது!
கடைகளில் தரும் விலைச்சீட்டுகளில் தமிழ் இல்லை.
அரசாணைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் மதிக்காத பொழுது மக்கள் எங்ஙனம் மதிப்பார்கள்?
சான்றுக்கு ஒன்று! ஊர்திகளில் தமிழில் பதிவு எழுத்துகளைக் குறிக்கும்
அரசாணையை அமைச்சர்களோ தலைமைச் செயலக அதிகாரிகளோ துறைத்தலைவர்களோ மதிக்காத
பொழுது வேறு யார்தான் மதிப்பார்கள்! கணக்குக் காட்ட ஓர் அரசாணை
அவ்வளவுதான்! இப்படித்தான் தமிழ்நாட்டில் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாக இல்லை.
தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல்
படிக்கவும் பணியாற்றவும் வாய்ப்பு உள்ளபோது யாருக்கும் உதவாத தமிழ் என்று
அனைவரும் புறக்கணிக்கத்தானே செய்வார்கள்! இப்படி எல்லாம் இயன்ற வரை தமிழை
எல்லா இடங்களில் இருந்தும் துரத்தி விட்டு யாரோ சிலர் எங்கும் தமிழ்!
எதிலும் தமிழ்! என முழங்கினால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment